தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர்
திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும்
தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் (58) : 2017 நிகழ்வுகள் !
ஒலிமுகப் பந்தல் !
-------------------------------------------------------------------------------------------
திரு.பகத்சிங் – செல்வி.பூங்கோதை திருமணம்
நடந்த அடுத்த மூன்றாவது
நாள் (09-02-2017) திரு.இராகுலின் மைத்துனர்
திரு.சிவசுப்ரமணியன் - செல்வி.அஞ்சலிதேவி திருமணம் வேதாரணியத்தில் நடைபெற்றது. இதற்கு
நானும் செல்லவேண்டும்; என் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த திரு.
மகாதேவனும் சென்றாக வேண்டும். ஏனெனில் திரு.மகாதேவனின் கொடைத் தந்தை (சம்பந்தி) திரு.எஸ்.ஆர்.இராமலிங்க தேவரின் இல்லத் திருமணம் அல்லவா ?
தஞ்சாவூரிலிருந்து
என்னுடைய சீருந்திலேயே திரு.மகாதேவன் அவர்களையும் வேதாரணியத்திற்கு
அழைத்துச் சென்றேன். திருமணம் நிறைவேறிய பின்பு, திரு.மகாதேவனும் அவர் குடும்பத்தினரும், சென்னை சென்றுவிட்டனர் !
ஒவ்வொரு
மனிதனுக்கும் உறவு வட்டம் விரிவடைய விரிவடைய அவன் சென்றாக வேண்டிய இன்பியல் துன்பியல்
நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதிலிருந்து எந்தவொரு மனிதனும் தப்பித்து ஓடி ஒளிந்துகொள்ள இயலாது.
வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய இத்தகைய சூழ்நிலையை நாம் நேர்கொண்டு தான்
ஆக வேண்டும் . இது தான் வாழ்க்கை !
வேதாரணியத்தை
அடுத்து இன்னொரு திருமணம். தஞ்சாவூரில் உள்ள என் இணைமான்
(சகலை) திரு.இரவி
– திருமதி இராசவல்லி இணையரின் மகள் செல்வி வீணா, தஞ்சாவூர், கருந்திட்டைக்குடி திரு.இராதாகிருட்டிணன் – திருமதி.கீதா
இணையரின் மகன் திரு.சோழராசனுக்கு வாழ்க்கைத் துணைவி ஆனார்
! தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற சொற் காத்துச் சோர்விலாள்
அல்லவோ மனைவி !
2017
–ஆம் ஆண்டு, மார்ச்சு, மாதம்
2 –ஆம் நாள், தஞ்சாவூர் ஐசுவர்யம் மகாலில் இத்திருமணம்
நடைபெற்றது. அரசியல் ஆளுமைகளான திரு.டி.கே.எசு. இளங்கோவன், திரு.டி.கே.ஜி.நீலமேகம், மேனாள் அமைச்சர் திரு.எஸ்.என்.எம். உபயதுல்லா, மருத்துவர். திருமதி.அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு திருமண விழாவுக்குச் சிறப்புச்
சேர்த்தனர் !
இணைமான்
இல்லத் திருமணம் அல்லவா ? நானும் என் மனைவியும் தொடக்கம்
முதல் நிறைவு வரைத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். கார்த்திகைப்
பிறையைப் போல எப்பொழுதும் காணவே முடியாத உறவினர்கள் சிலரையும்கூட அன்று காணுகின்ற வாய்ப்பு
எங்களுக்குக் கிடைத்தது ! திருமண நிகழ்ச்சிகள் என்பவை,
மணமக்களைத் திருமணக் கோலத்தில் பார்த்து மகிழும் நல்வாய்ப்பை நமக்கு
அளிப்பவை என்பது மட்டுமின்றி, பல்லாண்டுகளாகப் பார்க்க முடியாத
சில உறவினர்களைக் கூட நேரில் கண்டு உரையாடி மகிழும் பொன்னான பொழுதினை அளித்திடும் இனிய
நேர்வுகள் அல்லவா ?
தமிழ்நாட்டில்
1967
–ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கோயில்
அறங்காவலர்களாக அமர்த்தப் பெற்ற தி.மு.க.
ஆளுமைகள், ஆங்காங்கே கோயில்களின் சார்பில் திருமண
மண்டகங்களைக் கட்டத் தொடங்கினர். இந்தத் திருமண மண்டகங்கள் பெண் / பிள்ளையைப்
பெற்ற பெற்றோர்களின் இன்னல்களைப் பெருமளவுக்குக் குறைப்பதாக இருந்தன. அரசின் இந்த முயற்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதைப் பார்த்த தனியாரும்
திருமண மண்டகங்களைக் கட்டி வாடகைக்கு விடத் தொடங்கினர். இப்பொழுது
தமிழ்நாடெங்கும் திருமண மண்டகங்கள்
பல்கிப் பெருகிவிட்டன !
திருமண
மண்டகங்கள் தோன்றுவதற்கு முன்பு, பெற்றோர்கள் தம் பிள்ளை
/ பெண்களின் திருமணத்தை எப்படி நடத்தி இருப்பார்கள் ? சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாமே !
குறைந்தது 500
பேராவது அமரும் வகையில், வீட்டு வாயிலில் கீற்றுப்
பந்தல் போட வேண்டும்; திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்று அமர
வைக்க முதன்மைப் பந்தலுடன் இணைந்த ஒலிமுகப் பந்தல் (PORTICO) அமைக்க வேண்டும். இரண்டுக்கும் செம்மண் கொட்டிச் சீர்படுத்திக்
காய்ந்த பின் சாணமிட்டு மெழுக வேண்டும் !
சலவைத்
தொழிலாளியை அழைத்து இரண்டு பந்தல்களிலும் “வெள்ளை”
(WHITE CLOTHS ADORNED IN THE CEILING) கட்ட வேண்டும். பந்தலின் காற்று வாரியில் (WINDOW PANE) பனங்குலை,
தென்னங்குலை, ஈச்சங்குலை, தாழங்காய் போன்றவற்றைக் கட்டித் தொங்கவிட்டு அழகுபடுத்த வேண்டும். ஒலிமுகப் பந்தலின் வாயிலில் வாழை மரங்களை நிறுத்திப் பிணைத்து வைக்க வேண்டும்
!
திருமணத்திற்கு
வருவோரை வரவேற்று அமரவைக்க ஒலிமுகப் பந்தலில் குறைந்தது ஐம்பது நாற்காலிகளாவது போட
வேண்டும்.
ஊரகங்களில் ஐம்பது நாற்காலிகளைத் திரட்டிக் கொண்டு வருவதென்பது இமயத்தில்
ஏறுவதைப் போல ! முதன்மைப்
பந்தலில் மக்கள் அமர்வதற்கு வசதியாக
தரையெங்கும் நூற் கம்பளம் (CARPET) விரிக்க வேண்டும் ! வீடு வீடாகச் சென்று நூற்கம்பளம் இரவல் வாங்கி வந்து சேர்ப்பதற்குள் திருமண
வீட்டாருக்கு மூச்சுத் திணறிப் போகும் !
உணவு
ஆக்குவதற்காக (FOOD PREPARATION), வீட்டின் பின்புறம் தனியாக
ஒரு கொட்டகை (THATCHED SHED) போட்டு அதில் கோட்டு அடுப்புக் கட்ட
வேண்டும். ஆக்கிய உணவை விருந்தினர்கள் அருந்த வசதியாக இன்னொரு
கொட்டகை போட்டு, அதிலும் தரையைச் சமப்படுத்தி, மெழுகிக் காயவிட வேண்டும். உணவு அருந்துவோர் உட்கார வசதியாக
பந்திப் பாய் விரிக்க வேண்டும். கைகழுவ நீர் வைப்பதிலிருந்து,
குடிநீர் வைப்பது வரை ஏற்பாடு செய்ய வேண்டும் !
திருமணத்திற்கு
முன்பாக மாப்பிள்ளை / பெண்ணை அவர்தம்
வீட்டிலிருந்து திருமண வீட்டிற்கு அழைத்து வரக் குறைந்தது பத்துக்கும் மேற்பட்டக் கூண்டு வண்டிகளை
ஏற்பாடு செய்ய வேண்டும். மூடுந்து (VAN) இல்லாத காலமல்லவா ? மாப்பிள்ளை / பெண் வீட்டாரும் கூண்டு வண்டியில் தானே வந்தாக வேண்டும் ! இன்னும் எத்துணையோ தொடர் பணிகளும் இருக்கின்றன !
திருமண
மண்டகங்கள் என்னும் புதிய வசதி ஏற்பட்ட பின்பு, மேற்கண்ட இன்னல்கள்
அனைத்துக்கும் விடைகொடுத்தாகி விட்டது; திருமணம் செய்வது என்பது
இக்காலத்தில் மிகவும் எளிதாகிவிட்டது ! திருமண மண்டகத்தை முதன்
முதல் உருவாக்கி வழிகாட்டிய அறங்காவலர்களுக்கு நாம் என்றென்றும் நன்றி சொல்வோம்
!!
தமிழ்நாட்டில்
திருமண நிகழ்வு என்றால் நாதசுரம் என்னும் ஏழில் இசை கட்டாயம் இருக்கும். ஏழில் இசைக் கலைஞர்களை ஊக்குவித்து வாழவைத்தத் தமிழர்களின் பார்வை இப்போது ஏனோ மலையாளக் கரையோரம்
மேயத் தொடங்கி இருக்கிறது. . மலையாள நாட்டின் செண்டை மேளம் தமிழர்களின்
திருமணத்தில், வாழ்த்துரைக்க வந்தோரின் காதுகளைக் கிழித்துக் கொண்டிருக்கிறது
!
அக்கரைப்
பச்சை கண்டு ஆசைப்படும் கால்நடைகள் போல, தமிழர்கள் முன்பு
வடமொழியின் மீது ஆசை கொண்டுத் தமிழுக்கு ஊறு விளைவித்து விட்டார்கள்; இப்போது ஏழில் இசைக் கலைஞர்களைப் பட்டினி
போட்டுவிட்டு, செண்டை மேளக் கலைஞர்களுக்குத் திருமண விருந்து
ஊட்டுகிறார்கள் ! தவறு செய்வதே தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குப் போலும் !
ஊரக
மக்களுக்கு ஏழிசைக் கலை மீது இன்னும் பற்று இருக்கத்தான் செய்கிறது. கடிநெல்வயல் திரு.சா.சிங்காரவேலு
– திருமதி. தையல்நாயகி இணையரின் மகன் திரு.வீரபாண்டியன் திருமணம் ஏழிசையுடன் இனிது நிறைவேறியது. 2017 –ஆம் ஆண்டு மே மாதம் 29 –ஆம் நாள் காசி வீரம்மாள் திருமண
மண்டகத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில், செல்வி சாலினியை வீரபாண்டியன்
மாலை சூடி மணந்து கொண்டார். இத்திருமணத்திற்கும் என்னால் செல்ல
இயலவில்லை; என் வாழ்த்துகளை மட்டும் தென்றலைத் தூதாக்கி அனுப்பி
வைத்தேன். சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க இயலாமற்
போகிறது !
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),06]
20-06-2020}
-----------------------------------------------------------------------------------------------
திரு.சோழராசன் - செல்வி வீணா
திருமணம் : நாள் : 02-03-2017.
அனைத்து வசதிகளுடன்
திருமண மண்டகங்கள்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு,
கீற்றினால் ஆன
திருமணப் பந்தல்
திருமணப் பந்தலில்
ஏழில் இசை வழங்கும்
வழக்கில் வந்திருக்கின்ற
கேரளத்து
செண்டை மேளம்.