name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (53) : 2015 நிகழ்வுகள் - பழனி & குமரிச் சுற்றுலா !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Thursday, April 23, 2020

காலச் சுவடுகள் (53) : 2015 நிகழ்வுகள் - பழனி & குமரிச் சுற்றுலா !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 2015 நிகழ்வுகள் !

                       (சுவடு.53) பழனி + குமரி சுற்றுலா!

-------------------------------------------------------------------------------------------

திரு.பிரசாத் திருமணத்திற்குச் சென்று வந்த பிறகு, இன்னொரு முறை பழனிக்குச் சென்றுவருவோம் என்று தோன்றியது. திருத்துறைப் பூண்டியிலிருந்து இணைமான் (சகலை) திரு..மா.சுப்ரமணியனும் அவர் மனைவி திருமதி. காஞ்சனமாலாவும் எங்களுடன் வருவதாகத் தெரிவித்திருந்தனர் !

2015 –ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 8 –ஆம் நாள் நாங்கள் நால்வரும் தஞ்சாவூரிலிருந்து வாடகைச் சீருந்து மூலம் மாலை 6-00 மணிக்குப் புறப்பட்டோம். பழனிக்கு இரவு 9-30 அளவில் சென்றடைந்து, கோயில் ஆளுமையின் கீழுள்ள விடுதியில் தங்கினோம் ! மறுநாள் விடியற்காலை 5-00 மணிக்குப் புறப்பட்டு மலையூர்தி (ROPE CAR) இயக்கப்படும் இடத்தை அடைந்தோம் !

இதற்கு முன் இருமுறை பழனிக்குச் சென்றிருந்தாலும், மலையூர்தியில் செல்வது இது தான் முதன்முறை. 45 பாகைக் கோணத்தில் மலையூர்தி மேலே ஏறுகையில் மனதில் என்னவெல்லாமோ கற்பனைகள் வந்து அச்சமூட்டுகின்றன. படிகள் வழியாக ஏறிச் சென்றிருக்க வேண்டும், மலையூர்தியில் வந்தது தப்பு என்று எங்களுக்குத் தோன்றியது. ஒருவழியாக இறங்கு நிலையத்திற்கு ஊர்தி போய்ச் சேர்ந்த பிறகு தான் மனதில் நிம்மதி பிறந்தது !

கோயிலில் ஏனோ இன்று கூட்டமில்லை. வரிசையில் காத்திருக்க வேண்டியத் தேவையின்றி, விரைவாக உள்ளே சென்று முருகப் பெருமானை வணங்க முடிந்தது. திருச்சியில் நான் பணிபுரிந்த (1972-1973) காலத்தில், அம்மா, மனைவி, தங்கை ஆகியோருடன் பழனிக்குச் சென்று வந்ததாக நினைவு ! அப்போது முருகன் மூலச் சிலையை (நவபாஷானச் சிலை) பார்த்திருக்கிறேன் !

அந்த மூலச் சிலைக்குத் தான்  அப்போது திருமுழுக்கு (அபிஷேகம்) ஒளி வழிபாடு (தீப ஆராதனை) எல்லாம் நடைபெறும். மூலச் சிலை தேய்ந்து வருகிறது என்று சொல்லிப் பிற்காலத்தில் மூலச் சிலையை மாழைக் கவசத்திற்குள்  மறைத்துவிட்டனர் ! எத்தனை முறைப் பழனிக்குச் சென்றாலும் ஐயமுது (பஞ்சாமிர்தம்) வாங்கி உண்ணாமல் வருவதில்லை ! பழனி ஐயமுதின் சுவையே தனிதான் !

கோயிலில் விரைவாக முருகனைப் பார்க்க முடிந்ததால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மீண்டும் மலையூர்தி மூலம் கீழே இறங்கிவிட்டோம். ஊர் திரும்பும் வழியில் ஒட்டன்சத்திரம் கறிகாய்ச் சந்தைக்குச் சென்று நிரம்பவே காய்களை வாங்கிக் கொண்டுத் தஞ்சைக்கு மாலைக்கு முன்பாகவே திரும்பி விட்டோம் ! இனிய பயணம் ! நனிதும் நலமான பயணம் !

கோடைக்காலத்தில் பள்ளி விடுமுறை வருகையில் ஓசூரிலிருந்து என் பெண்களும் பெயரன் பெயர்த்தியும் தஞ்சைக்கு வந்து ஒரு மாத காலம் எங்களுடன் தங்கிவிட்டு, அப்புறம் ஓசூர் செல்வது ஏறத்தாழ ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்ச்சி ! இந்த ஆண்டும் வந்திருந்தனர். சரி ! அனைவரும் இன்னொரு சுற்றுலா சென்று வரலாம் என்று முடிவு செய்தோம் ! முதலில் இராமேசுவரம், அடுத்து திருச்செந்தூர், பின்பு கன்னியாகுமரி பார்க்கலாம் என்று தீர்மானித்தோம் !

2015 –ஆம் ஆண்டு மே மாதம், 15 –ஆம் நாள் காலை 6-00 மணியளவில் தஞ்சையிலிருந்து வாடகைச் சீருந்து மூலம் இராமேசுவரத்திற்குப் புறப்பட்டோம். நான், என் மனைவி, இரண்டாவது பெண் இளவரசி, இளவரசியின் மகள் நேகா (09), மகன் அபிஷேக் ()5), முதல் பெண்ணின் மகன் கீர்த்திவாசன் (12), இணைமான் ப.மா.சுப்ரமணியன், அவர் மனைவி காஞ்சன மாலா ஆகிய எண்மரும் தான் சுற்றுலாவில் பங்கேற்கும் குழுவினர் !

தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மணல்மேல்குடி, அம்மாப்பட்டினம், மீமிசல், கோட்டைப்பட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம், தொண்டி, திருவாடானை, புதுப்பட்டினம், தேவிபட்டினம, உச்சிப்புளி, மண்டபம், பாம்பன், அக்காமடம், தங்கச்சி மடம் வழியாக இராமேசுவரம் சென்றடைகையில் மணி 11-45. ”அக்னி தீர்த்தம்எனப்படும் இராமேசுவரம் கடலில் குளித்த பின் இராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு !

மதிய உணவுக்குப் பின் இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டுத் தனுசுக்கோடி செல்கையில் வழியில் கோதண்டராமர் கோயிலைப் பார்வையிட்டோம். அங்கிருந்து தனுசுக்கோடி சென்று  கடற்கரையில் சற்று நேரம் உலவினோம். கடற்கரையில் உலவுவதில் பெயரன் பெயர்த்திக்குத் தான் மிக்க மகிழ்ச்சி ! இரவுத் தங்கல் இராமேசுவரத்தில் !

மறுநாள் காலையில் (16-05-2015) புறப்பட்டு முதலில் வில்லூன்றித் தீர்த்தம் பார்வையிடல். அடுத்து பாம்பன் சுவாமி கோயில் பார்வையிடல். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு, திருப்புல்லானி சென்று ஆதி செகநாதப் பெருமாள் ஆலயம் பார்வையிட்டோம். திருப்புல்லானி சிறிய ஊரானாலும் கோயிலும் பெரியது; கோயில் திருக்குளமும் மிகப் பெரியது. இவ்வூரிலேயே காலைச் சிற்றுண்டி. நன்றாகவே இருந்தது !

திருப் புல்லானியிலிருந்து  10 கி.மீ தொலைவில் உள்ள உத்தர கோசமங்கை கோயிலுக்குச் சென்றோம். கோயில் தூய்மையாகப் பேணப்படுவதைக் கண்டு மகிழ்ந்தோம். இங்கிருந்து தெற்கு நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. சாயல்குடி, வேம்பார், தூத்துக்குடி, கொற்கை வழியாகத் திருச்செந்தூரை நாங்கள் அடைகையில் மணி 2-15 ஆகி இருந்தது. திருச்செந்தூர் முருகனை வணங்கிவிட்டு, சீரலைவாயிலில் கால் நனைத்து மகிழ்ந்து, சற்று நேரம் ஓய்வெடுத்தோம் !

பின்பு அங்கிருந்து புறப்பட்டு குலசேகரன் பட்டினம், உவரி, கூடங்குளம் வழியாகக் கன்னியாகுமரியை அடைகையில் மாலை நேரமாகிவிட்டது. விடுதியில் தங்கி நன்கு இளைப்பாறி உறங்கிய பின், காலையில் எழுந்து கதிரவன் கடலில் எழும் காட்சியைக் காண விரைந்தோம். அருமை ! தன் பொற்கதிர்களை வாரி இறைத்து கடல் நீரையும் பொன் வண்ணத்திற்கு மாற்றிக் கொண்டு கதிரவன் மேலெழும் காட்சி பார்த்து மகிழ வேண்டிய ஒன்று !

நாங்கள் குமரி முனைக்குச்  சென்ற போது  கடலில் அலைச் சீற்றம் அதிகமாக இருந்ததால், வள்ளுவர் சிலைக்குச் செல்ல முடியாமல் படகுப் போக்கு வரத்து நிறுத்தப்பட்டிருந்தது. விவேகானந்தர் பாறைக்கும் செல்லமுடிய வில்லை ! பகவதி அம்மன் கோயிலைப் பார்த்துவிட்டு, விடுதிக்குத் திரும்புகையில் இணைமான் திரு..மா.சுப்ரமணியன் அவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. ஊருக்குத் திரும்பி விடுவோம் என்ற மனநிலை அனைவருக்கும் ஏற்பட்டது !

காலைச் சிற்றுண்டியை விடுதி அறையிலேயே முடித்துக் கொண்டு ஊர்தியில் ஏறி அமர்ந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டோம். நாங்குனேரி, பாளையங்கோட்டை வழியாக திருநெல்வேலியை அடைந்தோம். நெல்லையப்பர் கோயிலை மட்டும் பார்க்கலாம் என விரும்பினோம். கோயிலின் கோபுரம் சிறியது தான். ஆனால் உள்ளே செல்லச் செல்ல ஏதோவொரு கலைக் கூடத்திற்குள் நுழைவதைப்  போன்ற உணர்வு ஏற்படுகிறது !

கோயிலுக்குள் கண்களில் படும் தூண்களெல்லாம் கலைக் கருவூலமாகக் காணப்படுகின்றன. நெல் குற்றும் உலக்கைகளைப் பார்த்திருக்கிறீர்களா ? பத்து உலக்கைகளை ஒன்றோடொன்று தொடாமல் நிறுத்தி வைத்திருப்பதைப்  போன்று  சில கற்றூண்கள் காணப்படுகின்றன. ஒரே கல்லில் செதுக்கியவை இந்த உலக்கைத் தூண்கள் ! என்னே பண்டைத் தமிழர் தம் கலைத்திறமை !

நெல்லையப்பர் கோயிலின் மிக அருகில் தான் இருட்டுக்கடை இருக்கிறது. இருட்டுக்கடை தீம்பாகு (“அல்வா”) உலகப் புகழ் பெற்றதாயிற்றே ! மாலை ஆறு மணிக்கு மேல் தான் கடையைத் திறந்து மங்கலான விளக்கொளியில் பத்து மணி வரை விற்பனை நடக்கும் என்று கோபுர வாயிலில் நின்றிருந்த சிலர் சொன்னார்கள். நாங்கள் சென்றது முற்பகல் 10-30 மணியாயிற்றே ! நெல்லை வழியாக வந்தும் தீம்பாகு (“அல்வா” ) வாங்க முடியவில்லை என்று எல்லோர் மனதிலும் சிறு ஏக்கம் !

நெல்லையிலிருந்து புறப்பட்டு கங்கை கொண்டான், கயத்தாறு, கோயில்பட்டி, சாத்தூர் வழியாக விருதுநகர் வந்து மதிய உணவு அருந்தினோம். அங்கிருந்து மீண்டும் எங்கள் பயணம் தொடங்கியது. திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, மேலூர், துவரங்குறிச்சி, விராலிமலை, திருச்சி வழியாக மாலையில் தஞ்சை வந்து சேர்ந்தோம்.

மேலும் ஓரிரு நாள் நீடித்திருக்க வேண்டிய எங்கள் சுற்றுலா, இணைமான் திரு..மா.சுப்ரமணியன் அவர்களின் உடல் நலக் குறைவால் இரண்டே நாள்களில் முடிவடைந்து போனது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது !
                       
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),01]
{15-06-2020}
--------------------------------------------------------------------------------------------
பழனி மலை

இராமேசுவரம் கோயில்

பாம்பன் பாலம்

திருப்புல்லானி கோயில்

உத்தரகோசமங்கை கோயில்

திருச்செந்தூர் கோயில்

குமரிமுனையில் நாங்கள்

நெல்லையப்பர் கோயில் 
ஒற்றைக் கல்தூண்













No comments:

Post a Comment