name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (11) :1962-1963 நிகழ்வுகள் - புகுமுக வகுப்பு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, March 28, 2020

காலச் சுவடுகள் (11) :1962-1963 நிகழ்வுகள் - புகுமுக வகுப்பு !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு. வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1962-1963 நிகழ்வுகள் !

                                   (சுவடு.11) புகுமுக வகுப்பு !


----------------------------------------------------------------------------------------------

எனது பள்ளிப் படிப்பு 1960 மார்ச்சு மாதம் நிறைவு பெற்றது. அதிலிருந்து ஈராண்டுகள் மாமா கடையிலேயே காலம் கழிந்தது. 1962  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கும், இந்திய நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பேராயக் கட்சி (CONGRESS) 139 இடங்களில் வென்றது. தி.மு.. 50 இடங்களைப் பெற்றது. காமராசர் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தார் !

அப்பொழுது தினத்தந்தி நாளிதழில் வெளியாகத் தொடங்கியகன்னித்தீவுபடக்கதை 60 ஆண்டுகளாக இன்றும் வெளிவந்து கொண்டிருப்பது உலக சாதனையாகப் பலராலும் கருதப்படுகிறது. ஆனால் மக்களை முட்டாளாக்கும் செயலாகவே நான் இதைப் பார்க்கிறேன் !

ஈராண்டுகள் மாமா கடையில் இருந்த பிறகு 1962 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் நாள் தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசு கலைக் கல்லூரியில் சேர்கிறேன்.  எப்படி ? அதுவே ஒரு புதிய துய்ப்பு (அனுபவம்) !

பல்தொழிற் பயிலகத்தில் (POLYTECHNIC) சேர்வதற்கு, புகுமுக வகுப்பில் கணிதப் பிரிவு எடுத்துப் பயின்று தேர்ச்சி பெற்று வருமாறு நாகப்பட்டினத்தில் சொல்லி இருந்தார்கள் அல்லவா ? அதன்பொருட்டு, உசாவி (விசாரித்து) அறியும் வகையில், மாமா என்னையும் அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் சென்றார். கணிதப் பிரிவில் சேர்க்கவேண்டும் என்பதை மாமாவும் மறந்துவிட்டார்; என்னிடமும் சொல்லவில்லை !

கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் அனுப்பி, நேர்காணலுக்குப் பல மாணவர்கள் வந்திருந்தனர். நான் விண்ணப்பம் அனுப்பாமலேயே உசாவியறிய வந்திருந்தேன். பள்ளியிறுதி வகுப்பு மதிப்பெண் பட்டியலுடன் கல்லூரி முதல்வர் கேப்டன். முருகையனைச் சந்தித்து மாமா விவரம் கேட்டார். பள்ளி இறுதிவகுப்பில் நான் 600 மதிப்பெண்களுக்கு 359 பெற்றிருந்தேன். இது கிட்டத்தட்ட 60 % ஆகும். அக்காலத்தில் 60% பெறுதல் என்பது இக்காலத்தில் 95 % பெறுவதற்குச் சமம் !

கல்லூரியில் சேர நான் விண்ணப்பமே அனுப்பவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட  முதல்வர், அலுவலகத்தில் விண்ணப்பம் வாங்கி நிறைவு செய்து கொண்டு வாருங்கள், சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். அலுவலகம் வந்தோம்; முதல்வர் சொன்னதைச் சொன்னோம்; விண்ணப்பம் தந்தனர் !

வெளியில் வந்தோம். என் ஆசிரியர் தேசிகாச்சாரி அங்கு நின்றிருந்தார். அவரிடம் கொடுத்து விண்ணப்பத்தை நிறைவு செய்து வாங்கி எடுத்துச் சென்று முதல்வரிடம் தந்தோம். அவர் புகுமுக வகுப்பில் உயிரியல் பாடத் தொகுதி (NATURAL SCIENCE GROUP) வகுப்பில் இடம் தந்தார். கல்லூரி விடுதியிலும் அன்றே இடம் கிடைத்தது. உரிய கட்டணங்களைச் செலுத்தினோம். ஊருக்குத் திரும்பினோம்; இரண்டு நாள்களில் மீண்டும் சென்று கல்லூரியிலும் விடுதியிலும் சேர்ந்து கொண்டேன் !

கல்லூரியில் மொழிப்பாடமான தமிழைத் தவிர பிற பாடங்களான பயிரியல் (BOTONY), விலங்கியல் (ZOOLOGY), உளவியல் (PSYCHOLOGY), பொருளியல் (ECONOMICS), இயற்பியல் (PHYSICS), வேதியியல் (CHEMISTRY) அனைத்தும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டன. நான் பள்ளியிறுதி வகுப்பு வரைப் படித்ததோ தமிழ் வழியில் !

ஒருமாத காலம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்வது என்று சிந்தித்தேன். நானாக ஒரு முடிவு எடுத்தேன் ! காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும், புத்தகங்களை எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த முந்திரிக் காட்டுக்குச் சென்று ஆங்கிலத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் படித்தேன் ! பாடங்கள் புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி, திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டே இருப்பது என்று முடிவு செய்தேன்; செயல்படுத்தினேன் !

காலைக் கருக்கலில் மெல்ல மெல்ல இருள் விலகி ஒளி பெருகுவதைப் போல, எனக்குப்  பாடங்கள் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. நான்கே மாதங்களில் எனக்கு எல்லா பாடங்களும் புரிந்தன; ஆங்கிலத்தில் எழுதவும் ஓரளவு பேசவும் முடிந்தது. இதற்கிடையில், நாகை பல்தொழில் பயிலகத்தில்  சேர்வதற்கான விளக்கக் குறிப்பைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது !

புகுமுக (P.U.C) வகுப்பில் கணிதப் பிரிவு எடுத்துத் தேர்ச்சி பெற்றிருந்தால் தான், பல்தொழில் பயிலகத்தில் (POLYTECHNIC)  சேரமுடியும் என்பதைத் தெரிந்து அதிர்ந்து போனேன் ! எனக்குத் தரப்பட்டிருந்தது உயிரியல் பாடத் தொகுதி (NATURAL SCIENCE GROUP). ”என்ன செய்வது ? சேர்ந்தாகி விட்டது ! படிப்போம் !  நடக்கிறபடி நடக்கட்டும் !” என்று மனதைத் தேற்றிக் கொண்டு படிப்பைத் தொடர்ந்தேன் !

புகுமுக வகுப்பில் முதல்வர் கேப்டன் முருகையன் இயற்பியல் பாடம் சொல்லித் தந்தார். பேராசிரியர் கைலாசம் வேதியியலும், பேராசிரியர் சேசாசலம் பொருளியல் பாடமும் எடுத்தார்கள். பேராசிரியர் சோசப் சின்னப்பா ஆங்கிலப் பாடமும், பேராசிரியர் வெங்கடாசலம் தமிழ்ப் பாடமும் எடுத்தார்கள். உளவியல் பாடத்தை விரிவுரையாளார் பாலசுப்ரமணியனும், பயிரியல் பாடத்தை விரிவுரையாளர் சின்னையனும், விலங்கியல் பாடத்தை பேராசிரியர் முத்துக் குமாரசாமியும் எடுத்தார்கள் !

வகுப்பில் முதல் வரிசையில் அமர்வது என்பதை ஏழாம் வகுப்பிலிருந்து நான் பின்பற்றி வந்தேன். அந்தப் பழக்கத்தைக் கல்லூரியிலும் தொடர்ந்தேன். அது எனக்கு மிகவும் கைக்கொடுத்தது ! வகுப்பில் முன் வரிசையில் அமர்வது, புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிப்பது ஆகிய இரு வழக்கங்களும் எனது ஆங்கில அறிவை விரிவாக்கியது !

பாபநாசத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்யும் பொறுப்பில் 1964-65 ஆம் ஆண்டுகளில் இருந்தபோது, எனக்குக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்  கணக்குகளைச் செய்வதில்  என் ஆற்றல் அளவு கடந்து பெருகியது. இப்போதும் கூட அந்த வல்லாற்றல் நிலைத்து நிற்கிறது. அதுபோன்று ஓராண்டுக் கால புகுமுகவகுப்புப் படிப்பு எனக்கு ஆங்கிலத்தில் தங்கு தடையின்றிப் பேசவும் எழுதவும் தேவையான ஆற்றலை  வாரி வழங்கி  உள்ளது !

அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ( GOVT .I.T.I ) எனது அன்றாடப் பணிகள்  மட்டுமன்றி விதிமுறைகள் மற்றும் சட்டநுணுக்கங்கள் தொடர்பான நடவடிக்கைகளிலும் என் பணி சிறந்து விளங்க என் ஆங்கில அறிவு நிரம்ப உதவி இருக்கிறது. பாதிக்கப் பட்ட  ஒரு அலுவலருக்கு  அவருடைய  வழக்குத் தொடர்பாக நான் எழுதித் தந்த ஐந்து வரிச் சட்ட விளக்கம் நீதிமன்றத் தீர்ப்பில் அப்படியே எடுத்துக் குறிப்பிடப் பெற்றிருப்பதைக் கண்டு  நானே வியந்து போனேன் !

புகுமுக வகுப்பு இறுதித் தேர்வில், இயற்பியலில் (PHYSICS) மாணவர்கள் எதிர்பார்த்த கேள்விகள் பெரும்பாலும் வரவேயில்லை. நிரம்ப மாணவர்கள் இயற்பியல் பாடத் தேர்வைச் சரியாக எழுத முடியாமல் தேறாமல் போயினர் (FAILED). ஆனால் நான், எல்லாப் புத்தகங்களையும் பலமுறைத் திரும்பத் திரும்பப் படித்திருந்ததால், தேர்வில் கேட்டக் கேள்விகளுக்கு என்னால் விடை எழுத முடிந்தது.   புகுமுக வகுப்பு மாணவர்களிலேயே நான் தான் இந்தப் பாடத்தில் முதல் மதிப்பெண் (HIGHEST SCORER AMONG P.U.C. STUDENTS) எடுத்திருந்தேன் !

மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று, அலுவலக எழுத்தர் எல்லோருக்கும் வழங்கிக் கொண்டிருந்தார்.  எனது முறை வரும்போது, மதிப்பெண் சான்றிதழைக் கையில் எடுத்துக் கொண்டு, முதல்வர் அறைக்கு என்னையும் அழைத்துச் சென்றார்.  மதிப்பெண் சான்றிதழைக் கையில் வாங்கிய முதல்வர் கேப்டன் முருகையன் அவர்கள் அதை என்னிடம் தந்துமருத்துவக் கல்விக்கு விண்ணப்பம் அனுப்பி வை. உனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்என்று அறிவுரை கூறினார். சரி என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். !

முதல்வர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்த  எல்லா மாணவர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். என் மதிப்பெண் சான்றிதழை வாங்கிப் பார்த்து விட்டு அனைவரும் என்னுடன்  கைக்குலுக்கியதில் என் கைகள் இரண்டு நாள் வரை வலித்தது !

கல்லூரி விடுதியில் அறை எண் 49 –இல் தங்கியிருந்தேன். இதே அறையில் எனக்கு முன்மையர்களான (SENIORS) அரியலூர் மாவட்டம் புங்கங்குழி ஒட்டக் கோயிலைச் சேர்ந்த திரு.தியாகராசன் [B.A (Economics)], திருவாரூர் மடப்புரத்தைச்   சேர்ந்த திரு.சிவானந்தம் [B.A. (Economics)} ஆகியோரும்,  என் வகுப்புத் தோழரான, உடையார் கோயில் தனக்கோடியும் தங்கியிருந்தனர் !

அரியலூரில் காவல் ஆய்வாளராக இருந்த திரு.இராமசாமி என்பவரின் மகன் தமிழரசனும் என் அறைத் தோழரே ! இந்தச் சூழ்நிலையில் இந்திய அரசியல் அரங்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டன !

நேரு காலத்தில் அமைச்சர் பதவியில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் உள்ளுக்குள் கலகம் செய்து கொண்டிருந்தனர். அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கி கட்சிப் பணிக்கு அனுப்புவதற்காககாமராசர் திட்டம்  கொண்டு வரப்பட்டது !

திட்டத்தைக் கொண்டுவந்த காமராசரே, அனைவருக்கும் முன்னோடியாக  இருக்க விரும்பினார். அதன்படி, 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி திரு.பக்தவத்சலத்திடம் ஆட்சியை ஒப்படைத்தார். தமிழ்நாட்டில் இந்தியப் பேராயக் கட்சியின் சரிவு காலம் அன்று தான் தொடங்கியது !

----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),17]
{30-04-2020}
----------------------------------------------------------------------------------------------


முந்திரித் தோப்பு
காலச்சுவடுகள்
 
முந்திரிப்பழம்








No comments:

Post a Comment