name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (55) : 2015 நிகழ்வுகள் - ஆரோவில் சுற்றுலா !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Thursday, April 23, 2020

காலச் சுவடுகள் (55) : 2015 நிகழ்வுகள் - ஆரோவில் சுற்றுலா !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (55) : 2015 நிகழ்வுகள் !

ஆரோவில் சுற்றுலா!

--------------------------------------------------------------------------------------------

கன்னியாகுமரிச் சுற்றுலா சென்று வந்த பிறகு, சில நாள் ஓசூரில் தங்கிவரலாம் என்று விரும்பி  நான், என் மனைவி, மகள் இளவரசி, பெயர்த்தி நேகா, பெயரன் அபிஷேக், கீர்த்திவாசன் அனைவரும் ஓசூர் வந்தோம் !

2015 –ஆம் ஆண்டு சூன் மாதம் 5 –ஆம் நாள் ஓசூரிலிருந்து சீருந்து மூலம் புதுச்சேரிக்குச் சுற்றுலாப் புறப்பட்டோம். எங்கள் குழுவில் நான் (71), என் மனைவி கலைச்செல்வி (59) முதல் மருமகன் சிவக்குமார் (44), மகள் கவிக்குயில் (36), பெயரன் கீர்த்திவாசன் (12), இரண்டாவது மருமகன் பிரபு (37), மகள் இளவரசி (32), பெயர்த்தி நேகா (09), பெயரன் அபிஷேக் (05) ஆகியோர் அடக்கம் !

சீருந்து இயக்கம் இரண்டாவது மருமகன் திரு.பிரபு. புதுச்சேரிக்கு இரவு 10-00 மணியளவில் போய்ச் சேர்ந்தோம். தங்கும் விடுதிக்கு முன்னதாகவே பதிவு செய்திருந்ததால், இன்னல் ஏதுமின்றி, விடுதிக்குச் சென்று ஓய்வெடுக்க வசதியாக இருந்தது !

காலையில் எழுந்து (06-06-2015) புதுச்சேரி வழியாகப் பாயும் தென்பெண்ணை ஆற்றில் படகு மூலம் பயணம் செய்து, அங்குள்ள கடற்கரை விண்ணுலகு” (PARADISE BEACH) என்னும் கடற்கரைக்குச் சென்றோம். குழந்தைகள் கடல் நீரில் இறங்கி விளையாடுவதற்கும், பெரியவர்கள் ஈடு கொடுத்து நீரிலாடித் திளைப்பதற்கும் உண்மையிலேயே இது கடற்கரை விண்ணுலகுதான் ! நாள் முழுதும் அந்தக் கடற்கரையின் வண்ணமயமான துய்ப்பைப் பெற்று மகிழ்ந்தோம் !

மறுநாள் (07-06-2015)  முற்பகல் 10-30 மணியலவில் ஆரோவில் பன்னாட்டு நகரம் சென்றோம். ஆரோவில் என்றால் என்ன ? அது எங்கே அமைந்துள்ளது ? என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம் !

ஆரோவில் பன்னாட்டு நகரம் புதுச்சேரிக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ளது. இந்நகரத்தின் பெரும் பகுதி  தமிழ்நாட்டுக்குள்ளும், சில பகுதிகள் புதுச்சேரி மாநிலத்திற்குள்ளும் அமைந்துள்ளன. இங்கு ஏறத்தாழ 52 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 2500 அளவுக்கு உள்ளது !

இந்நகரம் அமைதிப்பகுதி, தொழிற்கூட மண்டலம், குடியிருப்பு மண்டலம் பன்னாட்டு மண்டலம், பண்பாட்டு மண்டலம், பசுமை வளையப் பகுதி என ஆறு பகுதிகளாக உருவாக்கப்பட்டு உள்ளது. வேறுபட்ட பண்பாடுகளை உடைய வெவ்வேறு நாட்டு மக்களை ஒரே இடத்தில் சேர்ந்து வாழச் செய்து  அவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும் சோதனை முயற்சியே ஆரோவில்லின் நோக்கம் !

எங்குப் பார்த்தாலும் பசுமை நிறைந்த சோலைகள், அவற்றின் இடையே குடியிருப்புகள் எனத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. திரு.அரவிந்தர் பண்பாட்டு மையத்தின் சார்பில் 1968 –ஆம் ஆண்டு இதற்கானத் திட்டப்பணிகள் தொடங்கின. இந்நகரத்தின்  நடுப்பகுதியில் நிறுவப்பெற்றுள்ள அன்னையின் ஆலயம் (மாத்ரி மந்திர்) என்னும் பொன் வண்ண உருண்டை வடிவ அரங்கம் தான் ஆரோவில்லின் சிறப்புச் சின்னமாக விளங்குகிறது !

ஆரோவில்லைப் பார்வையிட்ட பிறகு மாலை 5-00 மணியளவில் புதுவை மாநிலத்தில் உள்ள மொரட்டாண்டி என்னும் ஊரில் உள்ள பெரிய கலைய (கலசம்)  வடிவக் கோபுரத்தையும், உள்ளே நிறுவப்பட்டுள்ள 40 அடி உயர சனியீசப் பெருமானின் திருவுருவச் சிலையையும் பார்வையிட்டு மலைத்துப் போனோம். இங்கே இன்னொரு சிறப்பு ஒன்பது கோள்களுக்கும் 20 அடி உயரத்தில் தெய்வச் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இக்கால ஆன்மிகம் இப்போதெல்லாம் பேருருவம் படைப்பதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது !

இக்கோயிலுக்கு 2 கி.மீ தொலைவில் உள்ள ஒரு ஊரில் பிரித்தியங்கராதேவி  பேருருவச் சிலை வடிவத்தில் கோபுரம் அமைந்துள்ள கோயில் ஒன்று உள்ளது !. கோயிலின் நுழைவாயில் யாளியின் வாய் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது ! இக்கோயிலைப் பார்வையிட்ட பின்பு தங்கும் விடுதிக்குத் திரும்பி விட்டோம் !

மறு நாள் (08-06-2015) காலை புறப்பட்டு, புதுச்சேரியில் புகழ் பெற்று விளங்கும் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டோம். பாரதியார் புதுவையில் தங்கியிருந்த காலத்தில் இக்கோயிலுக்கு அடிக்கடி வந்து அவர் வழிபடுவது உண்டு என்று சொல்லப்படுகிறது. மதிய உணவுக்குப் பின்பு நானும் என் மனைவி கலைச் செல்வியும் புதுவையிலிருந்து பேருந்து மூலம் தஞ்சை திரும்பினோம். மற்றவர்கள் அவர்கள் வந்த சீருந்தில் ஓசூர் திரும்பினர்.

இதே சூன் மாத்தில் ஒரு முகாமையான திருமணம். கடிநெல்வயல் திரு..மீனாட்சிசுந்தரம்திருமதி.பார்வதி அம்மையார் இணையரின் பெயரனும், சென்னை அம்பத்தூர் திரு.மீ.கோவிந்தராசுதிருமதி.இரேவதி அம்மையார் இணையரின் மகனுமான திரு. அரவிந்த் திருமணம் நடைபெற்றது !

சென்னை மதுரவாயல் திரு.அண்ணாமலைதிருமதி.அலர்மேல் மங்கை இணையரின் மகளான செல்வி. வினோதினிக்கு  திரு. அரவிந்த் மாலை சூடித் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இத்திருமணம் கேரள மாநிலம், குருவாயூர்  அருள்மிகு கிருட்டிணன் கோயிலில் 2015 –ஆம் ஆண்டு  சூம் மாதம், 12 –ஆம் நாள் நடைபெற்றது ! மிகைத் தொலைவில் உள்ள ஊரில் திருமணம் நடைபெற்றதால், நான் தஞ்சையில் இருந்த படியே மணமக்களை மனமாற வாழ்த்தி மகிழ்ந்தேன் !

கடந்த ஐந்து ஆண்டுகளாக (2020) என் முகநூற் பணிக்கு தோன்றாத் துணையாக விளங்கி வரும்ஏசர்மடிக் கணினியை என் மகன் திரு.இளம்பரிதி தஞ்சாவூர்சிக்மாகணினி நடுவத்தின் (SIGMA COMPUTER CENTER) வாங்கி எனக்குப் பரிசளித்த நன்னாள் 2015 –ஆம் ஆண்டு, சூலை மாதம், 5 –ஆம் நாள் ஆகும். என் தமிழ்ப் பணிக்கு உற்ற துணைவனாக விளங்கும்  இந்த மடிக்கணினி இல்லையேல், என் வாழ்வில் சலிப்பு ஏற்பட்டிருக்கும் !

ஒரு துன்பியல் நிகழ்வை இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டியுள்ளது ! தாய்மாமனுக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்நாளெல்லாம் வளமான வாழ்க்கையைக் காண முடியாத என் தமக்கையார் திருமதி. சிந்தாமணி அம்மையார் 2015 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 –ஆம் நாள், நாகையை அடுத்த தேவூரில் தனது 75 ஆம் அகவையில் காலமானார். இவரது மகன் திரு.அருமைநாதன், தன் மனைவி திருமதி. வள்ளி, மற்றும்  மகன்கள் திரு.மனோஜ்குமார், திரு.கார்த்திகேயன் ஆகியோருடன்  தேவூரில் வாழ்ந்து வருகிறார் !

மகள் திருமதி. உமாலட்சுமி தன் கணவர் திரு.இராசரெத்தினம் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வழ்ந்து வருகிறார் !  தமக்கையார் மறைந்த போது நான் தஞ்சாவூரில் வாழ்ந்து வந்தேன். செய்தி கேள்விப்பட்டதும் நானும் என் மனைவியும் வாடகைச் சீருந்து மூலம் தேவூர் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டோம். சரியாகத் திட்டமிடாத வாழ்க்கை சீர்குலைந்து போகும் என்பதை மாமா திரு.பண்டரிநாதன்திருமதி.சிந்தாமணி அம்மையாரின் வாழ்க்கை எனக்கு உணர்த்திற்று !

என் மகள் திருமதி கவிக்குயில், தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளராகப் (TECHNICAL ASSISTANT) பணி புரிந்து வருவது காலச் சுவடுகளைத் தொடர்ந்து படித்து வருவோருக்குத் தெரிந்த செய்தி தான் ! அவர் ஏறத்தாழ  ஆறு  ஆண்டுகளுக்குப் பிறகு 2015 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இளமின் பொறியாளராக (JUNIOR ENGINEER)ப் பதவி உயர்வு பெற்று  ஓசூரை அடுத்த கெம்பட்டி துணை மின் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் !

கெம்பட்டியில் பணியேற்பதற்கு ஒரு ஆண்டு முன்னதாகவே பகுதி நேரப் படிப்பில் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்குக் கவிக்குயில் திட்டமிட்டார். அதன்படி 2014 ஆம் ஆண்டு சூன் மாதம், பர்கூர் பொறியியல் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து  3-1/2 ஆண்டுகள் பயின்று  2017 திசம்பர் மாதம் படிப்பை நிறைவு செய்து, பொறியியல் வாலைப் (B.E.) பட்டம் பெற்றார் !

இந்த 3-1/2 ஆண்டுக் காலமும் அன்றாடம் 80 கி.மீ. தொலைவில் உள்ள பர்கூர் பொறியியல் கல்லூரிக்குப் பேருந்தில் சென்று வர நேர்ந்தது ! ஒவ்வொரு நாளும் போக வர 160 கி.மீ பேருந்தில் சென்று வருவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத மிகவும் கடினமான செயல். அதுவும், ஓசூரிலிருந்து கிருட்டிணகிரி, கிருட்டிணகிரியிலிருந்து பர்கூர் என இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். கடினமான மேல் தோலை நீக்கினால் தானே இனிமையான பலாச் சுளையைத் தின்ன முடிகிறது !
                       
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),03]
{17-06-2020}
-------------------------------------------------------------------------------------------
புதுச்சேரி,
 சுண்ணாம்பு ஆற்றில்
 படகில் செல்கையில் !

ஆரோவில்  தியான  அரங்கம்

மொரட்டாண்டி  கோயில் கோபுரம்

 மொரட்டாண்டி சனியீசன் 


பிரித்தியங்கரா தேவி கோயில் கோபுரம்

தமக்கையார்.
ப.சிந்தாமணி அம்மையார், 
மறைவு நாள்: 08-09-2015.















No comments:

Post a Comment