name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (51) : 2014,15 நிகழ்வுகள் - கோதாவரி !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Friday, April 17, 2020

காலச் சுவடுகள் (51) : 2014,15 நிகழ்வுகள் - கோதாவரி !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 2014,15 நிகழ்வுகள் !

(சுவடு.51) கோதாவரி !

-------------------------------------------------------------------------------------------

கோடிக்கரைக் குழகர் கோயிலில் இருந்து, சீருந்தினைக் கருப்பம்புலம் திரு.சிவானந்தம் வீட்டிற்கு விடச் சொன்னேன். கருப்பம்புலத்தில் உள்ள திருமண மண்டகத்தில்  திரு.திலீபன் நடராஜ்செல்வி பவித்திரா திருமணம் தொடர்பாக நண்பகல் விருந்து நடந்து கொண்டிருந்தது. இங்கு நண்பகல் உணவை அருந்திய பின் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு தஞ்சாவூர் திரும்பினோம் !

இந்தத் திருமணத்திற்குச் சென்று வந்த பின்னர், 15 நாள் அளவில் சென்னையிலிருந்து துன்பியல் செய்தி ஒன்று வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியது. கையில் இருந்த என் எழினி (MOBILE) சிணுங்கியது. எடுத்துச் செவிகளில் அணைத்தேன் !

சென்னையிலிருந்து பேசியவர் சொன்னார், “நடத்துநர் இராசேந்திரன் இன்று (23-06-2014) மறைந்து விட்டார். அவர் மகன் அசோக் அமெரிக்காவிலிருந்து வந்த பின்பு தான் இறுதிச் சடங்குகள் நடக்கும். எப்பொழுது நடைபெறும் என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல இயலாது.” !

மறைந்த திரு இராசேந்திரன், கடிநெல்வயல் அண்ணன் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களின் மூன்றாவது பெண் செல்வி.செந்தமிழ்ச் செல்வியை மணந்தவர். திருமதி அருணா குகன், திரு அசோக் ஆகியோரின் தந்தை. என் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தவர். சென்னையில் பல்லவன் போக்கு வரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியில் சேர்ந்து, பயணச் சீட்டு ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் !

அவரது மறைவு எங்கள் குடும்பத்தில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. மகன் திரு. அசோக் அமெரிக்காவிலிருந்து எப்போது வந்து சேர்வார் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. மறைந்த திரு.இராசேந்திரன் உடலை அவரது மகன் வரும் வரைப் பாதுகாத்து வைக்கும் பொருட்டு, போரூர் இராமச்சந்திரா மருத்துவ மனையில் குளிர்ப்பதன அறையில் வைத்திருப்பதாகவும் செய்தி அறிந்தேன் !

எனவே நான், உடனடியாகச் சென்னை செல்ல இயலவில்லை.  எனினும் சில மாதங்கள் இடைவெளியில் அவர்கள் வீட்டிற்குச் சென்று என் இரங்கலைத் தெரிவித்து வந்தேன் !

மழைக்காலத்தில் இடி இடித்தால் அடுத்தடுத்து முழங்குவது போல், துன்பியல் நிகழ்வுகளும் அமையும் போலும் ! கருப்பம்புலம் திரு.சிவானந்தம் அவர்கள் இன்று மறைந்து விட்டார் என்று வேதாரணியத்திலிருந்து திரு.காசிநாதன் எழினி மூலம் எனக்குச் செய்தி தெரிவித்தார் !

நம்ப முடியவில்லை ! இறப்பு வந்து அணைத்துக் கொள்ளும் வயதா அவருக்கு ? ”செய்தி உண்மைதானா ? என்ன ஆயிற்று அவருக்கு ?” திரு காசிநாதனிடம் திரும்பக் கேட்டேன் ! “ஆமாம் சிற்றப்பா !“ ”ஏன் ? எப்படி நிகழ்ந்தது ?” “ஏதோ மனத் துன்பத்தில் இருந்திருக்கிறார் ! என்ன ஏது என்று யாரிடமும் சொல்ல வில்லை ! இவ்வுலகிலிருந்து விடுதலை பெற்றுச் சென்றுவிட்டார் !”

ஆம் ! என்னிடம் மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்த திரு சிவானந்தம் 2014 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 03 –ஆம் நாள் கால வெள்ளத்தில் கரைந்து போனார் ! தன் மகன் திலீபன் நடராசுக்கு திருமணம் செய்வித்த மூன்றே மாதங்களில் மறைந்து போனார் ! தஞ்சாவூரில் இருந்து நானும் என் மனைவியும் கருப்பம்புலம் சென்று கண்களில் வழியும் நீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினோம் !

குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே, உடம்பொடு உயிரிடை நட்புஆம் ! தான் வாழ்ந்து வந்த சுற்றம் என்னும் கூட்டை விட்டு விட்டு பறவை பறந்து சென்று விட்டது ! இறப்புக்குத் தான் எத்துணை வலிமை !

முகநூலில் நான் முனைப்பாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு முழுமுதற் காரணம் என் மகன் இளம்பரிதி தான். 2015 –ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 –ஆம் நாள், அவர் தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது, என்னைக் கணினி வணிக நடுவமான (COMPUTER DEALER) “சிக்மாவுக்கு  அழைத்துச் சென்று உருபா 23,000 விலையில் ஏசர்மடிக் கணினி ஒன்றை வாங்கித் தந்து அதை இயக்கும் வழிமுறைகள் பற்றியும் சொல்லித் தந்தார் !

அஃதன்றி முகநூல் கணக்குத் தொடங்கி அதில் எழுதி வாருங்கள், பலரது அறிமுகமும் கிடைக்கும், பொழுது போக்காகவும் இருக்கும் என்று கூறிவிட்டுச் சென்னைக்குச் சென்றுவிட்டார். என் இணைமான் (சகலை) திரு,வை.இரவி அவர்கள் துணையுடன் முகநூற் கணக்குத் தொடங்கினேன் !

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பொழுது போகாமல் தவித்த எனக்கு நல்வழி காட்டியவர் என் மகன் இளம்பரிதி ! கடந்த ஐந்தாண்டுகளாகதமிழ்ப் பணி மன்றம்போன்ற முகநூற் குழுமங்களைத் தொடங்கித் தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்குக் கால்கோள் இட்டவர் இளம்பரிதி !

இளம்பரிதி தஞ்சாவூருக்கு வந்து சென்ற பிறகு. மராட்டிய மாநிலத்தில் உள்ள சீரடிக்குச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு வந்தது. திருத்துறைப் பூண்டியிலிருந்து என் இணைமான் (சகலை) திரு..மா.சுப்ரமணியனும், அவர் மனைவி திருமதி.காஞ்சனமாலாவும் சீரடி செல்லவிருந்த ஒரு சுற்றுலாக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். எங்களையும் சுற்றுலாக் குழுவில் சேர்ந்து கொள்ளுமாறு  அழைத்தனர் !

இளம்பரிதியிடம் செய்தியைத் தெரிவித்தேன். இருவரும் சென்று வாருங்கள் என்று சொல்லி, பயணச் செலவுக்காக உருபா பத்தாயிரமும் அனுப்பி வைத்தார். சீரடிச் சுற்றுலா 2015 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 –ஆம் நாள் தொடங்கியது. அன்று இரவு சுற்றுலாக் குழுவைச் சேர்ந்த 84 பேர், திருத்துறைப் பூண்டியிலிருந்து பேருந்து மூலம் புறப்பட்டுத் திருவாரூர் சென்றோம் !

திருவாரூரிலிருந்து அன்று இரவே  முன்பதிவு செய்த இருப்பூர்தி மூலம் சென்னை எழும்பூருக்குச் சென்றோம். அங்கிருந்து  26-02-2015 அன்று காலை 6-50 மணிக்கு, பாயல் (BERTH) முன்பதிவு செய்த இருப்பூர்தி மூலம் புறப்பட்டு, அரக்கோணம், இரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், இரெய்ச்சூர், குல்பர்க்கா, சோலாப்பூர், புனே வழியாக மும்பையில் உள்ள கல்யாண் நிலையத்தை 22 மணி நேரத்தில் சென்றடைந்தோம் !

கல்யாண் நிலையத்திற்கு 27-02-2015 அன்று காலை 5-00 மணிக்கு வந்து சேர்ந்த நாங்கள், அங்கிருந்து இன்னொரு இருப்பூர்தி மூலம் புறப்பட்டு நாசிக் சென்றோம்.. “நாசிக்என்ற பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே ! நம் நாட்டுக்குத் தேவையான பணத் தாள்களை அச்சடிக்கும் அரசு அச்சகம் இங்கு தான் இருக்கிறது !

நேரமின்மையால், நாசிக்கில் எந்த இடத்தையும் நாங்கள் சுற்றிப் பார்க்கவில்லை. இரண்டு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொண்டு, நாசிக்கிலிருந்து கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள பஞ்சவடி  என்னும் இடத்தை பார்வையிட்டோம். ஐந்து இடங்களில் பாதம் பதிக்கப்பட்ட சிறு கோயில்கள் உள்ளதால் இந்த இடத்திற்குப் ”பஞ்சவடி” என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இராமாயணக் கதையுடன்  இந்த இடத்தைத் தொடர்பு படுத்திச் சில நிகழ்வுகளைக் கூறுகின்றனர் !

பின்பு இங்கிருந்து தனிப் பேருந்து மூலம் திரியம்பகேசுவரர் கோயிலுக்குச் சென்றோம். கோயில் கோபுரம், கருவறை அனைத்துமே கடப்பை கற்கள் போன்ற கருப்பு நிறக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டு இருக்கின்றன. கோயில் கோபுரமும் அதில் இடம் பெற்றுள்ள சிற்பங்களும் நேர்த்தியாகச் செதுக்கப்பெற்று கண்ணாடி போன்று வழு வழுப்பாகக் காணப்படுகின்றன .வண்ணப் பூச்சு எதுவுமில்லை !

கோயிலுக்கு அரைக் கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குளம் இருக்கிறது.  இந்தக் குளம் தான் கோதாவரி ஆற்றின் தோற்றுவாய் என்று கூறுகின்றனர். குளத்தின் நாற்புறமும் படிக்கட்டுகளும் மண்டகமும்  இருக்கின்றன. மண்டகத்தின் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் மிகவும் அழகாகக் கலை நுட்பத்துடன் செதுக்கப் பெற்றுள்ளன !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),31]
{13-06-2020}
-------------------------------------------------------------------------------------------


கோதாவரி ஆறு
 தொடங்குவதாக நம்பப்படும் 
பஞ்சவடி !

திரியம்பகேசுவரர் கோயில்
 திருக்குளம்

திரியம்பகேசுவரர் கோயில்
 திருக்குளம்

குளக்கரை மண்டகத்தில்
 காணப்படும் 
சிற்பக் கலை மிக்க தூண்கள்.

திரு.ஆ.இராசேந்திரன்:
 மறைவு நாள்: 23-06-2014

திரு.ந.சிவானந்தம்:
மறைவு நாள்: 03-09-2014.

இளம்பரிதி 
எனக்கு வாங்கித் தந்த 
மடிக் கணினி












No comments:

Post a Comment