தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் : 2011,12,13 நிகழ்வுகள் !
(சுவடு.48) பழனி உலா !
2006
–ஆம் ஆண்டு மே மாதம் முதல் தமிழ் நாட்டில் தி.முக.
ஆட்சி நடைபெற்று வந்தது. ஆட்சியின் ஐந்தாண்டு காலப்
பதவிக் காலம் முடிவடைய இருந்ததால், 2011 –ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம்
சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது !
இந்தத்
தேர்தலில் அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து தேர்தலைச்
சந்தித்தன. எதிரணியில் தி.மு.க., இந்தியப் பேராயக் கட்சி, பா.ம.க., ஆகியவை கூட்டணி சேர்ந்து
போட்டியிட்டன !
தேர்தல்
முடிவில் அ.இ.அ.தி.மு.க. 146 இடங்களும், தே.மு.தி.க. 29 இடங்களும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 9 இடங்களும், இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 10 இடங்களும்
பெற்றன. எதிரணியில் தி.மு.க 23 இடங்களும், இந்தியப் பேராயக்
கட்சி 5 இடங்களும், பா.ம.க. 3 இடங்களும் பெற்றிருந்தன
! செயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார் !
திருமணங்கள்
தான் வாழ்வின் இளவேனிற்காலம். இளவேனில் வராவிட்டால் வாழ்வில்
சுவை தான் ஏது
? ஈசனக்குடி திரு.இராமலிங்கம் திருமதி திலகவதி அம்மையார் இணையரின் இரண்டாவது மகள் சங்கீதாவின் திருமண வரவேற்பு 2012 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 10 - ஆம் நாள் திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது. வரவேற்பு
நிகழ்ச்சிக்கு நான் குடும்பத்துடன் சென்றிருந்தேன். திருமண விருந்தும்
புதிய உறவினர்களின் சந்திப்பும் எப்போதுமே
இனிமை தரக் கூடியவை என்பது உண்மை !
அடுத்ததாக, என் (ஒன்றுவிட்ட) சிற்றப்பா திரு.சண்முகவேல் தேவர் – திருமதி பஞ்சாட்சரம் அம்மையார் இணையரின்
பெயரனும், திரு.சதாசிவதேவர் – திருமதி.மல்லிகா இணையரின் மகனுமான திரு.சரவணன், வங்கநகர் திரு.தமிழரசன்
- திருமதி தமிழரசி இணையரின் மகள் செல்வி ஸ்ரீபிரியாவைக் கரம்
பிடித்தார் !
இவர்கள்
திருமணம்
2012 –ஆம் ஆண்டு, மே மாதம், 31 –ஆம் நாள் மருதூரில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு நான்
செல்ல இயலவில்லை. சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளுக்கு என்னால்
போக முடியாமல் ஏதாவது பணிகளின் குறுக்கீடு வந்து விடுகின்றது. அவற்றைத் தவிர்க்கவும் முடிவதில்லை. என் மனைவி திருமதி
கலைச் செல்வி மட்டும் இத்திருமண நிகழ்ச்சிக்குச் சென்று மணமக்களை வாழ்த்தி வந்தார்
!
இதே
2012-ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 11 –ஆம் நாள் திருச்சி நவல்பட்டு திரு.சீ.சம்பத் – திருமதி.கிருத்திகா இணையருக்குப்
பெண் குழந்தை பிறந்தது. இந்த உலகிற்குப் புதிய வரவு !
“விஸ்மயா” என்று பெயரிடப் பெற்ற இக்குழந்தைக்கு
இப்போது (2020) அகவை எட்டு. விஸ்மயா அனைத்து
வளங்களும் பெற்று நீடூழி
வாழ்கவென வாழ்த்துவோம் !
அடுத்து
ஒரு புதிய விண்மீன் பகல் வெளிசத்திலேயே முளைத்தது ! சென்னை,
திருமலை நகர், திரு.இராகுல்
– திருமதி உமா இணையருக்கு 2012 ஆம் ஆண்டு,
12 –ஆம் மாதம், 12 –ஆம் நாள் பெண் குழந்தை தஞ்சாவூர்
என்.எம். மருத்துவமனையில் பிறந்தது.
“நட்சத்திரா” எனப் பெயரிடப் பட்டுள்ள இக்குழந்தைக்கு
இப்போது அகவை எட்டு. அகவைக்கு மீறிய பேச்சும் அறிவு மிளிரும்
செயல்களும் காணப்படும் நட்சத்திராவுக்கு வளமான எதிர்காலம் வாய்க்க வாழ்த்துவோம் !
ஈசனக்குடி
திரு இ.இராமலிங்கம் – திருமதி.திலகவதி
அம்மையாரின் முதல் மகன் கனியமுதன். பிறந்ததிலிருந்தே அவனிடம்
ஏதோ ஒரு இனம் புரியாத குறை. எழுந்து நடமாட முடியவில்லை; பேச்சு தெளிவாக இராது; ஆனால் புரிந்து கொள்ளும் ஆற்றலில்
குறைவில்லை. அகவை ஏறிக் கொண்டே வந்தது. ஆனால் செயல்பாடுகளில் மாற்றமில்லை !
பெற்றோர்கள்
மட்டுமல்லாது வீட்டிலிருந்த அனைவருக்கும் மனப்பளு. 2013 –ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 –ஆம் நாள் கனியமுதனுக்கு இவ்வுலகிலிருந்து
விடுதலை; பிரிவால் ஏற்பட்ட துன்பத்திற்கிடையிலும் வீட்டிலுள்ள
அனைவருக்கும் சற்று நிம்மதி ! இயற்கை தான் மனிதனிடம் எப்படி எல்லாம்
விளையாடுகிறது !
சேரன்குளத்தில், இன்னொரு நிலவு மேற்கில் மறைந்தது. மறைந்த திரு. செல்வராசு அவர்களின் மகனும் என் தங்கை திருமதி.கனகாம்புயத்தின்
மூத்த மகனுமாகிய திரு.பாலதண்டாயுதம் சிறிய அகவையில் என் தாயாரிடம்
வளர்ந்த பிள்ளை. பள்ளியிறுதி வகுப்பு படித்த பிறகு சேலத்திற்கு
அழைத்துச் சென்று உலைக்களவியல் (FORGER AND HEAT TREATER) பயிற்சியில்
சேர்த்துப் படிக்க வைத்தேன் !
பயிற்சி
முடிந்து ஊருக்குத் திரும்பிய பின் ஊராட்சிச் செயலராகச் செல்வாக்குடன் இருந்தார். இன்னும் மென்மேலும் வாழ்க்கையில் உயர்வடைய வேண்டிய வாய்ப்புகள் நிரம்ப இருந்தன.
ஆனால் அவர் சேரத் தகாத இடங்களில் நட்பு வைத்துக் கொண்டதால் மனமும் உடலும்
நலங் குன்றத் தொடங்கியது. இதற்கிடையில் திருமணம் ஆகி குழந்தையும்
பிறந்தது. !
தாய்
மாமாவான என்னை விட்டு அவர் விலகிச் செல்லச் செல்ல, வாழ்நாள்களும்
அவரை விட்டு விலகிச் செல்லத் தொடங்கின. இறுதியில்,
2013 –ஆம் ஆண்டு, சனவரி மாதம், 22 –ஆம் நாள் அவர் இந்த உலக வாழ்வை விட்டே விலகிவிட்டார் ! “சேராத இடம்தனிலே சேர வேண்டாம்” என்பதை அவருக்கு அணுக்கமாக இருந்த யாரும் சொல்லித் தரவில்லை
போலும் !
இளவரசி, நேகா, அபிஷேக், கவிக்குயில் ஆகியோர்
தஞ்சாவூர் வந்திருந்தனர். அப்போது எங்காவது வெளியூர் சென்று வரலாம்
என்று தோன்றியது. வாடகைக்குச் சீருந்து ஒன்றை அமர்த்திக் கொண்டு
2013 ஆம் ஆண்டு, மே மாதம், 15 –ஆம் நாள் காலை 5-15 மணியளவில் தஞ்சையிலிருந்து புறப்பட்டுப்
பழனி சென்றோம் !
எங்களுடன்
திரு.குருநாதன் அவர்களின் மகன் திரு.கணேசமூர்த்தி, மருமகள் திருமதி சர்மிளா ஆகியோரும்
வந்திருந்தனர். காலை 8-15 மணியளவில் பழனி
சென்றடைந்தோம். காலை உணவுக்குப் பின் மலை மீது ஏறிச் சென்றி முருகன்
திருக்கோயிலை அடைந்து, முருகனை வணங்கினோம் !
என்னையும், என் மனைவியையும் தவிர மற்ற அனைவருக்கும் பழனி வருகை முதல் நிகழ்வு.
அதிலும் நேகா, அபிஷேக் இருவருக்கும் இந்த உலா அவர்கள்
மனதில் துள்ளல் உணர்வைத் துரத்திப் பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தது. மகிழ்ச்சிக்கு அளவில்லை. கோயிலைச் சுற்றிப்பார்த்த பின் ஐந்தமுது (பஞ்சாமிர்தம்)
வாங்கி அங்கும் சிறிது அருந்திவிட்டு, மாலை 3-00 மணிக்கெல்லாம் தஞ்சை திரும்பி
விட்டோம் ! சீருந்திலேயே சென்று வந்தது பயணத்தை மகிழ்ச்சி நிறைந்தது
ஆக்கியது !
“மாலை சூடும் மணநாள், இளமங்கையின் வாழ்வில் புது நாள்”
என்று ஒலிபெருக்கி, இன்னிசை வழங்க என் முதல் மருமகனின்
தம்பி திரு.செந்தில் குமாரின் திருமணம் 2013 –ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் –நாள்
தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. தஞ்சாவூர் சிவாசி
நகரைச் சேர்ந்த வெங்கடேசு என்பவரின் மகள் செல்வி. பிரியாங்காவைச்
செந்தில் கரம் பிடித்தார். இந்திருமணத்திற்கு நானும் என் மனைவியும்
சென்றிருந்தோம் !
இரவும்
பகலும் மாறி மாறி வருவது போல் இந்த உலகத்தில் இறப்பும் பிறப்பும் நிகழ்ந்து கொண்டே
இருக்கின்றன. பிறந்த உயிர்கள் சில காலத்திற்குப் பிறகு மறையவில்லை
எனில் உலகில் உணவுப் பற்றாக்குறை உள்பட பல முட்டுப்பாடுகள் ஏற்படும். இதற்காகவே இறப்பு என்னும் நிகழ்வு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது
!
என் மனைவியின்
தாயாரும் என் மாமியாருமான திருமதி.செண்பகலட்சுமி
அம்மையார், 2013 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்,
16 –ஆம் நாள் அவர்கள் வாழ்ந்து வந்த ஊரான சேரன்குளத்தில் காலமானார்.
அப்பொழுது அவருக்கு அகவை 83 ! முன்னதாக அவரது கணவரும் என் மாமனாருமான திரு.இரகுநாத
பிள்ளை ஒன்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 2004 ஏப்பிரல் 30 அன்று காலமாகி இருந்தார் !
பிறப்பு
மகிழ்ச்சியைக் கண்டு வந்து சேர்க்கிறது; இறப்பு துன்பத்தைத்
துணைக்கு அழைத்துக்கொண்டு வந்து வாயிற் கதவைத் தட்டுகிறது. உலகின்
இந்த இயற்கை நியதியை நாம் ஏற்றுத் தானே ஆக வேண்டும் !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),28]
{10-06-2020}
--------------------------------------------------------------------------------------------
பழனி மலைக் காட்சி !
நட்சத்திரா பிறந்த நாள்: 12-12-2012.
திரு.தியாகராசன் - செல்வி சங்கீதா
திருமண வரவேற்பு நாள்:
10-02-2012.
செண்பகலட்சுமி அம்மையார்:
மறைவு.16-11-2013.
பாலதண்டாயுதம்: மறைவு.22-01-2013
No comments:
Post a Comment