தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் : 1957 நிகழ்வுகள் !
(சுவடு.08) நந்தன் தீக்குளிப்பு !
ஒன்பதாம் வகுப்புப் படிப்பும்
1957
–ஆம் ஆண்டில் ஆயக்காரன்புலம் பள்ளியிலேயே தொடர்ந்தது. தமிழ் மீதான எனது
ஆர்வம் வளர்ச்சி பெறத் தொடங்கியதும் இவ்வகுப்பிலிருந்து தான் ! ஆயக்காரன்புலம் முதல் சேத்தியைச் சேர்ந்த திரு.க.
தாயுமானவன் என்பவர் தமிழாசிரியர். அவர் பாடம் சொல்லிக்
கொடுக்கும் முறையே புதுமையாக இருக்கும் !
ஒருநாள் நந்தனார் பற்றிய
தமிழ்ப் பாடம் ! தமிழாசிரியர் திரு.தாயுமானவன்
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். நந்தனார் தில்லைக்குச் சென்று
கூத்தரசனான நடராசப் பெருமானை வணங்க விரும்பினார். தில்லைக்குச்
செல்கிறார் !
ஆனால் தில்லைக் கோயில்
பார்ப்பனர்கள் அவரை உள்ளே விட மறுக்கிறார்கள் – நந்தனார் தாழ்த்தப்பட்ட
குலத்தவர் என்பதால் ! நந்தனார் பார்ப்பனர்களிடம் இறைஞ்சுகிறார்.
“நீ கோயிலுக்கு உள்ளே வரவேண்டுமெனில், தீயிலிறங்கி
உன் அழுக்குகளை எரித்து விட்டு வரவேண்டும்” என்று கட்டுப்பாடு
விதிக்கின்றனர் !
நந்தனார், பக்தி மேலீட்டால் இசைவு தெரிவிக்கிறார். தீக்குண்டம்
வளர்க்கப்படுகிறது. நந்தனார் அதில் இறங்கி வெளிவருகிறார்.
இப்போது நந்தானாரின் கருப்பு உடல், சிவப்பாகி,
மார்பில் முப்புரி நூலுடன் காட்சியளிக்கிறார் !
இதைச் சொல்லிக் கொண்டு
வந்த தமிழாசிரியர் திரு.தாயுமானவன், “ஆகவே மாணவர்களே ! நீங்கள் வீட்டிற்குச் சென்றதும் தீ
வளர்த்து அதில் இறங்கி நடந்து வாருங்கள் ! வெளியே வரும்போது உங்கள்
மார்பில் முப்புரி நூல் (பூணூல்) கிடக்கும்
! நீங்களும் பார்ப்பனர்கள் ஆகிவிடலாம்” என்றாரே
பார்க்கலாம் ! மாணவர்களின் சிந்தனையைக் கிளறிவிட்டுத் தமிழார்வத்தை
ஊட்டுவதில் தாயுமானவனுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது !
ஒன்பதாம் வகுப்பில் படித்துக்
கொண்டிருக்கையில் நடந்த இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரு ஆசிரியர் அன்னிலை (TEMPORARY) இடத்தில் பணி புரிந்து வந்தார். அவர் பெயர் நினைவில்லை. நிலைப்
பணி (REGULAR POSTINGS) பெற்ற இன்னொருவர் அவர் இடத்திற்கு வந்துவிட்டார்.
மூன்று ஆண்டுகளாக அன்னிலைப் பணிபுரிந்து வந்தவர் பணியிழக்க நேர்ந்தது.
பணியிழந்து வெளியேறுபவருக்கு விடைதரும் விழா (FAREWELL
PARTY) நடைபெறுகிறது !
பலரும் அவருக்குப் பாராட்டுரை
வழங்குகின்றனர். இறுதியில் அவர் நன்றி சொல்லி உரையாற்றுகிறார்.
அவர் பாட்டுப் பாடும் திறமை பெற்றவர் என்பதை அறிந்த யாரோ ஒருவர்,
ஒரு பாட்டுப் பாடும்படி அவரைக் கேட்டுக் கொண்டார் !
சற்று உணர்ச்சி வசப்பட்டிருந்த
அந்த ஆசிரியர், “நான் பெற்ற செல்வம், நலமான செல்வம் ! தேன்மொழி பேசிடும் சிங்காரச் செல்வம்
! தொட்டால் மணக்கும் சவ்வாது ! சுவைத்தால் இனிக்கும்
தேன் பாகு ! “ என்று சற்றுத் துன்பியல் இசையுடன் பாடும்போது
அரங்கமே கண்ணீர் வடித்தது; அவர் கண்களில் இருந்தும் நீர் வழிந்து
கொண்டிருந்தது ! அத்துணை இனிய குரலை நான் கேட்டதே இல்லை
!
வாழ்க்கையில் மறக்கமுடியாத
துய்ப்புகளை (அனுபவங்கள்) ஒவ்வொரு மனிதனும்
பெறவே செய்கிறான். நானும் இவ்வாறு பல துய்ப்புகளைப் பெற்றிருக்கிறேன்;
அவற்றில் ஒன்றான இந்நிகழ்வு என்றும் மறக்க முடியாத இனிய துய்ப்பு என்பதில்
ஐயமில்லை !
திரு.என்.மகாலிங்கம் என்னும் ஆசிரியர், ஒன்பதாம் வகுப்பில் எனக்குக் கணிதப் பாடம் எடுத்து வந்தார். கணிதத்தில் எனக்கு எல்லாம் அத்துபடி
– குறிக் கணக்கியலைத் தவிர ! அது என்ன குறிக் கணக்கியல்
? அதுதான் அய்யா “ALGEBRA” ! இன்று வரைக் குறிக்கணக்கியலுக்கும்
எனக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துவருகிறது !
நாங்கள் பள்ளி செல்லும்
வழியில் சாயும் புலத்தில் மேலக் கடக்கொம்பு (WESTERN PASSAGE CAUSE TO
CROSS) என்னுமிடத்திற்கு வடபுறமாய் ஒருபண்ணை வீடு இருந்தது. அந்தப் பண்ணையார் பெயர் நினைவில்லை. அவர் வீட்டில் ஐந்தாறு காவல் நாய்கள் வளர்த்து
வந்தார் !
யாரை எங்கு கண்டாலும் அவை
துரத்தத் தொடங்கி விடும். ஒரு மழைக்காலம். பள்ளி விட்டு நாங்கள் ஐந்தாறு பேர் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம்.
மேலக் கடக்கொம்பு பகுதியில் எங்களைப் பார்த்துவிட்டு அந்த நாய்கள் துரத்தி
வந்தன. நாங்கள் கடிநெல்வயலை நோக்கித் தலைதெறிக்க ஓடிவருகிறோம்
!
ஓடி வருகையிலேயே பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். ஒரு நாய் என் கெண்டைக் காலைக் குறி வைத்துக் கடிக்க வருகிறது. அவ்வளவு தான் ! பயத்தில் அலறினேன். “அய்யோ” என்று ஓங்கி ஒலித்துக் கொண்டு, மடக்கி வைத்திருந்த குடையைப் பின்னோக்கி நீட்டினேன் !
குடையின் கூர்முனை நாயின்
வாய்க்குள் சென்று, அதன் தொண்டையைத் தாக்கியது.
தாக்குண்ட நாய் போட்டக் கூக்குரலில் எல்லா நாய்களும் பின் வாங்கின.
நான் உள்பட எல்லோரும் தப்பித்தோம். அன்று என்னிடம்
குடை இருந்திராவிட்டால், நூறு கிராம் சதையையாவது அந்நாய் கடித்துக்
குதறி இருக்கும். அன்று என்னே பயங்கரமான துய்ப்பு (அனுபவம்) எனக்கு !
இந்த அச்சம் தரும் துய்ப்புக்கு
இடையில் வேறொரு செய்தியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். 1957
–ஆம் ஆண்டு நடிகர் ம.கோ.இரா
(M.G.R) “இன்பக் கனவு” என்னும் நாடகத்தை வேதாரணியத்தில்
நடத்தினார். அப்போது வேதாரணியத்தில் தி.மு.க. முன்னணித் தலைவராக இருந்த
திரு.சிவ.கனகசுந்தரம் என்பவர் இதற்கு ஏற்பாடு
செய்திருந்தார் !
நினைவில் வாழும் சு.சிவசுந்தரம் அவர்களின் வீடு இருக்கும் அதே திடலில் இந்த நாடகம் நடைபெற்றதாக
நினைவு. எங்கள் வீட்டுக்கும் நாடகத்திற்கான ஒரு நுழைவுச் சீட்டு
கிடைத்திருந்தது ! கடிநெல்வயலிலிருந்து நாடகம் காணப் பலர் சென்றிருந்தோம்
!
அவர்களுள் என் நினைவில் நிற்கும் சில பெயர்களில் அண்ணன்மார் திரு.கா.நடராசன், திரு.கோ.தனசாமி, திரு.ச.முருகையன், திரு.ந.வீரையன்,திரு.ச.தாயுமானவன், திரு.பா.தெட்சணாமூர்த்தி, என்னொத்த அகவையினரான திரு.பா.தங்கசாமி, திரு.க.வேம்பையன் திரு.கோ.மதிவாணன், திரு.சி.சுப்ரமணியன், ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
சிற்றப்பா திரு.சண்முகவேல் தேவர் அவர்களும் வந்திருந்தாக
நினைவு !
நாடகத்தின் கதையோ, அதில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளோ இப்பொழுது துப்புரவாக நினைவில் இல்லை.
ம.கோ.இராவும் (M.G.R), குண்டு மணியும் சண்டைபோடும் காட்சியும், குண்டுமணியை
ம.கோ.இரா. (M.G.R) தூக்கி
வீசும் காட்சியும் மட்டுமே நினைவில் இருக்கிறது !
நாடகம் பார்த்துவிட்டுத் திரும்புகையில் இரவைப் பகலாக்கிக் கொண்டு பால்நிலா வானில் ஒளியைப் பொழிந்து கொண்டிருந்தது. சாயும்புலம் (சாம்பலம்) கரையோரமாக
விடியற் காலை 4-00 மணி
வாக்கில் கடிநெல்வயலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். கரையோரத்தில் பத்து அடி உயரத்திற்குத் தாழை மரங்கள் வளர்ந்து நின்றன. வைகறை நேரத்து இளந் தென்றலில் தாழம் பூ மணம் மனதை மயக்குகிறது. பக்கத்தில் இருக்கும் நெல்வயலுக்கு அவை தான் தடுப்பு வேலி. தாழை மரங்களின் அடியில் நிரம்ப காய்ந்த ஓலைகள். எங்களுடன் வந்த குறும்புக் காரர இளைஞர் ஒருவர் விளையாட்டாக அந்த ஓலைகளில் தீ வைத்து விட்டார்
!
தீ மள மளவெனப் பரவி ஒரு
தென்னை உயரத்திற்குச் சுடர் விட்டு எரியத் தொடங்கியது. வேலி நெடுகிலும் தீப்பற்றிக் கொண்டது. கடிநெல்வயல் வெள்ளாழர் காட்டைச் சேர்ந்த சிலருக்கும் கோவில் தாவைச் சேர்ந்த ஒரு பகுதியினருக்கும் சில சச்சரவுகளும் அதனைத் தொடர்ந்து கடுமையான பகையும் இருந்த நேரம் அது. எரிந்து கொண்டிருக்கும் வேலி கோவில்தாவுப்
பகுதியைச் சேர்ந்தது ! [கோ = அம்பு; வில் = அம்பை எய்திடும் வில்; தாவு = உறைவிடம்; ஒருகாலத்தில் அம்பும் வில்லும் வனைவுக் களமாக இவ்வூர் இருந்திருக்கலாம்.]
நாடகம் பார்த்துவிட்டு
வந்த அனைவருக்கும் மனதில் பயம் சூழ்ந்துகொண்டது. கோவில்தாவைச்
சேர்ந்தவர்கள் வந்துவிட்டால் மோதல் ஏற்படுமே என்ற அச்சம் தோன்றி எங்களை ஆட்டுவித்தது.. அவ்வளவு தான் ! அங்கிருந்து நாங்கள் எடுத்த ஓட்டம் மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும்
எங்கள் வீடுகளை வந்து அடையும் வரை நிற்கவே
இல்லை !
வாழ்க்கையில் ஓரிருவர்
செய்கின்ற தவறால், பலர் தேவையில்லாமல் இன்னலுக்கு
ஆட்படுவதை அன்று என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது ! காலம் தான் நமக்கு எத்துணைப் பாடங்களைக் கற்பிக்கிறது ! கற்றுக் கொள்பவர்கள் வாழ்வில் உயர்கிறார்கள்; தவறவிடுவோர்
தாழ்ந்தே நிற்கிறார்கள் !
அரசியல் களத்தில் ஒரு புதிய
உதயம்
! 1957 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முதலாகப் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் 15 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டனர் !
அவர்களுள் திரு.மு.கருணாநிதி (குளித்தலை),
திரு.கே.எம்.சுப்ரமணியம் (ஆத்தூர்), திரு.இருசப்பன் (தலைவாசல்), ஆகிய பெயர்கள்
நினைவிருக்கின்றன. திருக்கோட்டியூர் தொகுதியில் நின்ற திரு.கண்ணதாசன் தோற்றுப் போனார். தேர்வுசெய்யப்பட்ட பிற உறுப்பினர்களின்
பெயர்கள் நினைவில்லை !
மறதி என்பது சில நேரங்களில்
நன்மை தரக் கூடியதாகவே இருக்கிறது. இல்லை என்றால்
மூளை எத்துணைச் செய்திகளைத் தான் நினைவில் வைத்திருக்கும். பளு
அதிகமானால் மூளைக்கும் சோர்வு ஏற்படாதா என்ன ?
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),14]
{27-04-2020}
No comments:
Post a Comment