தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPGY) !
காலச் சுவடுகள்(62) : 2018 நிகழ்வுகள் !
நன்றி ! வணக்கம் !
--------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூரில்
புதிய வீடு கட்டி அதில் 2004 –ஆம் ஆண்டு குடியேறிய பின்பு
நான் என் மனைவி, மகள் இளவரசி ஆகியோர் மட்டுமே அங்கு வாழ்ந்து வந்தோம். இளவரசிக்கு
2004 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் ஆன பின்பு நானும் என் மனைவியும்
மட்டுமே குடும்ப உறுப்பினர்கள்.!
சென்னையில்
பணிபுரிந்து வரும் மகன் இளம்பரிதி நான்கு அல்லது ஆறுமாத இடைவெளியில் எங்களை வந்து பார்த்துச்
செல்வார்.
எங்கள் வாழ்க்கை இவ்வாறு ஒரே நேர் கோட்டில் சென்று கொண்டிருந்தது.
இடையில் ஆறு மாத காலம் கணியம் (ASTROLOGY) கற்றுக்
கொண்டேன். அதை முழுமையாகக் கற்றறிந்தாலும், அதில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. எனவே அதை ஒரு தொழிலாக
மேற்கொள்ள நான் விரும்ப வில்லை !
நான்
குடியிருந்த பகுதியில் திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கத்தை
2006 –ஆம் ஆண்டு நிறுவிய பின்பு என் கவனம் அதில் திரும்பியது.
எனக்கு அது பொழுது போக்காகவும் இருந்தது; அதே சமயத்தில்
மன நிறைவு தரும் மக்கள் சேவையாகவும் அமைந்தது !
தமிழ்ப்
பணி மன்றம் என்னும் முகநூற் குழுவை (GROUP) 2015 –ஆம்
ஆண்டு தொடங்கினேன். என் தமிழ் வேட்கையைத் தணித்துக் கொள்ள அரியதோர்
நீர்நிலையாக எனக்கு அது அமைந்திருந்தது; அமைந்திருக்கிறது
! பெயருக்கு ஏற்றபடித் “தமிழ்ப் பணி” ஆற்ற இம்முகநூற் குழுவை முழுமையாகப் பயன் படுத்திக்கொள்வது என் நோக்கம் ! இந்த
நோக்கத்துடன் தான் கடந்த ஆறு ஆண்டுகளாக இக்குழுவின் ஆட்சியர் (ADMIN) பொறுப்பில் அமர்ந்து அதை இயக்கிவருகிறேன்.!
புதிய
தமிழ்ச் சொற்கள் பல உருவாக்கித் தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாளைய
அவா
! ஒரு புதிய சொல்லை உருவாக்கும் போது அச்சொல் எவ்வகையில் பொருத்தமானது
என்று விளக்கினால் தானே தமிழ் கூறும் நல்லுலகத்தில் அது நிலைத்து நிற்கும்
! எனவே அது பற்றிய 54 ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழ்ப்
பணி மன்றத்தில் வெளியிட்டிருக்கிறேன்.. எழினி (MOBILE),
பல்லவி (COOKER), பேடுருளி (MOPED), அகழி (CUTTER), குயிலி (DRILL BIT), எண்மம் (DIGITAL), அல்லியம் (TRACTOR), பாவையுருளி (SCOOTY), அவிழகம் (MESS), அளகை (BANK), அழலி (IRON BOX), ஈர்மம் (PAINT), உமிழி (PUMP), செங்களம் (CHESS), சிலம்பு (SPANNAR), பயின் (RUBBER) போன்றவை அவற்றுள் சில !
புதிய
சொற்களை உருவாக்கினால் மட்டும் போதாது, தமிழகத்தில் மக்களிடையே
பல துறைகளிலும் விழிப்புணர்வையும் தோற்றுவிக்க வேண்டும் என்று எண்ணினேன் ! என் எண்ணத்திற்குச் செயல் வடிவம் தரும் வகையில், “தாய்மொழிக்
கல்வி,” “அரசியல் வேண்டாம்”, “ஆக்கம் கருதி
முதல் இழக்கும் செய்வினை,” “ஆட்சி முறையில் சீர்திருத்தம் தேவை”,
“வல்லுநர்கள் அமைச்சர்களாக வேண்டும்”, “இயற்கை
வளங்கள் அழிப்பு,” “உடனடி உணவுகளை உதறித் தள்ளுங்கள்”,
“கட்சி தொடங்கும் நடிகனை நம்பாதே,” “மயங்கிக் கிடக்கும்
தமிழன்”, “விசுவநாதன் ! வேலை வேணும்”
என்பன போன்ற 58 விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டு வந்திருக்கிறேன்
!
தமிழ்
மொழி வளர்ச்சிக்காக “இவை தமிழ்ச் சொற்களே”, “கோளியலும் வடமொழித் திணிப்பும்”, “தமிழில் பேசுவோம்”,
“தமிழையே எழுதுவோம்”, “மங்கி வரும் தமிழுணர்வு”,
“மொழிச் சிதைவுக்கு இடம் தரலாகாது,” ”ச”கரத்தை மறந்த தமிழர்கள்” என்பன போன்ற 30 கட்டுரைகளைத் தமிழ்ப் பணி மன்றத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறேன் !
மாந்தப்
பெயர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பல தமிழ்ப் பணி மன்றத்தில் வெளிவந்திருக்கின்றன. அய்யாக்கண்ணு, இராமன், எல்லப்பன்,
கலியமூர்த்தி, காத்தமுத்து, குப்புச்சாமி, சொர்ணம், நரேஷ்,
நளினா, பாலையா, ஹேமலதா என்பன
போன்ற பெயர்களின் பொருள் என்ன என்பதை விளக்கி 33 கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறேன்.
சரவணன், கிருஷ்ணசாமி, சௌந்தர்ராசன்,
மீனாட்சி, இந்திரன், மது,
போன்ற பெயர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் 7 வெளியிட்டு இருக்கிறேன் !
பாரதியார், பாரதிதாசன், இலக்குவனார்,
பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார், உ.வே.சா, இரா.பி.சேதுப்பிள்ளை, க.வெள்ளைவாரணனார்,
க.ப.அறவாணன், மேலப் பெருமழைப் புலவர் பொ.வே,சோமசுந்தரனார்,
கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப்
புலவர், முனைவர் தமிழண்ணல், முனைவர்.மு.வ., போன்ற 31 தமிழறிஞர்களின்
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை நான்கு பக்க அளவில் எழுதி வெளியிட்டு இருக்கிறேன் !
புறநானூறு, மூதுரை, பழமொழி, நான்மணிக் கடிகை,
நல்வழி, நறுந்தொகை, திருப்புகழ்,
காளமேகம் பாடல்கள், குறுந்தொகை, குற்றாலக் குறவஞ்சி, சிறுபஞ்சமூலம், நந்திக் கலம்பகம் போன்ற இலக்கியங்களிலிருந்து 54 பாடல்களைத்
தேர்ந்தெடுத்து, அருஞ்சொற் பொருளுடன் உரை விளக்கம் எழுதி வெளியிட்டிருக்கிறேன்
!
இலக்கிய
அறிமுகம் என்ற வரிசையில் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை,
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள், தொல்காப்பியம்,
மணிமேகலை, குண்டலகேசி, சீவக
சிந்தாமணி, சிலப்பதிகாரம், தேவாரம்,
திருவாசகம் திருவருட்பா போன்ற 52 நூல்கள் /
இலக்கியங்கள் / காப்பியங்கள் பற்றிக் கட்டுரை எழுதி
வெளியிட்டு இருக்கிறேன் !
2016
–ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல்
வாழ்த்துப் பாடல் போட்டி ஒன்றை அறிவித்து அதில் வெற்றி பெற்ற முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு
“கவியருவி”, “கவிச்சுடர்” பட்டங்களை வழங்கி, அச்சிட்ட சான்றிதழும் தந்து,
அவர்களின் தமிழாற்றலைப் பெருமைப் படுத்தி இருக்கிறேன் !
திருமணமாகி ஓசூரில் இருக்கும் என் பெண்கள் இருவரும்
தஞ்சையில் நானும் என் மனைவியும் மட்டும் தனியாக இருப்பதை விரும்பவில்லை. ஓசூருக்கே வந்துவிடுமாறு அழைத்தனர். அவர்கள் அழைப்பை
ஏற்று, தஞ்சாவூர் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு,
2019 ஆம் ஆண்டு மே மாதம் 20 -ஆம் நாள் தஞ்சையிலிருந்து
புறப்பட்டுச் சீருந்து மூலம் ஓசூர் வந்தடைந்தோம். கடந்த ஓராண்டு
காலமாக ஓசூரில் தான் என் தமிழ்ப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது !
நான்
அரசுப் பணிகளை ஏற்றிருந்த காலத்திலும் சரி, பணி ஓய்வுக்குப்
பிந்திய காலத்திலும் சரி, நான் அடைந்த பட்டறிவுகள் (அனுபவங்கள்) ஏராளம் ! ஏராளம் ! உறவினர்களுக்கும்
நண்பர்களுக்கும் உள்ள வேறுபாட்டை எனக்கு உணர்த்திய காலப் பகுதி
இது !
அரசியலில்
கலைஞரால் பயனடைந்தவர்கள், அவரால் தூக்கி விடப்பட்டவர்கள்,
அவரால் பதவிப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர் அவரை விட்டு விலகிச் சென்றதும்,
அவருக்கு எதிராக அரசியல் செய்ததும் அரசியல் நோக்கர்கள் அறிந்த உண்மை
!
என் வாழ்விலும், என்னால் பயனடைந்தவர்கள், என்னால் தூக்கிவிடப்பட்டவர்கள்,
என் உதவியைப் பெற்றவர்களில்
மிகப் பெரும்பான்மையோர் நான் நலமாக இருக்கிறேனா என்பதைக் கூட
அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் துறந்து விட்டவர்களாகவே இயங்கி வருகின்றனர் !
ஒவ்வொரு
மனிதனின் வாழ்விலும் பெரும்பாலும் நண்பர்களே உற்றுழி உதவுகின்ற உயரிய பண்பு உடையவர்களாக
இருக்கின்றனர். உறவினர்கள் என்போர் “உறவு”
என்பதன் உட்பொருளை மறந்தே வாழ்கின்றனர் ! உதவி
செய்யும் பண்பு இக்காலத்தில் உறவினர்களிடம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது !
என் புதல்விகளின்
திருமணப் பணிகள் தொடங்கி, என் வாழ்க்கை வரலாறான காலச் சுவடுகளை
ஆர்வமுடன் படித்துக் கருத்துரை எழுதுவது வரை, நண்பர்களின் பங்களிப்பே
எனக்கு உதவி வந்திருக்கிறது !
நம் உறவினரின்
வாழ்க்கை வரலாறு ஆயிற்றே, அவர் எத்துணை இன்னல்களை அடைந்தார்,
அவர் பெற்ற துய்ப்புகள் (அனுபவங்கள்) யாவை, அவற்றைத் தெரிந்து கொள்வோம், அவரது எழுத்து ஆர்வத்தை ஊக்குவிப்போம் என்னும் உணர்வின்றி வாளாவிருந்த சில
“உறவினர்களின் மன நிலையை” காலச் சுவடுகள் எனக்கு
வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது !
ஒரு துளி
உதவியைக் கூட என்னிடமிருந்து பெறாத திரு.கணேசன் நடராசன்,
திரு.இரவி பசுபதி போன்ற தொலைநிலை உறவினர்கள் சிலரின்
கருத்துரைகள் என்னை இன்பக் கண்ணீர் வடிக்க வைக்கிறது !
என் நெருங்கிய
நட்பு வட்டத்தில் கூட இதுவரை இடம்பெறாத திரு.மோகன் ஜெய்,
திரு.அன்பு அன்பழகன், திரு
இராமலிங்கம் முருகையன், ஆகியோருக்கும் தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்களான
திரு.சண்முகம் இராமசாமி, திரு.திருமலைசாமி, திருமதி சுதமதி கார்த்திகேயன், திரு.தண்டாயுதபானி சாமிநாதன், திரு.சுந்தரம் இளங்கோவன், திரு.பாலு.இராமச்சந்திரன், திரு,அழகேசன் தனபால்,
திரு.முகுந்தன் தேவநாதன் போன்றோர் அன்றாடம் காலச் சுவடுகளுக்குக் கருத்துரை வழங்கி
வந்த பண்புக்குத் தலை வணங்குகிறேன் ! என்னிடம்
எதையும் எதிர்பாராமல் இயங்கும் நண்பர்களையும், அவர்களது நட்பினையும்
போற்றுகிறேன் !
உறவினர்களான திரு.சீ.சம்பத், திரு.சி.மணிமாறன், திரு.மீ.இராசேந்திரன், திருமதி.செந்தமிழ்ச்செல்வி
இராசேந்திரன், திருமதி.அருணா குகன்,
திரு.கலைச் செல்வன் பசுபதி, திரு.குலோத்துங்கன், திரு.சுந்தரம்
சிதம்பரம், திருமதி இரத்தினகுமாரி சுந்தரம், போன்றோர் காலச் சுவடுகள்
மீது கருத்துரை எழுதியோ அல்லது “விழைவு” (LIKE) கொடுத்தோ தங்கள் கருத்தைத் தெரிவித்து வந்திருக்கின்றனர். அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல், என்னை விட்டு விலகி
நிற்கும் ஒருசில உறவினர்களை இனியும் அவ்வாறே இருக்கட்டும்
என்று வாழ்த்துகிறேன் !
இந்த
இடத்தில்,
இப்போது சென்னையில் வாழ்ந்து வரும் திரு.சுந்தரம் சிதம்பரம் பற்றி நான் குறிப்பிட்டாக
வேண்டும். தொடக்கம் முதல் இன்றைய நாள்வரை, எனது காலச்சுவடுகளைப் படித்துக் கருத்துரை சொல்லி வந்த அவரது அன்பு உள்ளம் என்னை நெகிழ வைக்கிறது ! இடையில் சில நாள் எழினி மூலமும் தன் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் !
சுவடு (01)-இல் (திரு சுந்தரத்தின்) தந்தை பற்றிய குறிப்பு வெளியாகி இருந்தது. சுவடு (62) -இல் தனயன் (திரு.சுந்தரம்) பற்றிய குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். திரு.சுந்தரத்தின் தந்தை கடிநெல்வயல் இரெ.சிதம்பர தேவர் எனக்குப் பங்காளி. திரு சுந்தரத்திற்கு, திரு.கணேசன் என்ற தமையனாரும், திரு.
குமரவேல் என்ற தம்பியும் உண்டு. திரு.குமரவேல் காலமாகிவிட்டார் !
இவர்களன்றி
திருமதி.விஜயலட்சுமி (தென்னடார்), திருமதி.சரசுவதி (மன்னார்குடி), இன்னொரு
பெண் பெயர் நினைவுக்கு வரவில்லை, ஆக மொத்தம் மூன்று பெண்பால்
உடன்பிறப்புகள் உண்டு !
திரு.சுந்தரம், இளமையிலேயே தனியாளாகச் சென்னைக்கு வந்து,
பல இன்னல்களை எதிர்கொண்டு, துன்பங்களால்
துவண்டு சோர்ந்து விழுந்து, பிறகு மனத் தெளிவு கொண்டு, விடாமுயற்சியால் சில ஆண்டுகளுக்குப்
பிறகு, அப்போதைய பல்லவன் போக்கு வரத்துக் கழகத்தில் வலவராக
(DRIVER)ப் பணியில் சேர்ந்தார்.. அவர் மனைவி திருமதி
இரத்தினகுமாரி (ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை). மூன்று பெண் மக்களுக்குப் பெற்றோரான
திரு.சுந்தரமும், அவரது மனைவி திருமதி.
இரத்தின குமாரியும் அன்பில் தோய்ந்த திருவுருவங்கள் !
ஒருமுறை
சென்னையில் அவர் வாழ்ந்து வந்த நெசப்பாக்கம் வீட்டிற்கு நானும் என் பெண் கவிக்குயிலும்
சென்றிருந்தோம். அந்த ஒரு நாளிலேயே அவர்களது அன்பின் ஆழத்தைத்
தெரிந்துகொண்டோம். அவர்களது மூன்றாவது பெண் செல்வி.காயத்திரி தேவியை அழைத்துக் கொண்டு சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ்
போன்ற துகில் மாளிகைகளுக்குச் சென்று வந்தது மறக்கமுடியாத இனிய துய்ப்பு !
காலச்
சுவடுகளுக்குத் தங்கள் ஆதரவைப் பெருவாரியாக வழங்கி வந்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் இவ்வேளையில் என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன், என் வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து
கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ! தொடர்ந்து படித்துக் கருத்துரை சொல்லி வந்த உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். 62 நாள் நீடித்த இந்த எழுத்தோவியம் இந்த அளவில் நிறைவு பெறுகிறது !
நான்கு பக்க அளவில் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதி மின்னஞ்சல் வாயிலாக எனக்கு அனுப்பினால், அதைச் செப்பம் செய்து, தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிட அணியமாக இருக்கிறேன்; அத்துடன் தமிழ்நட்பு என்னும் என்னுடைய வலைப்பூவிலும் அதை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். வலைப்பூ முகவரி: www.thamizhnatpu.blogspot.com இந்த வலைப்பூவைத் திறந்து பார்த்து அதில் வெளியாகி இருக்கும் சிலரது வாழ்க்கை வரலாறுகளைப்போல உங்கள் வாழ்க்கை வரலாற்றையும் வடிவமைத்து அனுப்பலாம் !
காலச் சுவடுகள் இந்த அளவில் நிறைவு பெறுகிறது ! இனி, தமிழ்ப் பணி மன்றத்தில் கட்டுரைகள் வாயிலாக என்னை நீங்கள் சந்திக்கலாம் ! அனைவருக்கும் மீண்டும் என் நன்றி ! வணக்கம் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),10]
{24-06-2020}
------------------------------------------------------------------------------------
பொங்கல் விழா பாடல் போட்டி,
வென்றோருக்கு வழங்கிய சான்று !
திரு.சுந்தரம் அவர்களின்
அண்ணன் திரு.சி.கணேசன்
(ஓய்வு பெற்ற நடத்துநர்)
திரு.சுந்தரம் அவர்களின் தம்பி
(நி/வா) திரு,சி,குமரவேலு
திரு.சுந்தரம் அவர்களின் தாயார்
(நி/வா) திருமதி வைரக்கண்ணு
அம்மையார்
திரு.சி.சுந்தரம்
தங்கள் வாழ்க்கை வரலாறு என்னைப் பெருவியப்பு அடையச் செய்கிறது ! எத்துணை நிகழ்வுகள், எத்துணை மனிதர்கள், அத்துணையும் நினைவில் நிறுத்தி ஆற்றொழுக்காக, ஆண்டு வாரியாகப் பதிவு செய்திருக்கும் தங்கள் ஆற்றலைப் போற்றி மகிழ்கிறேன் !
ReplyDeleteமிக்கநன்றி !
ReplyDeleteஅருமையா படைப்பு !
ReplyDelete