தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் : 2008, 09, 10 நிகழ்வுகள் !
(சுவடு.46) கவிக்குயில் பணியேற்பு!
கடிநெல்வயல் அண்ணன் திரு.அ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு
அகவை 80 நிறைவு அடைந்ததை முன்னிட்டு 2008 –ஆம்
ஆண்டு மே மாதம் 5 –ஆம் நாள் பஞ்சநதிக்குளம் அங்காளபரமேசுவரி திருக்கோயிலில் எண்பதாம் அகவை திருமுழுக்கு (சதாபிஷேகம்) சிறப்பு நிகழ்ச்சி
நடைபெற்றது !
உற்றார் உறவினர்கள், ஊரார் எல்லோருமாகக் குழுமியிருந்து,
நிகழ்ச்சிகளுக்குப் பெருமை சேர்த்ததுடன், ஆயிரம் பிறை கண்ட அண்ணன் – அண்ணியார் இணையரை
வணங்கி வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டனர். தஞ்சாவூரிலிருந்து நானும் என் மனைவியும் பஞ்சநதிக் குளம் சென்று நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டு, திருமுழுக்கு இணையரிடம் நல்வாழ்த்துகளையும் பெற்று உளம் மகிழ்ந்தோம் !
என் மகன் திரு.இளம்பரிதி சில காரணங்களை முன்னிட்டு ஹுண்டாய் சீருந்துத் தொழிற் சாலையில் இருந்து பணி விலகுவது என்று முடிவு எடுத்திருந்தார். இதைப் பற்றி எங்களிடம் அவர் கலந்து பேசவில்லை ! அவர் எடுத்திருந்த முடிவின்படி 2008 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 –ஆம் நாள் ஹுண்டாய்க்கு இறுதியாக வணக்கம் சொல்லிவிட்டு விலகிவிட்டார் !
ஹுண்டாயில் அப்பொழுது அவர் பெற்று வந்த மாத ஊதியம் எவ்வளவு என்பது நினைவில்லை. ஆனால் அப்பொழுது ஒரு பவுனின் விலை உருபா 9200 என்பது
மட்டும் நினைவிருக்கிறது !
பின்பு, நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு சென்னை ஒரகடத்தில் உள்ள நிஸான் சீருந்துத்
தயாரிப்புத் தொழிற்சாலையில் உதவி மேலாளராக 2009 -ஆம் ஆண்டு சனவரி
மாதம் 5 –ஆம் நாள் பணியில் சேர்ந்தார் !
அனைத்திந்திய
அரசியலில் ஒரு முகாமையான நிகழ்வாக நாடாளு மன்றத்துக்கான தேர்தல்
2009 –ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தத்
தேர்தலில் தி.மு.க.வும் இந்தியப் பேராயக் கட்சியும். வி.சி.க.வும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன.
எதிரணியில் அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க.,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப்
பொதுவுடைமைக் கட்சி ஆகியவை கூட்டணி வைத்துக் கொண்டன. பா.ம.க., பல உதிரிக் கட்சிகளுடன் கூட்டணி
சேர்ந்து போட்டி இட்டது !
தேர்தல்
முடிவுகள் வெளியாகின. தி.மு.க 18 இடங்களையும், இந்தியப் பேராயக்
கட்சி 8 இடங்களையும், வி.சி.க 1 இடத்தையும் வென்றன.
அ.இ.அ.தி.மு.க. 9 இடங்களிலும், ம.தி.மு.க 1 இடத்திலும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 1 இடத்திலும், இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 1 இடத்திலும்
வென்றிருந்தன. பா.ம.க.வுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை !
திரு.மன்மோகன் சிங் மீண்டும் இந்தியத் தலைமை அமைச்சர் ஆனார். தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ப.சிதம்பரம்,
திரு. மு.க.அழகிரி, திரு. தயாநிதி மாறன்,
திரு. ஆ,இராசா, திரு. ஜி.கே.வாசன், திரு. எசு.எசு.பழனிமாணிக்கம், திரு .டி.நெப்போலியன், திரு .எசு.செகத்ரட்சகன் ஆகியோர் அமைச்சரவையில் பங்கேற்றனர்
!
தமிழ்நாடு
மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு
(TECHNICAL ASSISTANT) பணிவேட்பாளர்கள் இடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று
2009 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியாகி இருந்தது. பழகுநர்
பயிற்சி பெறாதவர், மின்வாரியத்தில் பழகுநர் பயிற்சி முடித்தவர்,
ஆகிய இருவகையினர் இடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன
!
திருமதி.கவிக்குயில் இருவகைக்கும் தனித் தனியாக இரண்டு விண்ணப்பங்கள் அனுப்பி இருந்தார்.
இதில் முதல் விண்ணப்பம் தொடர்பாக 2009 –ஆம் ஆண்டு
சூலை மாதம் 6 -ஆம் நாள் காஞ்சிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு
நேர்காணலுக்கு வருமாறு அழைப்பாணை வந்திருந்தது !
இரண்டாவது
வகை விண்ணப்பம் தொடர்பாக 2009 ஆம் ஆண்டு, சூலை மாதம் 8 –ஆம் நாள் சேலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு
நேர்காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது நான் தஞ்சாவூரில்
வாழ்ந்து வந்தேன் !
திரு.சிவகுமாரிடமிருந்து வந்த அழைப்பிற்கிணங்க நான் தஞ்சாவூரிலிருந்து ஓசூர் வந்து
திருமதி கவிக்குயிலை முதலில் காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்று நேர்காணலில் கலந்து
கொள்ளச் செய்தேன். அடுத்து இரு நாளில் சேலத்திற்கும் நேர்காணலுக்கு
அழைத்துச் சென்றேன் !
நேர்காணல்
நிறைவடைந்து 2 மாத கால அளவில், தமிழ்நாடு
மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம்
1100 பேர் தேர்வு செய்யப்பட்டதில் திருமதி கவிக்குயிலின் பெயர்
345 –ஆவதாக இடம் பெற்றிருந்தது !
தேர்வுப்
பட்டியலைப் பார்த்ததும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! அடுத்த சில நாள்களில் தருமபுரி மின் பகிர்மான வட்டத்திற்குத் திருமதி கவிக்குயிலின்
பெயரை ஒதுக்கீடு செய்து ஆணை வெளியாகியது. பிறகு ஓசூர் தேர்ப்பேட்டை
மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியமர்த்தம் செய்து ஆணையும் வழங்கப்பெற்றது
!
2009
–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 –ஆம் நாள் செயற்பொறியாளர்
அலுவலகத்தில் திருமதி கவிக்குயில் தனது பணியை ஏற்றுக் கொண்டார். 1997 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தனது பட்டயப் படிப்பை நிறைவு செய்த கவிக்குயில்
12 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு மின் வாரியத்தில் நிலையான பணியில் அமர்ந்தார்
!
இதற்கிடையில்
திரு.சிவக்குமாரின் சிற்றன்னையான திருமதி இராணியின் கணவர் திரு. அன்பழகன் 2010 –ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 –ஆம் நாள் காலமானார். அவருக்குக் கலையரசன் (எ) மணிகண்டன், மஞ்சு (எ) மஞ்சுளா ஆகிய இரு மகார் (மக்கள்)
இருந்தனர். இப்போது இருவருக்கும் திருமணமாகி குழந்தைச்
செல்வங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். திரு.அன்பழகன் காலமானபோது அவருக்கு அகவை 50 அளவுக்கு இருக்கலாம்.
நல்ல உடல் நலத்துடன் இருந்த அவர் இப்படி கதுமென (திடீரென)க் காலமாவார் என யாரும் எதிர்பர்க்க வில்லை
!
2010
–ஆம் ஆண்டில் வேறு சில முகாமையான நிகழ்வுகள் நடந்தேறின. வேதாரணியத்தை அடுத்த கருப்பம்புலத்தில் என் கடைசித் தங்கை தன் கணவர் திரு.மு.சிங்காரவேலுடன் வாழ்ந்து வந்தார். அவர்களது மகள் திருமதி.கயல்விழிக்கு முன்பே திருமணமாகி
விட்டது. மகன் திரு. மணிமாறன் சவூதி அரேபியாவில்
குளிர்ப் பதனம் மற்றும் காற்றுப் பதனப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார் !
திரு.மணிமாறனின் திருமணம் 2010 ஆம் ஆண்டு மே மாதம்
23 –ஆம் நாள் நடைபெற்றது. மணமகள் கருப்பம்புலத்தைச்
சேர்ந்தவர். உடற் பயிற்சி ஆசிரியைப் பயிற்சி பெற்றவர்.
அமுதா என்று பெயர். கருப்பம்புலம் திரு.பன்னீர்ச்செல்வத் தேவர் - திருமதி சரோஜா இணையரின் அன்பு மகள். திரு.மணிமாறன் - அமுதா திருமணம்
கருப்பம்புலம் திருமண மண்டகத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு
நானும் என் மனைவியும் தஞ்சாவூரிலிருந்து சென்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்
!
என் இளைய
மகள் திருமதி இளவரசிக்கு 2010 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல்
நாள் ஓசூரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் ஆண் குழந்தை பிறந்தது. தஞ்சையிலிருந்து நானும் என் மனைவியும் ஓசூர் சென்று இளவரசிக்கு உதவியாக இருந்துவிட்டுச்
சிலநாள் கழித்துத் தஞ்சை திரும்பினோம். இக்குழந்தைக்கு என் மனைவி
“அபிஷேக்” என்று பெயர் சூட்டினார். இப்போது (2020) பத்து அகவை ஆகும் அபிஷேக் எதிர்காலத்தில்
மிகுந்த அறிவாளியாகத் திகழ்வான் என்பதற்கான அறிகுறிகள் எங்களுக்குத் துல்லியமாக இப்போதே
தெரிகின்றன ! எங்கள்
கணிப்பு உண்மையானால் அதைவிட மகிழ்ச்சி எங்களுக்கு வேறு ஏது ?
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),26]
{08-06-2020}
-------------------------------------------------------------------------------------------
திரு.அ.மீனாட்சி சுந்தரம் -
திருமதி.மீ.பார்வதி அம்மையார்
80 -ஆம் திருமுழுக்கு விழா
அழைப்பிதழ் .
திரு.அ.மீனாட்சிசுந்தரம் -
திருமதி பார்வதி அம்மையார் ,
80 ஆம் அகவைத்
திருமுழுக்கு !
திரு.அ.மீனாட்சிசுந்தரம் -
திருமதி பார்வதி அம்மையார் ,
80 ஆம் அகவைத் திருமுழுக்கு
நாளில் எடுத்த படம் !
திரு.வே.இளம்பரிதி B.E.
நிசானில் பணியேற்பு: 05-01-2009.
கவிக்குயில் B.E.
மின்வாரியத்தில் பணியேற்பு;
நாள்: 03-09-2009
அபிஷேக்.
பிறந்த நாள்: 01-08-2010
No comments:
Post a Comment