name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (52) : 2015 நிகழ்வுகள் - சீரடிச் சுற்றுலா !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Friday, April 17, 2020

காலச் சுவடுகள் (52) : 2015 நிகழ்வுகள் - சீரடிச் சுற்றுலா !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு. வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 2015 நிகழ்வுகள் !

                           (சுவடு.52) சீரடிச் சுற்றுலா !

-------------------------------------------------------------------------------------------

திரியம்பகேசுவரர் கோயிலைப் பார்வையிட்ட பின் நாங்கள் சென்ற அதே தனிப் பேருந்தில் ஏறிச் சீரடியை நோக்கிப் பயணமானோம். அங்கு செல்வதற்கு இரவு மணி 10-00 ஆகிவிட்டது. சாயிபாபா கோயில் கட்டுப்பாட்டில் சீரடியில் இயங்கி வரும் பயணிகள் இலவயத் தங்கும் விடுதியில் அனைவரும் தங்கி ஓய்வெடுத்தோம் !

வெளியூர்ப் பயணிகள் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ள இந்த விடுதி,  பெரிய பெரிய அறைகளைக் கொண்டவை. ஒவ்வொரு அறையிலும் நான்கு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. தேவையான, மின்விசிறி வதிகளும், குளியலறை, கழிவறை வசதிகளுடன், ஏற்படுத்தப் பெற்று, உடு விடுதியைப் (STAR HOTEL) போன்று தூய்மையாகப் பேணப்படுகின்றன !

2015 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 -ஆம் நாள், விடியற்காலை 2-30 மணிக்கு விழித்து, வெந்நீரில் குளித்து விட்டு, அணியமாகி, பொறிச் சிவிகை (AUTO-RIKSHA) மூலம் சாயிபாபா கோயிலுக்குச் சென்றோம் ! கோயில் என்றால் நம் ஊர்க் கோயில்கள் போன்றதன்று. பல குறுக்கங்கள் (ஏக்கர்) அளவுக்குப் பரந்து விரிந்த தூய்மையான கட்டடத் தொகுதி தான் சாய்பாபா கோயில் ! கல்லூரி வகுப்பறைகள் போன்று, இன்னும் பெரிய அளவில் பல கூடங்கள் (HALLS) தரைத் தளத்திலும் மேல் தளத்திலும் இருக்கின்றன. தரைத் தளத்தில் சாயி பாபாவின் வெண்பளிங்குச் சிலை அமர்ந்த நிலையில் நிறுவப்பட்டிருக்கிறது !

பிறப்பால் ஒரு இசுலாமியரான பாபா, அனைத்து மத மக்களாலும் ஒரு அருளாளராகப் போற்றப்படுகிறார். வருகை தரும் பக்தர்களில் 90% மக்கள் இந்து மதத்தினரே ! கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வரிசையாகச் சென்று ஒரு கூடத்தில் அமர்கிறார்கள். இதற்கு அக்கூடத்தின் பொறுப்பு அலுவலர் உதவுகிறார்.  ஒரு கூடம் நிரம்பிய பிறகு அடுத்த கூடத்தில் அமர வைக்கப்படுகிறர்கள். இதுபோல் நான்கு பெரிய கூடங்கள் இருக்கின்றன !

விடியற்காலையில், சாயிபாபாவின் பளிங்குச் சிலை ஈரத் துணியால் தூய்மை செய்யப்பட்டு, புத்தாடை அணிவிக்கப்படுகிறது. திருமுழுக்கு (அபிஷேகம்)  போன்ற சடங்குகள் இல்லை. ஒரேயொரு மலர் மாலை அணிவிக்கப்படுகிறது. பின்பு மிகக் குறைவாகச் சாம்பிராணிப் புகை காட்டப்படுகிறது. அவ்வளவு தான் !
.

கூடத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் பக்தர்கள் வரிசையாக அழைத்து வரப் பெற்று பாபா சிலை முன் நின்று, ஓரிரு நிமிடங்கள் வழிபட நேரம் அளிக்கப்படுகிறது ! வெளியில் வருகையில் வழிபாட்டுத் திருவமுதாகப் (பிரசாதம்)  பொட்டலம் இடப்பெற்ற (PACKAGED) கற்கண்டும், பொரியும் வழங்கப்படுகிறது. வெளியில் வருபவர்கள் ஓய்வெடுக்கவும் மண்டகங்கள் இருக்கின்றன. அன்றாடம் பல்லாயிரக் கணக்கில் மக்கள் வந்து செல்லும் சாயிபாபா கோயிலிலும், அதன் வளாகத்திலும், சுற்று வட்டாரங்களிலும் தூய்மை மிகச் சிறப்பாகப் பேணப்படுகிறது !

சீரடிக் கோயிலைப் பார்வையிட்ட பிறகு அடுத்து, தனிப் பேருந்திலேயே கிருட்டிணேசுவரம் என்னும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். இங்குள்ள கோயிலில் ஒளிமிகுந்த திருவிலங்கங்கள் (ஜோதிர் லிங்கம்)  12  இருப்பதாகச் சொல்லப்படுகிறது !

இந்தக் கோயிலைப் பார்த்த பிறகு பேருந்தில் புறப்பட்டு ஔரங்காபாத் வழியாக எல்லோரா சென்றோம். நாங்கள் அங்கு செல்கையில் பிற்பகல் மணி 2-45 இருக்கும். மதுரைப் பக்கத்தில் ஆனை மலையைப் பார்த்திருப்பீர்கள். யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் இம்மலை இருக்கும்.  இதைப் போன்ற தோற்றத்தில் இன்னும் பலமடங்கு நீளத்தில் எல்லோரா மலை அமைந்து இருக்கிறது !

கி.மு.3 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் 34 குகைக் கோயில்கள் இம்மலையடிவாரத்தில் இருக்கின்றன. அடிவாரத்தில் மலையைக் குடைந்து இந்தக் குகைக் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இந்தக் குகையில் புத்தர், மகாவீர்ர், சிவன், காளி, பிள்ளையார், ஆலமர் செல்வன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இவையன்றி வேலைப்பாடுகள் அமைந்த பெரிய பெரிய தூண்களும், சில குகைகளில் மேல் தளங்களும் காணப்படுகின்றன. ஒரு மலையையே  34  இடங்களில் குடைந்து குகைக் கோயில்களை உருவாக்கியுள்ள அக்காலத்திய மக்களின் திறமை நம்மை வியக்க வைக்கிறது !

பெயர் தான் குகைக் கோயில்களே தவிர அங்கு வழிபாடு எதுவும் நடத்தப்படுவதில்லை. தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் அவை பேணப்படுகின்றன. எல்லோராவைப் பார்வையிட்ட பிறகு அங்கிருந்து பேருந்திலேயே புறப்பட்டு ஔரங்காபாத் இருப்பூர்தி நிலையத்தைச் சென்றடைந்தோம். அங்கிருந்து இருப்பூர்தி மூலம் பர்பானி என்னும் நிலையத்தை அடைந்து, அங்குள்ள ஒரு கூடத்தில் துயின்றோம் !

மறு நாள் (1-03-2015) காலை வேறொரு விரைவு இருப்பூர்தி மூலம் புறப்பட்டு 12 மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணம் செய்து இரவு 07-30 மணியளவில் மந்திராலயம் சாலை (MANTHIRALAYAM ROAD) இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். இருப்பூர்தி நிலையத்திலிருந்து இராகவேந்திரர் மந்திராலயத்திற்கு 15 கி.மீ தொலைவு இருக்கிறது. பொறிச்சிவிகை (AUTO-RIKSHA) மூலம் அங்கு போய்ச் சேர்ந்தோம். ஆறு பேர் அமரக் கூடிய வகையிலேயே இந்தப் பொறிச் சிவிகைகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. 6 பயணிகளை ஏற்றிக் கொண்டு 15 கி.மீ பயணம் செய்யக் கட்டணம் உருபா 150 தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?

நம்புங்கள் ! தமிழ்நாட்டு நிலவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்ப முடியாது தான் ! எனினும் உண்மை இது தான் என்னும் போது நம்பாமல் இருக்கமுடியுமா என்ன ?

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இருக்கிறது இராகவேந்திரர் மந்திராலயம் ! மாநிலப் பிரிவினைக்குப் பிறகு மந்திராலயம் தெலங்கானா மாநிலத்துக்கு உரியதாக அமைந்திருக்கலாம். தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள புவனகிரியைச் சேர்ந்த இராகவேந்திரர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். மனிதனாகப் பிறந்து மகானாக உயர்ந்தவர் இராகவேந்திரர் என்று சொல்லப்படுகிறது. அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து உயிர் துறந்த இடம் மந்திராலயம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது !

இராகவேந்திரர் மந்திராலயமும், அதன் திருச்சுற்றும் (பிரகாரம்) முன்புற அணுகுச் சாலையும் எத்துணைத் தூய்மையாகவும் அழகாகவும் பேணப்படுகிறது ! அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத எதுவும் அழகாகத்தான் பேணப்படும் போலும் ! மந்திராலயத்தைப் பார்வையிட்ட பின், அருகில் ஓடும் துங்கபத்திரை ஆற்றில் இறங்கி நீராடி மகிழ்ந்தோம் !

மந்திராலயம் துங்கபத்திரை ஆற்றின்  இக்கரையில் உள்ளது; ஆற்றின் அக்கரையில் கர்நாடக மாநிலம் தொடங்கிவிடுகிறது. 02—3-2015 திங்களன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பஞ்சமுகி என்ற இடத்திற்கு நாங்கள் நால்வர் மட்டும் பொறிச்சிவிகையில் (AUTO-RIKSKA) சென்றோம். இங்கு ஒரு குன்றின் மீது ஐந்து முகமுடைய ஆஞ்சநேயர் (பஞ்சமுகி) சிலை நிறுவப்பெற்றுள்ள கோயில் இருக்கிறது. குன்றின் மீது பெரிய வடிவிலான பாறைகள் சில காணப்படுகின்றன. அவை எந்த நேரமும் உருண்டு கீழே விழுந்து விடலாம் என்று நாம் அச்சப்படும் வகையில் தொற்றிக் கொண்டு நிற்கின்றன !

துங்கபத்திரை ஆற்றின் மீது நிறுவப்பெற்றுள்ள இரும்புச் சட்டங்களால் ஆன பாலம், மனதைக் கவரும் தோற்றம் உடையதாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிறுவப் பெற்ற பாலம் போலும் ! அதன் வீறே (கம்பீரம்) மனதைக் கொள்ளை கொள்கிறது !

மந்திராலயத்தைப் பார்வையிட்ட பின், இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து, இரவு   9 – 30 மணி வண்டி மூலம் திருப்பதி நோக்கிப் பயணமானோம் ! ஒன்பது மணி நேரப் பயணத்திற்கு பிறகு, எங்கள் குழு திருப்பதி நிலையத்தைக் காலை 6-40 மணியளவில் வந்தடைந்தது ! திருப்பதி இருப்பூர்தி நிலையத்திலேயே ஓய்வெடுத்து விட்டு, முற்பகல் 10-40 மணி வண்டியில் ஏறி சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம் வழியாகத் திருவாரூருக்கு இரவு 9-00 மணிக்கு வந்து சேர்ந்தோம் !

திருவாரூரிலிருந்து வாடகைச் சீருந்து மூலம் திருத்துறைப்பூண்டியில் உள்ள  இணைமான் (சகலை) வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். 25-02-2015 அன்று இரவு 7-30 மணியளவில் தொடங்கிய சீரடிச் சுற்றுலா 03-03-2015 இரவு 10-30 மணியளவில் இனிது நிறைவு பெற்றது. பயணம் செய்த நாள்கள் மொத்தம் ஆறு ! பயணத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை முன்பதிவு செய்த இருப்பூர்தி மற்றும் தனிப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இன்னல் ஏதுமின்றி எங்கள் பயணம்  இனிய பயணமாகவே இருந்தது !

சுற்றுலா சென்று வந்த அதே மார்ச்சு மாதத்தில் என் சிற்றப்பா திரு.சீ.சண்முகவேல் தேவர்திருமதி பஞ்சவர்ணம் அம்மையார் இணையரின்  பெயரனும் திரு..செயராமன்திருமதி மஞ்சுளா இணையரின் மகனுமான திரு. பிரசாத் திருமணம் நிகழ்ந்தது !

பஞ்சநதிக்குளம் மேலச் சேத்தி திரு. தெட்சணாமூர்த்தித் தேவர்திருமதி. வெற்றிச் செல்வி இணையரின் மகள் செல்வி. பிரியவதனாவை இவர் கைப்பிடித்தார். 2015 –ஆம் ஆண்டு மார்ச்சு மாதம், 30 –ஆம் நாள் பஞ்சநதிக் குளம் மாரியம்மன் கோவில் அரங்கில் நடைபெற்ற இத்திருமணத்திற்கு நானும் என் மனைவியும் சென்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் !

திருமண நிகழ்வுகள் என்பவை வாழ்க்கையில் இருவர் இணையும் விழாக்கள் மட்டுமல்ல, உறவினர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவி இன்புறும் இனிய விழாக்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது !


--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),32]
{14-06-2020}
--------------------------------------------------------------------------------------------
எல்லோரா குகைக் கோயில்

எல்லோரா குகைக் கோயில்

 எல்லோரா குகைக் கோயில்


மந்திராலயம்

மந்திராலயம்

 மந்திராலயம் நுழைவாயில்

 பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில்
 குன்று
 பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில்
 குன்று

துங்கபத்திரை ஆற்றுப் பாலம்
 








No comments:

Post a Comment