name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, March 31, 2020

காலச் சுவடுகள் (39) :2000, 01, 02 நிகழ்வுகள் - பணியிலிருந்து ஓய்வு !

தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள்: 2000-01-02 நிகழ்வுகள் !

                                   (சுவடு.39) பணி ஓய்வு !

--------------------------------------------------------------------------------------------

சென்னை, இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் சீருந்துத் தயாரிப்பு நிறுவனத்தில் உதவிப் பயிற்சியாளராக (ASST.TRAINEE)  03-03-1998 அன்று பணியில் சேர்ந்த பரிதியை இளநிலை அலுவலராக (JR.EXECUTIVE) 01-03-2000 முதல் அமர்த்தம் செய்து ஹூண்டாய் நிறுவனம் ஆணை வழங்கியது. 01-03-2000  முதல் ஆறு மாதங்கள் தகுதி காண் பருவம் என்றும் அறிவித்திருந்தது !

பரிதிக்கு நிலையான பணி கிடைத்த அதே வேளையில், நான் ஓய்வு பெறும் வாய்ப்பும் நெருங்கிக் கொண்டிருந்தது. ஓடத்தில் ஏறிய மனிதன் ஒருநாள் கரை இறங்கித் தானே ஆகவேண்டும் ! அரசுப் பணி என்னும் ஓடத்தில் 1966 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21 –ஆம் நாள் ஏறி வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முயன்ற எனக்கு 58 அகவை நிறைவு என்னும் காரணத்தைச் சொல்லி அரசு என்னைக் கரை இறங்கச் சொல்லியது !

ஏற்றிக் கொண்ட ஓடக்காரர் கரை இறங்கச் சொல்லும் போது இறங்கித் தானே ஆக வேண்டும். எனக்கும் அந்த நாள் வந்தது. ஆம் !  2001 –ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30 ஆம் நாள் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன் !  முப்பத்தைந்து ஆண்டுகள் ஒன்பது நாள் அரசுக்காகப் பணியாற்றிய எனக்கு  ஏப்பிரல் முப்பது முதல் முழு ஓய்வு !

பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது அரசு அலுவலகங்களில் வழக்கமாக நடந்து வரும் ஒன்று. இத்தகைய ஒரு நிகழ்ச்சி, எனது வசதிக்காக மே மாதம் நான்காம் நாள் நடைபெற்றது பயிற்சி நிலைய முதல்வர் திரு அப்துல் அமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற  இவ்விழாவில்  உதவி இயக்குனர் திரு.இரவிச்சந்திரன்மருத்துவ அலுவலர் திரு குப்பையா செட்டி  மற்றும்  பயிற்சி நிலைய அலுவலர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர் !

ஓசூரில் உள்ள புனித சோசப் தொழிற்பயிற்சி நிலையத்தின் தாளாளர் (CORRESPONDENT) , மைசூர் மாநில அளகைக் (STATE BANK OF MUSORE) காசாளர்  திரு தாயுமானவன், அசோக் லேலண்டு  தொழிலக  அலுவலர்கள்  திரு சிவகுமார், திரு இராமநாதன், டைட்டான் தொழிலக அலுவலர் திரு.வேலுச்சாமி, தொழில் வணிகத் துறை அலுவலர் திரு சிராசுதீன்வேளாண்மைத் துறை  அலுவலர் திரு சுகுமார், நுண்ணுயிரிகள் ஆய்வுத் துறை உதவி இயக்குனர் திரு ஜெ.கிருபா, , காவல் ஆய்வாளர் திரு.தன்ராசு, வீட்டு வசதி வாரிய அலுவலர் திரு. ஏழுமலை, மின்வாரிய உதவிப் பொறியாளர் திரு.கிருபானந்தன்எனப் பல முகாமையான அலுவலர்களும் நண்பர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர் !

சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து கணக்கர் திரு இராமமூர்த்தி, உதவியாளர் திரு.கணபதி, உதவிப் பயிற்சி அலுவலர்கள்  திரு னார்த்தனம், திரு,கே,ராசரெத்தினம், அலுவலக உதவியாளர் திரு இயேசுதாசு மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்  !

இந்நிகழ்ச்சியில்  என் குடும்பத்தினரும் குடும்ப நண்பர்களும், வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்களும் வீட்டுவசதி வாரிய அலுவலக நண்பர்களும், வழக்குரைஞர் திரு முனியாண்டி, தொழிலதிபர் திரு முத்துராமலிங்கம் மற்றும் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் !

விழாவில் சொற்பொழிவு ஆற்றிய சான்றோர் பலரும் எனது தமிழ் ஆர்வம் குறித்தும் நான் ஆற்றிவரும் தமிழ்த் தொண்டு குறித்தும் விரிவாக எடுத்துரைத்துப் பாராட்டினர். பயிற்சி பெறும் மாணவர்கள் சார்பாக இருவர் மேடைக்கு வந்து பயிற்சியாளர்களுக்கு என் பணிக்காலத்தில் நான் செய்த உதவிகள் பற்றி  நினைவுகூர்ந்து எனக்கு நன்றி தெரிவித்தனர் !

1996 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி இருந்த கருணாநிதி முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு  2001 -ஆம் ஆண்டு மே மாதம் அடுத்த சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். இந்தத் தேர்தலில் திமுக, பாரதிய சனதாக் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன !

பாரதிய சனதாவுடன் தி.மு.க கூட்டணி சேர்ந்த்தைக் கண்டு மக்கள் முகம் சுளித்தனர்எதிரணியில் அதிமுக,  இந்திய பேராயக் கட்சி (காங்கிரசு)தமிழ் மாநிலக் காங்கிரசுபாட்டாளி மக்கள் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சி ஆகிய அனைத்து எதிர்க்கட்சிகளும்  கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. மதிமுக  தனியாகப்  போட்டியிட்டது !

தேர்தல் முடிவில் அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ் மாநிலக் காங்கிரசு  23  இடங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி 20 இடங்களையும் இந்திய பேராயக் கட்சி 7 இடங்களையும்  இந்தியப் பொதுவுடமை கட்சி 5 இடங்களையும்இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சி  ஆறு இடங்களையும் பெற்றிருந்தன !

திமுக 30  இடங்களையும், பாரதிய சனதா கட்சி  நான்கு இடங்களையும், .கோ.இரா அதிமுக இரண்டு இடங்களையும்,  முன்னேற்றக் கட்சி (FORWARD BLOCK) ஒரு இடத்தையும் பெற்றன.  அதிக இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகசெயலலிதா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது !

1999 –ஆம் ஆண்டில் ஒரு முறை தஞ்சை செல்ல நேர்ந்ததுஎன் இணைமானின் (சகலையின்) மைத்துனரான திரு.கோ.முருகையன்மு.அகிலா இணையரின் வீட்டில் தங்கி இருக்கையில், அங்கு வீட்டு மனைகளின் விலை மிகவும் குறைவாக இருப்பது என் கவனத்திற்கு வந்தது !

திரு.முருகையனின் முயற்சியின் விளைவாக, தஞ்சை நகரை அடுத்த நீலகிரி ஊராட்சியில் கண்ணம்மாள் நகர் என்னுமிடத்தில் 2767 சதுர அடிப் பரப்புள்ள மனையை, சதுர அடி உருபா 20-50 என்னும் விலையில் வாங்க முடிந்தது !

வீட்டு மனை வாங்குவதற்கு முன், அந்த இடத்தில் நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் உள்ளது, நீரின் சுவை எப்படி, மின் இணைப்புப் பெறுவதற்கு வாய்ப்பாக அருகில் மின்தடம் இருக்கிறதா, சாலை வசதி இருக்கிறதா போன்றவற்றை ஆய்வு செய்த பின்பே இறுதி முடிவு எடுத்து மனையை வாங்கினேன் !

2001ம் ஆண்டு சூன் மாதம் 26 -ஆம் நாள் கண்ணம்மாள் நகர் மனை வாங்கிய ஆவணங்கள் தஞ்சாவூர் ஆவணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த மனையின் மொத்த அடக்கவிலை அன்றைய நிலையில் உருபா  69,905 ஆகும் ! இன்றைய (2020) நிலையில், அதன் மதிப்பு உருபா 27 இலட்சம் !

செயலலிதா மீதான ஊழல் வழக்குகளில் அவர் குற்றவாளி எனக்  கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது செல்லாது என்று இந்திய உச்ச நீதி  மன்றம் செப்டம்பர் 2001-இல்  தீர்ப்பு வழங்கியது. இதனால் செயலலிதா பதவி விலக நேர்ந்தது !

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து செயலலிதாவுக்கு மாற்றாக  அடுத்த முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட உள்ளவர் யார் என்னும் கேள்வி அரசியல் அரங்கில் பரப்பரப்பாக எதிரொலித்து வந்தது. ஊகங்கள் இறக்கை கட்டிப் பறந்தன. இறுதியில் பெரியகுளம் ஓ.பன்னீர்ச் செல்வம் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டு  21-09-2001 அன்று  பொறுப்பேற்றார் !

பணி ஓய்வுக்குப் பிறகு சில மாதங்கள் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் தொடர்ந்து வாழ்ந்து வந்த நான் இக்குடியிருப்பின் அருகில் உள்ள நஞ்சுண்டேசுவரர்  நகரில் புதிதாக கட்டப்பட்டிருந்த திரு.நாகபூசணம் என்னும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலரின்  வீட்டில் 2001 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் குடியேறினேன் !

செயலலிதா தனக்கு விதிக்கப்பட்ட ஒறுப்பை (தண்டனையை) எதிர்த்துக் கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி குமாரசாமி  கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை நீக்கி, வியப்பளிக்கும் விளக்கங்களைத் தந்து செயல்லிதாவின் அரசியல் வாழ்வுக்கு உயிர் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, செயலலிதா 02-03-2002 அன்று மீண்டும் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார் !

அரசியல் ஆளிநர்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையிலான இத்தகைய விளையாட்டுகள் இந்தியாவில் ஓயாது போலும் ! இந்த விளையாட்டுகளைக் கண்டு மக்கள் தான் சலிப்படைந்து  போய் இருக்கின்றனர் !

அரசியல் களத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தங்களுக்குப் பிடித்த கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்வாழ்க்கைக் களத்தில் தங்களுக்குப் பிடித்த துணையை இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எல்லாம் மாற்ற முடியாது. வாழ்க்கை என்பது அரசியல் போல நாற்றம் எடுத்த சாய்க்கடை அன்று !

2002 – 2003  –ஆம் ஆண்டுகளில் என் உறவினர்கள் வகையில் சில வாழ்க்கைத் துணை தேர்வுகள் நடைபெற்றன. என் தமக்கை மகளும், தேவூர்  திரு.சி.பண்டரிநாதன் திருமதி..சிந்தாமணி இணையரின் மகளுமான செல்வி.உமாலட்சுமி  2002 –ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம், 4 –ஆம் நாள் தேரெழுந்தூர் திரு.எஸ்.இராசகோபால் பிள்ளை மகன் திரு.ஆர். இராசரெத்தினத்தைக் கைப்பிடித்தார் ! தாய்மாமா தமக்கை மகளின் திருமணமாயிற்றே ! குடும்பத்துடன் சென்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தேன் !

தூரத்து உறவான ஆதியன்காடு திரு..பி.கந்தசாமி அவர்களின் மகனான திரு.இராசாராமன் சா.கீதா திருமணம் 2002 –ஆம்  ஆண்டு சூன் மாதம் 6 ஆம் நாள் நடைபெற்றது. நான் மட்டும் இத்திருமணத்திற்குச் சென்று கலந்து கொண்டதாக நினைவு !

வேலூர் திரு.மீ.இராசேந்திரன், வேலூர், அரங்காபுரத்தில் புதிதாகக் கட்டி இருந்த பார்வதி-சுந்தரர்இல்லத்தில் புகுமனை புகுவிழா 2002 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 –ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு நான் செல்ல முடியவில்லை. எனினும் அடுத்து ஒரு சில மாதங்களில் நேரில் சென்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்தி வந்தேன் !

கடிநெல்வயல், என் (ஒன்றுவிட்ட) பெரியப்பா பெயர்த்தியும் திரு.சா.சிங்காரவேலு தையல்நாயகி இணையரின் அன்பு மகளுமான செல்வி.சங்கீதா, ஆயக்காரன்புலம் நல்லான்குத்தகை திரு..செல்லத்துரையை மணந்தார். இத்திருமணம் 2002 –ஆம் ஆண்டு ஆகத்துமாதம் 26 –ஆம் நாள் கருப்பம்புலம் பி.வி.தேவர் திருமண அரங்கில் நடைபெற்றது !

மணகளின் பெற்றோரான  திரு.சா.சிங்காரவேலு திருமதி.தையல் நாயகி திருமணம் 1977 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 –ஆம் நாள் நடைபெற்றது. அதன் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து அந்த வீட்டில் நடைபெறும்  நன்னிகழ்வு அல்லவா ? குடும்பத்துடன் சென்று மணமக்களை வாழ்த்தியதுடன், உறவினர்களுடன் அளவளாவியும் வந்தேன் !

ஓசூர் டைட்டான் கடிகாரத் தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரிந்து வந்த  தஞ்சாவூரைச் சேர்ந்த திரு.சிவக்குமாருக்கு என் மகள் கவிக்குயிலைத் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தோம். எனவே கவிக்குயில் சிவக்குமார் திருமணம் உறுதிப் படுத்தும் விழா (நிச்சயதார்த்தம்) திருத்துறைப் பூண்டியில் உள்ள காமாட்சி திருமண மண்டகத்தில் 20-10-2002 அன்று உற்றார் உறவினர்கள் புடைசூழ மிகச் சிறப்புடன் நடைபெற்றது !

பணி ஓய்வுக்குப்பிறகு சில மாதங்கள், கூடுதல் வாடகையில், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிலேயே வாழ்ந்து வந்தேன். இதற்கிடையில், ஓசூரிலிலேயே சொந்தமாக வீடு வாங்கலாம் அல்லது  வீட்டு மனை வாங்கி அதில் வீடு கட்டலாம் என்று எண்ணி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். என் முயற்சிகள் எதுவும் கனியாகவில்லை. காயாகவே உதிர்ந்து போயிற்றுநாம் நினைப்பது எல்லாமா நடந்துவிடுகின்றன ?
                         
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051,விடை(வைகாசி)15)
{28-05-2020}
-------------------------------------------------------------------------------------------
பணி ஓய்வை முன்னிட்டு
 நடைபெற்ற பாராட்டு விழாவில்
 உதவி இயக்குநர் திரு.இரவிச்சந்திரன்
 அவர்கள் உரையாற்றுகிறார். 
அருகில் அமர்ந்து இருப்பது நான் !

நீங்கள் இறங்க வேண்டிய இடம்
 வந்துவிட்டது “இறங்குங்கள்” என்று
 ஓடக்காரர் சொல்லும் போது 
இறங்கித்தானே ஆகவேண்டும் !

தஞ்சாவூரில் 
நான் வீட்டு மனை வாங்கக்
 காரணமாக இருந்த  
திரு.கோ.முருகையன்  திருமதி அகிலா
 இணையர்.

செல்வி ப.உமாலட்சுமி - 
செல்வன் இராசரெத்தினம் இணையரின்
 திருமண அழைப்பிதழ். 
இவர்கள் திருமணம் 
4-4-2002 அன்று 
கீழ்வேளூரில் நடைபெற்றது 

 வேலூர் திரு.மீ.இராசேந்திரனின்  
புதுமனை புகுவிழா அழைப்பிதழ். 
அவர் புதுமனை புகுவிழா 21-8-2002 
அன்று நடைபெற்றது 

 செல்வி.சங்கீதா - 
செல்வன் செல்லத்துரை இணையரின் 
திருமணம் 26-8-2002 அன்று 
கருப்பம்புலத்தில் நடைபெற்றது.


செல்வி.கவிக்குயில் - 
செல்வன் சிவகுமார் இணையரின் 
திருமண உறுதி நிகழ்வு
 (நிச்சயதார்த்தம்)
 20-10-2002 அன்று
 திருத்துறைப்பூண்டி 
காமாட்சி திருமண அரங்கில்
 நடைபெற்றது,