தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் :1998 நிகழ்வுகள் !
(சுவடு.37) நலச்சங்கம் அமைப்பு !
---------------------------------------------------------------------------------------------
ஓசூர் தொழிற் பயிற்சி நிலைய
அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த திருமதி.லலிதா என்பவரின்
கணவர் திரு.இராமகிருட்டிணன் ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அப்போது அவர் என்னைச் சந்தித்துப்
பேசிக் கொண்டிருந்தார். அவர் ஓசூரில் உள்ள அசோக் லேலண்டு தொழிற்சாலையில் உதவி மேலாளராகப் பொறுப்பில் இருந்து வந்தார் !
திரு.இராம கிருட்டிணன், சென்னை இருங்காட்டுக் கோட்டையில் உள்ள
“ஹூண்டாய்” நிறுவனத்தில் துணை மேலாளராகத் தேர்வாகி
விரைவில் பணியில் சேரவிருந்தார். அவர் உதவியுடன் இளம்பரிதிக்கு “ஹூண்டாயில்” உதவிப் பயிற்சியாளராக
(ASSISTANT TRAINEE IN PRODUCTION MANAGEMENT (MATERIALS HANDLING) TEAM) வாய்ப்புக் கிடைத்து பணியில் சேரச் சொல்லி 02-02-1998 நாளிட்ட ஆணை வந்திருந்தது.
அப்பொழுது இளம்பரிதிக்கு ஓசூர் “டைட்டான்
வாச்சஸ்” நிறுவனத்திலும் வேலை வாய்ப்பு உருவாகி இருந்தது
!
“டைட்டானில்”
இளம்பரிதி களப் பயிற்சியில் இருந்த போது பரிதியின் வேலைத் திறமையக் கண்ட
அவரது மேலாளர், பரிதியை “டைட்டானில்”
இருத்திக் கொள்ள விரும்பி, அவரது மேல் அதிகாரிகளிடம்
பேசி இருக்கிறார். எல்லாம் கனிவாகி பணியில் சேரச் சொல்லி உத்தரவும்
தயாரான நிலையில், சங்கர் எனற பார்ப்பன அலுவலரின் சூழ்ச்சியால்
பரிதியின் வேலை வாய்ப்பு பறிபோயிற்று !
பரிதிக்கு ”டைட்டானில்” வேலை வாய்ப்புப் நழுவிப்போன நிலையில்,
ஹூண்டாயிலிருந்து வந்திருந்த பணியமர்வு ஆணையைப் பயன்படுத்தி அங்கு பணியில்
சேர்ந்திடலாம் என்று முடிவு செய்தோம் !
ஓசூரில் வரைபடப் பிரிவுப்
பயிற்றுநராக இருந்த திரு.க.நமசிவாயம்
திருநெல் வேலியைச் சேர்ந்தவர். அவரைப் பரிதியுடன் துணைக்கு அனுப்பினேன்.
ஹூண்டாய்க்கு 1998 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 3 ஆம் நாள் பரிதியை அழைத்துச் சென்றார்
!
பரிதி அங்கு பணியில் சேரும் வரைத்
துணையிருந்த திரு.நமசிவாயம், அவர் நண்பரான திரு.தெய்வசகாயம் என்பவரின் அறையில் தங்குவதற்கும்
ஏற்பாடு செய்துவிட்டு ஓசூர் திரும்பினார். பரிதி திரு.தெய்வசகாயத்துடன் பூவிருந்தவல்லியில் அறையில் தங்கிப் பணிக்குச் சென்று கொண்டிருந்தார் !
சேலத்தில் நான் பணி புரிகையில், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், குழும்பத்தினருடன்
தங்கி இருந்தேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா ? அப்போது அங்கு
குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டுச் செயல் பட்டு வந்தது !
நான் அதில் இணைச் செயலாளராகப்
பொறுப்பில் இருந்தேன். குடியிருப்போர் நலச் சங்கம் மூலம்,
குடியிருப்புவாசிகளுக்கு சில நன்மைகளைச் செய்ய முடிந்தது !
சேலத்தில் நான் பெற்ற பட்டறிவைக்
கொண்டு,
ஓசூரிலும் குடியிருப்போர் நலச் சங்கத்தைத் தொடங்கிட சில குடியிருப்புவாசிகளுடன்
கலந்துரையாடி, என் வீட்டு மேல் மாடியில் (TERRACE) ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். தலைவர் உள்பட
முகாமையான பொறுப்புகளுக்கு யாரைத் தேர்வு செய்யலாம் என நான் முன்னதாகவே முடிவு செய்து
வைத்திருந்தேன் !
கூட்டம் தொடங்கி, சில உரையாடல்களுக்குப் பிறகு, பொறுப்பாளர்கள் தேர்வு
பற்றிய பேச்சு வந்த போது, கூட்டத்தினர் அனைவரும் ஒட்டு மொத்தமாகத்
தலைவர் பொறுப்பை நான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் !
வேறு வழியின்றித் தலைவர்
பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். செயலாளராக திருச்செங்கோடு
திரு.தே.சுகுமார் (வேளாண் துறை) என்பவரும், பொருளாளராக
திருநெல்வேலி, திரு.க.நமசிவாயமும் (I.T.I) தேர்வு செய்யப் பட்டனர்
!
ஓசூரில் அப்போது வண்டித்
(BIKE) திருட்டு கவலை அளிக்கும் விதத்தில் நிரம்ப நடைபெற்று வந்தன.
எனவே, சங்கத்தின் முதல் வேலையாக குடியிருப்புப்
பகுதிக்கு இரவுக் காவலர் ஒருவரை அமர்த்தி, இரவு முழுவதும் குடியிருப்பு
வளாகத்தில் சுற்றி வந்து காவல் பணியில் ஈடுபடச் செய்தேன் !
மூன்று மாதங்கள் சென்ற
பின் இரவுக் காவல் பணிக்கு இரண்டு பேரை அமர்த்தினேன். இரவு நேரத்தில் நான் உள்பட சங்க முன்னோடிகள் சிலர் எழுந்து, காவலர்களின் பணியை மேற்பார்வை செய்வதிலும் ஈடுபட்டோம் !
குடியிருப்பு வளாகத்தைச்
சுற்றிலும் கம்பி முள் வேலி அமைக்க வீட்டு வசதி வாரிய அலுவலர்களை அணுகி வலியுறுத்தி, வேலி அமைக்கச் செய்தேன். அன்னை சத்தியா போக்கு வரத்துக்
கழக மேலாளரை அணுகிப் பேசி, குடியிருப்பு வளாகப் பகுதியில் பேருந்து
நிறுத்தம் கொண்டுவந்தேன். நகராட்சித் தலைவரிடம் பேசி,
அன்றாடம் தெருக்களில்
துப்புரவுப் பணி நடைபெறுவதை உறுதி செய்தேன் !
காவல் கண்காணிப்பாளரிடம்
பேசி,
வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிக்கும் காவலர்களை அனுப்பச்
செய்து இரவுச்சுற்றுக்கு (NIGHT
PATROL) ஏற்பாடு செய்திருந்தேன் !
நகராட்சி மூலம் குடியிருப்புப்
பகுதியில் இரு முனைகளில் பொன்மையொளி ((SODIUM VAPOR LAMP) விளக்கு நிறுவச் செய்தேன் ! நகராட்சித் தலைவரை அழைத்து
குடியிருப்பு வளாகப் பகுதியில் ஒரு நாள் கலை மற்றும் பண்பாட்டு விழாவை நடத்தினேன்
!
நலச் சங்கத்தின் பெயரில்
நாள்காட்டி அச்சிட்டு குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் இலவயமாகப் புத்தாண்டு நாளில் வழங்கச் செய்தேன்
! குடியிருப்பு வளாகப் பகுதிக்கு எழில்நகர் என்று பெயர் சூட்டிப்
பெயர்ப் பலகையும் வைக்கச் செய்தேன் ! குடியிருப்புப் பகுதியில் மூன்று தெருக்கள் இருந்தன; அவற்றுக்கு சேரன் தெரு, சோழன் தெரு, பண்டியன் தெரு எனப் பெயர் சூட்டி அதைப் புழக்கத்திற்குக் கொண்டு வரச் செய்தேன் !
குடியிருப்போர் நலச் சங்கத்
தலைவர் என்ற முறையில் ஏதாவது கோரிக்கையுடன் நான் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் என்னை முதலில் “நான், வேதரெத்தினம், ஆட்சி அலுவலர்,
அரசினர் தொழிற் பயிற்சி நிலயம், ஓசூர்“
என்று முதலில் சொல்லிவிட்டு அடுத்ததாகத்தான் குடியிருப்போர் நலச் சங்கத்
தலைவர் என்று சொல்லிக் கொள்வேன் !
அறிமுகம் செய்துகொண்டதும், அந்த அலுவலரின் இசைவை எதிர்பாராமல் இருக்கையில் அமர்ந்து பேசத் தொடங்குவேன்
!
இந்த அணுகுமுறை மிகவும்
பயனுள்ளதாக இருந்தது; என்னை உரிய மதிப்புடன் நடத்தவும்
என் கோரிக்கைகளை நேர்மறையாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தை அந்த அலுவலருக்கு ஏற்படுத்தவும் உதவியது
!
குடியிருப்போர் நலச் சங்கத்
தலைவரக பல செயல்களை நிறைவேற்றிட நான் வகித்த ஆட்சி அலுவலர் என்னும் பதவி பெருமளவுக்
கைகொடுத்தது !
நலச்சங்கப் பணிகளில் எனக்குப்
பக்கத் துணையாக நின்று உழைத்தவர்கள் தொழில் வணிகத் துறையைச் சேர்ந்த திரு.சிராஜுதீன், வட்டார வளர்ச்சி அலுவகத்தை சேர்ந்த திரு.ஜான் ஆசீர்வாதம் வருவாய்த் துறையைச் சேர்ந்த திரு.கணேசன்,
வீட்டு வசதி வாரிய அலுவலகத்தைச் சேர்ந்த திரு.அரிகிருட்டிணன்,
நுண்ணுயிர் ஆய்வுத் துறையைச் சேர்ந்த திரு.கிருபா
ஆகியோர் !
ஓராண்டுக் காலம் தலவராகப்
பொறுப்பேற்று நலப் பணிகள் பலவற்றை நிறைவேற்றிக் காட்டி நற்பெயர் ஈட்டியிருந்தேன். 22
ஆண்டுகள் கழித்து அண்மையில் நான் குடியிருந்த வளாகப் பகுதியைப் பார்க்க
நேர்ந்தது !
அப்பகுதி அதன் பொலிவை முற்றிலும்
இழந்திருந்தது; முள் கம்பி வேலி சிதைந்து கிடந்தது
! ஒருவர் தொடங்கி வைத்த நற்பணியை அடுத்து வருபவர்களும் தொய்வில்லாமல்
தொடர்ந்தால் தான் எந்தத் திட்டமானாலும் மக்களுக்கு உரிய பயன்களைத் தரும் !
இளம்பரிதி ஹுண்டாயில் பணியில்
சேர்ந்தாயிற்று. கவிக்குயில் TIGOLD என்னும்
தொழிலகத்தில் பணியில் இணைந்தாயிற்று. ஓசூர் அரசினர் மகளிர் பள்ளியில்
படித்து வந்த இளவரசி 1998 ஏப்ரலில் 10 ஆம்
வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் புனித ஜோசப் மேனிலைப் பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினார்
!
ஒரு மாறுதலுக்காக, இப்போது அரசியல் களம் பற்றியும் சிறிது பார்ப்போம். 1996 ஆம் ஆண்டு ஏப்பிரல் / மே மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத்
தேர்தலில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால்,
எதிர்க்கட்சிகள் பல சேர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்தன.
தேவ கவுடா தலைமையில் ஆட்சி அமைந்தது !
இந்த ஆட்சி ஈராண்டுகளுக்கு உள்ளேயே கவிழ்ந்து போனதால்,
1998 பிப்ரவரியில் நாடு மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது
!
இந்தத் தேர்தலிலும் எந்தக்
கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய சனதாக் கட்சி 182 இடங்களிலும், இந்தியப் பேராயக் கட்சி 141 இடங்களிலும் வென்றிருந்தன !
எனவே, பாரதிய சனதாக் கட்சி அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் சில கட்சிகளைத்
தன்னுடன் சேர்த்துக் கொண்டு தேசிய சனநாயக்
கூட்டணி என்ற பெயரின் ஒரு அமைப்பை உருவாக்கி, திரு.வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது !
இந்த அமைச்சரவையில் தமிழ்
நாட்டைச் சேர்ந்த திரு.அரங்கராசன் குமாரமங்கலம்
(பா.ஜ.க), திரு.தம்பித்துரை (அ.தி.மு.க), சேடப்பட்டி திரு.முத்தையா (அ.தி.மு.க), கடம்பூர் திரு.சனார்த்தனம் (அ.தி.மு.க), திரு.ஆர்.கே.குமார் (அ.தி.மு.க), வாழப்பாடி திரு.இராமமூர்த்தி (தமிழக இராசீவ் காங்கிரசு), திரு.தலித் எழில்மலை (பா.ம.க) ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்தனர்.
!
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி
மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),13]
{26-05-2020}
----------------------------------------------------------------------------------------------
இருங்காட்டுக் கோட்டை.
ஹூண்டாய்
சீருந்து தயாரிப்பு நிறுவனம்
ஹூண்டாய் தயாரிப்பான சீருந்துகள்
ஓசூர்
இராயக் கோட்டை சாலை,
வீட்டு வசதி வாரிய (அரசு அலுவலர்)
வாடகைக் குயிருப்புப் பகுதிக்கு
”எழில் நகர்” என்று பெயர் சூட்டினேன்
ஓசூர், இராயக்கோட்டை சாலை,
வீட்டு வசதி வாரிய (அரசு அலுவலர்)
வாடகைக் குடியிருப்பில்
சேரன் தெருவில் உள்ள வீடுகள்.
இந்தத் தெருவில் தான்
நான் குடியிருந்தேன்
குடியிருப்போர் நலச் சங்கத்தின்
தலைவர், செயலர், பொருளாளர்
உள்ளிட்ட ஆட்சியாளர்கள்.
No comments:
Post a Comment