name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, April 11, 2020

காலச் சுவடுகள் (50) :2014 நிகழ்வுகள் - உதகை முதல் கோடி வரை !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 2014 நிகழ்வுகள் !

                 (சுவடு.50) உதகை முதல் கோடி வரை !

-------------------------------------------------------------------------------------------

இராமேசுவரத்திலிருந்து தஞ்சாவூருக்குத் திரும்பி வரும் வழியில் சரபேந்திரராசபட்டினம் என்னும் கடற்கரை ஊரில் கலங்கரை விளக்கம் ஒன்றும், மனோரா என்னும் 120 அடி உயரக் கோபுரம் ஒன்றும் உள்ளன. கோபுரம் எட்டு நிலைகளைக் கொண்டது. அதனுடைய கட்டுமானம் ஆறு பட்டைகளாக, அறுகோண வடிவில் இருக்கும். ஆங்கிலேயர்கள் நெப்போலியனை வாட்டர்லூ போரில் தோற்கடித்தத பாராட்டி  மன்னர் சரபோசி கட்டிய நினைவுச் சின்னம் என்று கூறப்படுகிறது !

கோபுரத்தின் அடித்தளத்தைத் சுற்றி கோட்டை மதில் போன்ற அமைப்பு கட்டடப் பட்டுள்ளது. அரசு போதிய கவனம் செலுத்தினால், மனோரா பெரிய சுற்றுலா இடமாக மாறுகின்ற வாய்ப்புகள் மிகுதி !

அகவை 10 நிறைந்த  கீர்த்திவாசனைத் தஞ்சாவூரில் எங்களிடம் விட்டு விட்டுக் கவிக்குயில் மட்டும் ஓசூருக்குத் திரும்பி விட்டார். இருபது நாள் கழித்து, அதாவது 11-05-2014 அன்று கோவைக்குச் செல்லுகின்ற ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது. என்னுடன் என் மனைவியையும், பெயரன் கீர்த்திவாசனையும் அழைத்துச் சென்றேன் !

என்னைக் கோவைக்கு வரச் சொல்லியிருந்த நண்பர் திரு.இரவிச்சந்திரன்  பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். பல்கலைக் கழக விருந்தினர் விடுதியில் எங்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அங்கிருந்து வாடகையூர்தி ஏற்பாடு செய்து கொண்டு மருதமலைக் கோவிலுக்கு 11-05-2014 அன்று மாலை 03 - 00 மணிக்குச் சென்றோம். மலையடிவாரத்தில் சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் பார்ப்பதற்கு, அதுவும் மலைத் தோற்றப் பின்னணியில் கண்களுக்குக் குளிர்ச்சியான விருந்து !

கோயிலில் இறைவனை வணங்கிய பின், விடுதிக்குத் திரும்பிவந்து ஓய்வெடுத்துக் கொண்டோம் ! மறுநாள் உதகமண்டலம் செல்வதென முடிவு செய்து, வாடகை ஊர்தி ஒன்றையும் காலையில் விடுதிக்கு வந்து விடுமாறு ஏற்பாடு செய்து கொண்டேன் !

மறுநாள் (12-05-2014) காலை 9-00 மணிக்கு விடுதியிலிருந்துப் புறப்பட்டு, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப் பாளையம், குன்னூர், கேத்தி, வெலிங்டன், அரவங்காடு ஆகிய ஊர்களை விழிகளால் விழுங்கிக் கொண்டே உதகமண்டலம் (ஊட்டி) போய்ச் சேர்ந்தோம்!

இரண்டு நாள் முன்புதான் மலர்க் கண்காட்சி நிறைவு பெற்றிருந்தது. உதகமண்டலத்தில் (ஊட்டி) முளரித்  தோட்டம் (ரோஜாத் தோட்டம்) மனதைக் கவரும் வண்ணம் இருந்தது. பின்பு ஏரியில் உள்ள  படகுக் குழாமுக்குச் சென்றோம். மழைபெருவாரியாக வந்தமையால் படகில் ஏறி உலா வர முடியவில்லை.  கீர்த்தி வாசனுக்கு இதில் பெரிய ஏமாற்றம் !

அடுத்து தேயிலை தயார் செய்யும் தொழிற்சாலையைப் பார்வையிட்டோம். அங்கிருந்து தேயிலைத் தூள் வாங்கி வந்து கவி, இளவரசி இருவருக்கும் கொடுத்தோம். பிறகு கோவை திரும்பும் வழியில் மாலை 4-00 மணி அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா பார்த்தோம். ஒரு நாள் முழுதும் சுற்றிப் பார்த்து அழகைத் துய்க்க வேண்டிய இடம். நேரமின்மையால் அதிகம் சுற்றிப் பார்க்க முடியவில்லை. பூங்கா அருகில் உள்ள குன்னூர்  அரசினர் தொழிற் பயிற்சி  நிலையத்திற்குச் சென்று சில அலுவலர்களுடன் உரையாடி வந்தேன் !

உதகமண்டலத்தில் இன்னொரு புகழ் பெற்ற பண்டம்ஊட்டி வர்க்கி”.  உதகமண்டலத்தில் அதை வாங்க நேரமின்மையால், குன்னூரில் வாங்கி வந்தேன். எப்படித்தான் அதைத் தயாரிப்பார்களோ, சுவையோ சுவை !

ஒரு நாள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு, தங்கும் விடுதித் திறவுகோல்களை உரியவரிடம் ஒப்பபடைத்துவிட்டு, இரவு 9 மணி இருப்பூர்தியில் தஞ்சை திரும்பினோம். சேலத்தில் இருக்கையில் பல நண்பர்கள் என்னை அழைத்தார்கள்  உதகமண்டலம் வாருங்கள் என்று. அப்போதெல்லாம் கைகூடாத எனது உதகமண்டல உலா இப்போது தான் கைகூடி வந்தது !

மலைகளின் இளவரசி என்று அழைக்கிறார்கள் உதகமண்டலத்தை. உண்மை தான் ! ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம் உதகமண்டலம். உலா சென்ற எங்கள் மூவரில் பெயரன் கீர்த்திவாசனுக்குக் தான் அளவு கடந்த மகிழ்ச்சி !

உதகமண்டலம் சென்று வந்த அடுத்த ஒரு மாதத்திற்குள் மிகவும் முகாமையான ஒரு திருமணம். ஆம் ! கருப்பம்புலம் மாப்பிள்ளை திரு..சிவானந்தம்திருமதி. தமிழ்ச் செல்வி இணையரின் மகன்  திரு. திலீபன் நடராஜ் தனது அத்தையான திருமதி சந்திரா  திரு.பாலசுந்தரம் இணையரின் மகள் செல்வி. பவித்திராவைக் கைப்பிடித்தார் !

அகத்தியன் பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோயிலில் 2014 –ஆம் ஆண்டு சூன் மாதம், 9 –ஆம் நாள் நடைபெற்ற இத் திருமணத்தில்  நானும் என் மனைவியும் கலந்து கொண்டோம். தஞ்சைக்கு வருகை தந்திருந்த என் மகள் இளவரசி, பெயர்த்தி நேகா, பெயரன் அபிஷேக் ஆகியோரையும் திருமணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன் !

திருமணம் முடிந்த பின்பு நாங்கள் வந்திருந்த வாடகைச் சீருந்தில் கடிநெல்வயல் திரு.சிங்காரவேலுவையும் அழைத்துகொண்டு, முதலில் வேதாரணியம் கோயிலுக்குச் சென்றோம். அங்கு கோயிலைச் சுற்றிப் பார்த்து விட்டு இறைவன் திருமுன் நின்று  வணங்கிய பின், வேதாரணியம் கடற்கரைக்குச் சென்று இளவரசி, நேகா, அபிஷேக் ஆகியோரைக் கடல் நீரில் இறங்கி விளையாட விட்டோம்.! கடலைப் பார்த்ததில் நேகாவுக்கும், அபிஷேக்குக்கும் நிறைந்த மகிழ்ச்சி ! அலையோரத்தில் கிடைத்த கிளிஞ்சல்களை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்து விட்டனர் - வீட்டில் காட்சிக்கு வைக்க  !

வேதாரணியத்திலிருந்து கோடிக்கரை சென்றோம்.. அங்கிருக்கும் இராமர் பாதம் என்னும் உயரமான மண் திட்டில் ஏறிப் பார்த்தேன். இந்த மண் திட்டின்  உச்சியில் நான்கு தூண்களுடன் அமைந்த மண்டகமும் மேடையும் அதன் நடுவில் பாதங்கள் இரண்டும் காணப்படுகின்றன் !

எனக்கு அகவை  10 அல்லது 12 இருக்கும் போது, கடிநெல்வயலிலிருந்து குழகர் கோயில் செல்கையில், இதே இராமர் பாதத்தில் ஏறிப் பார்த்திருக்கிறேன். அன்று பார்த்த நான்கு கால் மண்டபமும் மேடை நடுவில்  கால் பாதங்களும் இப்போதும் காணப்படுகின்றன. ஆனால் மண் திட்டில் ஏறும் வழியில் இப்போது படிகளையும் இரு பக்கமும் கைப்பிடிச் சுவர்களையும் காண்கிறேன் !

என் இளமைக் காலத்தில் நான் பார்த்த இராமர் பாதம் இரண்டு தென்னைமரம் உயரம் அளவுக்கு (ஏறத்தாழ 100 அடி உயரம்) இருந்ததாக எனக்குள்  ஒரு கணிப்பு இருந்து வந்திருக்கிறது ! ஆனால் இப்போது (2020) அதில் பாதியளவு கூட இருப்பதாகத் தெரியவில்லை.. ஆண்டுதோறும் பெய்யும் மழையால் மண்மேடு மெல்ல மெல்லக் கரைந்து உயரம் குறைந்து கொண்டே வந்திருக்குமோ ? எப்படியோ இராமர் பாதம் அதன் அழகையும் ஈர்ப்பையும் இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது !

இராமர் பாதத்தை அடுத்து நேராகத் தெற்கு நோக்கிச் சீருந்தைச் செலுத்தச் சொன்னேன்.  கலங்கரை விளக்கமும் அதை அடுத்து கடற்கரையும் தென்பட்டது. அலைகள் மிகுந்த சீறலுடன் வந்து கரையில் மோதிக் கொண்டிருந்தன. அனைவரையும் ஒருவரோடு  ஒருவர் கை கோத்துக் கொண்டு அலை வருமிடத்தில் நிற்க வைத்தேன். தொலைவிலிருந்து எங்களைப் பார்த்த கடலோரக் காவல் படையினர் விரைந்து வந்து, கடலில் அலைகளின் சீறல் அதிகமாக இருக்கிறது; ஆகையால நீரில் இறங்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர் !

ஐந்து நிமிடங்கள் நின்று கடலைப் பார்வையாலும், கடற்காற்றையும் நாசிகளாலும்  நுகர்ந்த பின் கோடிக்கரை குழகர் கோயிலுக்கு வந்தோம். ஒரு முறை வைகாசி விசாகத்தன்று காவடி எடுத்துக் கொண்டு, சிற்றப்பா திரு.சண்முகவேல் தேவர் தலைமையில் கடிநெல்வயலிலிருந்து, கோடிக்கரைக்கு வந்த போது குழகர் கோயிலுக்கு வர்திருக்கிறேன். அப்போது எனக்கு அகவை 10 இருக்கலாம். அதன் பின் நான் கோடிக்கரை வந்ததில்லை !

குழகர் என்னும் பெயர் முருகனைக் குறிக்கும் சொல் ஆகும். தமிழ்நாட்டில் வேறு எங்கும்குழகர்என்னும் பெயருடன் முருகன் கோயில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வைகாசி விசாகத்தன்று கோடிக்கரைக் குழகருக்கும், எட்டுக்குடி முருகனுக்கும் காவடி எடுத்துச் சென்று பால் முழுக்காட்டுவது நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மக்களால் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது !

---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),30]
{12-06-2020}
---------------------------------------------------------------------------------------------
உதகமண்டலம் மலர்க்காட்சி !

உதகமண்டலம்
 மலைக் காட்சி !

கோடிக்கரை குழகர் கோயில்

கோடிக்கரை 
குழகர் கோயில்





கோடிக்கரை 
இராமர் பாதம்

திரு.திலீபன் நடராஜ் - 
செல்வி.பவித்திரா. 
திருமண நாள்: 09-06-2016