name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (56) : 2015,16 நிகழ்வுகள் - சீருந்து வருகை !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, April 25, 2020

காலச் சுவடுகள் (56) : 2015,16 நிகழ்வுகள் - சீருந்து வருகை !

தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (56)  : 2015,16 நிகழ்வுகள் !

  சீருந்து (CAR) வருகை !

 --------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கான பொதுத் தேர்தல் 2015 –ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் இ..தி.மு.க தனித்துப் போட்டியிட்டது. அது போல் பா...வும் பா...வும் தனித்துப் போட்டியிட்டன. தி.மு.. இந்தியப் பேராயக் கட்சி. முசுலீம்லீக், புதிய தமிழகம், .நே..க ஆகியவை கூட்டணி சேர்ந்துப் போட்டியிட்டன !

மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தே.மு.தி.., .தி.மு.., வி.சி.., .மா.கா., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி ஆகியவை தனியாகப் போட்டியிட்டன !

தேர்தல் முடிவில் அ...தி.மு. 134 இடங்களும், தி.மு. 89 இடங்களும், இந்தியப் பேராயக் கட்சி 8 இடங்களும். முசுலீம் லீக் 1 இடமும் பெற்றன. மக்கள் நலக் கூட்டணி, பா..., பா... ஆகியவை ஒரு இடம் கூடப் பெறவில்லை. செயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் !

தனித்து நின்று ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத கட்சிகளால் தான் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய கேடு விளைந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் நடைபெறும் இடப் பேரம், பணப் பேரம், பதவிப் பேரம் போன்ற பலவிதமான பேரங்கள் மக்களாட்சிக் கோட்பாட்டையே நகைப்புக்கு  உரியதாக்கிவிடுகிறது. உதிரிக் கட்சிகள் மறைந்து போனால் பல கூறுகளாக மக்கள் சிதறுண்டு கிடக்கும் துன்ப நிலை மறைந்து போகும் !

சென்னையில் ரெனால்ட் - நிசான் (RENAULT-NISSAN) சீருந்து வனைவு (தயாரிப்பு) நிறுவனத்தில் பணி புரியும் என் மகன் இளம்பரிதி 2016 –ஆம் ஆண்டு மே மாதம் 21 –ஆம் நாள் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வரும்போதுஆல்ட்டோசீருந்தில் (MARUTHI - ALTO CAR) வந்திருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் சீருந்தின் விசைத் திறவினை (IGNITION KEY) என்னிடம் கொடுத்து, இந்தச் சீருந்து இனி உங்களுக்குத் தான் ! வைத்துக் கொள்ளுங்கள் ! என்று அறிவித்தார் ! எனக்கு இன்ப அதிர்ச்சி !

இதற்கு முன் என்னிடம் சீருந்தும் (CAR) இருந்ததில்லை. சீருந்தை இயக்கவும்  (DRIVING) எனக்குத் தெரியாது ! திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் உந்தூர்திக் கம்மியவியல் (MECHANIC – MOTOR VEHICE) தொழிற்பிரிவு இயங்கி வந்தது. நான் விரும்பியிருந்தால் இந்த மூன்று நிலையங்களில் ஏதாவது ஒன்றில் உந்தூர்தி (MOTOR VEHICLE) இயக்கத்தினைப் பழகிக் கொண்டிருக்க முடியும்ஏனோ அப்போதெல்லாம் எனக்கு அதில் நாட்டம் இருந்ததில்லை !

சீருந்து இயக்கம் (CAR DRIVING) எனக்குத் தெரியாத நிலையில், வண்டியைக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்துவிட்டு இளம்பரிதி சென்னைக்குச் சென்றுவிட்டார். தஞ்சாவூரில் அவர் தங்கி இருந்த ஒரேயொரு நாளில் அரைமணி நேரம் மட்டும் வலவர் பயிற்சியை அளித்துவிட்டு அவர் சென்னைக்குச் சென்றுவிட்டார் !

நான் பணியில் இருக்கையில், தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள நூலகத்திலிருந்து தொழில் நுட்பப் புத்தகங்களை எடுத்து வந்து நிரம்பப் படிப்பேன்கருவிகள் மற்றும் எந்திரங்கள் பற்றியும் அவற்றின் கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டு அவற்றுக்குத் தமிழில் என்ன பெயர் சூட்டலாம் என்பது பற்றியும் ஆய்வு செய்ய இப்புத்தங்கள் எனக்கு உதவின !

இவ்வாறு நான் படித்த புத்தகங்களில் உந்தூர்திகள் (MOTOR VEHICLES) பற்றிய புத்தகங்களும் அடக்கம். புத்தகங்களைப் படித்தறிந்த வகையில் ஒரு உந்தூர்தியை எப்படி இயக்குவது என்பது பற்றி எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு இருந்தது தெரிவியல் (THEORY) அறிவே தவிர புரிவியல் (PRACTICAL) பயிற்சி கிடையாது !

சீருந்தினைப் பெற்றுக் கொண்ட மறுநாளிலிருந்து, போக்குவரத்து இல்லாத சாலைகளில் வண்டியை நானே இயக்கிப் பழகினேன். இவ்வாறு இரண்டு மூன்று நாள்கள் பழகிய பின் போக்குவரத்து உள்ள சாலைகளில் இயக்கிப் பழகத் தொடங்கினேன். பதினைந்து நாள்கள் இவ்வாறு இயக்கிப் பழகிய பிறகு முழு அளவில் தேர்ச்சி பெற்று, வெளியூர்களுக்குக் கூட வண்டியை எடுத்துக் கொண்டு செல்லும் அளவுக்குத் தேர்ச்சி பெற்று விட்டேன் !

காலப்போக்கில், 100 கி.மீ தொலைவுக்கு அப்பாலும் சென்று வரும் அளவுக்கு நான் கைதேர்ந்த வலவர் (DRIVER) ஆனேன். 72 அகவை ஆன நிலையில், நான் பிறர் உதவியின்றிச் சீருந்து இயக்கக் கற்றுக் கொண்டதையும், மனைவியை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று வருவதையும் அறிந்த நண்பர்களும் உறவினர்களும் வியப்பால் சிலையாகிப் போனார்கள் ! துணிவும், கிளர்ச்சி அடையாத மனமும், மென்மையான அணுகு முறையும் இருந்தால் எந்தப் பணியையும் நாம் நேர்த்தியுடன் செய்து முடிக்க முடியும் என்பது என் கருத்து !

நெடுந் தொலைவில் உள்ள ஊர்களுக்குச் செல்வதென்றால் இடைக்கால வலவர் (ACTING DRIVER) ஒருவரை  அமர்த்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருமுறை, நானும் என் மனைவியும் என் சீருந்தில் ஓசூரில் உள்ள என் பெண்கள் வீட்டிற்குச் செல்வதென்று முடிவு செய்தோம். இடைக்கால வலவர் ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டு ஓசூர் போய்ச் சேர்ந்தோம் !

ஓசூரில் வண்டியை விட்டுவிட்டு  வலவர் தஞ்சாவூர் திரும்பிச் சென்று விடுவார். திரும்பிச் செல்வதற்கான பேருந்துச் செலவையும் அவருக்குச் சேர்த்து அளித்து விடுவேன். ஓசூரிலிருந்து, தஞ்சை திரும்புகையில் எழினி (MOBILE)  மூலம் அவரைத் தொடர்பு கொண்டு, அழைத்துக் கொள்வேன். முன்பின் பழக்கமில்லாத வலவர்களிடம் வண்டியைக் கொடுக்க நான் விரும்புவதில்லை  !

நானும் என் மனைவியும் ஓசூர் வந்த சில நாள்களில், தஞ்சாவூரில் இருக்கும் என் இணைமான் (சகலை) திரு.இரவி அவர்களின் தாயார் திருமதி.பார்வதி அம்மையார் அவர்கள் காலமான செய்தி கிடைத்தது. 31-08-2016 அன்று அவர், யாரும் எதிர்பாரா வகையில் இயற்கை எய்தினார். நலமுடன் இருக்கையிலேயே சிலருக்கு இவ்வாறு கதுமென்று (திடீரென்று) வாழ்க்கை முடிந்து போகிறது !

எதிர்பாராத பிரிவு என்பதால், உற்றார் உறவினர்கள் இடையே ஆறாத துன்ப அலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன. இடைக்கால வலவர் ஒருவரை ஓசூரிலேயே அமர்த்திக் கொண்டு உடனடியாக, தஞ்சை செல்ல முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினேன் !

இடைக்கால  வலவர் உடனடியாக எனக்குக் கிடைக்க வில்லை. என் மருமகன் ஒரு பக்கம், அவர் நண்பர்கள் இன்னொரு பக்கம் என்று முனைப்பாக முயன்றும் கூட, வண்டியை இயக்கித் தஞ்சை செல்ல எனக்கு வலவர் கிடைக்கவில்லை. தஞ்சைக்கு எழினி (MOBILE) மூலம் தொடர்பு கொண்டு, எனது நிலையை விளக்கி, என் வரவுக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று இணைமான் (சகலை) திரு இரவியிடம் சொல்லிவிட்டு, உடனே வர முடியாமைக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன் !

பின்னர் மூன்று நாள்கள் கழித்து 04-09-2016 அன்று வேறொரு வலவரை ஏற்பாடு செய்துகொண்டு தஞ்சை சென்று திரு.இரவியிடம் என் இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறிவிட்டு தஞ்சையில் உள்ள என் இல்லம் மீண்டேன் ! வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இதுபோன்ற நெருக்கடியான நிகழ்வுகள் நடக்கவே செய்கின்றன. அவற்றை நாம் அமைதியுடன் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை !

பதினைந்து நாள் சாலையோட்டப் பயிற்சிக்குப் பின்ஆல்ட்டோவை எடுத்துக் கொண்டு, என் இல்லத்திலிருந்து 16 கி,மீ தொலைவில் உள்ள திட்டையில் உள்ள குரு பகவான் கோயிலுக்கு நான், என் மனைவி, இணைமான் (சகலை) திரு..மா.சுப்ரமணியன், அவர் மனைவி நால்வரும் சென்று வந்தோம். தஞ்சை நகருக்குள் வண்டியை இயக்கி வருகையில் நெருக்கடியான ஒரு சாலையில் பொறிச் சிவிகை ஒன்றின் மீதுஆல்ட்டோஉரசிக் கொண்டு நின்றது. பொறிச் சிவிகை வலவர் சண்டைக்கு வந்து  விட்டார். புதிதாகச் சீருந்து ஓட்டுகையில் இது கூட நிகழாவிட்டால் எப்படி ?

என்னிடம் இருந்தமாருதி - ஆல்ட்டோசீருந்து நன்னிலையில் தான் இயங்கிக் கொண்டிருந்ததுஆனால் அதைவிடசாண்ட்ரோசீருந்து எங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று இளம்பரிதிக்கு மனதில் ஒரு எண்ணம். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 –ஆம் நாள் திரு.இளம்பரிதி, “சாண்ட்ரோசீருந்துடன் தஞ்சைக்கு வந்தார். இரண்டு நாள் தங்கி விட்டு சென்னைக்குத் திரும்புகையில்சாண்ட்ரோவை எங்களிடம் தந்துவிட்டுஆல்ட்டோவை எடுத்துச் சென்றுவிட்டார் !

இந்தசாண்ட்ரோதான் எனது இயக்கத்தில் எங்களை அழைத்துகொண்டு, பல வெளியூர்களும் சென்று வரும் வாய்ப்பை வழங்கியது !

-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),04]
{18-06-2020}


----------------------------------------------------------------------------------------------

 "ஆல்ட்டோ” சீருந்து
 வருகை : 21-05-2016.

திட்டை, குரு கோயில்

வலவர் உரிமம். தகுதிக் 
காலம் 30-12-2024 வரை.

”சாண்ட்ரோ” 
வருகை: 15-09-2016.                           


No comments:

Post a Comment