name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: தன் வரலாறு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label தன் வரலாறு !. Show all posts
Showing posts with label தன் வரலாறு !. Show all posts

Saturday, May 2, 2020

காலச் சுவடுகள் (58) : 2017 நிகழ்வுகள் - ஒலிமுகப் பந்தல் !



தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (58)  : 2017 நிகழ்வுகள் !

 ஒலிமுகப் பந்தல் !

-------------------------------------------------------------------------------------------

திரு.பகத்சிங்செல்வி.பூங்கோதை திருமணம் நடந்த  அடுத்த மூன்றாவது நாள் (09-02-2017) திரு.இராகுலின் மைத்துனர் திரு.சிவசுப்ரமணியன் - செல்வி.அஞ்சலிதேவி திருமணம் வேதாரணியத்தில் நடைபெற்றது. இதற்கு நானும் செல்லவேண்டும்; என் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த திரு. மகாதேவனும் சென்றாக வேண்டும். ஏனெனில் திரு.மகாதேவனின் கொடைத் தந்தை (சம்பந்தி) திரு.எஸ்.ஆர்.இராமலிங்க தேவரின் இல்லத் திருமணம் அல்லவா ?

தஞ்சாவூரிலிருந்து என்னுடைய சீருந்திலேயே திரு.மகாதேவன் அவர்களையும் வேதாரணியத்திற்கு அழைத்துச் சென்றேன். திருமணம் நிறைவேறிய பின்பு, திரு.மகாதேவனும் அவர் குடும்பத்தினரும், சென்னை சென்றுவிட்டனர் !

ஒவ்வொரு மனிதனுக்கும் உறவு வட்டம் விரிவடைய விரிவடைய அவன் சென்றாக வேண்டிய இன்பியல் துன்பியல் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதிலிருந்து எந்தவொரு மனிதனும் தப்பித்து ஓடி ஒளிந்துகொள்ள இயலாது. வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய இத்தகைய சூழ்நிலையை நாம் நேர்கொண்டு தான் ஆக வேண்டும் . இது தான் வாழ்க்கை !

வேதாரணியத்தை அடுத்து இன்னொரு திருமணம். தஞ்சாவூரில் உள்ள என் இணைமான் (சகலை) திரு.இரவிதிருமதி இராசவல்லி இணையரின் மகள் செல்வி வீணா, தஞ்சாவூர், கருந்திட்டைக்குடி திரு.இராதாகிருட்டிணன்திருமதி.கீதா இணையரின் மகன் திரு.சோழராசனுக்கு வாழ்க்கைத் துணைவி ஆனார் ! தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற சொற் காத்துச் சோர்விலாள் அல்லவோ மனைவி !

2017 –ஆம் ஆண்டு, மார்ச்சு, மாதம் 2 –ஆம் நாள், தஞ்சாவூர் ஐசுவர்யம் மகாலில் இத்திருமணம் நடைபெற்றது. அரசியல் ஆளுமைகளான திரு.டி.கே.எசு. இளங்கோவன், திரு.டி.கே.ஜி.நீலமேகம், மேனாள் அமைச்சர் திரு.எஸ்.என்.எம். உபயதுல்லா, மருத்துவர். திருமதி.அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு திருமண விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தனர் !

இணைமான் இல்லத் திருமணம் அல்லவா ? நானும் என் மனைவியும் தொடக்கம் முதல் நிறைவு வரைத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். கார்த்திகைப் பிறையைப் போல எப்பொழுதும் காணவே முடியாத உறவினர்கள் சிலரையும்கூட அன்று காணுகின்ற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது ! திருமண நிகழ்ச்சிகள் என்பவை, மணமக்களைத் திருமணக் கோலத்தில் பார்த்து மகிழும் நல்வாய்ப்பை நமக்கு அளிப்பவை என்பது மட்டுமின்றி, பல்லாண்டுகளாகப் பார்க்க முடியாத சில உறவினர்களைக் கூட நேரில் கண்டு உரையாடி மகிழும் பொன்னான பொழுதினை அளித்திடும் இனிய நேர்வுகள் அல்லவா ?

தமிழ்நாட்டில் 1967 –ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கோயில் அறங்காவலர்களாக அமர்த்தப் பெற்ற தி.மு.. ஆளுமைகள், ஆங்காங்கே கோயில்களின் சார்பில் திருமண மண்டகங்களைக் கட்டத் தொடங்கினர். இந்தத் திருமண மண்டகங்கள்  பெண் / பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களின் இன்னல்களைப் பெருமளவுக்குக் குறைப்பதாக இருந்தன. அரசின் இந்த முயற்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதைப் பார்த்த தனியாரும் திருமண மண்டகங்களைக் கட்டி வாடகைக்கு விடத் தொடங்கினர். இப்பொழுது தமிழ்நாடெங்கும் திருமண மண்டகங்கள்  பல்கிப் பெருகிவிட்டன !

திருமண மண்டகங்கள் தோன்றுவதற்கு முன்பு, பெற்றோர்கள் தம் பிள்ளை / பெண்களின் திருமணத்தை எப்படி நடத்தி இருப்பார்கள் ? சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாமே !

குறைந்தது 500 பேராவது அமரும் வகையில், வீட்டு வாயிலில் கீற்றுப் பந்தல் போட வேண்டும்; திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்று அமர வைக்க முதன்மைப் பந்தலுடன் இணைந்த ஒலிமுகப் பந்தல் (PORTICO) அமைக்க வேண்டும். இரண்டுக்கும் செம்மண் கொட்டிச் சீர்படுத்திக் காய்ந்த பின்  சாணமிட்டு  மெழுக வேண்டும் !

சலவைத் தொழிலாளியை அழைத்து இரண்டு பந்தல்களிலும் வெள்ளை” (WHITE CLOTHS ADORNED IN THE CEILING) கட்ட வேண்டும். பந்தலின் காற்று வாரியில் (WINDOW PANE) பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, தாழங்காய் போன்றவற்றைக் கட்டித் தொங்கவிட்டு அழகுபடுத்த வேண்டும். ஒலிமுகப் பந்தலின் வாயிலில் வாழை மரங்களை நிறுத்திப் பிணைத்து வைக்க வேண்டும் !

திருமணத்திற்கு வருவோரை வரவேற்று அமரவைக்க ஒலிமுகப் பந்தலில் குறைந்தது ஐம்பது நாற்காலிகளாவது போட வேண்டும். ஊரகங்களில் ஐம்பது நாற்காலிகளைத் திரட்டிக் கொண்டு வருவதென்பது இமயத்தில் ஏறுவதைப் போலமுதன்மைப் பந்தலில் மக்கள் அமர்வதற்கு வசதியாக  தரையெங்கும்  நூற் கம்பளம் (CARPET) விரிக்க வேண்டும் ! வீடு வீடாகச் சென்று நூற்கம்பளம் இரவல் வாங்கி வந்து சேர்ப்பதற்குள் திருமண வீட்டாருக்கு மூச்சுத் திணறிப் போகும் !

உணவு ஆக்குவதற்காக (FOOD PREPARATION), வீட்டின் பின்புறம் தனியாக ஒரு கொட்டகை (THATCHED SHED) போட்டு அதில் கோட்டு அடுப்புக் கட்ட வேண்டும். ஆக்கிய உணவை விருந்தினர்கள் அருந்த வசதியாக இன்னொரு கொட்டகை போட்டு, அதிலும் தரையைச் சமப்படுத்தி, மெழுகிக் காயவிட வேண்டும். உணவு அருந்துவோர் உட்கார வசதியாக பந்திப் பாய் விரிக்க வேண்டும். கைகழுவ நீர் வைப்பதிலிருந்து, குடிநீர் வைப்பது வரை ஏற்பாடு செய்ய வேண்டும் !

திருமணத்திற்கு முன்பாக  மாப்பிள்ளை / பெண்ணை  அவர்தம் வீட்டிலிருந்து திருமண வீட்டிற்கு அழைத்து வரக் குறைந்தது  பத்துக்கும் மேற்பட்டக் கூண்டு வண்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மூடுந்து (VAN) இல்லாத காலமல்லவா ? மாப்பிள்ளை / பெண் வீட்டாரும் கூண்டு வண்டியில் தானே வந்தாக வேண்டும் ! இன்னும் எத்துணையோ தொடர் பணிகளும் இருக்கின்றன !

திருமண மண்டகங்கள் என்னும் புதிய வசதி ஏற்பட்ட பின்பு, மேற்கண்ட இன்னல்கள் அனைத்துக்கும் விடைகொடுத்தாகி விட்டது; திருமணம் செய்வது என்பது இக்காலத்தில் மிகவும் எளிதாகிவிட்டது ! திருமண மண்டகத்தை முதன் முதல் உருவாக்கி வழிகாட்டிய அறங்காவலர்களுக்கு நாம் என்றென்றும் நன்றி சொல்வோம் !!

தமிழ்நாட்டில் திருமண நிகழ்வு என்றால் நாதசுரம் என்னும் ஏழில் இசை கட்டாயம் இருக்கும். ஏழில் இசைக் கலைஞர்களை  ஊக்குவித்து வாழவைத்தத் தமிழர்களின் பார்வை இப்போது ஏனோ மலையாளக் கரையோரம் மேயத் தொடங்கி இருக்கிறது. . மலையாள நாட்டின் செண்டை மேளம் தமிழர்களின் திருமணத்தில், வாழ்த்துரைக்க வந்தோரின் காதுகளைக்  கிழித்துக் கொண்டிருக்கிறது !

அக்கரைப் பச்சை கண்டு ஆசைப்படும் கால்நடைகள் போல, தமிழர்கள் முன்பு வடமொழியின் மீது ஆசை கொண்டுத் தமிழுக்கு ஊறு விளைவித்து விட்டார்கள்இப்போது ஏழில் இசைக் கலைஞர்களைப் பட்டினி போட்டுவிட்டு, செண்டை மேளக் கலைஞர்களுக்குத் திருமண விருந்து ஊட்டுகிறார்கள் ! தவறு செய்வதே தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குப் போலும் !

ஊரக மக்களுக்கு ஏழிசைக் கலை மீது இன்னும் பற்று இருக்கத்தான் செய்கிறது. கடிநெல்வயல் திரு.சா.சிங்காரவேலுதிருமதி. தையல்நாயகி இணையரின் மகன் திரு.வீரபாண்டியன் திருமணம் ஏழிசையுடன் இனிது நிறைவேறியது. 2017 –ஆம் ஆண்டு மே மாதம் 29 –ஆம் நாள் காசி வீரம்மாள் திருமண மண்டகத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில், செல்வி சாலினியை வீரபாண்டியன் மாலை சூடி மணந்து கொண்டார். இத்திருமணத்திற்கும் என்னால் செல்ல இயலவில்லை; என் வாழ்த்துகளை மட்டும் தென்றலைத் தூதாக்கி அனுப்பி வைத்தேன். சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க இயலாமற் போகிறது !


-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),06]
20-06-2020}
-----------------------------------------------------------------------------------------------
  
திரு.சோழராசன் - செல்வி வீணா 
திருமணம் : நாள் : 02-03-2017.

அனைத்து வசதிகளுடன் 
திருமண மண்டகங்கள்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு,
 கீற்றினால் ஆன 
திருமணப் பந்தல்


திருமணப் பந்தலில்
 ஏழில் இசை வழங்கும்
 கலைஞர்கள்

ஏழில் இசையைத் துரத்திவிட்டு
 வழக்கில் வந்திருக்கின்ற 
 கேரளத்து
 செண்டை மேளம்.


வீரபாண்டியன் - சாலினி திருமணம் :
 நாள் : 29-05-2017.












Tuesday, April 28, 2020

காலச் சுவடுகள் (57) : 2016,17 நிகழ்வுகள் - ஊருக்கு உழைத்த உத்தமர் மறைவு !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (57)  : 2016,17 நிகழ்வுகள் !

 ஊருக்கு உழைத்த உத்தமர்  !

---------------------------------------------------------------------------------------------

சென்னையில் என் மைத்துனர் திரு.மகாதேவனுக்கு உடல்நலக் குறைவு என்றும் வடபழனியில் உள்ள விசயா மருத்து மனையில் சேர்த்திருப்பதாகவும், அவர் மகன் திரு.இராகுல் எழினி மூலம் தெரிவித்தார். அவருக்குக் சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்து விட்டன என்றும், அரத்தத் தூய்மைப் (DIALYSIS) பண்டுவம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார் !

65 –ஆம் அகவையில் அவருக்குச் சிறுநீரகம் செயலிழப்பு ! ஏனிந்த நிலை ? உடல்நலத்தை சீரழிக்கும் தீய பழக்கங்கள் எதுவும் அவரிடம் கிடையாது. பின் எப்படி இவ்வாறு நிகழ்ந்தது ? காரணம் எதுவாயினும், சிறுநீரகக் கோளாறு தொடர்பான அறிகுறிகளை அவர் தவறாக மதிப்பீடு செய்ததே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்து விட்டது !

சிறுநீரகம் அரத்தத்தில் சேரும்  யூரியா என்னும் உப்பைப் பிரித்து எடுத்து, நீரில் கரைத்து சிறுநீராக வெளியேற்றுகிறது. சிறுநீரகம் வலுவிழந்தால், யூரியா பிரிப்புப் பணியில் மென்மைப் போக்கு (SLOW FUNCTION) ஏற்படுகிறது. இதனால் அரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கிறது. யூரியா உப்பு  நச்சுத் தன்மை உடையது. நச்சுத் தன்மையுள்ள யூரியா அதிகரிப்பின் முதல் அறிகுறி புறங்கால் (UPPER PART OF THE FOOT) வீங்குதல் !

இந்த நிலையில் விழித்துக் கொண்டு மருத்துவரை அணுகினால், மருந்துகள் வாயிலாகவே சிறுநீரகச் செயலிழப்பைத் தவிர்க்க முடியும்; முற்றிலும்  குணமடையலாம். திரு.மகாதேவன் அவர்கள், தனது புறங்கால் வீக்கத்திற்குக் காரணம், அடிக்கடி நிகழும் தொலைவிடப் பேருந்துப் பயணம் என்பதாகத் கணித்தார். தவறான இந்தக் கணிப்பு தான், அவர் உடல் நிலைச் சீரழிவுக்குக் அடித்தளம் ஆகிவிட்டது !

மருத்துவமனையில் இருக்கும் அவரைப் பார்த்து வரும் பொருட்டு 2016 –ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22 –ஆம் நாள் இருப்பூர்தி (TRAIN) மூலம் நானும் என் மனைவியும் சென்னை சென்றோம். அங்கு சென்று நிலைமையை மதிப்பிட்டதில்,  எனக்கு ஒன்று தெளிவாயிற்று; அவர் தொடர்ந்து அரத்தத் தூய்மை (DIALYSIS) செய்து கொண்டே இருக்க வேண்டும்; வேறு வழியில்லை !

அவருக்கு மனத் தெம்பு அளிக்கும் வகையில் நான் உரையாடலானேன். சிறுநீரகச் செயலிழப்பிற்கு ஆளான நடுவண் அமைச்சர்கள் திருமதி சுசுமா சுவராச், திரு.அருண் சேட்லி மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் அரத்தத் தூய்மை செய்துகொண்டு வலுவுடன் இயங்கி வரவில்லையா ?  அதுபோன்று நீங்களும் இயங்கிவரலாம் பயப்படத்  தேவையில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொன்னேன். இரண்டு நாள் கழித்துத் தஞ்சை திரும்பினோம் !

உடல்நலத்தில் விழிப்புக் குறைந்தால், மனத் துன்பமும், உடல் துன்பமும் தவிர்க்க முடியாதவை என்பதற்கு திரு.மகாதேவன் அவர்களே எடுத்துக் காட்டு. மூன்று ஆண்டுகள் அரத்தத் தூய்மை செய்பு மூலமே வாழ்ந்து வந்த திரு.மகாதேவன் 29-09-2019 அன்று காலமானார். இதைப் பற்றிப் பின்னர் சொல்கிறேன் !

சென்னையிலிருந்து தஞ்சை திரும்பிய சில நாள்களில் அண்ணன் திரு.கா.இருளப்ப தேவர் (03-09-1930 – 30-09-2016) அவர்களின் மறைவுச் செய்தி கிடைத்தது. 1955 –ஆம் ஆண்டு புயலின் போது வீடிழந்து, வாழ்க்கை வசதிகளை இழந்து, உண்பதற்கு உணவு கூட இல்லாமல் தவித்த கடிநெல்வயல் மக்களை தன் தீரச் செயல்களால் பசிக் கொடுமையிலிருந்து காத்த பட்டாமணியார் திரு.கா.இருளப்ப தேவர் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30 ஆம் நாள் தனது 86 ஆம் அகவையில் காலமானார் !

ஏறத்தாழ தனது 18 –ஆம் அகவையிலேயே தந்தையைப் பறிகொடுத்த நிலையில், தாயார், ஒரு தம்பி. ஒரு தங்கை  ஆகியோர் அடங்கிய குடும்பத்திற்குத் தலைமை ஏற்றுத் துணிவுடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய அண்ணன் இருளப்ப தேவர் மறைந்து போனார் !

குடும்பப் பொறுப்பை ஏற்ற பிறகு, அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களில் ஆண்டுதோறும் நெல் பயிர் செய்கை, சொந்தமாக வீடுகட்டியமை, தங்கைக்குத் திருமணம் செய்து வைத்தமை, தனது திருமணத்தை நடத்தியமை, தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தமை ஆகிய அனைத்துப் பணிகளையும் குறைவற நிறைவேற்றிய தீரர் அண்ணன் இருளப்ப தேவர் மறைந்து போனார் !

கடிநெல்வயலின் பட்டாமணியாராக இருந்து, அகவை மூப்பினால் தளர்ந்து போயிருந்த மேனாள் பட்டாமணியார் (நி/வா) திரு நடேச தேவருக்கு மனைவி, மக்கள் என்று யாருமே இல்லாத நிலையில், அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவரது இறுதிக்காலம் வரை அன்புடன் பாதுகாத்து வந்த அண்ணன் இருளப்ப தேவர் மறைந்து போனார் !

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்என்றார் பொய்யாமொழியார். கடிநெல்வயல் மக்களைப் பொறுத்தவரை அண்ணன் இருளப்ப தேவரை வானுலகில் உறைகின்ற தெய்வமாகவே கடிநெல்வயல் மக்கள் பார்க்கிறார்கள் !

ஒரு மரம் வீழ்ந்தால், அதன் இடத்தை இட்டு நிரப்பப் புதிய விதைகள் சில முளைத்து எழுவது என்பது உலகியல் நியதி. இல்லற வாழ்வின் தொடக்கமாகிய திருமணங்களும் அதைத் தான் நமக்கு உணர்த்துகின்றன. அண்ணன் திரு.மீனாட்சி சுந்தரம்திருமதி.பார்வதி அம்மையார் இணையரின் பெயர்த்தியும், (நி/வா) திரு.குணசேகரன்திருமதி.இந்திராணி இணையரின் புதல்வியுமான செல்வி நிறைமதிதிரு.கார்த்தி இணையரின்  திருமணம் 2017 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், முதல் நாள் நடைபெற்றது. முகாமையான (முக்கியமான) ஒரு நிகழ்வின் பொருட்டு நான் ஓசூரில் இருந்ததால் இந்தத் திருமணத்திற்கு நான் செல்ல முடியவில்லை !

நான் நேரில் செல்ல இயலாவிட்டாலும் என் வாழ்த்து அலைகள் திருமண அரங்கத்தில் காற்றோடு காற்றாக நுழைந்து, எங்கெங்கும் நிறைந்து மணமக்களை  வளமோடு வாழ்க என்று வாழ்த்தியதை அந்தக் காற்றலைகள் அன்றி வேறு யாராலும் அறிய முடியாது !

ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் இணைந்து சென்றால், யார் இவர்கள், என்ன இப்படி இணைந்து செல்கிறார்கள் என்று அலர் (வீண் பழி) பேசுகின்ற உலகமிது. வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் உருவானதே திருமண நிகழ்வுகள். உற்றார் உறவினர்கள், ஊராருக்குச் சொல்லி, ஒரு ஆடவனையும் ஒரு பெண்ணையும் இல்லற வாழ்வில் இணைத்து வைத்தால் அலர் பேசும் வாய்களுக்கு அவல் கிடைக்காமற் போகுமல்லவா ?

எந்த நோக்கத்திற்காகத் திருமண நிகழ்வுகள் தோன்றினவோ, அதிலிருந்து தடம் புரண்டு, பெண்ணைப் பெற்றவர்களை ஆலைவாயில் இட்ட கரும்பாகக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது இன்றைய மனிதக் குமுகாயம். அறிவார்ந்த மக்கள் சிந்திப்பார்களாக !

சிறுநீரகச் செயலிழப்பால் துன்புற்று வந்த திரு.மகாதேவன், தன் இளைய மகன் திரு.பகத்சிங்கிற்கு விரைவாகத் திருமணத்தை நடத்திட வேண்டும் என்று விரும்பினார். திருத்துறைப் பூண்டி வட்டம் காளைக்காரன்வெளி திரு.சு.வீர பாண்டியன்திருமதி கயல்விழி இணையரின் மகள் செல்வி பூங்கோதையை மணம் முடிப்பது என்று இருவீட்டாரும் இணைந்து முடிவு செய்தனர் !

திருத்துறைப் பூண்டியிலிருந்து முத்துப் பேட்டை செல்லும் சாலையில், சங்கேந்தியிலிருந்து மேற்கு நோக்கிப் பிரிகிறது காளைக்காரன்வெளி செல்லும் சாலை. களிமண் சார்ந்த வளமான பூமியான இங்கு வேளாண்மை தான் முதன்மைத் தொழில். சங்கேந்தியிலிருந்து ஏறத்தாழ 6 கி.மீ தொலைவில் இருக்கும் இவ்வூர், போக்குவரத்திற்கு பேடுருளி (MOPED) உந்துருளி (MOTOR-BIKE) ஈருருளி (CYCLE) ஆகியவற்றையே நம்பி இருக்கிறது !

திரு.பகத்சிங்செல்வி பூங்கோதை இணையரின் திருமணம் 2017 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6 –ஆம் நாள் திருத்துறைப் பூண்டி மங்கை மகாலில் நடைபெற்றது. உடல் நலிவுற்றிருந்த திரு.மகாதேவன், திருமணத்திற்குச் சில நாள் முன்னதாவே தன் குடும்பத்தாருடன் தஞ்சைக்கு வந்து என் வீட்டில் தங்கிவிட்டார்  !

தேவைப்பட்டால், உடனடி மருத்துவ வசதிக்குத் தஞ்சாவூர் உகந்த இடம். அத்துடன் என்னிடம் சீருந்து இருந்ததால், அதையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர் மனதில் நிறைந்திருந்த எண்ணம். ஆனால், நல்வாய்ப்பாக, திருமணம் நிறைவுற்றுச் சில நாள் கழித்து அவர்கள்  சென்னைக்குச் செல்லும் வரை மருத்துவத் தேவை எழவில்லை !

என்னுடைய சீருந்திலேயே திருமணத்திற்கு அவரை அழைத்துச் சென்று, அவர் அருகிலேயே துணையாகவும் இருந்து, திரும்பவும் என் வீட்டிற்கு அவரை அழைத்து வரும் வரை என் துணை அவருக்கு மிகவும் தேவையாக இருந்தது ! உற்றுழி உதவுவது தானே மனிதப் பிறவி எடுத்தமைக்கு அழகு !

---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),05]
{19-06-2020}
--------------------------------------------------------------------------------------------
அண்ணன் 
கா.இருளப்ப தேவர் 
வாழ்ந்த வீடு.

கா.இருளப்ப தேவர்; 
மறைவு நாள்: 30-09-2016
உடல் நலிவுற்ற அத்தான்
 திரு.மகாதேவன்
திரு.பகத்சிங் - திருமதி.பூங்கோதை:
 திருமண நாள்: 06-02-2017









Saturday, April 25, 2020

காலச் சுவடுகள் (56) : 2015,16 நிகழ்வுகள் - சீருந்து வருகை !

தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (56)  : 2015,16 நிகழ்வுகள் !

  சீருந்து (CAR) வருகை !

 --------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கான பொதுத் தேர்தல் 2015 –ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் இ..தி.மு.க தனித்துப் போட்டியிட்டது. அது போல் பா...வும் பா...வும் தனித்துப் போட்டியிட்டன. தி.மு.. இந்தியப் பேராயக் கட்சி. முசுலீம்லீக், புதிய தமிழகம், .நே..க ஆகியவை கூட்டணி சேர்ந்துப் போட்டியிட்டன !

மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தே.மு.தி.., .தி.மு.., வி.சி.., .மா.கா., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி ஆகியவை தனியாகப் போட்டியிட்டன !

தேர்தல் முடிவில் அ...தி.மு. 134 இடங்களும், தி.மு. 89 இடங்களும், இந்தியப் பேராயக் கட்சி 8 இடங்களும். முசுலீம் லீக் 1 இடமும் பெற்றன. மக்கள் நலக் கூட்டணி, பா..., பா... ஆகியவை ஒரு இடம் கூடப் பெறவில்லை. செயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் !

தனித்து நின்று ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத கட்சிகளால் தான் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய கேடு விளைந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் நடைபெறும் இடப் பேரம், பணப் பேரம், பதவிப் பேரம் போன்ற பலவிதமான பேரங்கள் மக்களாட்சிக் கோட்பாட்டையே நகைப்புக்கு  உரியதாக்கிவிடுகிறது. உதிரிக் கட்சிகள் மறைந்து போனால் பல கூறுகளாக மக்கள் சிதறுண்டு கிடக்கும் துன்ப நிலை மறைந்து போகும் !

சென்னையில் ரெனால்ட் - நிசான் (RENAULT-NISSAN) சீருந்து வனைவு (தயாரிப்பு) நிறுவனத்தில் பணி புரியும் என் மகன் இளம்பரிதி 2016 –ஆம் ஆண்டு மே மாதம் 21 –ஆம் நாள் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வரும்போதுஆல்ட்டோசீருந்தில் (MARUTHI - ALTO CAR) வந்திருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் சீருந்தின் விசைத் திறவினை (IGNITION KEY) என்னிடம் கொடுத்து, இந்தச் சீருந்து இனி உங்களுக்குத் தான் ! வைத்துக் கொள்ளுங்கள் ! என்று அறிவித்தார் ! எனக்கு இன்ப அதிர்ச்சி !

இதற்கு முன் என்னிடம் சீருந்தும் (CAR) இருந்ததில்லை. சீருந்தை இயக்கவும்  (DRIVING) எனக்குத் தெரியாது ! திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் உந்தூர்திக் கம்மியவியல் (MECHANIC – MOTOR VEHICE) தொழிற்பிரிவு இயங்கி வந்தது. நான் விரும்பியிருந்தால் இந்த மூன்று நிலையங்களில் ஏதாவது ஒன்றில் உந்தூர்தி (MOTOR VEHICLE) இயக்கத்தினைப் பழகிக் கொண்டிருக்க முடியும்ஏனோ அப்போதெல்லாம் எனக்கு அதில் நாட்டம் இருந்ததில்லை !

சீருந்து இயக்கம் (CAR DRIVING) எனக்குத் தெரியாத நிலையில், வண்டியைக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்துவிட்டு இளம்பரிதி சென்னைக்குச் சென்றுவிட்டார். தஞ்சாவூரில் அவர் தங்கி இருந்த ஒரேயொரு நாளில் அரைமணி நேரம் மட்டும் வலவர் பயிற்சியை அளித்துவிட்டு அவர் சென்னைக்குச் சென்றுவிட்டார் !

நான் பணியில் இருக்கையில், தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள நூலகத்திலிருந்து தொழில் நுட்பப் புத்தகங்களை எடுத்து வந்து நிரம்பப் படிப்பேன்கருவிகள் மற்றும் எந்திரங்கள் பற்றியும் அவற்றின் கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டு அவற்றுக்குத் தமிழில் என்ன பெயர் சூட்டலாம் என்பது பற்றியும் ஆய்வு செய்ய இப்புத்தங்கள் எனக்கு உதவின !

இவ்வாறு நான் படித்த புத்தகங்களில் உந்தூர்திகள் (MOTOR VEHICLES) பற்றிய புத்தகங்களும் அடக்கம். புத்தகங்களைப் படித்தறிந்த வகையில் ஒரு உந்தூர்தியை எப்படி இயக்குவது என்பது பற்றி எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு இருந்தது தெரிவியல் (THEORY) அறிவே தவிர புரிவியல் (PRACTICAL) பயிற்சி கிடையாது !

சீருந்தினைப் பெற்றுக் கொண்ட மறுநாளிலிருந்து, போக்குவரத்து இல்லாத சாலைகளில் வண்டியை நானே இயக்கிப் பழகினேன். இவ்வாறு இரண்டு மூன்று நாள்கள் பழகிய பின் போக்குவரத்து உள்ள சாலைகளில் இயக்கிப் பழகத் தொடங்கினேன். பதினைந்து நாள்கள் இவ்வாறு இயக்கிப் பழகிய பிறகு முழு அளவில் தேர்ச்சி பெற்று, வெளியூர்களுக்குக் கூட வண்டியை எடுத்துக் கொண்டு செல்லும் அளவுக்குத் தேர்ச்சி பெற்று விட்டேன் !

காலப்போக்கில், 100 கி.மீ தொலைவுக்கு அப்பாலும் சென்று வரும் அளவுக்கு நான் கைதேர்ந்த வலவர் (DRIVER) ஆனேன். 72 அகவை ஆன நிலையில், நான் பிறர் உதவியின்றிச் சீருந்து இயக்கக் கற்றுக் கொண்டதையும், மனைவியை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று வருவதையும் அறிந்த நண்பர்களும் உறவினர்களும் வியப்பால் சிலையாகிப் போனார்கள் ! துணிவும், கிளர்ச்சி அடையாத மனமும், மென்மையான அணுகு முறையும் இருந்தால் எந்தப் பணியையும் நாம் நேர்த்தியுடன் செய்து முடிக்க முடியும் என்பது என் கருத்து !

நெடுந் தொலைவில் உள்ள ஊர்களுக்குச் செல்வதென்றால் இடைக்கால வலவர் (ACTING DRIVER) ஒருவரை  அமர்த்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருமுறை, நானும் என் மனைவியும் என் சீருந்தில் ஓசூரில் உள்ள என் பெண்கள் வீட்டிற்குச் செல்வதென்று முடிவு செய்தோம். இடைக்கால வலவர் ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டு ஓசூர் போய்ச் சேர்ந்தோம் !

ஓசூரில் வண்டியை விட்டுவிட்டு  வலவர் தஞ்சாவூர் திரும்பிச் சென்று விடுவார். திரும்பிச் செல்வதற்கான பேருந்துச் செலவையும் அவருக்குச் சேர்த்து அளித்து விடுவேன். ஓசூரிலிருந்து, தஞ்சை திரும்புகையில் எழினி (MOBILE)  மூலம் அவரைத் தொடர்பு கொண்டு, அழைத்துக் கொள்வேன். முன்பின் பழக்கமில்லாத வலவர்களிடம் வண்டியைக் கொடுக்க நான் விரும்புவதில்லை  !

நானும் என் மனைவியும் ஓசூர் வந்த சில நாள்களில், தஞ்சாவூரில் இருக்கும் என் இணைமான் (சகலை) திரு.இரவி அவர்களின் தாயார் திருமதி.பார்வதி அம்மையார் அவர்கள் காலமான செய்தி கிடைத்தது. 31-08-2016 அன்று அவர், யாரும் எதிர்பாரா வகையில் இயற்கை எய்தினார். நலமுடன் இருக்கையிலேயே சிலருக்கு இவ்வாறு கதுமென்று (திடீரென்று) வாழ்க்கை முடிந்து போகிறது !

எதிர்பாராத பிரிவு என்பதால், உற்றார் உறவினர்கள் இடையே ஆறாத துன்ப அலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன. இடைக்கால வலவர் ஒருவரை ஓசூரிலேயே அமர்த்திக் கொண்டு உடனடியாக, தஞ்சை செல்ல முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினேன் !

இடைக்கால  வலவர் உடனடியாக எனக்குக் கிடைக்க வில்லை. என் மருமகன் ஒரு பக்கம், அவர் நண்பர்கள் இன்னொரு பக்கம் என்று முனைப்பாக முயன்றும் கூட, வண்டியை இயக்கித் தஞ்சை செல்ல எனக்கு வலவர் கிடைக்கவில்லை. தஞ்சைக்கு எழினி (MOBILE) மூலம் தொடர்பு கொண்டு, எனது நிலையை விளக்கி, என் வரவுக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று இணைமான் (சகலை) திரு இரவியிடம் சொல்லிவிட்டு, உடனே வர முடியாமைக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன் !

பின்னர் மூன்று நாள்கள் கழித்து 04-09-2016 அன்று வேறொரு வலவரை ஏற்பாடு செய்துகொண்டு தஞ்சை சென்று திரு.இரவியிடம் என் இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறிவிட்டு தஞ்சையில் உள்ள என் இல்லம் மீண்டேன் ! வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இதுபோன்ற நெருக்கடியான நிகழ்வுகள் நடக்கவே செய்கின்றன. அவற்றை நாம் அமைதியுடன் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை !

பதினைந்து நாள் சாலையோட்டப் பயிற்சிக்குப் பின்ஆல்ட்டோவை எடுத்துக் கொண்டு, என் இல்லத்திலிருந்து 16 கி,மீ தொலைவில் உள்ள திட்டையில் உள்ள குரு பகவான் கோயிலுக்கு நான், என் மனைவி, இணைமான் (சகலை) திரு..மா.சுப்ரமணியன், அவர் மனைவி நால்வரும் சென்று வந்தோம். தஞ்சை நகருக்குள் வண்டியை இயக்கி வருகையில் நெருக்கடியான ஒரு சாலையில் பொறிச் சிவிகை ஒன்றின் மீதுஆல்ட்டோஉரசிக் கொண்டு நின்றது. பொறிச் சிவிகை வலவர் சண்டைக்கு வந்து  விட்டார். புதிதாகச் சீருந்து ஓட்டுகையில் இது கூட நிகழாவிட்டால் எப்படி ?

என்னிடம் இருந்தமாருதி - ஆல்ட்டோசீருந்து நன்னிலையில் தான் இயங்கிக் கொண்டிருந்ததுஆனால் அதைவிடசாண்ட்ரோசீருந்து எங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று இளம்பரிதிக்கு மனதில் ஒரு எண்ணம். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 –ஆம் நாள் திரு.இளம்பரிதி, “சாண்ட்ரோசீருந்துடன் தஞ்சைக்கு வந்தார். இரண்டு நாள் தங்கி விட்டு சென்னைக்குத் திரும்புகையில்சாண்ட்ரோவை எங்களிடம் தந்துவிட்டுஆல்ட்டோவை எடுத்துச் சென்றுவிட்டார் !

இந்தசாண்ட்ரோதான் எனது இயக்கத்தில் எங்களை அழைத்துகொண்டு, பல வெளியூர்களும் சென்று வரும் வாய்ப்பை வழங்கியது !

-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),04]
{18-06-2020}


----------------------------------------------------------------------------------------------

 "ஆல்ட்டோ” சீருந்து
 வருகை : 21-05-2016.

திட்டை, குரு கோயில்

வலவர் உரிமம். தகுதிக் 
காலம் 30-12-2024 வரை.

”சாண்ட்ரோ” 
வருகை: 15-09-2016.



                           






Thursday, April 23, 2020

காலச் சுவடுகள் (55) : 2015 நிகழ்வுகள் - ஆரோவில் சுற்றுலா !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (55) : 2015 நிகழ்வுகள் !

ஆரோவில் சுற்றுலா!

--------------------------------------------------------------------------------------------

கன்னியாகுமரிச் சுற்றுலா சென்று வந்த பிறகு, சில நாள் ஓசூரில் தங்கிவரலாம் என்று விரும்பி  நான், என் மனைவி, மகள் இளவரசி, பெயர்த்தி நேகா, பெயரன் அபிஷேக், கீர்த்திவாசன் அனைவரும் ஓசூர் வந்தோம் !

2015 –ஆம் ஆண்டு சூன் மாதம் 5 –ஆம் நாள் ஓசூரிலிருந்து சீருந்து மூலம் புதுச்சேரிக்குச் சுற்றுலாப் புறப்பட்டோம். எங்கள் குழுவில் நான் (71), என் மனைவி கலைச்செல்வி (59) முதல் மருமகன் சிவக்குமார் (44), மகள் கவிக்குயில் (36), பெயரன் கீர்த்திவாசன் (12), இரண்டாவது மருமகன் பிரபு (37), மகள் இளவரசி (32), பெயர்த்தி நேகா (09), பெயரன் அபிஷேக் (05) ஆகியோர் அடக்கம் !

சீருந்து இயக்கம் இரண்டாவது மருமகன் திரு.பிரபு. புதுச்சேரிக்கு இரவு 10-00 மணியளவில் போய்ச் சேர்ந்தோம். தங்கும் விடுதிக்கு முன்னதாகவே பதிவு செய்திருந்ததால், இன்னல் ஏதுமின்றி, விடுதிக்குச் சென்று ஓய்வெடுக்க வசதியாக இருந்தது !

காலையில் எழுந்து (06-06-2015) புதுச்சேரி வழியாகப் பாயும் தென்பெண்ணை ஆற்றில் படகு மூலம் பயணம் செய்து, அங்குள்ள கடற்கரை விண்ணுலகு” (PARADISE BEACH) என்னும் கடற்கரைக்குச் சென்றோம். குழந்தைகள் கடல் நீரில் இறங்கி விளையாடுவதற்கும், பெரியவர்கள் ஈடு கொடுத்து நீரிலாடித் திளைப்பதற்கும் உண்மையிலேயே இது கடற்கரை விண்ணுலகுதான் ! நாள் முழுதும் அந்தக் கடற்கரையின் வண்ணமயமான துய்ப்பைப் பெற்று மகிழ்ந்தோம் !

மறுநாள் (07-06-2015)  முற்பகல் 10-30 மணியலவில் ஆரோவில் பன்னாட்டு நகரம் சென்றோம். ஆரோவில் என்றால் என்ன ? அது எங்கே அமைந்துள்ளது ? என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம் !

ஆரோவில் பன்னாட்டு நகரம் புதுச்சேரிக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ளது. இந்நகரத்தின் பெரும் பகுதி  தமிழ்நாட்டுக்குள்ளும், சில பகுதிகள் புதுச்சேரி மாநிலத்திற்குள்ளும் அமைந்துள்ளன. இங்கு ஏறத்தாழ 52 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 2500 அளவுக்கு உள்ளது !

இந்நகரம் அமைதிப்பகுதி, தொழிற்கூட மண்டலம், குடியிருப்பு மண்டலம் பன்னாட்டு மண்டலம், பண்பாட்டு மண்டலம், பசுமை வளையப் பகுதி என ஆறு பகுதிகளாக உருவாக்கப்பட்டு உள்ளது. வேறுபட்ட பண்பாடுகளை உடைய வெவ்வேறு நாட்டு மக்களை ஒரே இடத்தில் சேர்ந்து வாழச் செய்து  அவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும் சோதனை முயற்சியே ஆரோவில்லின் நோக்கம் !

எங்குப் பார்த்தாலும் பசுமை நிறைந்த சோலைகள், அவற்றின் இடையே குடியிருப்புகள் எனத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. திரு.அரவிந்தர் பண்பாட்டு மையத்தின் சார்பில் 1968 –ஆம் ஆண்டு இதற்கானத் திட்டப்பணிகள் தொடங்கின. இந்நகரத்தின்  நடுப்பகுதியில் நிறுவப்பெற்றுள்ள அன்னையின் ஆலயம் (மாத்ரி மந்திர்) என்னும் பொன் வண்ண உருண்டை வடிவ அரங்கம் தான் ஆரோவில்லின் சிறப்புச் சின்னமாக விளங்குகிறது !

ஆரோவில்லைப் பார்வையிட்ட பிறகு மாலை 5-00 மணியளவில் புதுவை மாநிலத்தில் உள்ள மொரட்டாண்டி என்னும் ஊரில் உள்ள பெரிய கலைய (கலசம்)  வடிவக் கோபுரத்தையும், உள்ளே நிறுவப்பட்டுள்ள 40 அடி உயர சனியீசப் பெருமானின் திருவுருவச் சிலையையும் பார்வையிட்டு மலைத்துப் போனோம். இங்கே இன்னொரு சிறப்பு ஒன்பது கோள்களுக்கும் 20 அடி உயரத்தில் தெய்வச் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இக்கால ஆன்மிகம் இப்போதெல்லாம் பேருருவம் படைப்பதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது !

இக்கோயிலுக்கு 2 கி.மீ தொலைவில் உள்ள ஒரு ஊரில் பிரித்தியங்கராதேவி  பேருருவச் சிலை வடிவத்தில் கோபுரம் அமைந்துள்ள கோயில் ஒன்று உள்ளது !. கோயிலின் நுழைவாயில் யாளியின் வாய் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது ! இக்கோயிலைப் பார்வையிட்ட பின்பு தங்கும் விடுதிக்குத் திரும்பி விட்டோம் !

மறு நாள் (08-06-2015) காலை புறப்பட்டு, புதுச்சேரியில் புகழ் பெற்று விளங்கும் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டோம். பாரதியார் புதுவையில் தங்கியிருந்த காலத்தில் இக்கோயிலுக்கு அடிக்கடி வந்து அவர் வழிபடுவது உண்டு என்று சொல்லப்படுகிறது. மதிய உணவுக்குப் பின்பு நானும் என் மனைவி கலைச் செல்வியும் புதுவையிலிருந்து பேருந்து மூலம் தஞ்சை திரும்பினோம். மற்றவர்கள் அவர்கள் வந்த சீருந்தில் ஓசூர் திரும்பினர்.

இதே சூன் மாத்தில் ஒரு முகாமையான திருமணம். கடிநெல்வயல் திரு..மீனாட்சிசுந்தரம்திருமதி.பார்வதி அம்மையார் இணையரின் பெயரனும், சென்னை அம்பத்தூர் திரு.மீ.கோவிந்தராசுதிருமதி.இரேவதி அம்மையார் இணையரின் மகனுமான திரு. அரவிந்த் திருமணம் நடைபெற்றது !

சென்னை மதுரவாயல் திரு.அண்ணாமலைதிருமதி.அலர்மேல் மங்கை இணையரின் மகளான செல்வி. வினோதினிக்கு  திரு. அரவிந்த் மாலை சூடித் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இத்திருமணம் கேரள மாநிலம், குருவாயூர்  அருள்மிகு கிருட்டிணன் கோயிலில் 2015 –ஆம் ஆண்டு  சூம் மாதம், 12 –ஆம் நாள் நடைபெற்றது ! மிகைத் தொலைவில் உள்ள ஊரில் திருமணம் நடைபெற்றதால், நான் தஞ்சையில் இருந்த படியே மணமக்களை மனமாற வாழ்த்தி மகிழ்ந்தேன் !

கடந்த ஐந்து ஆண்டுகளாக (2020) என் முகநூற் பணிக்கு தோன்றாத் துணையாக விளங்கி வரும்ஏசர்மடிக் கணினியை என் மகன் திரு.இளம்பரிதி தஞ்சாவூர்சிக்மாகணினி நடுவத்தின் (SIGMA COMPUTER CENTER) வாங்கி எனக்குப் பரிசளித்த நன்னாள் 2015 –ஆம் ஆண்டு, சூலை மாதம், 5 –ஆம் நாள் ஆகும். என் தமிழ்ப் பணிக்கு உற்ற துணைவனாக விளங்கும்  இந்த மடிக்கணினி இல்லையேல், என் வாழ்வில் சலிப்பு ஏற்பட்டிருக்கும் !

ஒரு துன்பியல் நிகழ்வை இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டியுள்ளது ! தாய்மாமனுக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்நாளெல்லாம் வளமான வாழ்க்கையைக் காண முடியாத என் தமக்கையார் திருமதி. சிந்தாமணி அம்மையார் 2015 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 –ஆம் நாள், நாகையை அடுத்த தேவூரில் தனது 75 ஆம் அகவையில் காலமானார். இவரது மகன் திரு.அருமைநாதன், தன் மனைவி திருமதி. வள்ளி, மற்றும்  மகன்கள் திரு.மனோஜ்குமார், திரு.கார்த்திகேயன் ஆகியோருடன்  தேவூரில் வாழ்ந்து வருகிறார் !

மகள் திருமதி. உமாலட்சுமி தன் கணவர் திரு.இராசரெத்தினம் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வழ்ந்து வருகிறார் !  தமக்கையார் மறைந்த போது நான் தஞ்சாவூரில் வாழ்ந்து வந்தேன். செய்தி கேள்விப்பட்டதும் நானும் என் மனைவியும் வாடகைச் சீருந்து மூலம் தேவூர் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டோம். சரியாகத் திட்டமிடாத வாழ்க்கை சீர்குலைந்து போகும் என்பதை மாமா திரு.பண்டரிநாதன்திருமதி.சிந்தாமணி அம்மையாரின் வாழ்க்கை எனக்கு உணர்த்திற்று !

என் மகள் திருமதி கவிக்குயில், தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளராகப் (TECHNICAL ASSISTANT) பணி புரிந்து வருவது காலச் சுவடுகளைத் தொடர்ந்து படித்து வருவோருக்குத் தெரிந்த செய்தி தான் ! அவர் ஏறத்தாழ  ஆறு  ஆண்டுகளுக்குப் பிறகு 2015 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இளமின் பொறியாளராக (JUNIOR ENGINEER)ப் பதவி உயர்வு பெற்று  ஓசூரை அடுத்த கெம்பட்டி துணை மின் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் !

கெம்பட்டியில் பணியேற்பதற்கு ஒரு ஆண்டு முன்னதாகவே பகுதி நேரப் படிப்பில் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்குக் கவிக்குயில் திட்டமிட்டார். அதன்படி 2014 ஆம் ஆண்டு சூன் மாதம், பர்கூர் பொறியியல் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து  3-1/2 ஆண்டுகள் பயின்று  2017 திசம்பர் மாதம் படிப்பை நிறைவு செய்து, பொறியியல் வாலைப் (B.E.) பட்டம் பெற்றார் !

இந்த 3-1/2 ஆண்டுக் காலமும் அன்றாடம் 80 கி.மீ. தொலைவில் உள்ள பர்கூர் பொறியியல் கல்லூரிக்குப் பேருந்தில் சென்று வர நேர்ந்தது ! ஒவ்வொரு நாளும் போக வர 160 கி.மீ பேருந்தில் சென்று வருவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத மிகவும் கடினமான செயல். அதுவும், ஓசூரிலிருந்து கிருட்டிணகிரி, கிருட்டிணகிரியிலிருந்து பர்கூர் என இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். கடினமான மேல் தோலை நீக்கினால் தானே இனிமையான பலாச் சுளையைத் தின்ன முடிகிறது !
                       
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),03]
{17-06-2020}
-------------------------------------------------------------------------------------------
புதுச்சேரி,
 சுண்ணாம்பு ஆற்றில்
 படகில் செல்கையில் !

ஆரோவில்  தியான  அரங்கம்

மொரட்டாண்டி  கோயில் கோபுரம்

 மொரட்டாண்டி சனியீசன் 


பிரித்தியங்கரா தேவி கோயில் கோபுரம்

தமக்கையார்.
ப.சிந்தாமணி அம்மையார், 
மறைவு நாள்: 08-09-2015.