தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் : 2010,11 நிகழ்வுகள் !
(சுவடு.47) முகவரிக் கையேடு !
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீடு தரைத் தளம் மட்டுமே உடையது. மேல் தளத்தில் (IN TERRACE SURFACE) இன்னொரு அறை இருந்தால்
நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் 2010 –ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் 23 –ஆம் நாள் அதற்கான பணிகளைத் தொடங்கினேன் !
என் வீட்டை
2003 –ஆம் ஆண்டு கட்டிக் கொடுத்த அதே பொறியாளர் தான் இப்போதும் கட்டுமானப்
பணியை மேற்கொண்டிருந்தார். ஆனால் 7 ஆண்டுகள்
இடைவெளியில் கட்டுமானச் செலவு ஒரு சதுரத்திற்கு மூன்றரை மடங்கு உயர்ந்துவிட்டது
! அதற்காக என்ன செய்ய முடியும் ?
விலைவாசி
உயர்வு என்பது அரசின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை முடிவுகளைச் சார்ந்தே அமைகிறது ! நம் கையில் எதுவும் இல்லை ! 2000 –ஆம் ஆண்டு ஒரு பவுன்
உருபா 3480 விற்ற நிலையில் 2010 –ஆம் ஆண்டில்
அது உருபா 12,500 அளவுக்கு உயர்ந்துவிட்டது ! பிற விலைவாசிகளும் அதற்குத் தக்கபடி உயர்கையில் அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்கள்
தான் விழி பிதுங்கிப் போகிறார்கள் !
என் (ஒன்று விட்ட) அண்ணன் திரு.கா.இருளப்ப தேவர் – திருமதி.இராசம் அம்மையாரின் பெயர்த்தியும் ஆசிரியர்
திரு. இராமலிங்கம் – திருமதி திலகவதி அம்மையாரின்
மகளுமான செல்வி கலையரசிக்கும், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி திரு.க.தமிழ்மணி – திருமதி கலையரசி இணையரின்
மகனுமான திரு,கண்ணனுக்கும் திருமணம் உறுதி செய்யப் பெற்றிருந்தது
!
இத்திருமணம்
2010 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 10 –ஆம் நாள்,
திருத்துறைப்பூண்டி விவேகானந்தன் – கிருஷ்ணவேணி
திருமண மண்டகத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு நான் குடும்பத்துடன்
சென்று மணமக்களை வாழ்த்தியதுடன் உறவினர்களுடன் அளவளாவியும் மகிழ்ந்தேன் ! இடையூறுகள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் இது போன்ற இளைப்பாறுதல்களும் தேவைதானே
!
2011
–ஆம் ஆண்டு முகாமையான திருமணங்கள் நான்கு நடைபெற்றன. இந்த நான்கில் எதற்கு முதலிடம், எதற்கு இரண்டாமிடம் என்று
வரிசைப் படுத்த முடியாது. நாள் முன்மை அடிப்படையில் ஒவ்வொன்றாகச்
சொல்கிறேன் !
அண்ணன்
திரு.மீனாட்சி சுந்தரம் – திருமதி பார்வதி அம்மையார் இணையரின்
பெயர்த்தியும், வாய்மேடு திரு.சொ.குணசேகரன் – திருமதி இந்திராணி இணையரின் மகளுமான செல்வி
புனிதாவின் திருமணம் 2011 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
7 –ஆம் நாள் நடைபெற்றது !
பஞ்சநதிக்குளம்
தமிழாசிரியர் திரு.ப.சி.சகநாதன் பிள்ளையின் பெயரனும், திருத்துறைப்பூண்டி திரு.பண்டரிநாதன் அவர்களின் மகனுமான திரு,சிவக்குமாரைப் செல்வி.புனிதா கரம் பற்றினார். ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள்
திருமண அரங்கில் நடைபெற்ற இத்திருமணத்திற்கு நானும் என் மனைவியும் தஞ்சாவூரிலிருந்து
சென்று வந்தோம் ! இத் திருமணத்தை இறுதி செய்வதில் என் பங்களிப்பும்
ஓரளவுக்கு இருந்தது என்பதை நெருங்கிய உறவினர்கள் அறிவார்கள் !
இரண்டாவது
திருமணம் திரு.மீனாட்சி சுந்தரம் – திருமதி.பார்வதி அம்மையார் இணையரின் பெயர்த்தியும், சென்னை,
பானு நகர் திரு.கோவிந்தராசு – திருமதி.இரேவதி அம்மையார் இணையரின் மகளுமான செல்வி கிருத்திகா,
திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள மாராச்சேரியைச் சேர்ந்த யோகேஷ் என்னும்
மென்பொறியாளரைக் கரம் பிடித்தார். இவர்கள் திருமணம் 2011 –ஆம் ஆண்டு சூன் மாதம்
3 –ஆம் நாள் நடைபெற்றது ! இத்திருமணத்திற்கு நான்
செல்ல இயலவில்லை !
மூன்றாவது
திருமணம் சேரன்குளம் திரு ஆர்.இரகுநாத பிள்ளை – திருமதி.செண்பகலட்சுமி அம்மையார் இணையரின் பெயரனும்,
சென்னை திருமலை நகர் திரு. ஆர்.மகாதேவன் – திருமதி.அன்புச்செல்வி
இணையரின் தலைமகனுமான
திரு.இராகுல், செல்வி உமாவைக் கரம் பற்றினார்.
!
செல்வி
உமா,
வேதாரணியம் வட்டம் குரவப்புலம், திரு.எஸ்.ஆர்.இராமலிங்க தேவர்
– திருமதி சௌந்தரவள்ளி அம்மையார் இணையரின் அன்பு மகள். இவர்கள் திருமணம் 2011 –ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 15 ஆம் நாள், ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண அரங்கில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு நானும் என் மனைவியும் சென்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்
!
நான்காவது
திருமணம்,
கடிநெல்வயல் திரு.சீ.அருணாச்சலத்
தேவர் திருமதி.சுந்தரம் அம்மையாரின் பெயரனும், திருச்சி நவல்பட்டு திரு.அ.சீனிவாசன் - திருமதி ஆனந்தி அம்மையார்
இணையரின் மகனுமான திரு. சம்பத், செல்வி
கிருத்திகாவைக் கரம் பற்றினார் !
செல்வி
கிருத்திகா, தஞ்சாவூர் பாலோபநந்தவனம் திரு.இராசேந்திரன் – திருமதி லலிதா அம்மையார் இணையரின் மகளாகும்.
2011 –ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 20 –ஆம் நாள் நடைபெற்ற திரு.சம்பத் – செல்வி.கிருத்திகா திருமணத்திற்கு நான் குடும்பத்துடன்
சென்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தேன் !
இவர்கள்
திருமணத்திற்குக் கால்கோள் இட்டதும், அடுத்தடுத்த நிகழ்வுகளை
அரங்கேறச் செய்ததும், திருமண உறுதி நிகழ்ச்சியை (நிச்சயதார்த்தம்) முன்னின்று நடத்தியதும், நான் தான் என்பதை உற்றார் உறவினர்கள் அனைவரும் அறிவார்கள். இது போன்ற நல்ல நிகழ்வுகளை நிறைவேற்றி வைப்பது உறவினர்களுக்கு நாம் செய்ய வேண்டிய
கடமை அல்லவா ?
2010
–ஆம் ஆண்டு ஒரு பவுன் உருபா 12,500 அளவில் விற்பனையான அணிகலத் தங்கம் ஒரே ஆண்டில்
169 % உயர்ந்து 2011 ஆம் ஆண்டில் உருபா
21,120 ஆனது. பெண்ணைப் பெற்றவர்கள் இந்த ஆண்டில்
திருமணத்திற்கான அணிகலன்களை வாங்க எத்துணை இன்னற் பட்டிருப்பார்கள் ? சற்று எண்ணிப்பாருங்கள் !
நான்
தொடங்கிய திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக்
கருதிய சங்கத்தின் முன்னணிச் செயல்வீரர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் ஒரு நாள் என் வீட்டிற்கு
வந்து,
மீண்டும் ஒரு ஆண்டு காலத்திற்குச் சங்கத் தலைமையை ஏற்க வேண்டும் என்று
வற்புறுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல்,
மறுநாள் நடக்கவிருந்த சங்கப் பொறுப்பாளர்கள் தேர்தலில் என் பெயரை முன்
மொழிந்து என்னை ஒருமனதாகத் தேர்வு செய்தார்கள் !
2006
- 07 ஆம் ஆண்டில் சங்கத்தின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டேன்.
இப்போது இரண்டாவது முறையாக 2011-12 –ஆம் ஆண்டுக்குத்
தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். இந்த ஆண்டில் மக்களுக்கு
மிகவும் பயன்படும் வகையில் வகையில் முகவரிக் கையேடு தயாரித்து வழங்கலாம் என்று முடிவு
செய்தேன் !
நகர்
வாரியாக
18 நகர்களிலும் குடியிருப்பவர்களின் வீட்டு மனை எண், தெருப் பெயர், குடியிருப்பவர் பெயர், அவர்கள்
வகித்த / வகிக்கும் அரசுப் பதவி, செய்யும்
தொழில், அவர்களது துழனி (PHONE) எண்,
எழினி (MOBILE) எண், வீட்டின் முகவரி, நகரின் மனை
எண்கள் வரிசைப் படியான தரைப்படம்
(LAY OUT MAP) உள்படப் பல விவரங்களை உள்ளடக்கிய
116 பக்கங்களைக் கொண்ட
“முகவரிக் கையேடு” ஒன்று அச்சிட்டு ஒவ்வொரு வீட்டினருக்கும்
இலவயமாக வழங்கப்பட்டது !
இக்கையேட்டில், தஞ்சாவூரில் உள்ள பல்துறை மருத்துவர்களின் பெயர்ப் பட்டியல், மருத்துவமனைகளின் பெயர்ப் பட்டியல், திருமண மண்டகங்களின்
பெயர்ப் பட்டியல், குடிநீர் வழங்கல் / கழிவு
நீர் அகற்றல் முகமைகள், வளிம நிறுவனங்கள் (GAS
AGENCIES) , அஞ்சலகங்கள், அளகைகள்
(BANKS) , தீயணைப்பு நிலையங்கள், அரசு அலுவலகங்கள்
உள்பட பல விவரங்கள் துழனி (PHONE), எண் எழினி
(MOBILE) எண்ணுடன் தரப்பட்டிருந்தன !
இந்தக்
கையேட்டைத் தயாரிக்க எனக்கு மூன்று மாதங்கள் ஆயின. உருபா
50 அடக்கவிலையுள்ள இப்புத்தகம் 400 எண்கள் அச்சகத்தில்
கொடுத்துத் தயாரிக்கப்பட்டு, ஒருநாள் விழா நடத்தி அனைத்து வீட்டினருக்கும் வழங்கப்பட்டன !
குமரி
முனையில் வீறுடன் காட்சியளிக்கும் திருவள்ளுவரின் நிழற்படத்தை முகப்பு அட்டையில் ஏந்தி நிற்கும்
இப்புத்தகம், அனைத்து வீட்டினரும் கொண்டாடும் ஒரு கருவூலமாக இன்று
வரைப் பாதுகாக்கப்பட்டு வருகிறது !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),27]
{09-06-2020}
-------------------------------------------------------------------------------------------
திருவள்ளுவர்
குடியிருப்போர் நலச் சங்கத்திற்காக
நான் தயாரித்த முகவரிக் கையேடு.
தஞ்சாவூர்,
கண்ணம்மாள் நகரில் உள்ள
என் வீட்டின் ஒரு தோற்றம்
திரு.இராகுல் - செல்வி.உமா
திருமணம் : நாள்: 15-09-2011.
திரு ம.இராகுல் - செல்வி இரா.உமா
திருமண அழைப்பிதழ்
முகவரிக் கையேடு வெளியீட்டு விழா.
வெளியிடுபவர்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.கு.பரசுராமன்.
திரு.சம்பத் - செல்வி கிருத்திகா
திருமண அழைப்பிதழ்.
திரு.யோகேஷ் செல்வி.கிருத்திகா
இணையரின் திருமணம்
03-06-2011அன்று நடைபெற்றது.
திரு.கண்ணன் - செல்வி. கலையரசி
திருமண அழைப்பிதழ்
திரு.சம்பத் -செல்வி கிருத்திகா
No comments:
Post a Comment