name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (57) : 2016,17 நிகழ்வுகள் - ஊருக்கு உழைத்த உத்தமர் மறைவு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, April 28, 2020

காலச் சுவடுகள் (57) : 2016,17 நிகழ்வுகள் - ஊருக்கு உழைத்த உத்தமர் மறைவு !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (57)  : 2016,17 நிகழ்வுகள் !

 ஊருக்கு உழைத்த உத்தமர்  !

---------------------------------------------------------------------------------------------

சென்னையில் என் மைத்துனர் திரு.மகாதேவனுக்கு உடல்நலக் குறைவு என்றும் வடபழனியில் உள்ள விசயா மருத்து மனையில் சேர்த்திருப்பதாகவும், அவர் மகன் திரு.இராகுல் எழினி மூலம் தெரிவித்தார். அவருக்குக் சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்து விட்டன என்றும், அரத்தத் தூய்மைப் (DIALYSIS) பண்டுவம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார் !

65 –ஆம் அகவையில் அவருக்குச் சிறுநீரகம் செயலிழப்பு ! ஏனிந்த நிலை ? உடல்நலத்தை சீரழிக்கும் தீய பழக்கங்கள் எதுவும் அவரிடம் கிடையாது. பின் எப்படி இவ்வாறு நிகழ்ந்தது ? காரணம் எதுவாயினும், சிறுநீரகக் கோளாறு தொடர்பான அறிகுறிகளை அவர் தவறாக மதிப்பீடு செய்ததே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்து விட்டது !

சிறுநீரகம் அரத்தத்தில் சேரும்  யூரியா என்னும் உப்பைப் பிரித்து எடுத்து, நீரில் கரைத்து சிறுநீராக வெளியேற்றுகிறது. சிறுநீரகம் வலுவிழந்தால், யூரியா பிரிப்புப் பணியில் மென்மைப் போக்கு (SLOW FUNCTION) ஏற்படுகிறது. இதனால் அரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கிறது. யூரியா உப்பு  நச்சுத் தன்மை உடையது. நச்சுத் தன்மையுள்ள யூரியா அதிகரிப்பின் முதல் அறிகுறி புறங்கால் (UPPER PART OF THE FOOT) வீங்குதல் !

இந்த நிலையில் விழித்துக் கொண்டு மருத்துவரை அணுகினால், மருந்துகள் வாயிலாகவே சிறுநீரகச் செயலிழப்பைத் தவிர்க்க முடியும்; முற்றிலும்  குணமடையலாம். திரு.மகாதேவன் அவர்கள், தனது புறங்கால் வீக்கத்திற்குக் காரணம், அடிக்கடி நிகழும் தொலைவிடப் பேருந்துப் பயணம் என்பதாகத் கணித்தார். தவறான இந்தக் கணிப்பு தான், அவர் உடல் நிலைச் சீரழிவுக்குக் அடித்தளம் ஆகிவிட்டது !

மருத்துவமனையில் இருக்கும் அவரைப் பார்த்து வரும் பொருட்டு 2016 –ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22 –ஆம் நாள் இருப்பூர்தி (TRAIN) மூலம் நானும் என் மனைவியும் சென்னை சென்றோம். அங்கு சென்று நிலைமையை மதிப்பிட்டதில்,  எனக்கு ஒன்று தெளிவாயிற்று; அவர் தொடர்ந்து அரத்தத் தூய்மை (DIALYSIS) செய்து கொண்டே இருக்க வேண்டும்; வேறு வழியில்லை !

அவருக்கு மனத் தெம்பு அளிக்கும் வகையில் நான் உரையாடலானேன். சிறுநீரகச் செயலிழப்பிற்கு ஆளான நடுவண் அமைச்சர்கள் திருமதி சுசுமா சுவராச், திரு.அருண் சேட்லி மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் அரத்தத் தூய்மை செய்துகொண்டு வலுவுடன் இயங்கி வரவில்லையா ?  அதுபோன்று நீங்களும் இயங்கிவரலாம் பயப்படத்  தேவையில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொன்னேன். இரண்டு நாள் கழித்துத் தஞ்சை திரும்பினோம் !

உடல்நலத்தில் விழிப்புக் குறைந்தால், மனத் துன்பமும், உடல் துன்பமும் தவிர்க்க முடியாதவை என்பதற்கு திரு.மகாதேவன் அவர்களே எடுத்துக் காட்டு. மூன்று ஆண்டுகள் அரத்தத் தூய்மை செய்பு மூலமே வாழ்ந்து வந்த திரு.மகாதேவன் 29-09-2019 அன்று காலமானார். இதைப் பற்றிப் பின்னர் சொல்கிறேன் !

சென்னையிலிருந்து தஞ்சை திரும்பிய சில நாள்களில் அண்ணன் திரு.கா.இருளப்ப தேவர் (03-09-1930 – 30-09-2016) அவர்களின் மறைவுச் செய்தி கிடைத்தது. 1955 –ஆம் ஆண்டு புயலின் போது வீடிழந்து, வாழ்க்கை வசதிகளை இழந்து, உண்பதற்கு உணவு கூட இல்லாமல் தவித்த கடிநெல்வயல் மக்களை தன் தீரச் செயல்களால் பசிக் கொடுமையிலிருந்து காத்த பட்டாமணியார் திரு.கா.இருளப்ப தேவர் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30 ஆம் நாள் தனது 86 ஆம் அகவையில் காலமானார் !

ஏறத்தாழ தனது 18 –ஆம் அகவையிலேயே தந்தையைப் பறிகொடுத்த நிலையில், தாயார், ஒரு தம்பி. ஒரு தங்கை  ஆகியோர் அடங்கிய குடும்பத்திற்குத் தலைமை ஏற்றுத் துணிவுடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய அண்ணன் இருளப்ப தேவர் மறைந்து போனார் !

குடும்பப் பொறுப்பை ஏற்ற பிறகு, அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களில் ஆண்டுதோறும் நெல் பயிர் செய்கை, சொந்தமாக வீடுகட்டியமை, தங்கைக்குத் திருமணம் செய்து வைத்தமை, தனது திருமணத்தை நடத்தியமை, தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தமை ஆகிய அனைத்துப் பணிகளையும் குறைவற நிறைவேற்றிய தீரர் அண்ணன் இருளப்ப தேவர் மறைந்து போனார் !

கடிநெல்வயலின் பட்டாமணியாராக இருந்து, அகவை மூப்பினால் தளர்ந்து போயிருந்த மேனாள் பட்டாமணியார் (நி/வா) திரு நடேச தேவருக்கு மனைவி, மக்கள் என்று யாருமே இல்லாத நிலையில், அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவரது இறுதிக்காலம் வரை அன்புடன் பாதுகாத்து வந்த அண்ணன் இருளப்ப தேவர் மறைந்து போனார் !

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்என்றார் பொய்யாமொழியார். கடிநெல்வயல் மக்களைப் பொறுத்தவரை அண்ணன் இருளப்ப தேவரை வானுலகில் உறைகின்ற தெய்வமாகவே கடிநெல்வயல் மக்கள் பார்க்கிறார்கள் !

ஒரு மரம் வீழ்ந்தால், அதன் இடத்தை இட்டு நிரப்பப் புதிய விதைகள் சில முளைத்து எழுவது என்பது உலகியல் நியதி. இல்லற வாழ்வின் தொடக்கமாகிய திருமணங்களும் அதைத் தான் நமக்கு உணர்த்துகின்றன. அண்ணன் திரு.மீனாட்சி சுந்தரம்திருமதி.பார்வதி அம்மையார் இணையரின் பெயர்த்தியும், (நி/வா) திரு.குணசேகரன்திருமதி.இந்திராணி இணையரின் புதல்வியுமான செல்வி நிறைமதிதிரு.கார்த்தி இணையரின்  திருமணம் 2017 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், முதல் நாள் நடைபெற்றது. முகாமையான (முக்கியமான) ஒரு நிகழ்வின் பொருட்டு நான் ஓசூரில் இருந்ததால் இந்தத் திருமணத்திற்கு நான் செல்ல முடியவில்லை !

நான் நேரில் செல்ல இயலாவிட்டாலும் என் வாழ்த்து அலைகள் திருமண அரங்கத்தில் காற்றோடு காற்றாக நுழைந்து, எங்கெங்கும் நிறைந்து மணமக்களை  வளமோடு வாழ்க என்று வாழ்த்தியதை அந்தக் காற்றலைகள் அன்றி வேறு யாராலும் அறிய முடியாது !

ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் இணைந்து சென்றால், யார் இவர்கள், என்ன இப்படி இணைந்து செல்கிறார்கள் என்று அலர் (வீண் பழி) பேசுகின்ற உலகமிது. வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் உருவானதே திருமண நிகழ்வுகள். உற்றார் உறவினர்கள், ஊராருக்குச் சொல்லி, ஒரு ஆடவனையும் ஒரு பெண்ணையும் இல்லற வாழ்வில் இணைத்து வைத்தால் அலர் பேசும் வாய்களுக்கு அவல் கிடைக்காமற் போகுமல்லவா ?

எந்த நோக்கத்திற்காகத் திருமண நிகழ்வுகள் தோன்றினவோ, அதிலிருந்து தடம் புரண்டு, பெண்ணைப் பெற்றவர்களை ஆலைவாயில் இட்ட கரும்பாகக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது இன்றைய மனிதக் குமுகாயம். அறிவார்ந்த மக்கள் சிந்திப்பார்களாக !

சிறுநீரகச் செயலிழப்பால் துன்புற்று வந்த திரு.மகாதேவன், தன் இளைய மகன் திரு.பகத்சிங்கிற்கு விரைவாகத் திருமணத்தை நடத்திட வேண்டும் என்று விரும்பினார். திருத்துறைப் பூண்டி வட்டம் காளைக்காரன்வெளி திரு.சு.வீர பாண்டியன்திருமதி கயல்விழி இணையரின் மகள் செல்வி பூங்கோதையை மணம் முடிப்பது என்று இருவீட்டாரும் இணைந்து முடிவு செய்தனர் !

திருத்துறைப் பூண்டியிலிருந்து முத்துப் பேட்டை செல்லும் சாலையில், சங்கேந்தியிலிருந்து மேற்கு நோக்கிப் பிரிகிறது காளைக்காரன்வெளி செல்லும் சாலை. களிமண் சார்ந்த வளமான பூமியான இங்கு வேளாண்மை தான் முதன்மைத் தொழில். சங்கேந்தியிலிருந்து ஏறத்தாழ 6 கி.மீ தொலைவில் இருக்கும் இவ்வூர், போக்குவரத்திற்கு பேடுருளி (MOPED) உந்துருளி (MOTOR-BIKE) ஈருருளி (CYCLE) ஆகியவற்றையே நம்பி இருக்கிறது !

திரு.பகத்சிங்செல்வி பூங்கோதை இணையரின் திருமணம் 2017 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6 –ஆம் நாள் திருத்துறைப் பூண்டி மங்கை மகாலில் நடைபெற்றது. உடல் நலிவுற்றிருந்த திரு.மகாதேவன், திருமணத்திற்குச் சில நாள் முன்னதாவே தன் குடும்பத்தாருடன் தஞ்சைக்கு வந்து என் வீட்டில் தங்கிவிட்டார்  !

தேவைப்பட்டால், உடனடி மருத்துவ வசதிக்குத் தஞ்சாவூர் உகந்த இடம். அத்துடன் என்னிடம் சீருந்து இருந்ததால், அதையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர் மனதில் நிறைந்திருந்த எண்ணம். ஆனால், நல்வாய்ப்பாக, திருமணம் நிறைவுற்றுச் சில நாள் கழித்து அவர்கள்  சென்னைக்குச் செல்லும் வரை மருத்துவத் தேவை எழவில்லை !

என்னுடைய சீருந்திலேயே திருமணத்திற்கு அவரை அழைத்துச் சென்று, அவர் அருகிலேயே துணையாகவும் இருந்து, திரும்பவும் என் வீட்டிற்கு அவரை அழைத்து வரும் வரை என் துணை அவருக்கு மிகவும் தேவையாக இருந்தது ! உற்றுழி உதவுவது தானே மனிதப் பிறவி எடுத்தமைக்கு அழகு !

---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),05]
{19-06-2020}
--------------------------------------------------------------------------------------------
அண்ணன் 
கா.இருளப்ப தேவர் 
வாழ்ந்த வீடு.

கா.இருளப்ப தேவர்; 
மறைவு நாள்: 30-09-2016
உடல் நலிவுற்ற அத்தான்
 திரு.மகாதேவன்
திரு.பகத்சிங் - திருமதி.பூங்கோதை:
 திருமண நாள்: 06-02-2017









No comments:

Post a Comment