name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (16) :1970-1971 நிகழ்வுகள் - வணக்கம் புதுகை !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, March 28, 2020

காலச் சுவடுகள் (16) :1970-1971 நிகழ்வுகள் - வணக்கம் புதுகை !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1970-1971 நிகழ்வுகள் !

                                   (சுவடு.16) வணக்கம் புதுகை !

----------------------------------------------------------------------------------------------

திரு.சிவசுந்தரம் தன் ஈராண்டுப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1970 ஆம் ஆண்டு சூலை மாதம் வேதாரணியம் சென்றுவிட்டார். அதன்பிறகு நான் மட்டுமே, வாடகை வீட்டில் தங்கி இருந்தேன் !

அப்பொழுது புதிதாக ஒரு ஈருருளி (HERCULIS CYCLE) உருபா 210 கொடுத்து வாங்கி இருந்தேன். தனியாக அறையில் இருந்ததால், அன்றாடம் நூலகம், பூங்கா என்று வெளியில் எங்காவது சென்று விட்டு உணவகத்தில் இரவு உணவையும் அருந்திவிட்டு அறைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் !

புதுக்கோட்டையில் திருவப்பூர் என்னுமிடத்தில் ஒரு அன்னிலைத் திரையரங்கம் (TOURING THEATER) இருந்தது. இங்கு பழைய திரைப்படங்களே பெரும்பாலும் திரையிடப்படும். பாடலின் இனிமைக்காகப் பழைய படங்களை நான் விரும்பிப் பார்ப்பது உண்டு !

இவ்வாறு நான் பார்த்த பழைய படங்கள் நூற்றுக் கணக்கிலிருக்கும். பின்னாளில் திருக்கோகர்ணத்தை அடுத்த கோயில்பட்டியிலும் ஒரு அன்னிலைத் திரையரங்கம் (TOURING THEATER) உருவாயிற்று. இங்கும் நான் சென்று படம் பார்த்திருக்கிறேன் !

இந்தத் திரையரங்கத்தில் முதல் வகுப்பு என்பது மரநாற்காலி இருக்கைகள் போடப்பட்ட சற்று உயரமான இடம்முதல் வகுப்பு நுழைவுக் கட்டணமே 75 பைசா தான். இங்கு மகாதேவி என்னும் படம் பார்க்கச் சென்றிருந்தேன்படம் பார்க்க என்னுடன் இளநிலை உதவியாளர்  திரு.கோபாலன் என்பவரும் வந்திருந்தார் !

படத்தில் எதிர்நாயகனாக  (VILLAIN) நடித்த வீரப்பாவைக் கெட்ட சொற்களால் திட்டிக் கொண்டு, திரு.கோபாலன் அவர் மீது வீசுவதாக நினைத்துக்கொண்டு தன் செருப்பைக் கழற்றி வீசினார். அது திரையில் போய் விழுந்ததும், கூச்சல் குழப்பம் ஏற்பட்டுப் படம் நிறுத்தப்பட்டது. ஐம்பத்தோரு ஆண்டுகளாகியும் இந்த நிகழ்ச்சி என் நினைவுகளில்  இன்றும் (2020) பசுமையாக இருக்கிறது !

1970 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயிற்சி நிலைய முதல்வர் திரு.சக்கரவர்த்தி ஐயங்கார் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்காரைக்குடியிலிருந்து  திரு.சங்கரநாராயணன் என்பவர் வந்து கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் பின்பு ஒரு மாதம் சென்றபின் திரு.டி.பி.திருநாவுக்கரசு என்பவர் முறைமை (REGULAR) முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்மேலாளர் திரு.அரங்கராசுலு இடமாற்றலில் சென்னை சென்றுவிட்டார் !

அவருக்குப் பதில் திரு.வேதையன் வந்தார். கணக்கராகத் தேவகோட்டைடையைச் சேர்ந்த  திரு..மணி என்பவர் பொறுப்பேற்று இருந்தார். இளநிலை உதவியாளராகப் பணி புரிந்து வந்த திருப்புல்லாணி திரு..உலகநாதன் பரமக்குடி சென்றுவிட்டார். தட்டச்சராகப் பணி புரிந்த திரு.எம்.நடராசன் பதவி உயர்வில் நீலகிரி மாவட்டம் கூனூர் சென்று விட்டார். திரு.சி.தருமராசன் தஞ்சாவூர் சென்றுவிட்டார் !

அலுவலகத்தில் நட்புடன் பழகிய  பழைய பறவைகள் எல்லாம் வெவ்வேறு திசைகளை நோக்கிப் பறந்து சென்றுவிட்டன. புதிய பறவைகள் வந்து அவற்றின் இருக்கைகளில் அமர்ந்து கொண்டன. நான் மட்டுமே அங்கு எஞ்சி இருந்த பழைய பறவை !

இதற்கிடையில் 1970 ஆம் ஆண்டு, சூன் மாதம் 18 ஆம் நாள் கடிநெல்வயல் திரு..மீனாட்சி சுந்தரம் அவர்களின் மூத்த மகள் செல்வி.விசயலட்சுமிமாங்குடி திரு.இரா.தங்கராசு, இளைய மகள் செல்வி.கோகிலம்ஆயக்காரன்புலம், செட்டியார் குத்தகை திரு.சீ.பசுபதி ஆகியோரின் திருமணம் வேதாரணியத்தில் நடைபெற்றது

திருமணத்திற்கு முதல்நாள் மாங்குடியிலிருந்து மாப்பிள்ளையை அழைத்து வந்தாகிவிட்டது. மாப்பிள்ளையுடன் ஈசனக்குடி அத்தான் திரு.குழந்தைவேல் பிள்ளையும் வந்திருந்தார். செட்டியார் குத்தகை மாப்பிள்ளை அழைப்பும் நிறைவடைந்தது. இந்த நேரத்தில் ஏதோ காரணத்திற்காக ஈசனக்குடி அத்தான் திரு.குழந்தைவேல் பிள்ளை கோபித்துக்கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டார். அவர் வந்தால் தான் திருமணம் நடைபெறும் என்னும் சூழ்நிலை !  

பட்டாமணியார் திரு.இருளப்ப தேவர், செய்தி கேள்விப்பட்டு, இரவோடு இரவாக ஈசனக்குடி சென்று, திரு.குழந்தைவேல் பிள்ளையைச் சமாதானப்படுத்தி மறு நாள் வைகறைப் பொழுதிலேயே அழைத்து வந்துவிட்டார். அவர் வந்த பின்பே திருமண நிகழ்வுகள் தொடங்கின. நேற்று நடந்தது போல் இந்நிகழ்வு தோன்றினாலும், இது நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை எண்ணும் போது சற்று வியப்பாகத் தான்  இருக்கிறது !

திரு.தங்கராசு - திருமதி. விசயலட்சுமி இணையருக்கும், திரு.பசுபதி  திருமதி.கோகிலம் இணையருக்கும் வருகிற  சூன் 17 ஆம் நாள் திருமணமாகி 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பொன்விழா காணும் இந்தப் பொன்மனச் செம்மல்களுக்கு இப்பொழுதே என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ! வாழிய செம்மல்காள் ! வாழிய நீவிர் ! வளமோடு வாழ்க ! வாழ்க ! வாடாத தாமரையாய் நலமோடு வாழ்க ! வாழ்க ! 

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் விடுப்பில் சென்றிருந்தேன். திருமணம் முடிந்தபின் திருத்துறைப்பூண்டி வந்து அன்னையையும் தங்கைகளையும் வீட்டில் விட்டுவிட்டுப் புதுக்கோட்டைக்கு திரும்பினேன் ! கூடுதலாகச் சில நாள் வீட்டில் தங்கவில்லை என்று அம்மாவுக்கும் தங்கைகளுக்கும் மனக்குறை ! அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இத்தகைய நேர்வுகள் இயல்பு தானே !

இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி / மார்ச்சு மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில்  நடைபெற்றன. கிழக்கு வங்காளத்தில் இந்தியப் படைகள் புகுந்து, பாகித்தானுக்கு எதிராகப் போரிட்டு, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாகித்தான் படையினரைச் சிறைப் பிடித்து, கிழக்கு வங்காளத்தை விடுவித்துபங்களாதேசம்உருவான நேரம் !

நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இந்தியப் பேராயக் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 352 இடங்களை வென்று திருமதி.இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் !

சட்டமன்றத்திற்கான தேர்தலில் தி.மு.. 184 இடங்களில் வென்றது. இந்தியப் பேராயக் கட்சி 15 இடங்களைப் பிடித்தது. பிற கட்சிகள் 35 இடங்களில் வென்றிருந்தன. திரு.கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்வரானார். இந்தத் தேர்தலில் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள வாக்குச் சாவடியொன்றில், வாக்குச் சாவடித் தலைமை அலுவலராக நான் பணியாற்றினேன் !

மறதியின் காரணமாக சில செய்திகள் காலச் சுவடுகளில் இடம்பெறாமற் போய்விடுகின்றன. இந்த நிமிடத்தில் நினைவுக்கு வந்த ஒரு செய்தியை இப்பொழுதே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மார்பளவு நிழற்படம் ஒன்றை எடுப்பதற்காக, புதுக்கோட்டை, பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்த ஒரு நிழற்படக் கலையகத்திற்கு 1970 ஆம் ஆண்டு சென்றிருந்தேன் !

அகவை முதிர்ந்த ஒரு கலைஞர் ஒருவர் படம் எடுக்க  அணியமானார். என்னைக் குறுங்காலியில் (STOOL) அமர வைத்து விட்டு, சரியான நிலையில் (CORRECT POSITION) என்னைப் படம் எடுப்பதற்கு, என் தலையை சற்று உயர்த்துதல், வலப்பக்கம்  இடப்பக்கமாகத் திருப்புதல், விழிகளை தாழ்த்தச் செய்தல், ஆடைகளைத் திருத்துதல் என்று சரியான கோணம் கிடைக்கச் செய்வதற்குப் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டார் !

மார்பளவுப் படம் எடுப்பதற்கு இத்தனை உழைக்க வேண்டுமா என்று நான் வியந்து போனேன். படம் எடுத்த படலத்தை (NEGATIVE) கழுவிக் காயவைத்து, ஒளிக் கருவியில் அதை வைத்து நிழற்படத் தாளில் உருவத்தைப் பதியவைத்து ஆறு படிகள் கொண்டுவந்து தரும்போது, படத்தைப் பார்த்து நான் திகைத்துப் போனேன் !

இத்துணை அழகாகக் கூட ஒருவரால் படம் எடுக்க முடியுமா ? கருப்பு மேலங்கி அணிந்து, கழுத்துப் பட்டை கட்டி, அரும்பு மீசையுடன் நான் காட்சி தரும் இந்தப் படத்தை அப்பொழுதே பேரளவுப் படமாக (CABINET SIZE) பத்து படிகள் போட்டுத் தரசொல்லி வாங்கிப் போனேன் !

இந்தப் படம் தான் கடிகை மணி முகநூற் பக்கத்தில் இப்பொழுது நான் வைத்திருக்கும் அறிமுகப் படம் (PROFILE PICTURE).. என் நிழற் படங்களிலேயே நான் அதிகம் விரும்பும் படமும் இது தான் ! நான் பார்த்ததிலேயே மிகத் திறமையான நிழற்படக் கலைஞரும் இப்படமெடுத்த அந்த அகவை முதிர்ந்த நிழற்படக் கலைஞர் தான் ! திறமை என்பது சிலருக்குப் பிறப்பிலேயே வந்துவிடும் போலும் !

புதுக்கோட்டையில் நான் ஐந்தாண்டுகளாகப் பணியில்  இருந்தமையால், காலமுறை இடமாற்றலில் திருவெறும்பூர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு  மாற்றப்பட்டேன். புதுக்கோட்டை, தொழிற் பயிற்சி நிலையம் 276 மாணவர்கள் பயிற்சி பெறும் சிறிய நிலையம் !

திருவெறும்பூர் 1026 பேர் பயிற்சி பெறும் பெரிய நிலையம். பெரிய நிலையத்தில் போய் சிக்கிக்கொள்ள விரும்பாமல் செய்வதறியாமல் தவித்தேன். இதற்கிடையில், இயக்குநரின் வலியுறுத்தலால் புதுக்கோடையிலிருந்து 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி விடுவிக்கப் பட்டேன் !

இடமாற்றலில் அலுவலர்கள் விடுவிக்கப் படுகையில் விடை தரும் விழா தேநீர் விருந்து வடிவில் நடத்தப் பெறுவது உண்டு. இந்த நிகழ்ச்சிகளில் என் உரை கட்டாயம் இடம் பெறும். உரைநடையாகப் பேசாமல் பாடல்களாகப்  புனைந்து, அதை மேடையேறி அரங்கேற்றி விடுவேன். பாடல் புனையும் என் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்காக இதை நான் ஒரு உத்தியாகக் கடைப்பிடித்து வந்தேன் !

புதுக் கோட்டையிலிருந்து திருவெறும்பூருக்கு இடமாற்றலாகிப் பணியிலிருந்து நான் , விடுவிக்கப் பட்டபோது  எனக்கு அளிக்கப் பெற்ற தேநீர் விருந்தில் நான் ஆற்றிய நன்றியுரை, பாடல் வடிவில் அமைந்திருந்தது !


-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர் 
தமிழ்ப் பணி மன்றம்.
{05-05-2020}
----------------------------------------------------------------------------------------------

பொன்விழாக் காணும் 
செம்மல்களின்
 திருமண  அழைப்பிதழ் !

:மணமக்கள்:
திரு.இராச.தங்கராசு - செல்வி.மீ.விசயலட்சுமி
திரு.சீனி.பசுபதி - செல்வி.மீ.கோகிலம்


வை.வேதரெத்தினம்
 (1970 -ஆம் ஆண்டு எடுத்த படம்)


திரு.அரங்கராசுலு, 
மேலாளர்,
அ.தொ.ப.நி, புதுகை (1970)\

திரு.ஆழ்.சகதீசன்,
 கணக்கர், 
அ.தொ.ப.நி, புதுகை (1970)


திரு.சி.தருமராசன்,
 இளநிலை உதவியாளர் 
அ.தொ.ப.நி.புதுகை (1969)

 திரு.ப.மணி, 
கணக்கர், 
அ.தொ.ப.நி, புதுகை (1972)


மேடையில் பேச
 வாய்ப்புக் கிடைக்கும் 
போதெல்லாம், என் உரையைப்
 பாடல் வடிவில்  படைப்பதை
 வழக்கமாகக்
 கொண்டிருந்தேன்.







No comments:

Post a Comment