தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம்
அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் : 2004 நிகழ்வுகள் !
(சுவடு.43) ஆழிப் பேரலை !!
---------------------------------------------------------------------------------------------
தமிழகக்
கடற்கரையோர நகரங்களிலும்
ஊரகங்களிலும் வாழும் மக்களுக்கு 2004 –ஆம் ஆண்டு, திசம்பர்
மாதம் 26 ஆம் நாள் மறக்க முடியாத கறுப்பு நாளாகிவிட்டது ! ஆம் ! அன்று
தான் பண்டைத் தமிழ் நிலத்தைத் தன் கொடும்பசிக்கு உணவாக்கிக் கொண்ட கடற்கோள் என்னும்
ஆழிப் பேரலை என்றால் என்ன என்பதையும் அதன் பேரழிவுகளையும் கண் முன்னே காணொலியாகக் கண்டு உணர முடிந்தது !
இந்தியாவின்
தென் கிழக்கே அமைந்திருக்கிறது இந்தோனேசிய நாடு ! இந்நாட்டின்
பல தீவுகளில் ஒன்று தான் சுமத்திரா தீவு ! இந்தத் தீவின் வடமேற்குக்
கடற்கரையிலிருந்து ஏறத்
தாழ 150 கி.மீ. தொலைவில்
28-12-2004 அன்று ஆழ்கடலில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கப் பதிவுக் கருவி, இந்த நில நடுக்கத்தின்
வீச்சினை 9.3 இரிக்டர் என்று காட்டிற்று !
கடலுக்கு
அடியில் கிட்டத் தட்ட 30 கி.மீ ஆழத்தில்
இந்நடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள் !
நாம்
வாழும் பூமியானது, ஒரு கோழி முட்டையின் அமைப்பை ஒத்தது
என்கிறார்கள் அறிவியலாளர்கள் ! கோழி முட்டை என்னும் ஒப்பீடு வடிவத்திற்காக
அன்று – அதன் கட்டமைப்புக்காக !
கோழி
முட்டையின் வெளிப்புறம், ஓடு என்று அழைக்கப்படும் திடப்
பொருளால் ஆனது. பூமி உருண்டையின் வெளிப்புறமும் கோழி முட்டையின்
ஓடு போன்றே திடப் பொருளாக அமைந்துள்ளது. முட்டையின் உட்புறத்தில்
பாய்ம (FLUID) நிலையில் உள்ள மஞ்சள் கரு இருக்கிறது. பூமியின் உட்புறமும் பாய்ம நிலையில் (FLUID) உள்ள உருகிய பாறைக் குழம்பால் நிரம்பியது
!
பூமி
உருண்டைக்குத் தன் உள்ளகத்தை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசை இயல்பாகவே அமைந்துள்ளது. இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகவே, உருகிய நிலையிலிருக்கும்
பாறைக் குழம்புகள் பூமியின் கட்டமைப்பை விட்டு வெளியேற இயலாமல் அங்கேயே நிலைபெற்றிருக்கின்றன
!
ஆனாலும்
கூட பூமியின் சுழற்சியினால் ஏற்படும் மைய விலக்கு விசையின்
(CENTRIFUGAL FORCE) காரணமாக உருகிய பாறைக் குழம்புகள் எரிமலை
என்னும் பூமித் துளைகள் வழியாக எப்போதாவது வெளியேறி, வழிந்தோடுகின்றன.
வழிந்தோடும் குழம்பு, குளிர்ந்து இறுகி,
பாறை அல்லது மலைகளாக உருவாகின்றன !
முட்டையின்
ஓடு போன்ற பூமியின் வெளிப் பகுதிக்கும், உள்ளே தேங்கியுள்ள
உருகிய பாறைக் குழம்புக்கும் இடையில் தட்டுகள் என்னும் பூமித் தகடுகள்
(PLATES) இருக்கின்றன. இந்தத் தகடுகளின் மீதே கண்டங்கள்
எனப்படும் பெருநிலப் பகுதிகளும் (CONTINENTS), கடல்களும் அமைந்துள்ளன. பூமியின் மொத்தப் பரப்பும் நான்கைந்து
பூமித் தகடுகளால் ஆனவை. இந்தத் தகடுகள் ஒவ்வொன்றும் பல கி.மீ தடிமன் (THICKNESS) உள்ளவை. இந்தத் தகடுகள், பூமியின் சுழற்சி காரணமாக எப்போதாவது
சற்று நகரும் போக்கு உடையவை. இவ்வாறு பூமித் தகடு நகரும் போது
அல்லது ஒரு தகட்டின் மீது இன்னொரு தகடு மோதும் போது அல்லது ஏறும் போது அதனால் ஏற்படும்
அதிர்வுகள் நில நடுக்கமாக வெளிப்படுகிறது !
பூமித்
தகடு நகரும்போது ஏற்படும் அதிர்வு குறைவாகவும், மோதும் போது ஏற்படும்
அதிர்வு இன்னும் சற்றுக் கூடுதலாகவும், ஒரு தகட்டின் மீது இன்னொரு
தகடு ஏறும் பொது ஏற்படும் அதிர்வு மிகப் பெரியதாகவும் வெளிப்படுகிறது !
சுமத்திரா
தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பூமித் தகடு ஒன்று, இன்னொன்றின்
மீது ஏறியதால் நிகழ்ந்த விளைவு. பூமிப் பரப்பின் மூன்றில் இரு
பங்கு கடலால் ஆனது என்பதால், கடலுக்குள் ஏற்படும் நிலநடுக்கத்தின்
அதிர்வு உச்சத்தில் இருந்தால், அதனால் கடலின் நீர் மட்டத்தில்
ஏற்படும் விளைவுகளும் உச்ச நிலையில் இருக்கும் !
நீருக்குள்
மூழ்கி இருக்கும் ஒரு மனிதன் கதுமென்று (திடீரென்று)
மேலெழும்பினால், நீரின் இடப் பெயர்ச்சியால் அலைகள்
எழுந்து பரவுகின்றன அல்லவா ? அது போன்றே, ஆழ்கடலில் ஏற்படும் பூமித் தகடு மேலெழுகையால்
(ஒன்றின் மீது மற்றொன்று ஏறுதல்) கடல் நீர் நம்
கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேலெழுந்து பேரலைகளாக உருவாகிப் பரவுகிறது !
ஆழி என்றால்
கடல் என்று பொருள். ஆழியில் (கடலில்) ஏற்படும் இப் பேரலைகள் (ஆழிப் பேரலை) சில கி.மீ. உயரத்திற்கு உருவாகி பல்லாயிரம் கி.மீ அகலத்திற்கு அல்லது நீளத்திற்குப் பரவும் வல்லமை உடையவை !
2004
–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 26 ஆம் நாள் சுமத்திரா
தீவுக்கருகில் உருவான அடுக்கடுக்கான பேரலைகள், அங்கிருந்து நெடுந்
தொலைவில் உள்ள தாய்லாந்து, சப்பான், இந்தோனேசியா,
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை,
இந்தியா, வங்காள தேசம், மாலத்
தீவுகள் வரை பரவியது என்றால் அதன் வலிமையை
நாம் புரிந்து கொள்ள முடியும் !
சுமத்திராவில்
உருவான ஆழிப் பேரலைகளால், இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு, இலங்கை, தாய்லாந்து
இந்தோனேசியா, மலேசியா, சப்பான் போன்ற நாடுகளின்
கடற்கரையோர நகரங்களும், ஊரகங்களும் வரலாறு காணாத அளவுக்கு அழிவைச்
சந்தித்தன !
ஆழிப்
பேரலை உருவான நாளன்று காலையில் தஞ்சாவூரில் என் வீட்டில் அமர்ந்து தொலைக் காட்சி வாயிலாகச்
செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். போதுமான செய்திகள்
கிடைக்காததாலோ என்னவோ, செய்தி படித்தவர்கள் “ஆழிப் பேரலை” அல்லது “சுனாமி”
என்னும் சொற்களை முதலில் பயன்
படுத்தவில்லை !
சென்னை “மெரீனா” கடற்கரையைத் தான் முதலில் படம் பிடித்துக் காண்பித்தார்கள். கடல் நீரானது “மெரீனா பீச்” முழுவதையும் விழுங்கிவிட்டு, கடற்கரைச் சாலையான காமராசர்
சாலை வரை வந்து, அதனுடன் முட்டி மோதிக் கொண்டிருந்தது. காலையில் நடைப் பயிற்சிக்கு வந்தோரின்
சீருந்துகள் எல்லாம் தூண்டில் மிதப்பைப் போலக் கடல் நீரில்
தத்தளித்து மிதந்தும் மூழ்கியும் காட்சியளித்தன !
கடற்கரை
வணிகர்களின் பெட்டிக் கடைகள் எல்லாம், கவிழ்ந்தும்,
மிதந்தும், பாதி மூழ்கியும் காட்சியளித்தன.
உந்துருளி (BIKE) போன்றவை அலைகளுக்கு விளையாட்டுப்
பொருள்கள் ஆயின ! நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தோர் எல்லாம்
எவுகணை போன்று பேரிரைச்சலுடன் தென்னை உயரத்திற்கு எழுந்து வந்த பேரலைகளைக் கண்டு தப்பித்தோம்
பிழைத்தோம் என்று, காமராசர் சாலைக்கு ஓடிவந்து அச்சத்துடன் நின்று
கொண்டிருந்தனர் !
ஆழிப்பேரலைத்
தாக்குதல் பற்றிய முதல் நேரலைச் செய்தி ”மெரீனா” விலிருந்து கிடைத்த
பிறகு, அடுத்தடுத்துப் புதிய செய்திகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின.
“ஆழிப் பேரலை” அல்லது “சுனாமி”
என்ற சொற்களும் அதன் பிறகே தொலைக் காட்சிச் செய்திகளில் இடம் பெறலாயின.
சுமத்திராத் தீவு அருகில்
ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதன் விளைவாக
எழுந்த ஆழிப் பேரலைகள் ஆகியவை பற்றி சில மணி நேரத்திற்குப் பிறகுதான் நமக்குத் தெரிய
வந்தன !
நேரம்
செல்லச் செல்ல, சென்னையின் கடற்கரையோர இடங்களான காசிமேடு,
இராயபுரம், எண்ணூர், பட்டினப்பாக்கம்,
அடையாறு, திருவான்மியூர், எலியட்சு கடற்கரை போன்ற இடங்களின் பேரழிவு பற்றிய காணொலிகளுடன் கூடிய செய்தி
அறிக்கைகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகி, மக்களின் வயிற்றைக்
கலக்கத் தொடங்கின !
தமிழ்நாட்டின்
கடற்கரையோர ஊர்களான கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, வேதாரணியம்,
கோடிக்கரை, முத்துப் பேட்டை, அதிராம்பட்டினம், போன்ற இடங்களில் ஏற்பட்ட பேரழிவுகள்
பற்றிய செய்திகள் காணொலிகளுடன் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி மக்களைக் கலவரப் படுத்தின
!
இடிந்த
வீடுகள்,
உடைந்த படகுகள், வீழ்ந்து கிடக்கும் தென்னை மரங்கள்,
மடிந்து கிடக்கும் கால்நடைகள், மிதக்கும் பிணங்கள்
என்று அடுத்தடுத்தக் காட்சிகள் மக்களை அழுகுரலில் மூழ்கடித்துவிட்டன. இலங்கை, தாய்லாந்து, மலேசியா,
இந்தோனேசிய நாடுகளில் ஏற்பட்ட அழிவுகள் பற்றிய செய்திகளும் அடுத்தடுத்து
வந்து உலக மக்களை எல்லாம் உலுக்கத் தொடங்கிவிட்டன !
தென்னை
மர உயரத்திற்குச் சீறி வரும் பேரலைகள், கடற்கரையோர விடுதிகளில்
மோதிச் சிதறும் காட்சிகளும், கடலில் குளித்துக் கொண்டிருந்தோர்,
கடற்கரையோரம் நின்று கொண்டிருந்தோர் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
ஓடி வரும் காட்சிகளும், தப்பித்து ஓடிவந்தவர்களில் பலரையும் அலைகள்
மூழ்கடித்து இழுத்துச் செல்லும் கொடிய காட்சிகளும் தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோரின்
மனதை உடைத்து நொறுக்கி விட்டன !
கடலூர், வேளாங்கன்னி, நாகப்பட்டினம். வேதாரணியம்
போன்ற ஊர்களில் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்துக் கிடக்கும் காட்சிகளை அடுத்தடுத்த
நாள்களில் கண்டோர் மனம் பதறிப் போய் விட்டனர் !
நீரில்
இழுத்துச் செல்லப்பட்டு கடலுக்கு இரையானோர் எண்ணிக்கை மிக மிக அதிகம். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையும் பல்லாயிரம். தமிழகத்தில் மட்டும் ஆழிப் பேரலைக்குப் பலியானோர் பத்தாயிரத்துக்கு மேல் இருக்கும்.
இந்திய அரசின் புள்ளி விவரப்படி இறந்தோர் எண்ணிக்கை 8,000. இதில் தமிழ் நாட்டில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 2758. புதுவையில் 377 பேர்.
இந்த
ஆழிப் பேரலைத் தாக்குதலால் உலக நாடுகள் பலவற்றிலும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை
2,26,000 ஆகும். இதில் இந்தோனேசியா 1,60,000, இலங்கை 35,000,
அந்த மான் 10,000, எனப் பட்டியல் நீள்கிறது ! இரண்டு இலக்கம்
(2,00,000) குடும்பங்கள் தம் வீடுகளை இழந்தனர் !
தமிழக
மக்கள் சந்தித்த பொருளாதார இழப்பு மட்டும் உருபா 4700 கோடி
எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன !
இப்பேரழிவு
நடை பெற்ற காலத்தில் சென்னை, வானிலை நிலையத்தில் இயக்குநராக
இருந்த திரு.இரமணன் அவர்கள் “ஆழிப் பேரலை”
என்னும் சொல்லை அறிமுகம் செய்தார். தமிழுக்கு அவர்
அளித்த அருட்கொடை இந்தச் சொல் ! ஆனாலும் சில தமிழ்ப் பகைவர்கள் இன்று வரை
“ஆழிப் பேரலை” என்று சொல்லாமல் “சுனாமி” என்றே சொல்லியும் எழுதியும் வருகின்றனர்
!
”சுனாமி” என்பது சப்பானிய மொழிச் சொல் ! சப்பான் மொழிக்குக் காவடி எடுக்கும் இந்தச் சுரணை கெட்டத் தமிழர்களை என்னவென்பது ? இன்னொரு பக்கம் ”ஹைக்கூ” களியாட்டம்
போடுகிறது; “ஹைக்கூ” என்று சொல்லாமல்
“சிந்தியல் பா” என்று சொன்னால் இந்த இவர்கள் சீரிழந்து
போய்விடுவார்களா என்ன ?
மக்கள்
தொகைப் பெருக்கம் கட்டுக்கடங்காமல் பெருகும் போது, இயற்கையே ஏதாவது ஒரு வடிவத்தில் அழிவை ஏற்படுத்தி
மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் என்று மேலை நாட்டுப் பொருளாதார அறிஞர்
ஒருவர் (மால்தூஸ் ?) கூறி இருக்கிறார்.
இயற்கையில் திருவிளையாடல் தானோ இந்த ஆழிப் பேரலை !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, விடை (வைகாசி),23]
{05-06-2020}
---------------------------------------------------------------------------------------------
ஆழிப்பேரலையின் சீற்றம்
ஆழிப்பேரலையில் சென்னை
”மெரீனா” கடற்கரை
ஆழிப்பேரலையால்
வெள்ளமாகிப் போன “மெரீனா”
தாண்டவத்தால் மூழ்கிக் கிடக்கு
இடிந்து போன கடற்கரையோர
கடற்கரையோரத்தில்
No comments:
Post a Comment