name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Thursday, April 23, 2020

காலச் சுவடுகள் (54) : 2015 நிகழ்வுகள் - சென்னை வெள்ளம் !



தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPGY) !

காலச் சுவடுகள் : 2018 நிகழ்வுகள் !

(சுவடு.54) சென்னை வெள்ளம்!!

---------------------------------------------------------------------------------------------
சென்னையில் 2015 –ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் நிகழ்ந்த பேரழிவுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தொலைக்காட்சிகளின் வாயிலாக அந்தக் கொடுமைகளை கண்டு மனம் பதை பதைத்து துன்ப உணர்வுகளில் துடித்தோர் பேராளம் ! பேராளம் ! நானும் தொலைக் காட்சி முன் அமர்ந்து அவற்றைக் கண்டு மனம் உருகியது மறைக்க முடியாத உண்மை ! எப்படி நிகழ்ந்தது இந்தக் கொடுமை ?

சென்னையில் 2015 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு மூன்று முறையாகப் பெய்த பெரு மழையால், சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்களிலும் இருந்த ஏரி போன்ற பல நூறு நீர் நிலைகள் நிரம்பி வழியத் தொடங்கின ! இதனால், சென்னை நகர் எங்கும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கலாயிற்று !

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி போன்றவை முழுக் கொள்ளளவுக்கு நிரம்பின. மழையோ விட்ட பாடில்லை ! ஒவ்வொரு நாளும் சிறு பொழிவாகவோ, பெரும் பொழிவாகவோ மழை பெய்து கொண்டே இருந்தது !

நூறாண்டுகளுக்கு முன்பு நீரோட்டமுள்ள  ஆறுகளாக  இருந்த அடையாறு, கூவம், கொற்றலை பக்கிங்காம் கால்வாய்ஆகியவை  காலப் போக்கில் கழிவு நீர்க் கால்வாய்களாக மாறிப் போயின. வேலை தேடிச் சென்னை நோக்கிப் புலம் பெயர்ந்த மக்கள் தங்குவதற்கு வீடின்றித் தவித்த நிலையில், இந்த ஆற்றங் கரைகள் தான் அவர்களுக்கு அடைக்கலம் அளித்தன. ஆற்றங்கரை எங்கும் குடிசைகள் முளைக்கத் தொடங்கின !

ஆறுகளின் அகலத்தைத் தூர்த்துக் கட்டத் தொடங்கிய  குடிசைகளின் எண்ணிக்கை வளர்ச்சியால், நீரோட்டப் பாதை குறுகத் தொடங்கியது. போதாக் குறைக்கு வசதி படைத்தவர்களும் ஆற்றோரங்களை வலிந்து பற்றிக் கொண்டு கட்டடங்களை கட்டத் தொடங்கினார்கள். வலிப் பற்றுகள் (ஆக்கிரமிப்பு) பெருக்கமடைந்தன !

தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் மருத்துவ மனைகளும், வணிக வளாகங்களும் தங்கள் இருப்பிடத்தை, இயக்க இடத்தை  (MOVING SPACE) விரிவாக்குவதற்கு ஆறுகளையும், வடிகால்களையும் வலிந்து பற்றிக் கொண்டனஅரசின் சார்பின் எந்தவொரு கட்டடம் கட்ட வேண்டும் என்றாலும், அரசுப் புறம்போக்குகளாக வகைப்படுத்தப் பெற்ற நீர்நிலைகளையும், கழிவு நீர்க் கால்வாய் ஓரங்களையும், ஆறுகளின் ஒரு பகுதியையும் தேர்வு செய்தனர் !

ஏழை மக்களின் குடிசைகளால் அகலம் சுருங்கிப் போயிருந்த ஆறுகளும் வடிகால்களும், பேராசை பிடித்த தனி மனிதர்களின் வலிப்பற்றாலும், அரசு அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களாலும்  சென்னை நகரின் வடிகால்  வழிகள் அனைத்தும் சீர்குலைந்து போயின; அகலம் குறைந்து போயின; வலிப்பற்றுக்கு இலக்காகிப் போயின; தூர்வாராமல் தூர்ந்து போயின !

கிட்டத் தட்ட வடிகால் வசதிகள் இல்லாத நகரமாக சென்னை இலங்கத் தொடங்கியது. சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே தெருக்களெல்லாம் ஆறுகளாக மாறிப் போகும் துன்பநிலை தொடர்கதை ஆனது !

மழைக்காலத்தில் சென்னைத்  தெருக்கள் எல்லாம் ஓடைகளாக மாறிப் போகும் துன்ப நிலையை நானே பலமுறை நேரில் கண்டிருக்கிறேன். நமது ஆட்சி முறையில் உள்ள கோளாறுகளே இதற்குக் காரணம் என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு நல்லறிவு வந்தாலன்றி நம்மைப் போன்ற தனி மனிதர்களால் என்ன செய்ய இயலும் ?

இத்தகைய சூழ்நிலையில், 2015 நவம்பர், திசம்பர் மாதங்களில் தொடர்ந்து பெய்து வந்த பருவ மழையால், சென்னை நகரெங்கும் வெள்ளக் காடாகத் திகழத் தொடங்கின. முதன்மைச் சாலைகள் தவிர்த்து கிளைச் சாலைகள் அனைத்தும் நீருக்குள் அமிழ்ந்து போயின ! வெள்ளம் எப்போது வடியும் என்று மக்கள் ஏக்கத்துடன் காத்திருப்பதன்றி அவர்களால் வேறெதுவும் செய்ய இயலவில்லை !

விடாது பெய்து வந்த மழையால், செம்பரம்பாக்கம் ஏரி முழு அளவுக்கு நிரம்பி விட்டது. ஆனாலும் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஏரிக்கு வருகின்ற நீரின் ஒரு பகுதியைப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் சிறு அளவுக்கு மதகுகள் வழியாக வெளியேற்றத் தொடங்கினர். செம்பரம் பாக்கம் ஏரிதான் அடையாற்றின் தொடக்கம். இதனால் அடையாற்றில் நீர் மட்டம் உயரத் தொடங்கியது !  திசம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிம் கன அடி வீதம் அடையாற்றில்  தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நிலைமைக்குத் தக்கவாறு அணைகளில் அல்லது ஏரிகளில் இருந்து நீர் திறந்துவிடும் அதிகாரத்தை அதிகாரிகளிடம் இருந்து  பிடுங்கி, அமைச்சர்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ளும் வழக்கம் தோன்றியது. அமைச்சர்களோஆமாம் சாமிகள்ஆகி முதலமைச்சரின் உத்தரவு இன்றி எதையும் செய்ய முடியாத பொம்மைகள் ஆயினர் !

செம்பரம் பாக்கம் ஏரியின் நீர் நிலைமை பற்றிப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அமைச்சர்கள் வழியாக முதலமைச்சருக்குக் குறிப்புகள் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். முதலமைச்சரிடமிருந்து ஆணையை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். முதலமைச்சருக்குச் சென்ற கோப்புகள் திரும்பி வரவில்லை !

ஒரு கட்டத்தில், இனிமேலும் முதலமைச்சரின் ஆணைக்காகக் காத்திருந்தால், ஏரியின் கரைகள் உடைந்து போய் ஏரி நீர் நாலாபக்கமும் வெளியேறி நகரையே வெள்ளத்தில் மூழ்கடித்து விடும் என்று அதிகாரிகள் அச்சப்படும் நிலை தோன்றியது. பொதுப் பணித் துறையில் மேல் நிலை அதிகாரி ஒருவர், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து, ஏரியின் மதகுகளை முழு அளவுக்குத் திறந்து விட உத்தரவிட்டார். இதன் மூலம் ஏரியின் கரைகள் உடைவதைத் தவிர்க்க முடியும் என்பது அவரது கணிப்பு !

அவரது உத்தரவைச் செயல் படுத்திய கீழ் நிலை அதிகாரிகள், தேர்ந்தெடுத்த நேரம்  தான் தவறாகிப் போனது.  இரவு நேரம் பார்த்து, அனைத்து மதகுகளையும் திறந்துவிட்டனர். சீறிப் பாய்ந்த ஏரி நீர்ப் பெருக்கு, எதிர்ப்பட்ட குடிசைகள், பெட்டிக் கடைகள், கால்நடைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கிப் புரட்டிக் கொண்டு சென்றது. அளவுகடந்த நீர் வரத்தால், அடையாற்றில் நீர் கரைபுரண்டு ஓடியது ! ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள்  தண்ணீருக்குள் மூழ்கின.

உறக்கத்தில் இருந்த குடிசை வாழ் மக்கள் கதுமென்று (திடீரென்று) வந்த  அளவுகடந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கான குடிசை வீடுகளும், வீட்டில் இருந்த கட்டில், நிலைப்பேழை, தொலைக் காட்சிப் பேழை, அண்டா, குண்டா அனைத்து உடைமைகளும் ஆற்றோடு போயின ! இவற்றைப் படம் பிடித்துக் காட்டிய தொலைகாட்சியில், இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் உள்ளம் அடுத்து என்ன நடக்குமோ என்று அச்சப்படத் தொடங்கியது !

அடுக்குமாடிக் கட்டடங்களில், தரைத் தளங்களில் வாழ்ந்தோர், உயிர் பிழைத்தால் போதுமென்ற நிலையில், வீட்டு உடைமைகளை அப்படியே விட்டு விட்டு மேல் தளங்களுக்கு ஓடிச் சென்று  உயிரைக் காப்பாற்றிக் கொண்ட காட்சிகளைக் காண முடிந்தது. தரைத் தளங்கள் முற்றிலுமாக மூழ்கிப் போன வீடுகளைக் காண்கையில் மனம்  வருத்தத்தில் நடுக்குற்றது !

அடையாற்றின் கரையோரமாக இருந்த வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு, மாடு, பன்றி, கோழி அனைத்தும் ஆற்றோடு போய் வங்கக் கடலுக்கு இரையாகிப் போயின !

சைதாப்பேட்டையில் அடையாற்றின் மீது கட்டப்பட்டிருந்த  மறைமலைப் பாலம் முற்றிலும் மூழ்கிப்போனது. ஈக்காட்டுத் தாங்கல் பாலமும் நீரில் மூழ்கிக் கிடந்தது ! பல இடங்களில் இருப்புப் பாதைகள் (RAILWAY LINES) பெயர்த்தெறியப் பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தன ! இருப்பூர்திப் போக்குவரத்து அடியோடு நின்று போனது ! சாலைப் போக்குவரத்தும் முடங்கிப் போனது ! மீனம்பாக்கம் வானூர்தி நிலயத்தில் ஓடு பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி முக்குளித்துக் கொண்டிருந்தன !

நாள்கள் கடந்தன ! ஆனால் வெள்ளம் வடியவில்லை ! ஒரு நாள் அன்று, இரு நாள் அன்று, பல நாள்கள் வெள்ளம் வடியாததால் மக்கள் தவித்துப் போயினர். தொடர்ந்து நான்கைந்து நாள்கள் வெள்ளத்தால் சூழப்பெற்ற மக்களுக்கு உண்ண உணவில்லை; குடிக்க நீரில்லை; மின்சாரம் நிறுத்தப்பட்டதால்,  இரவில் வெளிச்சமில்லை; இருண்ட நிலவறைகளில் வாழ்வதைப் போன்ற நிலைக்கு ஆளாயினர் சென்னை மக்கள் !

அடையாற்று வெள்ளம் மற்றும் பிற ஏரிகளின் வெள்ளத்தால்  மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனகாபுத்தூர், மணப்பாக்கம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத் தாங்கல், கோட்டூர்புரம், தாம்பரம், சேலையூர், திருநீர்மலை, முடிச்சூர் போன்ற இடங்கள் ! இப்பகுதிகளில் சில இடங்களில் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி, மக்களை வீடுகளுக்குள்ளேயே ஒரு வாரத்திற்கு மேல் முடக்கிப் போட்டுவிட்டது !

எழினிக்கு (CELL PHONE) மின்னேற்றம் செய்ய முடியாததால், உற்றார் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.  தங்கள் உறவினர்கள் நிலை என்ன என்பதை அறிய முடியாமல் வெளியூர் மக்களும் தவித்துப் போயினர். இந்த நெருக்கடியான வேளையில் தான் சில நல்ல உள்ளங்கள் சிலிர்த்து எழுந்தன !

தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொண்டு, பசியால் துடிக்கும் மக்களுக்குச் சோறும் தண்ணீரும் கொடுப்பதற்குப் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். படகுகளிலும், கட்டுமரங்களிலும்  உணவுப் பொட்டணங்களையும், குடிநீர்ப் புட்டில்களையும் (BOTTLES)  கொண்டு வந்து, வீடுவீடாகக் கொடுத்தனர் ! நடிகர் மயில்சாமி தனியொரு ஆளாக  சிறு படகில் உணவு கொண்டு வந்து வீடு வீடாகக் கொடுக்கும் காட்சி மனதை நெகிழ்ச்சி அடையச் செய்தது !

சின்னஞ்சிறு நடிகர் வீடு வீடாக வந்து பசித்த மக்களுக்கு உணவுப் பொட்டணங்களை வாரி வழங்குகிறார்; ஆனால் முதலமைச்சர் கனவில் மூழ்கி வெற்று வீர உரைகளை திரைப் படங்களில் வீசிக்கொண்டிருந்த  பெரிய முதலைகள் எல்லாம் எங்கே ஓடி ஒளிந்தன என்று  தமிழக மக்கள் நெஞ்சங்களில் சினத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது !

படைத்துறையினர் (MILITARY PERSONNEL) வந்து இறங்கிய பிறகு தான் நிலைமை சற்று மாறியது. மக்களுக்கும் நம்பிக்கை பிறந்தது ! அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரிது; அவர்கள் சேவை என்றும் நம் நன்றிக்குரியவை !  காற்று நிரப்பிய பயின் படகுகள் (INFLATED RUBBER BOATS) மூலம் அவர்கள் தெருத் தெருவாகச் சென்று, வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கத் தொடங்கினர் !

தன்னார்வலர்களும், சில அரசியல் கட்சியினரும் அவர்களுக்கு உணவும் குடிநீரும் அளித்தனர். படைத்துறை உலங்கூர்திகள் (HELICOPTERS) மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உணவுப் பொட்டணங்கள் போடப்பட்டன !

மனிதநேயம் உச்ச அளவுக்கு வெளிப்பட்டது தமிழக வரலாற்றில் இதுவே முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன் ! வீடிழந்த மக்களுக்கு உணவும் குடிநீரும் மட்டுமல்ல, போர்வைகள், ஆடைகள், பாய்கள், வாளிகள், சமையற் கலன்கள் எனப் பல்வேறு வகையில் உதவிகள் செய்து அவர்களது துன்பத்தைத் துடைக்க முன்வந்தனர் தமிழக மக்கள் !

மியாட்மருத்துவ மனையில் உயிர்வளியூட்டம் (VENTILATOR) பெற்று வந்த 18 பேர் மின்சாரமின்மையால், கருவிகள் இயங்காமல் இறந்து போயினர். பலநூறு மனித உயிர்கள் வெள்ளத்திற்குப் பலியாயின !  18 இலக்கத்திற்கு (இலட்சத்திற்கு) மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று ! ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வீடுகள் சேதமாயின !

இத்தகைய பேரழிவுக்குக் முகாமையான காரணங்கள் நான்கு ! (01) முன் அறிவிப்பு இன்றி செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து பல்லாயிரம் கன அடி தண்ணீரை இரவு நேரத்தில் திறந்து விட்டமை (02) அடையாற்றின் கரைகள் மற்றும் கழிவு நீர் வடிகால்களில் பல்கிப் பெருகிவிட்ட வலிப் பற்றுகள் (ஆக்கிரமிப்புகள்) (03) நீர்நிலைகள், கழிவு நீர்க் காய்வாய்கள் போன்றவற்றை அழித்து அவற்றின் மீது பல்லாயிரக் கணக்கில் கட்டடங்கள்  கட்டப்பட்டுள்ளமை (04) அடையாறு மற்றும் கழிவு நீர்க் கால்வாய்களைத் தூர் வாராமை !

இந்தப் பேரழிவு ஏற்பட்ட நேரத்தில்  தமிழ்ப் பணி மன்றம் முகநூலில்  நான் ஒரு பாடல் எழுதி வெளியிட்டிருந்தேன். இதோ அந்தப் பாடல் !

(சென்னைப் பெரு வெள்ளத்திற்கும் பேரழிவுக்கும்  மழை மட்டுமே காரணம் என்ற முதற்கட்டச் செய்திகளின் அடிப்படியில் நான் எழுதிய பாடல் !)


               மழையே ! மழையே ! மாமழையே !  தமிழ்
               ..........மக்களை வாட்டிய மாமழையே !
               அழையா விருந்தாய்  ஏன்வந்தாய்   இங்கு
               ..........ஆத்திரம் உனக்கு யார்மீதோ
               பிழைகள் செய்தோர் பெருநரிகள் அவர்
               ..........பிருந்தா வனத்தில் உலவுகிறார் !
               ஏழைகள் உடைமை உயிருடலை - கீண்டு
               ..........ஏன்தான்  விழுங்கி மகிழ்ந்தாயோ ?


               நீர்நிலை எல்லாம் வீடுகளாய்இன்று
               .......... நிற்பதன் காரணம் ஏழைகளா ?
               தூர்ந்து மறைந்தன நீர்வழிகள் ! – அதில்
               ..........தோன்றிய கட்டடம் யார் நிதியம் ?
               சோர்ந்து மயங்கிய ஏழைகளை - இன்று
               ..........சுமைதாங் கிகளாய் மாற்றினையே !
               போர்க்களம்  போலவே  ஆனதடி !  நீ
               ..........புண்செய  லாமோ  தமிழ்நாட்டை ?


               வீடுகள்  சிறைபோல் ஆகினவே ! – நகர்
               ..........வீதிகள்  ஆறாய்  மாறினவே !
               கூடுகள் இல்லாப் பறவைகளாய்பலர்
               ..........குளிரில் தெருவில் குமுறுகிறார் !
               ஈடிணை இல்லாப் பேரழிவால்இன்று
               ..........எங்கள்  தமிழினம்  வாடுதுகாண் !
               ஆடிய  ஊழித்  தாண்டவமே ! – இனி
               ..........அடங்கிடு ! போதும் !  போதுமடி !


               மக்களை இனியும் வருத்தாதே ! – எமன்
               ..........மடியினில் அவர்களை வீழ்த்தாதே !
               தக்கார் தகவிலர்  தெரியாதோ ? – உன்
               ..........தண்ணளி எங்கே போனதடி ?
               இக்கண  மேநீ விலகிவிடு ! – இனி
               ..........எங்கள் கண்களில் நீரில்லை !


இந்தப் பேரழிவினால் பலநூறு உயிர்களை இழந்தோம்; பலகோடி மதிப்புள்ள சொத்துகளை இழந்தோம்; நம்மை ஆளும் அரசுகளுக்கு நல்ல சிந்தனை வந்து நல்ல திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்தி, மீண்டும் இது போன்ற பேரழிவுகள் ஏற்படா வண்ணம் மக்களைக் காத்திடுவார்கள் என்னும் நம்பிக்கையையும் அல்லவா முற்றிலும் இழந்திருக்கிறோம் !

--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),02]
{16-06-2020}
-------------------------------------------------------------------------------------------

வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

தெருவெங்கும் ஆறாகிப் போன அவலம் !

சைதாப்பேட்டை  மறைமலையடிகள் பாலம் !

அடையாற்றின் 
கரையோர வீடுகள் 
வெள்ளத்தின் பிடியில்.

கரைபுரண்டு ஓடும் அடையாறு !

சாலைப் போக்குவரத்தைத் துண்டித்த 
சென்னை வெள்ளம் !

வரலாறு காணாத வெள்ளம்; 
கண்ணீரில் மிதக்கும் 
சென்னை மக்கள் !

வீட்டைவிட்டு 
ஒருவாரம் வெளியில் வரமுடியாமல்
 சிறை வைக்கப்பட்ட
சென்னை மக்கள் !

தீவுகளாகிப் போன வீடுகள் !

பாலத்தை மூழ்கடித்து ஓடும் அடையாற்று வெள்ளம் !

வெள்ளத்தில் மூழ்கிப் போன சாலைகள் !