தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் : 2005,06 நிகழ்வுகள் !
(சுவடு.44) திருவள்ளுவர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடக்கம்!
கடிநெல்வயல்
பெரியப்பா திரு.அருணாச்சலத் தேவரின் இரண்டாவது மகன் திரு.சீனிவாசன் புதுக்கோட்டையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்
1967 ஆம் ஆண்டு சேர்ந்து எந்திரப் பணியியல் பிரிவில் பயிற்சி பெற்றதும்,
ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, திருச்சி, நவல்பட்டு, படைக்கலன் தொழிலகத்தில்
(ORDNANCE FACTORY) 28-01-1976 அன்று பணியில் சேர்ந்ததும், காலச்
சுவடுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும் !
திரு.சீனிவாசன் இத்தொழிலகத்தில் 28 ஆண்டுகள் ஆறு மாதங்கள்
03 நாள் பணி புரிந்த பிறகு 2005 -ஆம் ஆண்டு சனவரி
மாதம் 31 -ஆம் நாள் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் !
வாழ்க்கையில்
சிலர் இளம் பருவத்தில் இன்னல்களை எதிர்கொள்ளாமலேயே வளர்கிறார்கள். இத்தகையவர்கள் பிற்காலத்தில் வாழ்க்கையை வாழத் தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
வேறு சிலர் பிறந்தது முதல் இன்னல்களை எதிர்கொண்டே வளர்கிறார்கள்.
இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில், சீரான தடத்தில்
வாழ்க்கைத் தேரைக் கொண்டு செலுத்தி இனிய துய்ப்பை அடைகிறார்கள் !
இந்த
இரண்டாவது வகைக்கு எடுத்துக் காட்டு (நடுப்)
பெரியப்பா திரு.சீ.சாம்பசிவ தேவரின் மகள் வழிப் பெயரனும்
திரு.சக்கரபாணித் தேவர் – திருமதி.
தனலட்சுமி இணையரின் ஒரே மகனுமான திரு.அன்பழகன்.
இவர் தனது சொந்த முயற்சியால் அரசுப்போக்கு வரத்துக் கழகத்தில் நடத்துநராகப்
பணிவாய்ப்பைப் பெற்றவர்
!
திரு.அன்பழகனுக்கு 2005 –ஆம் ஆண்டு மார்ச்சு மாதம்
27 –ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. இவர் மருதூர்
தெற்குச் சேத்தி க.தெட்சணாமூர்த்தித் தேவர் – சீதாரமணி இணையரின் மகள் செல்வி.ஈஸ்வரியைக் கரம் பிடித்தார்.
மருதூர் கந்தபவுன்ராசு மணவரங்கத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குக் குடும்பத்துடன் நான் சென்று வந்ததாக நினைவு !
நாகை
அருகில் உள்ள தேவூரில் என் தாய்மாமா திரு.சி.பண்டரிநாதன் அவர்களின் பிள்ளை திரு. அருமைநாதன் வாழ்ந்து வருகிறார்.
02-07-2003 அன்று திருமணமான திரு அருமைநாதனுக்கு மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்
பிறகு 15-12-2005 அன்று ஆண் மகவு பிறந்த செய்தி எனக்குக் கிடைத்தது. மனோஜ்குமார் எனப் பெயருடன் வளர்ந்து வரும் அக்குழந்தையையும் அவன் தம்பியான கார்த்திகேயனையும் நெடுநாட்களுக்குப்
பிறகு தான் சந்திக்க முடிந்தது. ! பிற்காலத்தில் அவர்கள் இருவரும் நல்ல அறிவாளிகளாகத் திகழ்வார்கள் என்பது என் கணிப்பு !
சேலத்திலும், ஓசூரிலும் குடியிருப்போர் நலச்சங்கம் அமைத்து, நான் ஆற்றிய
பொதுப்பணிகளைத் தஞ்சாவூரிலும் தொடர வேண்டி இருந்தது. தஞ்சாவூரில்
எனது வீடு அமைந்துள்ள பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் பெயரளவுக்குக் கூட அப்போது இல்லை
!
இந்த
வசதிகளைப் பெறுவதற்கு முதலில் இப்பகுதியில் குடியிருப்பவர்களை ஒன்று திரட்ட வேண்டும். இதற்கு முதற்படியாக, இப்பகுதியில் உள்ள முகாமையான பத்துப்
பதினைந்து பேரைச் சந்தித்துப் பேசினேன். காலையில் நடைப் பயிற்சிக்குச்
செல்லும் வாய்ப்பினை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டேன். இப்பணியில்
என்னுடன் பேராசிரியர் திரு.குருநாதனும் இணைந்து கொண்டார்
!
எனது
முயற்சிக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தனர். முதற்கட்டப் பணிகளைச் செய்து முடித்த
பின்பு, இப்பகுதியிலுள்ள புனித ஜான் பள்ளியில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் கூட்டம் ஒன்றுக்கு
ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவழைத்துக், கலந்துரையாடலைத் தொடங்கினோம் ! இறுதியில் குடியிருப்போர்
நலச் சங்கம் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது !
சங்கத்திற்குத்
திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. நான் முன்னதாகத் தயாரித்து வைத்திருந்த சங்கத்தின் அமைப்பு விதிமுறைகளுக்குக்
கூட்டம் ஒப்புதல் அளித்தது. சங்கத்தின் ஆட்சி வரம்புக்குள் கண்ணம்மாள்
நகர், இராசீவ் நகர், சாரதா நகர்,
செயலட்சுமி நகர், கபிலன் நகர், புது நகர், இலாரன்சு நகர், அருணா
நகர் உள்ளிட்ட 18 நகர்களைக் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது
!
சங்கத்தின்
தலைவராக அனைவரும் சேர்ந்து குரல்
வாக்களிப்பு மூலம் என்னை ஒருமனதாகத் தேர்வு செய்தனர். செயலட்சுமி
நகரைச் சேர்ந்த திரு.மு.பக்கிரிசாமி பொதுச்
செயலராகவும், இளங்கோ
நகரைச் சேர்ந்த திரு.வை.மாசிலாமணி பொருளாளராகவும்
தேர்வு செய்யப்பட்டனர் !
சங்கத்தை
மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து (பதிவு எண்:27/2006), அரசுப் பதிவுப்
பெற்ற சங்கமாக இயங்கச் செய்தேன். உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு உருபா நூறு என முடிவு செய்யப்பட்டு,
உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி நடத்தினோம். பற்றுச்
சீட்டுகள் அச்சிட்டுப் பயன்படுத்தப்பட்டன. உறுப்பினர் கட்டணம்
உள்பட பெறப்படும் தொகைக்குப் பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது. பொருளாளர்
வரவு செலவுக் கணக்கினைப் பேணிவரவும் அதை நாள்தோறும் பொதுச் செயலர் சரிபார்க்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டது !
சங்கத்தின்
பிற பொறுப்பாளர்களுடன் சென்று நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவரை அணுகி, முதற் கட்டமாக எங்கள் பகுதியில் உருபா 1,35,000 செலவில்
தெருவிளக்குகளை அமைக்கச் செய்தோம். நீண்ட நெடுங்காலமாக இருளிலேயே
வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள் ஒளிவெள்ளம் பாய்ந்த தெருக்களில் இரவில் நடமாடுவது ஒரு
புதிய துய்ப்பு மட்டுமல்ல இனிமையான துய்ப்பும் கூட !
அடுத்து, சாலை வசதிகளே இல்லாத அனைத்து நகர்களிலும், முதற் கட்டமாக
கப்பிச் (GRAVEL) சாலைகள்
அமைக்கச் செய்தோம். இந்தக் கப்பிச் சாலைகளில் முகாமையான மூன்றினை,
அடுத்த ஒன்பது மாத காலத்தில் கருங்கல் சல்லிப் பாவிய சாலையாகத்
(METAL ROADS) தரம் உயர்த்திடச்
செய்தோம். இதனால் எங்கள் குடியிருப்புப் பகுதிக்குச் சிற்றுந்துகள்
வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய முடிந்தது. முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை
அவை வந்து செல்வதை உறுதி செய்தோம் !
ஓராண்டுக்
காலம் நான் தலைவர் பொறுப்பில் இருக்கையில் நலப்பணிகள் பலவற்றைச் செய்து முடிக்க முடிந்தது !
செய்து
முடிக்கப்பெற்ற அனைத்துப் பணிகளையும் பட்டியலிட்டால், அதற்கு இடம் போதாது. ஓரிரண்டை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
18 நகர்களை உள்ளடக்கியது திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம்.
வெளியூரிலிருந்து வருபவர்கள், எளிதாக இடத்தைக்
கண்டுபிடிக்க வசதியாக 40 இடங்களில் மாழைத் தகட்டில் (METAL SHEET) நகர்ப் பெயரை
ஈர்மத்தால் எழுதிச் சாலை ஓரத்தில் பைஞ்சுதை (CEMENT) கொண்டு நிறுவிடச் செய்தேன் (ERECTED ON ROAD-SIDE)
!
அஃதன்றி
ஒவ்வொரு தெருவுக்கும், ஒவ்வொரு சாலைக்கும் தமிழ்ப் பெயர்களைச்
சூட்டி, அந்தந்தச் சாலையில், தெருவில் உள்ள
வீடுகளின் முன்புறச் சுற்றுச் சுவரில் பல இடங்களில் மனை எண்களுடன், தெருவின்
பெயர், நகரின் பெயர் ஆகியவற்றையும் ஈர்மக் கலைஞரை அழைத்து வந்து எழுதிடச்
செய்தேன்!
பொன்னி
நெடுஞ்சாலை, வைகை நெடுஞ்சாலை, தொல்காப்பியர்
சாலை, அகத்தியர் சாலை, கம்பர் சாலை,
பாவேந்தர் சாலை, பாரதி சாலை, பாரி வேள் சாலை, புகழேந்திச் சாலை, சேரமான் சாலை, பாண்டியன் சாலை, பல்லவன் சாலை, வளவன் சாலை, பொதிகைச் சாலை, சிலம்புச்
சாலை, கலைமகள் சாலை, மலைமகள் சாலை,
திருமகள் சாலை, கரிகாலன் சாலை, நலங்கிள்ளிச் சாலை, இன்னிசைத் தெரு, ஏழிசைத் தெரு, குறிஞ்சித் தெரு, முல்லைத் தெரு, அதியமான் தெரு, ஔவையார் தெரு, கரிகாலன் தெரு சேக்கிழார் தெரு,
வள்ளலார் தெரு, திருமூலர் தெரு என்பன தெருக்களுக்கு / சாலைகளுக்குச் சூட்டப் பெற்றுள்ள தமிழ்ப் பெயர்களுள் சில !
நான்
எந்த ஊரில் வாழ்ந்தாலும், எந்தப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டாலும்,
அங்கெல்லாம் என் தமிழ்ப் பணி தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கிறது
என்பதைக் காலச் சுவடுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்கள் உணர்வார்கள் ! என் தமிழ்ப் பணி கடந்த காலத்திலும் தொடர்ந்தது; நிகழ்
காலத்திலும் தொடர்கிறது; எதிர் காலத்திலும் தொடரத்தான் போகிறது
!
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),24]
{06-06-2020}
-------------------------------------------------------------------------------------------
ச.அன்பழகன்
அன்பழகன் - ஈஸ்வரி
திருமண அழைப்பிதழ்.
திருமண நாள்: 27-03-2005
அன்பழகனின் தாயார்
[நி/வா] திருமதி.தனலட்சுமி,
தேவூர் ,ப.அருமைநாதனின் மகன்
அ. மனோஜ்குமார்.
தேவூர், ப.அருமைநாதனின் மகன்
அ.கார்த்திகேயன்
திருவள்ளுவர்
குடியிருப்போர் நலச்சங்கம்,
விளையாட்டு விழா (ஆண்டு 2011)
பொறுப்பாளர்களுக்கான
நினைவுப் பரிசு.
திருவள்ளுவர்
குடியிருப்போர் நலச்சங்கம்,
அச்சிட்ட அழைப்பிதழ்.