தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் : 2004 நிகழ்வுகள் !
(சுவடு.42) இளவரசி மணவிழா !
அறுபதாம் ஆண்டு நிறைவு நாளைப் பஞ்சநதிக்குளம் அங்காள பரமேசுவரி
திருக்கோயிலில் கொண்டாடிவிட்டுத் தஞ்சாவூர் திரும்புகையில் தட்டாங்கோயில் கோயில்
பாலம் தாண்டி எங்கள் ஊர்தி வந்து கொண்டிருந்த நிலையில் என்னுடைய எழினி (MOBILE PHONE) செல்லமாகச்
சிணுங்கியது. அதை எடுத்து செவியில் வைத்த நிலையில் எதிர் முனையிலிருந்து என் சிறிய
மைத்துனர் திரு.பிரகலாதன் பேசினார் !
திரு.பிரகலாதன் மட்டுமல்ல, சேரன்குளத்தில் வாழ்ந்து வந்த அவருடைய தம்பிகள் இருவரும் கூட
நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருடைய அப்பா, அம்மா, இருவரும் நிகழ்ச்சிக்கு வர விரும்பினாலும் கூட,
செல்லக் கூடாது என்று தடுக்கப்பட்டனர் !
அப்படி இருந்தும் அவரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று என்ன செய்தி என்று
வினவினேன். அவர் தன்னுடைய தம்பி திருச்சி திரு.சீவானந்தம் அருகில் இருந்தால் அவரிடம்
எழினியைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார் .எழினியை வாங்கிய திரு.ஜீவானந்தம் அடுத்த
நொடி எங்களிடம் சொன்ன செய்தி ”அப்பா இறந்து விட்டார்”
!
ஓரிரு வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போனேன். மகளும் மருமகனும் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடக் கோயிலுக்குப் போயிருக்கின்றனர். நேரில் வந்து அழைத்தும் அதற்குப் போக முடியவில்லையே என்ற ஏக்கம் மன வருத்தத்தைத் தந்திருக்க வேண்டும். அந்த வருத்தத்திலேயே அவர் உயிரும் பிரிந்திருக்கிறது !
நான் வண்டியை மன்னார்குடிக்
கடைத்தெருவுக்கு விடச் சொன்னேன். கடைத்தெருவில் மாலை
ஒன்று வாங்கிக் கொண்டு சேரன் குளம் சென்றோம். மாலையுடன்
இறங்கிச் சென்று, நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு இருந்த
மாமனாரின் உடலுக்கு மாலை அணிவித்து, சில நிமிடங்கள் அமைதியாக
நின்று வணங்கி விட்டு ஊர்திக்குத் திரும்பி வந்தேன் !
மாமனார் காலமான செய்தியை, அவருடைய மருமகன் என்ற முறையில்
எனக்குத் தெரிவித்திருக்க வேண்டும். வண்டியில் என்னுடன்
அமர்ந்திருந்த என் மனைவி, காலமான இரகுநாத பிள்ளையின் மகள்
அல்லவா ? அந்த மகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எழினியில் பேசிய சிறிய மைத்துனர் திரு.பிரகலாதன்
தன் தம்பியிடம் செய்தியைச் சொன்னாரே தவிர என்னிடமும் சொல்லவில்லை. தன்
தமக்கையிடமும் சொல்லவில்லை !
திரு.பிரகலாதன் விவரம் தெரியாத இளம் அகவைப்
பிள்ளை அன்று ! திருமணமானவர். மனைவி
மக்களுடன் வாழ்ந்து வருபவர். அவர் ஏன் அப்படி ஒரு தவறைச்
செய்தார் ? வாழ்க்கை என்றால் என்ன என்று இனிமேல் தான் அவர்
படிக்க வேண்டுமோ ?
மதியாதார் வாசல் தனை மிதிக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லிச்
சென்றிருந்தாலும், ”இன்னா செய்தார்க்கும்
இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு ?” என்ற வள்ளுவப்
பெருந்தகையின் வழியில் நடந்திட விழைந்தேன் !
அதனால், அழையாமலேயே சேரன்குளம் சென்றேன்; அஞ்சலி செலுத்தினேன்;
பிறகு இறுதிச் சடங்குகளுக்காகக் காத்திராமல் தஞ்சைக்கு
வந்துவிட்டேன் !
ஒவ்வொரு வினைக்கும் நாம் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தால், உறவுகள் நிலைக்காது; வாழ்வில்
அமைதியும் நிலவாது ! அன்று விலகி இருந்தவர்கள், தொடர்ந்து விலகியே இருக்கவில்லை; மீண்டும் என் உறவை
நாடி வந்தார்கள்; விந்தை மனிதர்கள்; ஏற்றுக்
கொண்டேன் ! அதுதானே மனிதப் பண்பு !
2004 -ஆம் ஆண்டு நிறைய நிகழ்வுகள் நடந்துவிட்டன. அவற்றில் ஒன்று நாடாளு மன்றத் தேர்தல். 1999-ஆம் ஆண்டுக்குப்
பிறகு நடந்த வழக்கமான பொதுத் தேர்தல். 2004 –ஆம் ஆண்டு ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெற்ற இந்தத்
தேர்தலுக்கு முன்னதாக தமிழ் மாநிலக் காங்கிரசு, இந்தியப்
பேராயக் கட்சியுடன் இணைந்துவிட்டது. தி.மு.க., இந்தியப் பேராயக் கட்சி,
பா.ம.க., ம.தி.மு.க.,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய
மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி அனைத்தும்
இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன !
அ.தி.மு.க.,
பா.ச.க., இரண்டும் சேர்ந்து இன்னொரு அணியமைத்துப் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் தி.மு.க.,
கூட்டணிக்கு 100 % வெற்றியை ஈட்டித் தந்தன.
தி.மு.க 16, இந்தியப் பேராயக்கட்சி 10, பா.ம.க. 5, ம.தி.மு.க 4. இந்தியப் பொதுவுடைமைக்
கட்சி 2, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 2 என அனைத்து இடங்களையும்
வென்றன. அ.தி.மு.க., பா.ச.க. கூட்டணி ஒரு இடம் கூடப் பெறவில்லை !
அனைத்திந்திய அளவில் 145 இடங்களில் வென்ற
இந்தியப் பேராயக் கட்சி, எதிர்க்கட்சிகள் பலவற்றை
ஒன்றிணத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது. திரு.மன்மோகன் சிங் தலைமை அமைச்சரானார். தமிழ்நாட்டைச்
சேர்ந்த திரு.ப.சிதம்பரம், திரு.மணிசங்கர் ஐயர், திரு.டி.ஆர்.பாலு, திரு.தயாநிதி மாறன், திரு.ஆ.இராசா, திரு.அன்புமணி இராமதாசு ஆகியோர் முதனிலை (CABINET MINISTER) அமைச்சர்களாயினர் !
திரு. எசு. எசு. பழநிமாணிக்கம், திரு. எசு. இரகுபதி, திரு. கே .வேங்கடபதி, திருமதி. சுப்புலட்சுமி
சகதீசன், திரு. ஈ. வி. கே. எசு. இளங்கோவன், திரு. ஆர். வேலு ஆகியோர் இணையமைச்சர்கள் ஆயினர்.
திரு.டி.ஆர்.பாலு கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் பொறுப்பை
ஏற்றிருந்தார். அவர் நெடுஞ்சாலைத் துறைப் பொறுப்பை
ஏற்று இருந்த இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் தான் தமிழ் நாட்டுச் சாலைப் போக்குவரத்து வசதிகளில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது
!
தமிழ்நாடெங்கும் சாலைகள் விரிவாக்கப்பட்டன. நான்கு
வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள் , எட்டு
வழிச் சாலைகள் தோன்றின. நூற்றுக் கணக்கில் சாலை மேம்பாலங்கள்
கட்டப்பட்டன. சென்னை, கத்திப்பாரா
பட்டாம்பூச்சிச் சாலை போன்று பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன !
தனியார், சாலைகளை அமைத்து, சிலகாலம் இயக்கி, சுங்கக் கட்டணம் தண்டல் செய்து
செலவை ஈடு செய்துகொண்டு, பின்பு சாலையை அரசிடம் ஒப்படைக்கும்
BOT திட்டங்கள் தமிழ்நாடெங்கும் பரவலாகத் தோன்றின !
நடுவணரசு சாலைப் போக்குவரத்துத் திட்டங்களுக்கென ஒதுக்கியுள்ள தொகை
முழுவதையும் திரு.டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கே செலவு செய்கிறாரோ என்ற அச்சம்
கூடப் பலருக்கும் தோன்றியது. இந்த ஐந்தாண்டு காலம் தான்
தமிழ்நாட்டுச் சாலைப்போக்கு வரத்தின் பொற்காலம் என்று துணிந்து சொல்லுமளவுக்கு
அவரது செயல்பாடுகள் இருந்தன !
எனது அகவாழ்வில் மேலும் ஒரு முகாமையான துன்பியல் நிகழ்வு 2004 –ஆம் ஆண்டு, மே மாதம், 12
–ஆம் நாள் ஏற்பட்டது. ஆம் ! என் மகள் திருமதி.கவிக்குயில் மாமனாரும், மருமகன் திரு.சிவக்குமாரின் தந்தையுமான திரு.அ.பழனியப்பன் அவர்கள் அன்று தான் காலமானார். சிறு அளவுக்கு நீரிழிவுக்கு ஆட்பட்டிருந்த அவர் நெஞ்சுவலி என்று
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில நாள்களிலேயே
மாரடைப்பினால் மறைந்து போனார் !
சேவப்பநாயக்கன் வாரி திரு.அமிர்தலிங்கம் பிள்ளைக்கு
திரு.சோலையப்பன், திரு.பழனியப்பன், திரு.சுப்ரமணியன்
என்று மூன்று ஆண் மக்களும், திருமதி இலட்சுமி என்னும் ஒரு
மகளும் இருந்தனர். அனைவரும் திருமணம் செய்துகொண்டு, தனித் தனி இல்லங்களில் வாழ்ந்து வந்தனர் !
இவர்களில் இரண்டாவது பிள்ளையான திரு.பழனியப்பன் – திருமதி. இராசேசுவரி இணையருக்கு திரு.சிவக்குமார், திரு.இரவிக்குமார்,
திரு.செந்தில்குமார் என்று மூன்று பிள்ளைகள்.
இவர்களுள் முதலாமவர் தான் என் மகள் கவிக்குயிலை மணந்தவர் ! மற்ற இருவருக்கும் திருமணம் ஆகி, தனித் தனியாக
வாழ்ந்து வருகின்றனர் !
என் (ஒன்றுவிட்ட) அண்ணன் மாப்பிள்ளையான கருப்பம்புலம் திரு.ந.சிவானந்தம் அவர்கள்
உயர்ந்த பண்பாளர். அவர் புதிய வீடு
ஒன்று கட்டி 2004 -ஆம் ஆண்டு, ஆகத்து
மாதம், 24 -ஆம் நாள் புதுமனை புகுவிழாவினை மிகச் சிறப்பாக நடத்தினார். உறவினர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு
குடும்பத்துடன் நேரில் சென்று கலந்துகொண்டேன் !
என் இரண்டாவது மகள் செல்வி.இளவரசிக்கும், ஓசூர் பாலாஜி கியர்ஸ் உரிமையாளர் காலஞ்சென்ற திரு. ஜெயராமன் அவர்களின் மகன் பிரபுவுக்கும், 2004
ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 3 –ஆம் நாள் திருமணம் நடந்தது. ஓசூரில் இராயக்கோட்டை சாலையில் உள்ள
ஆர்.கே.திருமண மண்டகத்தில் இத்திருமணம் நிகழ்வுற்றது !
செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள் காலையில் திருமணம் நடைபெறுகிது; ஆனால் மணமக்கள் வரவேற்பு,
முதல்நாள் மாலையில் நிகழ்ந்தது. திருமணம்
நடைபெறுவதற்கு முன்பாகவே
வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுவது அப்போது எனக்குப் புதுமையாகத் தோன்றியது. ஆனால்
இத்தகைய நிகழ்வுகள் இப்போது இயல்பான ஒன்றாகிவிட்டது !
நான் பணியில் இருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட
நிலையில் அப்போது என்னுடன் பணிபுரிந்த பல நண்பர்கள், குறிப்பாக,
திரு என்.கோபாலகிருஷ்ணன் திரு எம் நடேசன் ஆகிய இருவரும், ஒரு நாள் முன்னதாகவே வந்திருந்து திருமண ஏற்பாடுகளைக் கவனித்ததுடன்,
சில வேலைகளைத் தங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த காட்சி இன்றும் என் கண்கள்
முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. உண்மையான நட்பு என்பது இது தான் !
கடிநெல்வயலில் என் (ஒன்றுவிட்ட) சித்தப்பா திரு.சண்முகவேல் தேவர் - திருமதி.பஞ்சவர்ணம் அம்மையார்
இணையரின்
பெயர்த்தியும்
திரு சதாசிவம் - திருமதி. மல்லிகா இணையரின் அன்பு மகளுமான செல்வி சீதா, வேதாரணியம்
அருகிலுள்ள மறைஞாய நல்லூரைச் சேர்ந்த திரு.சந்திரசேகரனைக்
கரம் பற்றினார். 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 –ஆம் நாள் நடைபெற்ற இத்திருமணத்திற்கு
நான் மட்டும்
சென்று வந்ததாக நினைவு !
உறவினர்கள் வட்டம் விரிவடைய விரிவடைய, ஒரு மனிதன் சென்று கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளின்
எண்ணிக்கையும் விரிவடைந்து கொண்டே போகிறது. இதில்
என்னைப் போன்று அரசு அலுவல் ஏற்று / ஓய்வு பெற்று வெளியூர்களில் இருப்போர்க்கு, அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது என்பது இயலும் செயலாக
இருப்பதில்லை !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை(வைகாசி)22]
{04-06-2020}
------------------------------------------------------------------------------------------
திரு.பிரபு - செல்வி.இளவரசி
திருமணம் : நாள் : 03-09-2004.
திரு.பிரபு - செல்வி.இளவரசி
திருமண அழைப்பிதழ்.
இவர்கள் திருமணம்
03-09-2004 அன்று
ஓசூர் இராயக்கோட்டை சாலை
ஆர்.கே.திருமண அரங்கில்
நடைபெற்றது.
திரு.ஆர்.இரகுநாத பிள்ளை
(அகவை 60 -இல்
எடுத்த படம்)
ஆர்.இரகுநாத பிள்ளை,
மறைவு : 30-04-2004
(அகவை 84-இல் எடுத்த படம்)
அ.பழனியப்ப பிள்ளை,
மறைவு : 12-05-2004