தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் (60) : 2018,19 நிகழ்வுகள் !
இன்பமும் துன்பமும் !
வேலூர், திரு.மீ.இராசேந்திரன் - திருமதி கற்பகம் இணையரின் மகன் திரு.இரா.அருண்மொழித் தேவன் பொறியியல் பட்டதாரி. இந்திய மாநில அளகையின் (STATE BANK OF INDIA)) செய்யாறு கிளையில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறார். இவருக்கும், வேதாரணியம் வட்டம் தென்னடாரைச் சேர்ந்த அன்புத் தாமரை என்பவருக்கும் 2018 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 -ஆம் நாள் திருமணம் நடைபெற்றது !
அப்போது நான் ஓசூரில் இருந்ததால், திருமணத்திற்குச் செல்ல இயலவில்லை. திருமணம் நிகழ்ந்து ஒரு வாரம் சென்ற பின் மணமக்கள் வேலூர் வந்தனர். அப்போது நானும் என் மனைவியும், மகள் இளவரசியும் வேலூர் சென்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் !
மாமரத்தில்
காய்கள் நிரம்பக் காய்த்திருக்கின்றன. தோட்டக்காரர்
கண்களில் இருந்துத் தப்பிச் சில காய்கள் இலைகளினூடே ஒளிந்து கொண்டிருக்கின்றன. இயற்கையின் பார்வையிலிருந்து அவை எத்துணை நாள் தான் இவ்வாறு ஒளிந்து கொள்ள
முடியும் ? அவற்றுள் ஒரு காய் நன்கு பழுத்துக் காணப்படுகிறது.
ஒருநாள் அந்தப் பழம் காம்பிலிருந்து விடுபட்டு உதிர்ந்து விழுகிறது
!
மனித
வாழ்வும் அப்படித்தான் ! அகவை முதிர்வினால் என் பெரிய மாமனாரின்
மகன் திரு.இரா.கணபதி 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 –ஆம் நாள் காலமானார். மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று, தஞ்சாவூர் சீனிவாசபுரம்,
இராசராச சோழன் நகரில் வாழ்ந்து வந்த அவர் உதிர்ந்த கனியானார்
!
மரத்தின்
கிளைகளில் எத்துணையோ இலைகள் தோன்றி இந்த உலகம் வாழ உயிர்வளியைத் (OXYGEN)
தந்து கொண்டிருக்கிறது. நிலத்திணைகளும்
(தாவரங்கள்) அவற்றின் இலைகளும் தான் மனிதனை வாழவைத்துக்
கொண்டிருக்கின்றன. சில இலைகள் காற்றின் வீச்சுச் தாங்காமல் காம்பு
ஒடிந்து வீழ்ந்து விடுகின்றன !
இலை முதிர்வடைந்து
பழுத்துக் காம்புடன் கிளையிலிருந்து விடுபட்டு உதிர்வது இயற்கையின் நேர்வு ! ஆனால் பழுப்படையும் முன் கிளையிலிருந்து ஒடிந்து விழுவது எதிர்பாரா நிகழ்வாகிறது.
அகத்தியன் பள்ளி, பயத்தவரன் காடு திரு.மு.குமரப்பாவின் மறைவு யாரும் எதிர்பாரா நிகழ்வு.
என் கடைசித் தங்கை திருமதி. சுமதியின் கணவரான திரு.சிங்காரவேலுவின் தம்பி அவர் ! ஆசிரியராகப் பணியாற்றி சில ஆண்டுகளுக்கு
முன்பு தான் ஓய்வு பெற்றவர். 2019 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24 –ஆம் நாள், ஒடிந்து விழுந்த இலையானார் திரு.குமரப்பா !
நமக்கு
வேண்டிய ஒருவர் மறைந்து போனால் நம் உள்ளம் துன்பியல் உணர்வுகளால் துடித்துப் போகிறது. அதுபோன்றே, 2019 -ஆம் ஆண்டு, ஏப்பிரல்
மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும் சிலருக்குத் துன்பியல் உணர்வுகளையும்,
வேறு சிலருக்கு இன்பியல் உணர்வுகளையும் தந்துவிட்டு மறைந்து போனது
! தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட எந்தக் கட்சிக்கும் துணிவில்லை:
வலுவும் இல்லை ! இத்தேர்தலில் தி.மு.க., இந்தியப் பேராயக் கட்சி,
ம.தி.மு.க, வி.சி.க., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி, கொங்கு நாடு
மக்கள் கட்சி, முசுலிம் லீக், இந்திய சனநாயகக்
கட்சி ஆகியவை கூட்டுச் சேர்ந்து ஒரு அணியாகப் போட்டியிட்டன !
அ.இ.அ.தி.மு.க, பா.ம.க.,
தே.மு.தி.க, த.மா.கா, ஆகியவைக் கூட்டுச் சேர்ந்து இன்னொரு
அணியாகப் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் இந்த அணிக்கு நற்பலன்களை அளிக்க வில்லை !
தி.மு.க 20 இடங்களையும், இந்தியப் பேராயக் கட்சி புதுச்சேரி உள்பட 10 இடங்களையும்,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2 இடங்களையும்,
இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 2 இடங்களையும்
பெற்றன. ம.தி.மு.க, வி.சி.க., கொ.நா.ம.க,
இ.ச.க., மு.லீ ஆகியவை ஒவ்வொன்றும் ஒரு இடத்தில் வென்றன.
வி.சி.க வேட்பாளர் ஒருவரும்,
இ.ச.க. வேட்பாளரும், கொ.ம.க வேட்பாளரும் ம.தி.மு.க வேட்பாளரும் தி.மு.க.,
சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் தி.மு.க., வின் வெற்றிக் கணக்கு 24 ஆகிறது
!
அ.இ.அ.தி.மு.க பெரியகுளம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று தன் கணக்கில் வென்ற இடம் 1 என நிறுவிக் கொண்டது. தி.மு.க., அணியினருக்கு இன்பியல் உணர்வையும், அ.இ.அ.தி.மு.க அணியினருக்குத் துன்பியல் உணர்வையும் தந்தது நாடாளுமன்றத் தேர்தல்.
அனைத்திந்திய அளவில் பாரதிய சனதாக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று,
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது ! திரு.நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய அரசின்
தலைமை அமைச்சர் ஆனார் !
துன்பியல்
உணர்வுகளில் துடித்துப் போன அ.இ.அ.தி.மு. அணியினரைப் போல்
2019 –ஆம் ஆண்டு, சூன் மாதம் 24 –ஆம் நாள் நானும் துடித்துப் போனேன் ! அன்று தான் என்
மைத்துனரும் என் மனைவியின் தம்பியுமான திரு.சீவானந்தம் காலமானார்.
இருப்பூர்தித் துறையில், பணியாற்றி வந்த திரு.சீவானந்தம், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே இறந்து
போனார் !
நாகப்பட்டினம்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் என் முயற்சியால்
மின்னுந்து அகச்சுருள் அமைப்புப் பணியில் குறுகிய காலப் பயிற்சி
பெற்றவர் திரு.சீவானந்தம். அந்தச் சான்றின்
அடிப்படையில், அவரது பெரியப்பா மகன் திரு.இரா.அரங்கராசன் அவர்களின் உதவியால் இருப்பூர்தித் துறையில்
பணியில் சேர்ந்தார். நல்லொழுக்கம் இல்லாத நண்பர்களின் நட்பால், மதுப் பழக்கத்திற்கு ஆளாகி இறுதியில்,
திரு.சீவானந்தம் தன் உயிரையும் துறந்தார்
!
ஒழுக்கம்
இல்லாத நண்பர்கள் அமைந்துவிட்டால், எந்த மனிதனின்
வாழ்வும் அலங்கோலம் ஆகிவிடும் என்பதற்கு திரு.சீவானந்தமே எடுத்துக்
காட்டு ! மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகளைத்
தவிக்க விட்டுவிட்டு மறைந்து போன திரு.சீவானந்தத்தின் முடிவைப் பார்த்தாவது மது அருந்தும்
நண்பர்கள் அதை விட்டொழிப்பார்களாக !
சக்கரை
நோய் என்னும் நீரிழிவு (DIABETES), அரத்த உயர் அழுத்தம்
(HIGH BLOOD PRESSURE), சிறுநீரகச் செயலிழப்பு (KIDNEY
FAILURE) மூன்றும் ஒருதாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் போன்றவை.
சக்கரை நோய் இருப்பவர்கள் அதைக் கட்டுக்குள் வைக்காவிட்டால்,
மற்ற இரண்டும் அவரிடம் கேளாமலேயே வந்து சேரும். அதுபோல் அரத்த உயர் அழுத்தம் இருப்பவர்கள் அதை அடக்கி ஒடுக்கி வைக்காவிட்டால்
ஏனைய இரண்டும் தாமாகவே வந்து அவரிடம் ஒட்டிக் கொள்ளும் !
என் மைத்துனரும்
ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநருமான திரு. மகாதேவனுக்கு
எப்படியோ சக்கரை நோய் (DIABETES), வந்து அவரைத் தழுவிக் கொண்டது.
சக்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதில் அவர் விழிப்படையத் தவறினாரோ என்னவோ,
சிறுநீரகச் செயலிழப்புக்கு (KIDNEY FAILURE) ஆளானார்
!
2016
–ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சிறுநீரகச் செயலிழப்பு (KIDNEY FAILURE), சென்னை விசயா
மருத்துவ மனையில் உறுதி செய்யப்பெற்று, அதன்பின் வாரம் ஒருமுறை,
இரு முறை என அவ்வப்போதைய உடல் நிலைமைக்குத் தக்கவாறு அரத்தத் தூய்மை
(DIALYSIS) செய்து கொண்டு வந்தார். உடலின் உள்
உறுப்புகள் சிதைவுற்றால் எத்துணை நாள்களுக்குத்தான் மருத்துவத்தால் உயிரைப் பிடித்து
நிறுத்தி வைக்க முடியும் ?
மூன்று
ஆண்டுகள் உயிர்ப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியில்
2019 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள்
அவர் தனது உயிர் மூச்சை நிறுத்திக் கொண்டார். விழிப்புக் குறைவே
அவரது உயிருக்கு ஊறாக அமைந்து விட்டது. சக்கரை நோயுள்ள நண்பர்கள்
மாதம் ஒருமுறை சிறு நீரில் உள்ள சக்கரை அளவையும், இரண்டு மாதங்களுக்கு
ஒருமுறை அரத்தச் சக்கரை அளவையும் கணித்து, அவற்றைக் கட்டுக்குள்
வைத்துக் கொள்ளுங்கள் என்பதே அவர்களுக்கு நான் தெரிவிக்க விழையும் செய்தி !
இரண்டு
மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு, இறந்திருந்தாலும் கூட, அவரது இழப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்தக் குடும்பத்தில்
துன்பியல் உணர்வுகளைத் தூவிக் கொண்டு தான் இருக்கப் போகிறது. காலம் தான் அதைத் துடைத்தெறிய வேண்டும் !
ஓய்வூதியரான
திரு.மகாதேவனின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் பெற்றிடும் பொருட்டு உரிய விண்ணப்பங்களை
நானே முழுமையாக நிறைவு செய்து தந்து விட்டு வந்தேன். ஆனால் இரக்க உணர்வில்லாத சில அலுவலர்கள்
உருபா ஐந்தாயிரம் கையூட்டுப் பெற்றுக் கொண்ட பின்பே அதற்கு ஆவன செய்தனர். சாவிலும்
காசு பார்க்கும் இத்தகைய சண்டாளர்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டில்
இரக்க உணர்வு எப்படி உயிர் பிழைத்து இருக்கப் போறது ?
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),08]
{22-06-2020}
---------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment