தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் : 2013,14 நிகழ்வுகள் !
(சுவடு.49) இராமேசுவரமும் “பேருவகை”க் கடற்கரையும் !
கண் மருத்துவத்துக்குப்
புகழ் பெற்றது மதுரை, அரவிந்த், கண் மருத்துவ மனை. என் இணைமான் (சகலை) திரு.ப.மா.சுப்ரமணியனின் மனைவி திருமதி.காஞ்சனமாலாவுக்குக் கண்ணில் ஏதோ கோளாறு இருப்பதாக ஒரு உணர்வு. என் மனைவிக்கும் கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்று நெடுநாளாக ஆசை
!
இருவரும்
உடன் பிறந்தவர்கள். மதுரை சென்று அரவிந்த் கண் மருத்துவ
மனையில் ஆய்வு செய்து கொண்டு வரலாம் என்று எண்ணி நால்வரும் மதுரை சென்றோம்.
மகளிர் இருவரும் கண் ஆய்வு மருத்துவரிடம் சென்றார்கள். நாமும் கண் ஆய்வு செய்து கொள்வோமே, ஆய்வுக் கட்டணம் ஒருவருக்கு
உருபா ஐம்பது தானே என்று எண்ணி நானும் என் இணைமானும் கண் ஆய்வு மருத்துவரிடம் சென்றோம்
!
மதுரை
அரவிந்த் மருத்துவ மனையில் கண் ஆய்வு என்பது ஒரு மருத்துவர் ஆய்வு செய்வதோடு நிறைவு
அடைவதில்லை. ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட அறைகளுக்குக்
கண் ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். இறுதி ஆய்வு முடிந்தவுடன்
எங்கள் இருவருக்கும் ஒரு கண்ணில் கண் புரை (CATARACT) இருப்பதாகவும்,
அறுவைப் பண்டுவம் செய்து, புதிதாக செயற்கை விழி
வில்லை (ARTIFICIAL LENS) பொருத்திக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினர்
!
ஆய்வுக்குச்
சென்ற மகளிர் இருவரும் வந்த பின்பு முடிவு செய்யலாம் என்று காத்திருந்தோம். இருவரும் ஆய்வு முடிந்து எங்களை நாடி வந்தனர். அவர்கள்
இருவருக்கும் கண்ணில் கோளாறு எதுமில்லை என்றும் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்
கூறிவிட்டதாகத் தெரிவித்தனர் !
என்ன
வியப்பு
! கோளாறு என்று வந்தவர்களுக்குக் கண்ணில் கோளாறு எதுவுமில்லையாம்;
அவர்களுக்குத் துணையாக வந்த எங்கள் இருவருக்கும் கோளாறு இருக்கிறதாம்
! சில நேரங்களில் நாம் ஒன்று நினைக்க நடப்பது வேறாக அல்லவா அமைகிறது
?
சரி ! வந்து விட்டோம் ! கண்ணில் புரை இருக்கிறது என்று ஆய்வு
முடிவில் தெளிவாகிவிட்டது. வீணே திரும்பிச் செல்வானேன்;
நாம் இருவரும் அறுவைப் பண்டுவம் செய்து கொள்வோம் என்று நானும் என் இணைமானும் முடிவு
செய்தோம் !
மறு நாள், அதாவது 2013 ஆம் ஆண்டு, நவம்பர்
மாதம், 22 –ஆம் நாள் எங்கள் இருவருக்கும் அறுவை செய்து புரையோடிய
விழி வில்லையை உடைத்து எடுத்துவிட்டு, புதிதாகச் செயற்கை விழி
வில்லை பொருத்தினார்கள். எனக்கு இடக் கண்ணில் புதிய விழி வில்லை
பொருத்தப்பட்டது. இன்றுவரை இரு கண்களிலும் பார்வை நன்றாகத்தான்
இருக்கிறது !
ஆண்டொன்று
கடந்தது
! நாடாளு மன்றத்திற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
2014 –ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தேர்தல் நடைபெற்றது. பா.ச.க பல மாநிலங்களில் மாநிலக்
கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. இந்தியாவைக் காப்பாற்ற
வந்த தளபதியாக நரேந்திர மோடியை முன்னிறுத்தி ஊடகங்கள் மூலம் வலிமையாகப் பரப்புரை செய்யப்பட்டது !
தேர்தல்
முடிவுகள் அறிவிக்கப்பெற்றன. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. 37 இடங்களிலும், பா.ச.க. 1 இடத்திலும், பா.ம.க 1 இடத்திலும் வென்றன. தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை !
அனைத்திந்திய
அளவில் பா.ச.க தலைமையிலான தேசிய சனநாயகக்
கூட்டணி 336 இடங்களைப்
பெற்றன. இந்தியப் பேராயக் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி 59 இடங்களையும் பிற கட்சிகள் 139 இடங்களையும் பெற்றன. திரு.நரேந்திர மோடி இந்தியத் தலைமை அமைச்சர் ஆனார்
!
இந்திய
அரசியல் தவறான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நேர்மையைக் கடைப்பிடிக்க விரும்பும்
மக்களுக்குக் கவலை தரும் என்பதில் ஐயமில்லை. மனதில் ஏற்படும் கவலைக்கு மருந்து வேண்டாவா ? வீட்டிலேயே நம்மை
அடைத்துக் கொள்ளாமல், எங்காவது வெளியூர் சென்று வருதல் நல்ல பயனளிக்கும்
!
ஓசூரிலிருந்து
என் மகள் கவிக்குயிலும் பெயரன் கீர்த்திவாசனும் தஞ்சாவூர் வந்திருந்தனர். அவர்களுடன் எங்காவது வெளியூர் சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.
2014 –ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம், 18-ஆம் நாள்,
வாடகைச் சீருந்து ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு நான், என் மனைவி, கவிக்குயில், கீர்த்திவாசன்
நால்வரும் நண்பகல் 2-00 மணியளவில் புறப்பட்டு இராமேசுவரம் சென்றோம்
!
மாலை
6-00 மணியளவில் பம்பன் பாலத்தை எங்கள் ஊர்தி சென்றடைந்தது. சீருந்தை நிறுத்தி விட்டுப் பாலத்தில்
நின்று கொண்டு அருகில்
கடலில் அமைக்கப்பட்டுள்ள
இருப்பூர்தித் தடத்தைப் பார்வையிட்டுத் திகைப்படைந்தோம் ! நாம்
எத்துணை தான் வெறுத்தாலும் வெள்ளைக்காரர்களின் அறிவுத் திறனையும், தொழில் நுட்பத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது ! அப்போது அமைக்கப் பட்டது அன்றோ இந்த இருப்பூர்தித் தடம் !
இந்த
இருப்பூர்தித் தடத்தில் அமைந்துள்ள தூக்குப் பாலம் (LIFT BRIDGE) அறிவியல் விந்தைகளுள் ஒன்று ! சிறு கப்பல்கள், கடந்து செல்கையில் தூக்குப் பாலம் நடுவில்
இரண்டாகப் பிரிந்து செங்குத்தாக உயர்ந்து கொள்ளும். இருப்பூர்தி
வருகையில், உயர்ந்த பாலம் தாழ்ந்து கிடைமட்டமாக அமைந்து கொள்ளும்
! சரியாகப் பயன்படுத்தினால் மனிதனின் மூளை தான் எத்துணை விந்தைகளைப்
புரிகின்றது !
பாம்பன்
பாலக் காட்சிகளைக் கண்ணாரக் கண்டுச் சுவைத்த பின்பு இராமேசுவரம் சென்று தனியார் விடுதி
ஒன்றில் இரவில் தங்கி ஓய்வெடுத்தோம். மறு நாள் (19-04-2014) காலையில் துயிலெழுந்து
”அக்னி தீர்த்தம்” என்று சொல்லப்படுகின்ற
கடல் துறையில் நீரில் மூழ்கி எழுந்து, கோயிலுக்கு வந்தோம்.
கோயிலுக்குள் 21 இடங்களில் நீர்க் கேணிகள் உள்ளன
!
இவை ஒவ்வொன்றுக்கும்
தனித் தனிப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்தக் கிணற்று
நீரைச் சேந்தி தலையில் ஊற்றிக் கொள்வதை இங்கு வருவோர் ஒரு சடங்காக வைத்துள்ளனர்.
நாங்களும் இந்தச் சடங்கினைச் செய்துகொண்டோம். பிறகு
உடை மாற்றிக் கொண்டு இறை வழிபாட்டுக்குச் சென்றோம். இறை வழிபாடு
முடிந்த பின், கோயிலின் திருச்சுற்றில் (பிரகாரம்) வலம் வந்தோம் !
இராமேசுவரம்
கோயிலின் திருச்சுற்று (பிரகாரம்) மிக நீளமானது மட்டுமல்ல அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கற்றூண்களையும் கொண்டது.
உட்கூரையில் வண்ண வண்ண ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. மன்னராட்சியில் தான் இத்தகையப் பேரளவுக் கட்டுமானங்கள் ஒழுங்கு தவறாமல் நிறைவேற்றப்பட முடியும் ! மக்களாட்சிக் காலத்தில் ஊழலின் எச்சங்களைத் தான் நாம் எங்கெங்கும் காண முடிகிறது
!
இராமேசுவரத்திலிருந்து
மாலை
3 - 00 மணியளவில் புறப்பட்டு, ஊர் திரும்புகையில்
“குஷி பீச்” என்னும் ”பேருவகைக் கடற்கரை”யைப் பார்வையிட நேர்ந்தது.
ஆகா ! எத்துணை அழகிய கடற்கரை ! கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் அளவுக்குக் கடலுக்குள் சென்றாலும் கூட
இடுப்பளவு நீர் தான் இருக்கும் ! கடலின்
நிறம் இங்கு வெண்மை கலந்த நீலமாகத் தெரியும். சீறி வரும் அலைகள் இங்கு கிடையாது.
அமைதியாக மெல்ல எழுந்து பரவும் அலைகளினூடே விளையாடுவது குழந்தைகளுக்கு
ஒரு இனிய பொழுது போக்கு. நீச்சல் தெரிய வேண்டியதில்லை.
குழந்தைகள் ஆழத்திற்குப் போய்விடுவார்களோ என்ற கவலை இல்லை !
அலைகள்
மெல்ல வந்துக் கரையை முத்தமிடும் மணல் வெளியில் சிதறிக் கிடக்கும் கிளிஞ்சல்கள் ! விரல்களை ஒத்தப் பவளப் பாறைத் துண்டுகள் ! அவற்றை ஓடி
ஓடித் திரட்டும் இளஞ் சிறார்கள் ! குழந்தைகளை இந்தக் கடற்கரைக்கு
அழைத்துச் சென்றுவிட்டால், குண்டுக் கட்டாகத் தூக்கி மீட்டு வந்தாலொழிய
அவர்கள் வீடு திரும்ப மனம் இசைய மாட்டார்கள் ! சிறார்களுக்கு அத்துணை இன்பம் பயக்கும்
ஊற்று “குஷிபீச்”
கடற்கரை !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),29]
{11-06-2020}
--------------------------------------------------------------------------------------------
பாம்பன் தூக்குப் பாலம்(18-04-2014)
பாம்பன் தூக்குப் பாலத்தின்
வழியாகச் செல்லும் இருப்பூர்தி !
பாம்பன் கடலுக்குள்
அமைந்துள்ள தடம் வழியாகச்
செல்லும் இருப்பூர்தி !
இராமேசுவரம் கோயில்
திருச்சுற்று (19-04-2014)
பேருவகைக் கடல் நீரில் [ ”குஷி” ]
குழந்தைகள் ஆட்டம் !
பேருவகைக் கடல் நீரில் [ ”குஷி” ]
குழந்தைகள் ஆட்டம் !
பேருவகைக் கடல் நீரில் [ ”குஷி” ]
குழந்தைகள் ஆட்டம் !
No comments:
Post a Comment