தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் (59) : 2018 நிகழ்வுகள் !
துயில் கொண்ட சூரியன் !
-----------------------------------------------------------------------------------
நாட்டுக்
கொடியானாலும் சரி, கட்சிக் கொடியானாலும் சரி,
எப்பொழுதும் உயரப் பறக்க வேண்டும். அரைக் கம்பத்தில்
பறப்பது இழப்பின் அறிகுறி ! 2018,19 ஆம் ஆண்டுகளில் உற்றார் உறவினர் வகையிலும்,
அரசியல் அரங்கிலும் சில இழப்புகளைச் சந்தித்து மனம் கலங்கி இருக்கிறேன் !
தமிழ்
நாட்டில் அரசியல் அரங்கில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திய கலைஞர் மு.கருணாநிதியின் மறைவு 2018 –ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 7 –ஆம் நாள் நிகழ்ந்தது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல், கலைஞர்
என்னும் ஆளுமைக்கும் இரண்டு முனையங்கள் உண்டு. எதிர்மறைப் பயன்களை (NEGATIVE EFFECTS) விளைவித்த கலைஞரின் இன்னொரு முனையத்தை நாம்
பார்க்க வேண்டியதில்லை !
நேர்மறை (POSSITIVE), எதிர்மறை (NEGATIVE) என்னும் இரண்டு
முனையங்கள் இல்லாத மனிதன் இந்த உலகில் யாருமே இல்லை; இருக்கிறான்
என்று யாராவது சொன்னால் அவன் பித்தம் பிடித்துப் பேசுகிறான் என்று பொருள். இனிக்கின்ற அடிப்பகுதியும் கசக்கின்ற நுனிப் பகுதியும் ஒரே கரும்பில் தான்
இருக்கின்றன. நுனிப் பகுதி கசக்கிறது என்பதற்காக மொத்தக் கரும்பையுமே
நாம் தூக்கி எறிந்துவிட முடியாது !
கலைஞரின்
எதிர் முனையத்தைப் பற்றி (NEGATIVE END) இப்போது பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. கலைஞரின் நேர் முனையத்தை (POSSITIVE END) மறைத்து விடுவதால் அவரது புகழ் குறைந்துவிடப் போவதும்
இல்லை !
நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று ! (குறள்)
நன்றல்லாததைத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டு இருப்பது வள்ளுவரின் வழியாகாது ! நன்றைப் பற்றி மட்டும் நினைவு கூர்வோம் !
திருத்துறைப்
பூண்டியிலிருந்து 18.3 கி.மீ
தொலைவில் உள்ள திருக்குவளை என்னும் ஊரகத்தில் இசைவேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் கருணாநிதி.
பன்முனை ஆளுமை மிக்க கருணாநிதி பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்தவரேயன்றி பட்டப் படிப்புப் படித்தவரும் அன்று; தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்று
புலவர் பட்டம் பெற்றவரும் அன்று !
தமிழ்ப்
புலவர்களே நாணித் தலை குனியும் அளவுக்குத் தமிழில் பெரும் ஆற்றல் பெற்றிருந்தவர் கருணாநிதி. பராசக்தி, மனோகரா, பூம்புகார்,
மந்திரிகுமாரி, திரும்பிப் பார் போன்ற திரைப்படங்களின் உரையாடல்களால்
ஈர்க்கப் பெறாத தமிழர்கள் 1950,
1960 –களில் இவ்வுலகில் யாரேனும் உண்டா ?
”வாழ்க்கை என்னும் ஓடம்”, “தப்பித்து வந்தானாம்மா”,
”பொருளே இல்லார்க்குத் தொல்லையா,” “இல் வாழ்வினிலே
ஒளி ஏற்றும் தீபம் ”, ”தேசம் ஞானம் கல்வி”, “பூமாலை நீ ஏன் வீணே”, போன்ற பாடல்கள் கருணாநிதியின் தூவல் முனையிலிருந்து தோன்றியவை அல்லவா
?
“சாக்ரடீசு”, “அனார்கலி”, “சேரன்
செங்குட்டுவன்”, ”கலிங்கப் போர்” போன்ற
ஒற்றையாள் (ஓரங்க) நாடக உரையாடல்களுக்கு
மயங்காத உள்ளங்கள் 1950 - 1960 வாக்கில் தமிழ்நாட்டில் ஒன்றேனும் உண்டா ?
கூர்மையான
தமிழ் உரையாடல்களைச் செதுக்கித் தந்த சிற்பியைப் பார்த்து சிலர் “தெலுங்கன்” என்று இழி மொழி கூறுகின்றனர். பிள்ளையே இல்லாதவள் ஐந்தாறு பெற்றவளைப் பார்த்து “மலடி”
என்று கூறுவது என்ன ஞாயமோ ? “வடுகன்” என்று கூறி வம்பு பேசுவோர் திருக்குவளைக்குச் சென்று ”தெலுங்கு” பேசுவோரைத் தேடிப் பார்க்கட்டும் !
தமிழனைத் தமிழனே தாழ்த்திப் பேசும் இழிநிலை ஒழிய வேண்டும் !
கருணாநிதியின்
சில முடிவுகளில் அல்லது செயல்களில் எனக்கும் கூட மாறுபட்ட கருத்து (DISSENT VIEWS) உண்டு. சற்றும் பிடிக்காதவையும் உள்ளன ! அதற்காக அவரது நற் செயல்களை
ஒதுக்கித் தள்ளிவிட முடியாது !
கருணாநிதியின்
ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப் பெற்ற நல்ல திட்டங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுப் பார்க்கலாம் !
01.ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் கோட்டூர்புரத்தில் அமைப்பு.
02. அமைப்பு சாராத் தொழிலாளருக்கு நலவாரியங்கள் பத்துக்கும் மேற்பட்டவை அமைப்பு.
03.அரசு அலுவலர்களுக்குத் தொல்லையாக இருந்த மந்தணக் கோப்பு (இரகசியக் குறிப்பு) முறை ஒழிப்பு.
04.அரசு அலுவலர்கள் தம் கணக்கில் சேர்ந்துள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படைத்துவிட்டு அதற்கு ஈடாக உரிய ஊதியம் பெறும் “ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு”த் திட்டம் அறிமுகம்.
05.அரசு விழாக்களில் ”நீராருங் கடலுடுத்த....” என்னும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுதல் அறிமுகம்
06.அரசு ஊழியர் பணிக் காலத்தில் இறந்துவிட்டால், அவர் குடும்பத்திற்கு நிதியளிக்கும் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டம் அறிமுகம்.
07.அறநிலையத் துறை மூலம் கோயில்களில் திருமண மண்டகங்கள் பல ஊர்களில் கட்டி பெற்றோர்களின் இன்னல்களைத் துடைத்தமை.
08. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம் கொணர்ந்தது. முதல் அணியினருக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்புக்குத் தகுதி பெறச் செய்தமை.
09.ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு அளவில் ஒரே துறை இருந்ததை மாற்றி தனித்தனித் துறைகள் அமைத்தமை
10.ஆதிதிராவிடர்களுக்கு இலவச கற்காரை (CONCRETE) வீடுகள் கட்டித் தந்தமை.
11.இந்தியாவிலேயே முதன் முறையாக மகளிருக்கு உள்ளாட்சிகளில் 33 % இட ஒதுக்கீடு அளிப்பு.
12.இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப்பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு.
13.இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை அளித்து 1989 ஆம் ஆண்டு அரசாணை வெளியீடு.
14.இரவலர் மறுவாழ்வு இல்லம், செங்கற்பட்டினை அடுத்த பரனூரில் அமைப்பு.
15.இராசமன்னார் குழுவை 1969 ஆம் ஆண்டு அமைத்து மாநில உரிமைகள் பற்றிய ஆய்வறிக்கை தயாரித்து அளித்தமை
16. உழவர் சந்தைகள் நூற்றுக் கணக்கான நகரங்களில் அமைப்பு
17. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் கொண்டுவந்தது.
18.ஏழைகளுக்கு பண்டிகை நாள்களில் இலவச அரிசி – ஆடைகள் வழங்கல்.
19. ஏழைப்பெண்கள் திருமண உதவித்திட்டம் அறிமுகம்.
20. ஓசூரில் ”சிப்காட் (01) ” தொடங்கி பலநூறு தொழிற்சாலைகள் கொண்டு வந்தமை.
21. கட்டபொம்மன் கோட்டை- மறு உருவாக்கம்
22.கண்ணொளி வழங்கல் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் இலவச கண் ஆய்வு முகாம்கள் நடத்தி, அறுவை சிகிச்சை செய்து, தேவைப்படுவோருக்கு இலவயமாக கண்ணாடிகள் வழங்கல்.
23. கலப்பு மணம் செய்துகொண்ட குடும்பத்துப் பெண்களுக்கு பேறுகால நிதியுதவித் திட்டம்.
24.கலைஞர் காப்பீட்டுத் திட்டம் (2009 முதல்) மூலம் அரசு அலுவலர்கள் அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவ மனைகளிலும் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தமை
25. கால்நடைப் பல்கலைக் கழகம் சென்னையில் அமைப்பு
26. காவலர்கள் குறை தீர்க்க இந்தியாவிலேயே முதன்முதலாக காவலர்கள் குறை களைவு ஆணையம் அமைப்பு.
27.குடிசை மாற்று வாரியம் திரு.இராம. அரங்கண்ணல் தலைமையில் 1970 -ஆம் ஆண்டு.அமைத்து, குடிசைகளில் வாழ்ந்தவர்களை மாடிவீடுகளில் குடியேறி வாழச் செய்தமை
28. குமரி முனையில் வள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை நிறுவியமை
29. குளித்தலை - முசிறி இடையே காவிரி ஆற்றில் மிக நீண்ட பாலம் (ஒன்றரை கி.மீ) கட்டித் தந்து இப்பகுதி மக்களின் குறை தீர்த்தமை.
30. கையிழுவை வண்டிகளை (ரிக்க்ஷாக்களை) ஒழித்து இலவச மிதியிழுவை (சைக்கிள் ரிக்க்ஷாக்கள்) வழங்கியது.
31.கொள்ளிடம் – கோடிக்கரை கூட்டுக் குடி நீர்த் திட்டம் கொண்டு வந்தமை
32.கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அமைப்பு. 6-6-1999 அன்று கால்கோள் நடத்தி கட்டுமானப் பணிகள் நிறைவேற்றம்.
33. கோவில்களின் நிர்வாகத்தின் கீழ் ஆதரவற்ற சிறுவர்களுக்குப் புகலிடம் தரும் கருணை இல்லங்கள். அமைப்பு.
34. சிற்றூர் மக்களுக்குப் பயன்படும் வகையில் சிற்றுந்து வசதி (மினி பஸ்) அறிமுகம்.
35.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் தேவநேயப் பாவாணரை இயக்குநராக அமர்வு செய்து உருவாக்கம்
36.சென்னை, கத்திப் பாராவில் வண்ணத்துப் பூச்சி வடிவ மேம்பாலம் கட்டி, போக்கு வரத்து நெரிசலைத் தவிர்த்தமை.
37.சென்னையைச் சுற்றிலும் ஹூண்டாய், போர்டு, செயிண்ட் கோபெயின் போன்ற பெருந் தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலை வாய்ப்பை உருவாக்கியமை.
38.சேர, சோழ. பாண்டியன், பல்லவன் நினைவாகப் போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு
39. தமிழகத்திலுள்ள அனைத்து ஊரகங்களுக்கும் (கிராமங்களுக்கு) தெரு மின்விளக்கு வசதி விரிவாக்கம்.
40.தமிழில் படித்தோருக்கு 20 % இட ஒதுக்கீடு சட்டம் அறிமுகம்.
41. தமிழுக்குச் செம்மொழி என்னும் தகுதி பெற்றமை. 12-10-2004 -ல் அரசாணை வெளியீடு.
42. தமிழ் இணையப் பல்கலைக் கழகம் அமைப்பு. 1999 ஆம் ஆண்டு
43. திரு.டி.ஆர்.பாலுவை நடுவணரசில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கி, தமிழ் நாடெங்கும் சாலைகளை விரிவாக்கம் செய்து , மேம்பாலங்களை நூற்றுக் கணக்கில் கட்டி, சாலைப் போக்குவரத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியமை.
44. திரு.ம.கோ.இரா. (M.G.R) ஆட்சிக் காலத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான வன்னியர் இன மக்களின் குடும்பத்தினருக்கு நிதி அளித்து அரசாணை வெளியீடு..
45. திருக்குறளுக்கு உரை எழுதி வெளியிட்டமை.
46. திருச்சி (காவிரி) - இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தமை.
47. திருவள்ளுவர் பல்கலைக் கழகம் வேலூரில் அமைப்பு
48. தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீடு
49.தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லம் திருச்சி, மனையேறிப்பட்டியில் அமைப்பு.
50. நாமக்கல் கவிஞர் இராமலிங்கனாருக்கு ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.
51. நெல்லை, பரலி சு. நெல்லையப்பருக்கு ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.
52. நோயாளர் சேவை ஊர்தி (ஆம்புலன்ஸ்) 108 சேவை 2008 முதல் அறிமுகம்
53. பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் பிறங்கடைக்கு (வாரிசுக்கு) அரசு வேலை.
54. பல மாவட்டங்களில் புதிய கலைக் கல்லூரிகள் அமைப்பு.
55. பள்ளி, கல்லூரி, ஐ.டி.ஐ.மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயணச்சலுகை அளிப்பு.
56. பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகம்
57. பாரதிதாசன் பல்கலைக் கழகம் திருச்சியில் அமைப்பு
58. புதிய தலைமைச் செயலகம் கட்டடம் ஓமந்தூரார் தோட்டத்தில் அமைப்பு
59. புதிய மாவட்டங்கள் பல உருவாக்கம்.
60. பூம்புகார்- புதிய நகரம் உருவாக்கி சுற்றுலா இடமாக்கியது.
61. பெரியார் பலகலைக் கழகம் சேலத்தில் அமைப்பு.
62. மகளிர் இலவசப் பட்டப்படிப்பு திட்டம் அறிமுகம்.
63. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நெல்லையில் அமைப்பு
64. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியீடு.
65.மெட்ராஸ் என்னும் பெயரை 1996 முதல் சென்னை என மாற்றி அமைத்தமை.
66.மென்பொருள் தொழில் மேம்பாட்டுக்கு சென்னை, தரமணியில் டைடல் பூங்கா (TIDAL PARK) அமைப்பு
67. மொழிப்போர் ஈகிகளுக்கு (தியாகிகளுக்கு) ஓய்வூதியம் அளிப்பு. நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தியமை.
68. வள்ளுவர் கோட்டம் அமைப்பு. 1973 ல் அடிக்கல் நாட்டி, 1976 -ல் பணி முடிப்பு.
69.விடுதலைப் (சுதந்திரப்) போராட்ட வீரர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதிய அளவு உயர்வு.
70.விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை வழங்கல் திட்டம், நெல் பயிர் செய்யும் உழவர்களின் உரிமைச் (அனுபோகதாரர்கள்) சட்டம் முழுமையாக நிறைவேற்றம்.
71.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கல்.
72.தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரதராசன் என்பவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்கி, முதன்முதலாகத் தாழ்த்தப் பட்ட இனத்தவரை உயர் நீதி மன்றத்தில் அமர வைத்தமை.
73.மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த திரு.எம்.எம். இராசேந்திரனை (மேனாள் தலைமைச் செயலர்) ஒரிசா மாநில ஆளுநராக அமர்வு செய்ய வைத்தமை.
74. செங்கற்பட்டு அருகே “மறைமலை நகர்” என்னும் பெயரில் துணை நகரம் உருவாக்கி, குடியிருப்பு வசதிகளை ஏற்டுத்தித் தந்தமை.
75.திருக்கோயிகளில் இறைவன், இறைவியர் பெயருக்கு முன் சேர்க்கப்பட்ட “ஸ்ரீ” யை மாற்றிவிட்டு “அருள்மிகு” எனும் முன்னொட்டை நடைமுறைக்குக் கொண்டுவரச் செய்தது.
பதவிப் பித்துப் பிடித்த போலித் தமிழர்கள் கருணாநிதிக்குக் கொடுத்த இடைஞ்சல்கள் சொல்லுந் தரமன்று. நடுவணரசுக்குக் காட்டிக் கொடுக்கும் செயல்களில் இப்போலித் தமிழர்கள் ஈடுபடாமல் இருந்திருந்தால், இந்தியப் பேராயக் கட்சியையோ, பாரதிய சனதாக் கட்சியையோ சார்ந்து இருக்கும் நிலையைக் கருணாநிதிக்கு உருவாக்காது இருந்திருந்தால், இவரது ஆட்சிக் காலம் தமிழுக்கும தமிழகத்திற்கும் பொற்காலமாக இருந்திருக்கும் !
அறிவுக் கூர்மையும், செயல் திறனும், எளிய மக்களின் இன்னல்களைப் புரிந்து கொள்ளும் உளப் பாங்கும் நிறைந்த கருணாநிதியின் இறப்பு, தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு !
தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் உழைக்கக் கூடிய இன்னொரு செயல் வீரரைத் தமிழகம் எப்போது காணுமோ ? ஒளி தந்த சூரியன் ”மெரீனா” கடற்கரையில் துயில் கொள்கிறது; அடுத்து இன்னொரு சூரியன் எழுந்து வருமா ?
----------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.பி: 2051,ஆடவை (ஆனி),07]
{21-06-2020}
--------------------------------------------------------------------------------------