name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: March 2020

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, March 31, 2020

காலச் சுவடுகள் (42) :2004 நிகழ்வுகள் - இளவரசி மணவிழா !



தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 2004 நிகழ்வுகள் !

 (சுவடு.42) இளவரசி மணவிழா !

----------------------------------------------------------------------------------------

அறுபதாம் ஆண்டு நிறைவு நாளைப் பஞ்சநதிக்குளம் அங்காள பரமேசுவரி திருக்கோயிலில் கொண்டாடிவிட்டுத் தஞ்சாவூர் திரும்புகையில் தட்டாங்கோயில் கோயில் பாலம் தாண்டி எங்கள் ஊர்தி வந்து கொண்டிருந்த நிலையில் என்னுடைய எழினி (MOBILE  PHONE)  செல்லமாகச் சிணுங்கியது. அதை எடுத்து செவியில் வைத்த நிலையில் எதிர் முனையிலிருந்து என் சிறிய மைத்துனர் திரு.பிரகலாதன் பேசினார் !

திரு.பிரகலாதன் மட்டுமல்ல, சேரன்குளத்தில் வாழ்ந்து வந்த அவருடைய தம்பிகள் இருவரும் கூட நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருடைய அப்பா, அம்மா, இருவரும் நிகழ்ச்சிக்கு வர விரும்பினாலும் கூட, செல்லக் கூடாது என்று தடுக்கப்பட்டனர் !

அப்படி இருந்தும் அவரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று என்ன செய்தி என்று வினவினேன். அவர் தன்னுடைய தம்பி திருச்சி திரு.சீவானந்தம் அருகில் இருந்தால் அவரிடம் எழினியைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார் .எழினியை வாங்கிய திரு.ஜீவானந்தம் அடுத்த நொடி எங்களிடம் சொன்ன செய்திஅப்பா இறந்து விட்டார்” !

ஓரிரு வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போனேன். மகளும் மருமகனும் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடக் கோயிலுக்குப் போயிருக்கின்றனர். நேரில் வந்து அழைத்தும் அதற்குப் போக முடியவில்லையே என்ற ஏக்கம் மன வருத்தத்தைத் தந்திருக்க வேண்டும்.  அந்த  வருத்தத்திலேயே  அவர்  உயிரும் பிரிந்திருக்கிறது ! 

நான் வண்டியை மன்னார்குடிக் கடைத்தெருவுக்கு விடச் சொன்னேன். கடைத்தெருவில் மாலை ஒன்று வாங்கிக் கொண்டு சேரன் குளம் சென்றோம். மாலையுடன் இறங்கிச் சென்று, நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு இருந்த மாமனாரின் உடலுக்கு மாலை அணிவித்து, சில நிமிடங்கள் அமைதியாக நின்று வணங்கி விட்டு ஊர்திக்குத் திரும்பி வந்தேன் !

மாமனார் காலமான செய்தியை, அவருடைய மருமகன் என்ற முறையில் எனக்குத் தெரிவித்திருக்க வேண்டும். வண்டியில் என்னுடன் அமர்ந்திருந்த என் மனைவி, காலமான இரகுநாத பிள்ளையின் மகள் அல்லவா ? அந்த மகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எழினியில்  பேசிய சிறிய மைத்துனர் திரு.பிரகலாதன் தன் தம்பியிடம் செய்தியைச் சொன்னாரே தவிர என்னிடமும் சொல்லவில்லை. தன் தமக்கையிடமும் சொல்லவில்லை !

திரு.பிரகலாதன் விவரம் தெரியாத இளம் அகவைப் பிள்ளை அன்று ! திருமணமானவர். மனைவி மக்களுடன் வாழ்ந்து வருபவர். அவர் ஏன் அப்படி ஒரு தவறைச் செய்தார் ? வாழ்க்கை என்றால் என்ன என்று இனிமேல் தான் அவர் படிக்க வேண்டுமோ ?

மதியாதார் வாசல் தனை மிதிக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருந்தாலும், ”இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு ?” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வழியில் நடந்திட விழைந்தேன் !

அதனால், அழையாமலேயே சேரன்குளம் சென்றேன்; அஞ்சலி செலுத்தினேன்; பிறகு இறுதிச் சடங்குகளுக்காகக் காத்திராமல் தஞ்சைக்கு வந்துவிட்டேன் !

ஒவ்வொரு வினைக்கும் நாம் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தால், உறவுகள் நிலைக்காது; வாழ்வில் அமைதியும் நிலவாது ! அன்று விலகி இருந்தவர்கள், தொடர்ந்து விலகியே இருக்கவில்லை; மீண்டும் என் உறவை நாடி வந்தார்கள்; விந்தை மனிதர்கள்; ஏற்றுக் கொண்டேன் ! அதுதானே மனிதப் பண்பு !

2004 -ஆம் ஆண்டு நிறைய நிகழ்வுகள் நடந்துவிட்டன. அவற்றில் ஒன்று நாடாளு மன்றத் தேர்தல். 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த வழக்கமான பொதுத் தேர்தல். 2004 –ஆம் ஆண்டு ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ் மாநிலக் காங்கிரசு, இந்தியப் பேராயக் கட்சியுடன் இணைந்துவிட்டது. தி.மு.., இந்தியப் பேராயக் கட்சி, பா..., .தி.மு.., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப்  பொதுவுடைமைக் கட்சி அனைத்தும் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன !

.தி.மு.., பா..., இரண்டும் சேர்ந்து இன்னொரு அணியமைத்துப் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் தி.மு.., கூட்டணிக்கு 100 % வெற்றியை ஈட்டித் தந்தன. தி.மு.16, இந்தியப் பேராயக்கட்சி 10, பா... 5, .தி.மு.4. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி  2 என அனைத்து இடங்களையும் வென்றன. .தி.மு.., பா... கூட்டணி ஒரு இடம் கூடப் பெறவில்லை !

அனைத்திந்திய அளவில் 145 இடங்களில் வென்ற இந்தியப் பேராயக் கட்சி, எதிர்க்கட்சிகள் பலவற்றை ஒன்றிணத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது. திரு.மன்மோகன் சிங் தலைமை அமைச்சரானார். தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு..சிதம்பரம், திரு.மணிசங்கர் ஐயர், திரு.டி.ஆர்.பாலு, திரு.தயாநிதி மாறன், திரு..இராசா, திரு.அன்புமணி இராமதாசு ஆகியோர் முதனிலை (CABINET MINISTER) அமைச்சர்களாயினர் !

திருஎசுஎசுபழநிமாணிக்கம், திருஎசுஇரகுபதி, திருகே .வேங்கடபதி, திருமதி. சுப்புலட்சுமி சகதீசன், திருவிகேஎசுஇளங்கோவன்,  திருஆர்வேலு ஆகியோர் இணையமைச்சர்கள் ஆயினர்.

திரு.டி.ஆர்.பாலு கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் நெடுஞ்சாலைத் துறைப் பொறுப்பை ஏற்று  இருந்த இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் தான் தமிழ் நாட்டுச் சாலைப் போக்குவரத்து வசதிகளில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது !

தமிழ்நாடெங்கும் சாலைகள் விரிவாக்கப்பட்டன. நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள் , எட்டு வழிச் சாலைகள் தோன்றின. நூற்றுக் கணக்கில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டன. சென்னை, கத்திப்பாரா பட்டாம்பூச்சிச் சாலை போன்று பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன !

தனியார், சாலைகளை அமைத்து, சிலகாலம் இயக்கி, சுங்கக் கட்டணம் தண்டல் செய்து செலவை ஈடு செய்துகொண்டு, பின்பு சாலையை அரசிடம் ஒப்படைக்கும் BOT திட்டங்கள் தமிழ்நாடெங்கும் பரவலாகத் தோன்றின !

நடுவணரசு சாலைப் போக்குவரத்துத் திட்டங்களுக்கென ஒதுக்கியுள்ள தொகை முழுவதையும் திரு.டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கே செலவு செய்கிறாரோ என்ற அச்சம் கூடப் பலருக்கும் தோன்றியது. இந்த ஐந்தாண்டு காலம் தான் தமிழ்நாட்டுச் சாலைப்போக்கு வரத்தின் பொற்காலம் என்று துணிந்து சொல்லுமளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தன !

எனது அகவாழ்வில் மேலும் ஒரு முகாமையான துன்பியல் நிகழ்வு 2004 –ஆம் ஆண்டு, மே மாதம், 12 –ஆம் நாள் ஏற்பட்டது. ஆம் ! என் மகள் திருமதி.கவிக்குயில் மாமனாரும், மருமகன் திரு.சிவக்குமாரின் தந்தையுமான திரு..பழனியப்பன் அவர்கள் அன்று தான் காலமானார். சிறு அளவுக்கு நீரிழிவுக்கு ஆட்பட்டிருந்த அவர் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில நாள்களிலேயே மாரடைப்பினால் மறைந்து போனார் !

சேவப்பநாயக்கன் வாரி திரு.அமிர்தலிங்கம் பிள்ளைக்கு திரு.சோலையப்பன், திரு.பழனியப்பன், திரு.சுப்ரமணியன் என்று மூன்று ஆண் மக்களும், திருமதி இலட்சுமி என்னும் ஒரு மகளும் இருந்தனர். அனைவரும் திருமணம் செய்துகொண்டு, தனித் தனி இல்லங்களில் வாழ்ந்து வந்தனர் !

இவர்களில் இரண்டாவது பிள்ளையான திரு.பழனியப்பன் திருமதி. இராசேசுவரி இணையருக்கு திரு.சிவக்குமார், திரு.இரவிக்குமார், திரு.செந்தில்குமார் என்று மூன்று பிள்ளைகள். இவர்களுள் முதலாமவர் தான் என் மகள் கவிக்குயிலை மணந்தவர் ! மற்ற இருவருக்கும் திருமணம் ஆகி, தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர் !

என் (ஒன்றுவிட்ட) அண்ணன் மாப்பிள்ளையான கருப்பம்புலம் திரு.ந.சிவானந்தம் அவர்கள் உயர்ந்த பண்பாளர். அவர் புதிய வீடு ஒன்று கட்டி 2004 -ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 24 -ஆம் நாள் புதுமனை புகுவிழாவினை மிகச் சிறப்பாக நடத்தினார். உறவினர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் நேரில் சென்று  கலந்துகொண்டேன் ! 

என் இரண்டாவது மகள் செல்வி.இளவரசிக்கும், ஓசூர் பாலாஜி கியர்ஸ் உரிமையாளர்  காலஞ்சென்ற திரு. ஜெயராமன் அவர்களின்  மகன் பிரபுவுக்கும், 2004 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 3 –ஆம் நாள் திருமணம் நடந்தது. ஓசூரில் இராயக்கோட்டை சாலையில் உள்ள ஆர்.கே.திருமண மண்டகத்தில் இத்திருமணம் நிகழ்வுற்றது  !

செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள் காலையில் திருமணம்  நடைபெறுகிது;  ஆனால் மணமக்கள் வரவேற்பு, முதல்நாள் மாலையில் நிகழ்ந்தது.   திருமணம் நடைபெறுவதற்கு  முன்பாகவே வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுவது அப்போது எனக்குப் புதுமையாகத் தோன்றியது.  ஆனால் இத்தகைய நிகழ்வுகள் இப்போது இயல்பான ஒன்றாகிவிட்டது !

நான் பணியில் இருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அப்போது என்னுடன் பணிபுரிந்த பல நண்பர்கள், குறிப்பாக, திரு என்.கோபாலகிருஷ்ணன் திரு எம் நடேசன் ஆகிய இருவரும், ஒரு நாள் முன்னதாகவே வந்திருந்து திருமண ஏற்பாடுகளைக் கவனித்ததுடன், சில வேலைகளைத் தங்களே  இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த காட்சி இன்றும் என் கண்கள் முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. உண்மையான நட்பு என்பது இது தான் !

கடிநெல்வயலில் என் (ஒன்றுவிட்ட) சித்தப்பா திரு.சண்முகவேல் தேவர் -  திருமதி.பஞ்சவர்ணம் அம்மையார்  இணையரின்  பெயர்த்தியும்  திரு சதாசிவம் - திருமதி. மல்லிகா இணையரின் அன்பு மகளுமான செல்வி சீதா, வேதாரணியம் அருகிலுள்ள மறைஞாய நல்லூரைச் சேர்ந்த  திரு.சந்திரசேகரனைக் கரம் பற்றினார். 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 –ஆம் நாள் நடைபெற்ற இத்திருமணத்திற்கு நான் மட்டும் சென்று வந்ததாக நினைவு !

உறவினர்கள் வட்டம் விரிவடைய விரிவடைய, ஒரு மனிதன் சென்று கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் விரிவடைந்து கொண்டே போகிறது. இதில் என்னைப் போன்று அரசு அலுவல் ஏற்று / ஓய்வு பெற்று  வெளியூர்களில் இருப்போர்க்கு, அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது என்பது இயலும் செயலாக இருப்பதில்லை !

------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை(வைகாசி)22]
{04-06-2020}
------------------------------------------------------------------------------------------
திரு.பிரபு - செல்வி.இளவரசி
 திருமணம் : நாள் : 03-09-2004.

திரு.பிரபு - செல்வி.இளவரசி 
திருமண அழைப்பிதழ். 
இவர்கள் திருமணம்
 03-09-2004 அன்று
 ஓசூர் இராயக்கோட்டை சாலை 
ஆர்.கே.திருமண அரங்கில் 
நடைபெற்றது.


திரு.ஆர்.இரகுநாத பிள்ளை 
 (அகவை 60 -இல் 
எடுத்த படம்)


ஆர்.இரகுநாத பிள்ளை, 
மறைவு : 30-04-2004
 (அகவை 84-இல் எடுத்த படம்)

அ.பழனியப்ப பிள்ளை, 
மறைவு : 12-05-2004














காலச் சுவடுகள் (41) :2004 நிகழ்வுகள் - அருட்செல்வி !

தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 2004 நிகழ்வுகள்!

                                (சுவடு.41) அருட்செல்வி !

-------------------------------------------------------------------------------------------

என் பெரியப்பா திரு. அருணாச்சலத் தேவரின் முதல் மனைவி திருமதி.மீனாட்சி அம்மையார் தன் மகன் மீனாட்சிசுந்தரம் கைக்குழந்தையாக இருந்தபோதே விட்டுவிட்டு மறைந்து போனார் என்பதை முன்பு சொல்லி இருக்கிறேன். கைக்குழந்தையாக இருந்த திரு.மீனாட்சிசுந்தரத்தை வளர்த்து ஆளாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர்கள் இருவர் !

அவர்களில் முதலாமவர், திரு.அருணாச்சலத் தேவரின் மாமியாரும், திரு.மீனாட்சி சுந்தரத்தின் பாட்டியுமாகிய கல்யாணி அம்மையார். இரண்டாமவர், மறைந்த மீனாட்சி அம்மையாரின் தங்கையும் திரு.அருணாச்சலத் தேவரின் இரண்டாவது மனைவியுமாகிய  திருமதி.சுந்தரம் அம்மையார் !

இந்த இருவரும் அன்று ஊட்டி வளர்த்த மீனாட்சி சுந்தரம்தான் பிற்காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று, ஓய்வூதியர்களூக்காகப் பல்லாண்டு காலம் உழைத்து, இன்று 92 –ஆம் அகவையில் நலமுடன் ஊரில் உலா வந்து கொண்டிருக்கும் பேரன்புச் செம்மல் !

திரு.அருணாச்சலத் தேவரின் இரண்டாவது மனைவி திருமதி.சுந்தரம் அம்மையாருக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் நெடுநாள் தங்காமல் பிறந்தவுடன் இறந்து போயின !

இதற்கிடையில், திரு.அருணாச்சலத் தேவரின் முதல் மனைவி, மறைந்த மீனாட்சி அம்மையார் மற்றும் இரண்டாவது மனைவி சுந்தரம் அம்மையார் ஆகியோரின் தங்கையான சாரதா அம்மையாருக்குத் திருமணம் நடந்தது. திரு.அருணாச்சலத் தேவரின் சிற்றப்பா மகனான திரு.வைத்தியநாத தேவரை சாரதா அம்மையார் மணந்தார் !

திரு.வைத்தியநாத தேவர் - திருமதி சாரதா அம்மையார் ஆகியோர் தான் என் பெற்றோர் என்பது காலச்சுவடுகளைத் தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் எளிதில் விளங்கும் !

நான்கு அகவை நிறைவான குழந்தை மீனாட்சிசுந்தரத்தை அவரது சிற்றன்னை திருமதி.சுந்தரம் அம்மையாரால் சரிவரக் கவனிக்க முடியவில்லை. அடிக்கடி நிகழ்ந்த பிள்ளைப்பேறு, பிறந்த குழந்தைகளின் இறப்பு ஆகியவை சுந்தரம் அம்மையாரின் உடல் நலத்தை மிகவும் சீரழித்து இருந்தது !

ஆகையால் குழந்தை மீனாட்சிசுந்தரத்தைக் கவனிக்கும் பொறுப்பையும் என் தாயார் சாரதா கூடுதலாக ஏற்றுக் கொண்டார். ஒரே வீட்டில் திரு.அருணாச்சல தேவர் குடும்பமும், என் பெற்றோரும் வாழ்ந்து வந்ததால் இது இயலக் கூடியதாக இருந்தது !

பெரியப்பா திரு.அருணாச்சலத் தேவரின் இரண்டாவது மனைவி சுந்தரம் அம்மையார், 1946 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் பெற்றெடுத்த ஆண்மகவுக்கு ஏறத்தாழ ஒரு  அகவை ஆகும் நிலையில், இறந்து போனார்

பதினெட்டு  அகவையில் ஒரு பிள்ளை (மீனாட்சி சுந்தரம்) , ஒரு அகவையில் இன்னொரு பிள்ளை (சீனிவாசன்), இரண்டும் தாயில்லாப் பிள்ளைகள் என்ற நிலையில், பெரியப்பா திரு.அருணாச்சலத் தேவர் தவித்துப் போனார் !

ஒரு அகவை ஆகும் நிலையில் உள்ள ஆண்மகவை என் தாயார் கவனித்துக் கொண்டார். இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு என் தாயாரின் கைகளில் வந்து சேர்ந்தது ! இந்த நிலையில் தான், மூத்த பிள்ளை திரு.மீனாட்சி சுந்தரத்திற்குத் திருமணம் செய்து வைக்கும் முடிவை, என் தாயார் உள்பட அனைவரும் சேர்ந்து எடுத்தனர். இம்முடிவின்படி இரண்டாவது குழந்தையான சீனிவாசனுக்கு மூன்று அல்லது நான்கு அகவை நிறைந்த  நிலையில் மூத்த பிள்ளைக்குத் திருமணம் நடந்தது !

சீனிவாசன் தன் தாயை இழந்த பின்பு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் என் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்திருக்கலாம் என்பது என் கணிப்பு !   அதன்பிறகு,  குழந்தை சீனிவாசன் அவரது அண்ணி திருமதி பார்வதி அம்மையார் மற்றும் என் தாயார் சாரதா அம்மையார் ஆகிய இருவரின் கூட்டுப் பாதுகாப்பிலும் வளர்ந்து பள்ளிப் பருவத்தை அடைந்திருக்கிறார் !

இந்த சீனிவாசன் தான், பிற்காலத்தில் புதுக்கோட்டை அரசினர்  தொழிற்பயிற்சி நிலையத்தில் எந்திரப் பணியியல் பிரிவில் என் உதவியால்  சேர்ந்து பயின்று .பின்னர், சென்னை திருவான்மியூரில் உள்ள  எஸ்.ஆர்.பி.டூல்ஸ் என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் !

இறுதியில், திருச்சி, நவல்பட்டு, படைக்கலத் தொழிலகத்தில் பணியில் சேர்ந்து ஏறத்தாழ 28 ஆண்டுக்காலம் பணியாற்றி, ஓய்வு பெற்று மனைவி, மகன், மருமகள், பெயர்த்தி ஆகியோருடன் நவல்பட்டு அருகில் சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார் !

திரு.சீனிவாசனுக்குக் கிட்டத்தட்ட வளர்ப்புத் தாயாக இலங்கி வந்த என் தாயாருக்கு எளியோர்க்கு இரங்குதலும் வறியோர்க்கு வழங்குதலும் இயற்கைக் குணமாக அமைந்திருந்தது.  பசி என்று வருவோர்க்கு உணவு அளிக்காமல் அவர் இருந்ததில்லை ! பசித்த முகத்தைப் பார்த்தும் பாராதிருக்க அவருக்கு மனம் ஒப்புவதில்லை !

தங்க நகை செய்யும் பொற்கொல்லர் குடும்பம் ஒன்று அக்காலத்தில் கடிநெல்வயலில் வெள்ளாழர் காட்டில் இருந்தது. பழனிவேல் பத்தர் என்பவர்  குடும்பத் தலைவர். ஊராருக்குச் சிறு சிறு நகைகள் செய்து கொடுத்து வந்தார். அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகளும் இருந்தனர் !

அவர் தம்பியின் பெயர் நாகராசன். நாகராசனுக்குத் திருமணம் ஆகவில்லைஅண்ணன் குடும்பத்துடன் இவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். எனக்கு அப்போது ஏழு அல்லது எட்டு அகவை  இருக்கும். ஒருநாள் நாகராசன் எங்கள் வீட்டிற்கு வந்து என் தாயாரிடம், குழந்தைகளுக்கு உணவு ஆக்கித் தந்திட, வீட்டில்  கொஞ்சம் கூட அரிசி இல்லை; ஆகையால்  சிறிது அரிசி கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் !

உள்ளே சென்ற என் தாயார் ஒரு பையில் நான்கு படி அளவுக்கு அரிசி கொண்டுவந்து நாகராசன் இடம் கொடுத்து வீட்டிற்கு எடுத்துச் சென்று பிள்ளைகளுக்கு சமைத்துப் பரிமாறி அவர்களின் பசியாற்றுங்கள் என்று சொல்லிய காட்சி இன்றும் கூட என் நினைவில் பசுமையாக இருக்கிறது !

இன்னொரு நாள், வேதாரண்யம் சந்நிதித் தெருவைச்  சேர்ந்த ஏழில் (நாதசுரம்) இசைக்கலைஞர் திரு.சுப்பையாப் பிள்ளை என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். பஞ்சநதிக்குளத்தார் புரத்தில் எந்த ஒரு நன்னிகழ்வு  என்றாலும் அவர் தவறாமல் வருகை தந்து ஏழில் (நாதசுரம்)  இசை வழங்குவார்.  இப்படிப்பட்ட சுப்பையாப் பிள்ளை எங்கள் வீட்டிற்கு வந்து முகவாட்டத்துடன்  பேசிக்கொண்டிருப்பதை அறிந்த  என் தாயார்  மெல்ல  அவரிடம்  முகவாட்டத்திற்கான காரணம் பற்றி உசாவினார் !

சில மாதங்களாக ஏழில் இசை நிகழ்ச்சி எதுவும் இல்லை என்றும் அதனால் வருமானமின்றி இன்னற்பட்டு  வருவதாகவும், பிள்ளைகளுக்கு கூட உணவளிக்க இயலவில்லை என்றும்  திரு.சுப்பையாப்  பிள்ளை வருத்தத்துடன் கூறியதைக் கேட்ட என் தாயார் உள்ளே சென்று ஒரு கோணிப்பையில்  15 லிட்டர் அளவுக்கு அரிசி கொண்டுவந்து அவரிடம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச்சென்று பிள்ளைகளுக்கு முதலில் உணவு ஆக்கிக்  கொடுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார் !

இவ்வாறு வறுமை என்று வந்தவர்களுக்கு அரிசி அளித்து பிள்ளைகளுக்கு உணவு ஆக்கிக் கொடுங்கள் என்று உரைக்கும்  இரக்க மனம் கொண்ட என் தாயார், வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் கேட்கும் கேள்வி சாப்பிட்டீர்களா என்பதுதான்  !

மறைஞாயநல்லூர் என்னும் பூப்பட்டியைச் சேர்ந்த பண்டாரம் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம், ஒரு தாழை ஓலை மடக்குக் கொட்டானில் கொஞ்சம் முல்லை அரும்பு கொண்டு வந்து தருவார். அதற்குப் பகரமாக என் தாயார் அவருக்கு வயிறு நிரம்பச் சோறிடுவார். சோற்றைக் கை நிறைய எடுத்துப் பெரிய கவளமாக உருட்டி அவர் உண்ணும் காட்சி 70 ஆண்டுகளாகியும் இன்னும் என் கண்கள் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றன !

நான் ஆயக்காரன்புலம் பள்ளியில் படிக்கையில் படிப்புக்குக் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. குறைந்த வருமானம் உள்ள பெற்றோர், வட்டாட்சியரிடம் வருமானச் சான்று வாங்கித் தந்தால்கல்விக் கட்டணம் 50% செலுத்தினால் போதும். மாதந்தோறும் செலுத்தவேண்டிய இந்தக் கட்டணம் உருபா 03-50 அளவுக்கு இருந்ததாகத்தான் நினைவு !

இந்தத் தொகையைத் தருவதற்கு என் தந்தை காலம் கடத்துவார். காரணம் புயலுக்குப் பிந்தைய தாக்கத்தால் ஏற்பட்ட விளைச்சல் வீழ்ச்சி. தாயார் தான் ஏதேதோ செய்து, இந்தத் தொகையை எனக்குத் தருவார். சில நேரங்களில் தான் வளர்த்து வந்த ஆட்டுக் குட்டிகளை விற்றுக் கூட இந்தத் தொகையைத் தந்திருகிறார். தந்தையை விடத் தாயார் மீது எனக்குப் பற்று அதிகமானதற்கு இதுவும் கூட ஒரு காரணம் !

தாயாரிடம் இருந்து இரவல் பெற்ற இந்த நல்ல குணங்களை நான் இன்றும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இக்குணங்களைப் பெற்றிருப்பது  நான் பெற்ற  நற்பேறே என்று  கருதுகிறேன். மனிதராகப் பிறந்தவர்களிடம்  இரக்கம், அன்பு, பரிவு உணர்வு ஆகியவை  கட்டாயம் இருந்தாக வேண்டும் !

நாம் பிறரிடம் அன்பு பாராட்டினால் பிறரும் நம்மிடம் அன்பு பாராட்டுவார்கள் என்பது பெரியோர்கள்  உரைத்திருக்கும் உலக நியதி  ! உலக நியதியை உணராதவர்கள் தம்மை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளக்  கிஞ்சிற்றும் தகுதி இல்லாதவர்கள் !

தஞ்சாவூரில் நான் புதிதாகக் கட்டியிருந்த வீட்டில் 2004 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 -ஆம் நாள் புதுமனை புகுவிழாவை, மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் சொல்லி நடத்தினேன் !

ஒப்பந்தக்காரர் மூலம்  வீடு  கட்டும்  பணி நடந்தாலும், கட்டுமானப் பணிகளில் கடைப் பிடிக்கப்பட்ட  தரம் எனக்கு   முழு மன நிறைவைத் தந்தது.  கலவை விகிதம் 1:5 என்ற அளவைக் கொத்தனார்கள் தவறாது கடைப்பிடித்தார்கள் ! காலை, மாலை இருவேளையும் கட்டுமானங்களின் மீது நீர் ஊற்றி, கலவை நன்கு இறுகச் செய்தார்கள் ! 

எனவே  இப்பணியில்   ஈடுபட்டிருந்த     கொத்தனார்களின்  சேவையைப் பாராட்டும் வகையில் புதுமனை புகு விழாவன்று தஞ்சாவூர், சூரியம்பட்டியைச் சேர்ந்த  கொத்தனார்கள் திரு.கார்த்தி, திரு.சேகர். திரு.சக்திவேல், நெடார் திரு. ஏசு ஆகிய நால்வரையும் அழைத்து விருந்து அளித்ததுடன் ஒவ்வொருவருக்கும் நெடுங்காற்சட்டை (PANTS) மற்றும் மேற்சட்டைகளுடன் (SHIRT) சிறு தொகை அன்பளிப்பாகவும்    தந்தேன் !

கொத்தனார்களுக்குக் கட்டுமானப் பணியில் உதவிய சிற்றாள்கள் செல்வி.புஷ்பரானி, திருமதி. சந்திரா ஆகியோரும் விருந்தில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்குப் புடைவைகளுடன் பண அன்பளிப்பும் தந்தேன் . கொத்தனார் மற்றும் சிற்றாள்களின் முகத்தில் அன்று நான் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! உழைப்பவர்களை நாம் மதித்தால் அவர்களும் வஞ்சனை இல்லாமல் உழைப்பை நல்கத்தான் செய்கிறார்கள்  ! 

புதிய வீட்டில் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவேறிய பின் 2004 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 -ஆம் நாள் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு இடம் பெயர்ந்தேன் ! 

ஓசூர் இராசகணபதி நகரில் வாழ்ந்து மறைந்த திரு.செயராமன் அவர்களின் மனைவி பெயர் புஷ்பா. இவ்விணையருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். திரு செயராமன் இறப்பதற்கு முன்பாக மூத்த பெண் பேபிக்கும், இரண்டாவது பெண் இலக்குமிக்கும் திருமணம் ஆகி இருந்தது !

திரு.செயராமன் மறைந்த எட்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது மூன்றாவது பெண் செல்வி.லலிதாவுக்கும், ஓசூரைச் சேர்ந்த திரு.இரமேஷ் என்பவருக்கும் 2004 –ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 29 –ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. திரு செயராமனின் மகன் திரு.பிரபு தான் திருமண ஏற்பாடுகளை முழுமையாகப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தி வைத்தார் !.

இந்தத் திருமணத்திற்கு நான் செல்ல இயலவில்லை. என் அறுபதாம் அகவை நிறைவு நாள் விழா பஞ்சநதிக்குளம் அங்காளபரமேசுவரித் திருக்கோயிலில் மறுநாள் (30-04-2004) நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வேண்டிய முன் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், செல்வி.லலிதா திரு.இரமேஷ் திருமணத்திற்கு ஓசூர் செல்ல இயலாமற் போயிற்று ! எனினும் இரண்டு நாள்கள் முன்னதாக ஓசூர் வந்து செல்வி லலிதாவை நேரில் அழைத்து வாழ்த்துக் கூறினேன் !

காலம் தான் எத்துணை விரைவாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு அறுபது அகவை நிறைவடையப் போகிறது. உற்றார் உறவினர்கள் சும்மா இருப்பார்களா ? அறுபதாம் ஆண்டு நிறைவு நாள் விழாவைக் கொண்டாடும் பொருட்டு,  தஞ்சாவூரிலிருந்து மூடுந்து (VAN) ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு பஞ்சநதிக்குளம் அங்காளபரமேசுவரி திருக்கோயிலுக்குச் கோயிலுக்குச் சென்றிருந்தோம் !

எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி, மருமகன் திரு.சிவகுமார், மகள் திருமதி.கவிக்குயில், சிவக்குமாரின் தந்தை திரு..பழனியப்பன், தாயார் திருமதி இராசேசுவரி, ஆறு மாதக் குழந்தையான பெயரன் கீர்த்திவாசன், திருச்சியிலிருந்து என் மைத்துனர் திரு.ஜீவானந்தம், தஞ்சாவூரிலிருந்து பேராசிரியர் திரு.குருநாதனின் மனைவி திருமதி கௌரி, அவர் மகன் திரு. வடிவேல் முருகன், திருத்துறைப் பூண்டியிலிருந்து இணைமான் (சகலை) திரு..மா.சுப்ரமணியன், அவர் மனைவி திருமதி.காஞ்சனமாலா ஆகியோரும் வந்திருந்தனர் !

சேரன்குளத்தில் என் தங்கை மகன் பாலதண்டாயுதத்தின் வீட்டில் அவருடைய அரவணைப்பில்  தங்கி இருந்த என் மாமனார், மாமியார் ஆகியோர், நிகழ்ச்சிக்கு வரவில்லை. திரு.பாலதண்டாயுதம் எங்கள் மீது ஏதோ வருத்தம் கொண்டு எங்களிடம் தொடர்பு இல்லாமல் இருந்ததால், அவர் வீட்டில் தங்கி இருந்த மாமனார், மாமியார் இருவரும் நிகழ்ச்சிக்கு வர விரும்பினாலும், செல்லக் கூடாது எனத் தடுக்கப்பட்டதாக அறிந்துகொண்டோம் !

சேர்வதும் விலகுவதும் உறவினர்களிடையே இக்காலத்தில் இயல்பான ஒரு நிகழ்வாகி விட்டது. விலகியவர்கள் மீண்டும் ஒன்று சேர முடியும்; ஆனால் விலகி இருந்த காலத்தில் அவர்கள் தவறவிட்ட இன்ப துன்ப நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியாது. இதை இந்த மானிடக் குமுகாயம் ஏனோ மனதிற் கொள்வதில்லை !

கோயிலில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மூடுந்தில் (VAN) தஞ்சாவூர் திரும்பிக் கொண்டிருந்தோம். மூடுந்து தட்டாங்கோயில் பாலம் தாண்டி வந்துகொண்டு இருக்கையில் ஒரு அதிர்ச்சி தரும் செய்தி எங்களை வந்து தாக்கியது !

---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),17]
{30-05-2020}
--------------------------------------------------------------------------------------------

என் அன்னை. 
திருமதி சாரதா அம்மையார்.


திரு.நாகராசன், 
கடிநெல்வயலில் வாழ்ந்து வந்த
 பொற்கொல்லர்.
(உண்மையில் இந்தப் படம் 
அவருடையது அன்று)

கடிநெல்வயலில் 
எந்த  நன்னிகழ்வு என்றாலும் 
ஏழில் இசை வழங்கும் 
திரு.சுப்பையாப் பிள்ளை 
(உண்மையில் இந்தப் படம்
 அவருடையது அன்று)

மறைஞாயநல்லூர்
 பண்டாரம் கொண்டு வந்து தரும் 
முல்லை அரும்பு 


தஞ்சாவூரில் உள்ள என் வீடு. 
ஒப்பந்தக்காரர் மூலம் கட்டிய 
 இந்த வீட்டில் 
புதுமனை புகு விழாவை
 4-2-2004அன்று நடத்தினேன் 

அறுபதாம் அகவை நிறைவு
 விழாவைக்
 கொண்டாடிய பஞ்நதிக்குளம் 
அங்காளபரமேசுவரி திருக்கோயில்























காலச் சுவடுகள் (40) :2003 நிகழ்வுகள் - கவிக்குயில் திருமணம் !



தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPGY) !

காலச் சுவடுகள்: 2003 நிகழ்வுகள் !
 (சுவடு.40) கவிக்குயில் திருமணம் !

-----------------------------------------------------------------------------------------

என் கடைசித் தங்கை திருமதி.சுமதியின் மகள் செல்வி. கயல்விழிக்கும், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி திரு.இளவழகன் அவர்களின் மகன் திரு.குலோத்துங்கனுக்கும் திருமணம் உறுதியாயிற்று !

ஆயக்காரன்புலம் காசி-வீரம்மாள்  திருமண மண்டகத்தில் 2003 –ஆம் ஆண்டு சனவரி மாதம், 20 –ஆம் நாள் மணவிழா நடைபெற்றது. இத்திருமணம் நிகழ்ந்த காலை, நான் ஓசூரில் குடியிருந்து வந்தேன் !

திருமணத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நான் ஓசூரில் இருந்து வந்து கலந்து கொண்டேன். செல்வி கயல்விழி திரு.குலோத்துங்கன் திருமணம் நடைபெற்ற அடுத்த 15 நாளில் என் மகள் கவிக்குயில் சிவக்குமார் திருமணமும் நடைபெற்றது ! தஞ்சாவூரில் சேவப்பநாயக்கன் ஏரி என்னும் பகுதியைச் சேர்ந்த திரு..பழனியப்பன் அவர்களின் மகன் திரு.சிவக்குமாரைக் கவிக்குயில் கைப்பிடித்தார். திரு.சிவக்குமார் அப்பொழுது ஓசூரில் உள்ள டைட்டான் கடிகார நிறுவனத்தில் (TITAN INDUSTRIES LIMITED) பணி புரிந்து வந்தார் !

கவிக்குயில் சிவக்குமார் திருமணம் 2003 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 06 –ஆம் நாள், திருத்துறைப் பூண்டி மங்கை மகாலில் நடைபெற்றது. திருமணத்திற்கு யாருக்கெல்லாம் அழைப்புத் தரவேண்டும் என்பதை மூன்று மாதம் முன்னதாகவே நான் திட்டமிட்டு வந்தேன் !

என் சட்டைப் பையில் எப்பொழுதும் ஒரு வெள்ளைத் தாளும் மணி (முனைத்) தூவலும் (BALL POINT PEN) இருந்துகொண்டே இருக்கும். நினைவுக்கு வரும்போதெல்லாம் அழைப்பிதழ் தரவேண்டியவர்களின் பெயரை அதில் எழுதி வந்தேன் ! இதனால் விடுபடலின்றி உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஊரார் அனைவருக்கும் அழைப்பிதழைத் தர முடிந்தது !

திருமணம் நிறைவேறிய பிறகு, சில நாள்களில் மணமக்களுடன் ஓசூர் வந்தடைந்தோம்.  16-02-2003 அன்று ஓசூரில் சங்கீத் உரையரங்கில் (SANGEETH AUDITORIUM) வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். ஓசூரிலிருந்து திருத்துறைப்பூண்டி 416 கி.மீ தொலைவில் இருந்தமையால், ஓசூர் நண்பர்கள் அனைவரும் அங்கு வருதல் இயலாத செயல். எனவே அவர்களுக்காகவே இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன் !

ஓசூர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் அலுவலர்கள் அத்துணை பேரும் வருகை தந்திருந்தனர். அஃதன்றி, இருநூற்றுக்கும் மேற்பட்ட என் நண்பர்கள் குழாமும்  வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தது. வேலூரில் இருந்து திரு.மீ.இராசேந்திரன், பெங்களூரில் இருந்து திரு.தெ.சண்முகசுந்தரம். சேலத்தில் இருந்து திரு.சா.இராமமூர்த்தி எனப் பல்வேறு இடங்களிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். !

திரு.சிவக்குமாருக்கு, டைட்டான் நகரியத்தில் சொந்த வீடு இருந்தமையால், திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் அங்கு குடித்தனம் நடத்தத் தொடங்கினர். சிவக்குமார் கவிக்குயில் திருமணம் நடைபெற அடித்தளம் இட்டவர்கள், சிவகுமாரின் நண்பரும், டைட்டான் அலுவலருமான திரு.முருகேசனும் அவரது மனைவி திருமதி.அனிதாவும். இவ்விருவரும் தான் முதன்முதல் எங்கள் இல்லத்திற்கு வந்து சிவகுமாருக்காகப் பெண் கேட்டவர்கள். திரு.முருகேசன் ஆடுதுறையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி !

இதற்கிடையில் தஞ்சாவூரில் நான் வாங்கியிருந்த மனையில் வீடு கட்டுவதற்கு முயன்று வந்தேன். தஞ்சாவூரைச் சேர்ந்த திரு.பேச்சிமுத்து என்னும் பொறியாளரை அழைத்து வீடு கட்டித்தர  04-06-2003 அன்று  ஒப்பந்தம் செய்து கொண்டேன் !

தஞ்சாவூரில் வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட நிலையில் ஓசூரிலேயே தொடர்ந்து வாழ்தல் நன்மை பயக்காது என்பதால் குடியிருப்பினைத் தஞ்சாவூருக்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்து 10-06-2003 அன்று நஞ்சுண்டேசுவரர் நகர் வீட்டினை அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்து விட்டுத் தஞ்சாவூருக்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தேன் !

முன்னதாக தஞ்சாவூர், இராசீவ் நகரில் உள்ள, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு  குருநாதன் அவர்களின் வீட்டு மாடியில் எனது குடியிருப்பை அமைத்துக் கொள்ள விரும்பி அவரிடம் பேசி இருந்தேன். வாடகையாக உருபா 1400 முடிவு செய்யப்பட்டது.  ஓசூரில் இருந்து இடம் பெயர்ந்தவுடன், குடும்பத்தினரை அழைத்து வந்து இந்த வீட்டில் தங்க வைப்பது எனக்கு எளிதாயிற்று !

இராசீவ் நகர், வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு அருகில் இருந்த கண்ணம்மாள் நகரில் கட்டப்பட்டு வந்த எனது வீட்டின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு  ஒழுங்குபடுத்திக் கண்காணித்து வந்தேன் !

நாகப்பட்டினம் அருகிலுள்ள தேவூர் என்னும் ஊரில் என் தாய் மாமா திரு.சி. பண்டரிநாதன், -  தமக்கையார் திருமதி.சிந்தாமணி இணையர் வாழ்ந்து வந்தனர் அவர்களது மகன் திரு.அருமைநாதன்.  குழந்தைப் பருவத்திலிருந்து  அருமைநாதன் எங்கள் வீட்டில் வளர்ந்த பிள்ளை. என் மீதும் என் குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருந்தவர்

இவரையும் தொழிற் பயிற்சி நிலையத்தில் நல்ல தொழிற் பிரிவில் சேர்த்துப் பயிற்சி பெற வைக்க வேண்டும் என்று விரும்பினேன். தன் குடும்ப நிலையைக் காரணம் காட்டி, அவர் என் விரும்பத்தை  ஏற்கவில்லை. குறுகிய காலப் பயிற்சி உடைய வானொலி பழுது பார்ப்புப் பயிற்சியில் சேலத்தில் சேர்த்து விடுகிறேன் என்று சொன்னேன். சமையற் குழுவினருடன் பல ஊர்களுக்குச் சென்று பணி செய்து அதனால் ஈட்டும் வருமானத்தை நம்பித் தன் குடும்பம் இருப்பதால், இந்தக் கருத்தையும் தன்னால் ஏற்க இயலாது என்று தெரிவித்தார் !

நான் தெரிவித்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், இன்று குடும்ப வருமானத்திற்கு இன்னல்கள் பலவற்றை எதிர்கொண்டு வருகிறார். வாழ்க்கையில், சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்கத் தவறுவோர், இன்னல்களிலிருந்து மீட்சி பெறுவது கடினம் என்பதற்குத்  திரு.அருமைநாதனே எடுத்துக் காட்டு !

திரு.அருமைநாதனுக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த திரு.கலிதீர்த்த தேவர் மகளும் திரு.இராசகோபால் தேவர் தங்கையுமான செல்வி.வள்ளிக்கும் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் நாள் கீழ்வேளூர் வாசன் திருமண மண்டகத்தில் திருமணம் நடைபெற்றது !

இந்தத் திருமணம் நிகழ்கையில் நான் ஓசூரிலிருந்து தஞ்சாவூருக்குக்  குடும்பத்தை அழைத்து வந்து 20 நாள் தான் ஆகி இருந்தது. தஞ்சாவூரிலிருந்து கீழ்வேளூர் 74 கிமீ தொலைவு. எனவே, திருமணத்திற்கு என் குடும்பத்தாருடன் நானும் சென்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் !

இந்தத் திருமணத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் என் திருமணம் நடந்து சரியாக 31 ஆண்டுகள் கழித்து அதே சூலை மாதம் இரண்டாம் நாளில் திரு.அருமைநாதன் செல்வி.வள்ளி திருமணமும் நிகழ்ந்திருக்கிறது.  என்னே வியப்புக்குரிய ஒற்றுமை  !

சக்கரைப் பொங்கல் சாப்பிடும்போது நாக்கைக் கடித்துக்கொண்டால் எத்துணை வலி ஏற்படும் ! அதுபோன்ற ஒரு வலியை இந்தத் திருமணம் நிகழ்ந்து  சரியாக ஏழாம் நாளில் நான் சந்திக்க நேர்ந்தது.  ஆம் ! 2003 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 -ஆம் நாள், வேதாரணியம் அருகில் உள்ள கருப்பம்புலத்தில் என் தங்கை வீட்டில் தங்கி இருந்த என் தாயார் சாரதா அம்மையார் மறைந்து போனார் !

என் பத்தாம் அகவையில், கிணற்றில் விழுந்து நான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது,  தொலைவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் அதை உதறிவிட்டு ஓடி வந்து என்னைக் காப்பாற்றிய அதே அன்னை இன்று என்னிடமிருந்து பிரிந்து மீளாத் துயிலில் ஆழ்ந்து போனார் !

வாழ்நாளெல்லாம் எனக்குத் தண்ணொளி தந்து வந்த முழு நிலவு தன் பயணத்தை முடித்துக் கொண்டு மறைந்து போயிற்று ! மறைந்த நிலாவை ஒவ்வொரு ஆண்டும் சூலை 9 ஆம் நாள் நினைவு கூர்ந்து எளியோர் சிலருக்கு உணவிடுதலை இன்று வரைக்  கடைப்பிடித்து வருகிறேன் !

என் இரண்டாவது மகள் இளவரசியின் வாழ்க்கைத் துணைவர் பெயர் திரு.பிரபு. நாங்கள் ஓசூரில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் பி.12 இலக்கமுள்ள குடியிருப்பில் வாழ்ந்து வருகையில், இதற்கு எதிர்ப்புறம் உள்ள இராசகணபதி நகரில் வாழ்ந்து வந்தவர் திரு.பிரபுவின் தந்தையார் திரு.செயராமன். ஓசூரில் சிப்காட் பகுதியில் சொந்தமாக ஒரு தொழிலகம் வைத்து இயக்கி வந்தவர் !

திரு.செயராமன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 –ஆம் நாள்  யாரும் எதிர்பரா வகையில் கதுமென (திடீரென) இறந்து போனார். அப்பொழுது எங்கள் குடும்பம் தஞ்சாவூரில் வாழ்ந்து வந்தது. திரு.பிரபு இளவரசி திருமணம் அப்போது நிகழ்ந்திருக்கவில்லை. தஞ்சாவூரிலிருந்து நான் மட்டும் ஓசூர் வந்து அவர் வீட்டிற்குச் சென்று என் இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறி வந்தேன் !

இதற்கிடையில், என் மகள் திருமதி.கவிக்குயிலுக்கு தஞ்சாவூர் ஏ.கே.எஸ். மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது. 2003 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி பிறந்த தன் பெயரனுக்கு. என் மனவி கீர்த்திவாசன்என்று பெயர் வைத்தார். கீர்த்திவாசன் நான்கு மாதக் குழந்தையாக இருந்த போது அவனுக்காக வாங்கிய தொங்கும் பிரம்பு ஊஞ்சல் இப்போதும் என் வீட்டில் இருக்கிறது !

அதில் அமர்ந்து  ஆடியபடி 16 அகவை நிறைந்த கீர்த்திவாசன் 12 –ஆம் வகுப்புப் (+2)  பாடப் புத்தகத்தைப் படிப்பதை நானும் என் மனைவியும் சற்றுத் தள்ளி அமர்ந்து மனதிற்குள் சுவைத்தபடி காலத்தை அசைபோட்டுப் பார்ப்பதுண்டு !

திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள வேலூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்து வந்த சிவப்பிரகாச தேவர் கல்யாணி அம்மையார் இணையரின் மூன்றாவது மகளாகப் பிறந்தவர் என் தாயார் சாரதா அம்மையார். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஞானசேகர், வரதராசன், கருணாநிதி, பண்டரிநாதன் என்னும் ஆண் மக்களும், மீனாட்சி, சுந்தராம்பாள் என்னும் பெண் மக்களும் ஆவர் !

பள்ளிக்கே செல்லாத என் தாயார், செய்தித் தாள்களையும், புத்தகங்களையும் எழுத்துக் கூட்டிப் படித்துப் படித்து, பிற்காலத்தில் தங்கு தடையின்றிப் படிக்கும் அளவுக்கு மிகுந்த திறமைசாலியாக விளங்கினார். தமக்கை மகன் திரு.அருமைநாதன், தங்கை மகன் திரு.வேணுபோபால் ஆகியோர் இளம்பருவத்தில் என் தாயாரின் அரவணைப்பில் எங்கள் வீட்டில் வளர்ந்தவர்கள் என்பது உற்றாரும் உறவினர்களும் அறிந்த உண்மை !


------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),16]
{29-05-2020}
------------------------------------------------------------------------------------------

திரு.சிவகுமார் - செல்வி கவிக்குயில்
திருமணம் : நாள் ; 06-02-2003


திரு.சிவகுமார் - செல்வி கவிக்குயில் 
திருமண அழைப்பிதழ். 
இவர்கள் திருமணம் 
 6-2-2003 அன்று 
திருத்துறைப் பூண்டி மங்கை மகால் 
திருமண அரங்கில் நடைபெற்றது.

திரு.அருமைநாதன் - செல்வி.வள்ளி
 திருமணம் : நாள் : 02-07-2003

திரு.அருமைநாதன்  செல்வி வள்ளி 
இணையர் திருமணம் 
2-7-2003 அன்று  கீழ்வேளூர் 
வாசன் திருமண மண்டகத்தில் 
நடைபெற்றது.

திரு.குலோத்துங்கன் - 
செல்வி கயல்விழி திருமண அழைப்பிதழ். 
இவர்கள் திருமணம் 
 20-01-2003 அன்று ஆயக்காரன்புலம் 
காசி வீரம்மாள் திருமண மண்டகத்தில் 
நடைபெற்றது.

அன்னை சாரதாம்பாள், 
தோற்றம் 00-00-1911 :  மறைவு:09-07-2003


திரு.ஜெயராமன்: 
மறைவு 22-8-2003