name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, May 10, 2020

காலச் சுவடுகள் (61) : 2019 நிகழ்வுகள் - கூண்டுக்கிளி !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (61) : 2019 நிகழ்வுகள் !

                                                    கூண்டுக் கிளி !

--------------------------------------------------------------------------------------------

அன்பு என்னும் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் அத்துணை உறவுகளுமே கூண்டுக் கிளிகள் தான் ! எல்லோருடைய வாழ்விலும் எல்லா உறவுகளுமே அமைந்து விடுவதில்லை. சிலருக்கு, தந்தை முகம் இன்னதென்று அறியாப் பருவத்திலேயே தந்தை மறைந்து போயிருப்பார் !

வேறு சிலருக்குத் தாயின் முகமே தெரியாது; அண்ணன் தம்பி இல்லாத ஒற்றை ஆடவனாகச் சிலர் இருப்பார்கள்என்னைப் போல ! தமக்கை, தங்கை இல்லாத ஆடவர்களும் உண்டு.  சில உறவுகள் இல்லாத போது, இருக்கும் உறவுகள் மீது அன்பு பெருகும்; இது உலக இயற்கை !

என்னுடன் கூடப் பிறந்த தமையனோ, தம்பியோ கிடையாது; ஒரு தமக்கை, மூன்று தங்கைகள் ! அண்ணன் தம்பி இல்லாததால், தமக்கை மீதும், தங்கைகள் மீதும் எனக்கு  அன்பு  அதிகம் ! தந்தையை இளம் அகவையிலேயே இழந்துவிட்ட என் தங்கைகள் மூவருக்கும் நான் தான் திருமணம் செய்து வைத்தேன் !

என் தங்கைகளில் முதலாமவர் திருமதி கல்யாணி இராமமூர்த்தி. ஆசிரியரான திரு.இராமமூர்த்திக்கு வாழ்க்கைப்பட்டு, திருத்துறைப் பூண்டி அருகில் உள்ள இடும்பவனம் என்னும்  ஊரில் வாழ்ந்து வந்தார். மூன்று பிள்ளைகள்; ஒருவர் ஆண்; மற்ற இருவரும் பெண்கள் ! அனைவருக்கும் திருமணமாகிக் குழந்தைகளுடன் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் !

இந்த நிலையில் 2019 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 –ஆம் நாள் திருமதி. கல்யாணி, யாரும் எதிர்பாரா நிலையில் காலமானார். அவர் இறக்கும் போது அகவை 70 இருக்கலாம்; சரியாகத் தெரியவில்லை ! இருந்தாலும் அவருக்கு இத்துணை விரைவாக இறப்பு வந்திடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் அன்புக் கூண்டுக்குள் அடைபட்டிருந்த கல்யாணி என்னும் கிளி என்னைவிட்டுப் பறந்து சென்றுவிட்டது ! அதனால் ஏற்பட்ட துன்பியல் உணர்வுகளைக் காலம் தான் துடைத்து  எறிய வேண்டும்துன்பியல் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக 2019 –ஆம் ஆண்டு எனக்கு மாறிப் போயிற்று !

திருமதி.கல்யாணியின் கணவர், அத்தான் திரு.இராமமூர்த்தி அவர்கள் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு புத்தகத்திலிருந்து பிரிந்த ஏடுகளை என்னிடம்  கொடுத்தார். மொத்தம் 99 ஏடுகள் ! புத்தகம் என்னும் கட்டுமானத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு உதிர்ந்து போன ஏடுகளாகத் தான் அவை இருந்தன. புத்தகத்தின் பெயர் தெரியவில்லை !

அவரது தந்தையார் அதிகம் படிக்காதவர். வேளாண்மையில் ஈடுபட்டிருந்தவர். அவர் வைத்திருந்த புத்தகம் என்று சொல்லி, அத்தான் திரு.இராமமூர்த்தி அவர்கள் 99 ஏடுகளையும் என்னிடம் ஒப்படைத்தார். அந்த ஏடுகளின் பக்கங்கள் க, , ரு, , அ போன்ற தமிழ் எண்களில்  குறிப்பிடப்பட்டிருந்தன. பக்கங்களும் வரிசையாக இல்லாமல் சில காணாமற் போயிருந்தன !

அந்த ஏடுகளின் சில பக்கங்களைப் படம் எடுத்து, சென்னையில் உள்ள திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு அனுப்பிஅந்தப் புத்தகத்தின் பெயர் என்ன என்பதைத் தெரிவிக்குமாறும், அந்தப் புத்தகம் போல் புதியதொன்று கிடைக்குமா என்றும், புதிய புத்தகத்தில் விலை என்ன என்றும் கேட்டு மடல் எழுதி இருந்தேன் !

அந்தப் புத்தகத்தின் பெயர்சூடாமணி நிகண்டுஎன்றும், அஃது அப்போது இருப்பில் இல்லை என்றும் தெரிவித்து எனக்கு மறுமொழி அனுப்பி இருந்தனர் ! நான் வியப்பில் ஆழ்ந்து போனேன் ! ஐந்தாம் வகுப்புக் கூடப் படிக்காத ஒரு வேளாண் குடிமகனான திரு.கந்தசாமியிடம்சூடாமணி நிகண்டா ?“ இக்காலத்தில் பெரிய புலவர்களிடம் கூட இல்லாதசூடாமணி நிகண்டுஎன்னும்  அகரமுதலி அவரிடம் எப்படி ?

அப்புறம் தான் எனக்கு ஒன்று புரிந்தது ! பள்ளிப் படிப்பு இருந்ததோ இல்லையோ, அக்கால மக்கள் நிரம்பவும் தமிழ் நூல்களைப் படித்திருக்கிறர்கள். அதனால் தான் அவர்களால் ஆயிரக் கணக்கான நாட்டுப்புறப் பாடல்களைப் புனைய முடிந்திருக்கிறது !

காமன் பண்டிகையின் போது எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று இரண்டு கட்சிகளாகப் பிரிந்து காமன் வரலாற்றைப் பாடல்களாக இசை கூட்டிப் பாட முடிந்திருக்கிறது. பெண்கள் தாலாட்டுப் பாடல்களையும், கும்மி, கோலாட்டப் பாடல்களையும், ஒப்பாரிப் பாடல்களையும் புனைந்து பாட முடிந்திருக்கிறது !

பள்ளிக்குச் செல்லாதவர்கள் பாடல் புனைந்தது அக்காலம்; தமிழில் பட்டம் பெற்றவர்கள் கூட நான்கு வரியில் ஒரு பாடல் எழுத முடியாமல் திணறுவது இக்காலம் ! நாம் தமிழ்க் கல்வியில் தான், நாண் சூடற்று எத்துணைப் படுகுழியில் வீழ்ச்சி அடைந்து கிடக்கிறோம் ! தாய்மொழியில் ஒரு பாடல் எழுதத் திறனற்றவர்கள் எல்லாம் தம்மைத்தமிழன்என்று சொல்லிக் கொள்வது எள்முனையளவு கூட மாண்புடைய செயலல்லவே !

எனக்குக் கிடைத்த 99 ஏடுகளையும், மிகுந்த இன்னற்பட்டு பக்க எண் ஏறு வரிசைப் படி அடுக்கி, புத்தகமாகத் தைத்து கட்டடம் (BOUND) செய்து வைத்திருக்கிறேன். அது தான் என் தமிழ் வேட்கைக்கு உணவளிக்கும் அமுதசுரபியாக இப்போது திகழ்ந்து வருகிறது !

இப்புத்தகத்தின் இடப்பக்கம் பாடலாகவும், அதற்கு நேர் வலப்பக்கம் பாடலுக்குப்  பொருள் சொல்லும் வகையிலும்  வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு பாடல் மட்டும் உங்கள் பார்வைக்காக :

பரிதிபாற் கரனா தித்தன்,
..........பனிப்பகை சுடர் பதங்கன்
இருள்வலி சவிதா சூரன்
..........எல்லு மார்த்தண்டன் என்றூழ்
அருணணா  தவனே  மித்திரன்,
..........ஆயிரஞ் சோதி  யுள்ளோன்
தரணிசெங்  கதிரோன்  சண்டன்
..........தபனனே  ஒளியே  சான்றோன்
அனலியே  பரியே  பானு
..........அலரியே அண்ட யோனி
கனலியே  விகர்த்த  னன்வெங்
..........கதிரவன்  பகலோன்  வெய்யோன்
தினகரன்  பகலே   சோதி
..........திவாகரன்  அரிய  மாவே
இனனுடன்  உதயன்  ஞாயிறு
..........எல்லையே  கிரண  மாலி
விரவுமேழ்  பரியோன்  வேந்தன்
..........விரிச்சிகன் விரோச  னன்பேர்
இரவிவிண்  மணிய  ருக்கன்
..........ஏழேழும்  சூரியன்  பேர்.

வலப்பக்கம் தரப்பட்டுள்ள பாடலின் பொருள்:- பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ் சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனலி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமாலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விண்மணி, அருக்கன் ஆகிய 49 சொற்களும் சூரியனைக் குறிப்பவை !

இவற்றுள் ஏறத்தாழ 28 சொற்கள் தமிழ். ஏனைய 21 சொற்களும் வடமொழியாக இருக்கலாம். தமிழில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் தம் கையில்சூடாமணி நிகண்டுவைத்திருந்தால், அவரைவிடப் புலவர் வேறு யார் இருக்க முடியும் ?


--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),09]
{23-06-2020}
---------------------------------------------------------------------------------------------
திருத்துறைப் பூண்டியிலிருந்து
 16 கி.மீ  தென் மேற்கே
 உள்ள இடும்பவனம் கோயில்.

என்னிடம் உள்ள
 “சூடாமணி நிகண்டு” புத்தகம். 

கூண்டுக்கிளி

பறந்து போன பச்சைக்கிளி !

என் தங்கை 
 திருமதி.கல்யாணி : 
மறைவு: 13-10-2019.


கதிரவனைக் குறிப்பதற்குத் 
தமிழில் தான் 
எத்தனைச்  சொற்கள் !