name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (21) :1974-1975 நிகழ்வுகள் - திருச்சி - நாகை !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (21) :1974-1975 நிகழ்வுகள் - திருச்சி - நாகை !தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு. வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1974 -1975 நிகழ்வுகள்

(சுவடு.21) திருச்சி > நாகை  !


----------------------------------------------------------------------------------------------

பெரியப்பா காலமான இரண்டாவது மாதமே அவரது இளைய மகன் திரு.சீனிவாசனுக்குத் திருமணம் செய்து வைத்திட உறவினர்கள் முடிவு செய்தனர்.. திருத்துறைப்பூண்டி வட்டம் மாங்குடி என்னும் ஊரகத்தைச் சேர்ந்த செல்வி.ஆனந்தியைப் பேசி முடிவு செய்து திருமணத்திற்கும் நாள் குறித்தனர் !

இத்திருமணம் நடைபெறுவதில் சீனிவாசனின் தாய் மாமாவான திருத்துறைப்பூண்டி வித்வான் மானைக்கால் திரு.சி.பண்டரிநாதன் முன்னணியில் நின்று செயல்பட்டார் !

1974 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் திரு.சீனிவாசன்செல்வி.ஆனந்தி திருமணம் மாங்குடியில் இனிது நிறைவேறியது. கோட்டூர் அருகில் உள்ள திருப்பத்தூரிலிருந்து சங்கேந்தி செல்லும் சாலையில் வலப்புறமாக மாங்குடி உள்ளது. வளமான பூமி; வேளாண்மை தான் முதன்மைத் தொழில் ! புலால் உண்ணாத மக்கள் நிறைந்த ஊர் !

திருச்சியில் பணி புரிந்து வந்த நான், சீனிவாசன் திருமணத்திற்காக என் மனைவி, தாயார், தங்கை ஆகியோருடன் கடிநெல்வயல் வந்திருந்தேன் !

பின்பு அங்கிருந்து மாங்குடி சென்று திருமணத்தில் கலந்து கொண்டேன். திருமணத்திற்கு ஈசனக்குடி திரு.எஸ்.குழந்தைவேல் பிள்ளையும் வந்திருந்தார்.  அவரிடம் நலம் கேட்டுப் பேசிக் கொண்டிருந்து விட்டு, என் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு திருவெறும்பூர் திரும்பினேன் !

இது நிகழ்ந்து இரண்டே மாதத்தில்  - அதாவது – 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 25 ஆம் நாள் - ஈசனக்குடி அத்தான் திரு.குழந்தைவேல் பிள்ளை மறைந்து போனார். நேற்று நன்றாக இருந்தார்; இன்று இல்லையே ! இதைத் தான் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு” என்று வள்ளுவர் சொன்னாரோ ! இரண்டு மாத கால இடைவெளியில் தான் எத்துணைத் துன்பியல் நிகழ்வு !

செய்தி கிடைப்பதில் காலத்தாழ்வு ஏற்பட்டதால், எனது பயணமும் தவக்கமாகவே நிகழ்ந்ததுஇதன் விளைவாக நான் ஈசனக்குடிப் போய்ச் சேருவதற்குள் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது ! நான் மிகவும் நொந்து போனேன் !

நான் குடியிருந்த ஜலால் வளவுதிருவெறும்பூர் இருப்பூர்தி நிலையத்திற்கு நேர் எதிரே அமைந்திருக்கும் (JUST OPPOSITE TO RAILWAY STATION). அப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு அப்போது நிலவியது. திருச்சியிலிருந்து நீராவி அழலையுடன் (STEAM ENGINE) வரும் பயண இருப்பூர்தி, சரக்கு இருப்பூர்தி ஆகியவை  வந்து நின்றவுடன், அழலையிலிருந்து (ENGINE) வெளியேற்றுக் குழாய் வழியாக மெல்லிய அருவி போலக் கொட்டும் நீரைப் பிடிப்பதற்கு அப்பகுதி மக்கள் குடத்துடன் காத்திருப்பார்கள் !

சில வலவர்கள் (DRIVERS) நீர் அதிகமாகக் கொட்டும்  வகையில் திறந்துவிட்டு, மக்களுக்கு உதவி செய்வார்கள். உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட மக்கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்; ஆனால் எண்ணிக்கை தான் குறைந்து கொண்டே வருகிறது !

திருவெறும்பூர் இருப்பூர்தி நிலையத்தில் திரு.தீனதயாளு என்று ஒரு நிலைய அதிகாரி (STATION MASTER) 1972 - 1975 வாக்கில் பணிபுரிந்து வந்தார். வண்டியில் ஏற வேண்டிய அனைத்துப் பயணிகளும் ஏறி விட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்ட பின்பே பச்சைக் கொடியை காட்டுவார். பச்சைக் கொடி காட்டி, வண்டி புறப்பட்டு ஓடத் தொடங்கிய பின், சில சமையங்களில் வண்டியில் ஏறுவதற்காக ஓரிருவர் ஓடி வருவார்கள் !

அதைக் கவனித்து விட்டால் திரு.தீனதயாளு அவர்கள், தன்னிடமுள்ள ஊதலைக் கொண்டு ஒலி எழுப்புவதுடன், சிவப்புக் கொடி காட்டி வண்டியையும் நிறுத்திவிடுவார். ஓடிவந்த பயணிகள் வண்டியில் ஏறிய பின்னரே வண்டி புறப்பட்டுச் செல்ல இசைவார். இத்தகைய மக்கள் நலம் காக்கும் மனப்பான்மை கொண்ட அதிகாரிகளும் அருகி வருகின்றனர் !

ஜலால் வளவில்ஒருநாள் அலுவலகத்திற்குப் புறப்பட அணியமாகிக் கொண்டு இருந்தேன். அகத்தியன்பள்ளி, பயத்தவரன்காடு திரு.கே.பி.முருகையாத் தேவர் அவர்களும், என் சிற்றப்பா மகன் திரு.சதாசிவமும் அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் நோக்கம், திரு.முருகையாத் தேவரின் இரண்டாவது மகன் திரு.மு.சிங்காரவேலுக்கு எனது தங்கை ஞானசுந்தரி என்கிற சுமதியைப் பெண் கேட்பது என்பதைப் பின்னர் புரிந்து கொண்டேன் !

முதல் மகன் திரு.கருணாநிதிக்கு கருப்பம்புலம் திரு.சந்திரசேகர தேவர் மகள் செல்வி.இராசலட்சுமியைப் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் இரண்டாவது மகனுக்கும் பெண் பார்த்து ஒரே நேரத்தில் இரு திருமணங்களையும் நடத்திட விரும்புவதாகவும் திரு.கே.பி.எம். அவர்கள் தெரிவித்தார் !

திரு.முருகையாத் தேவர் அவர்களின் நான்கு பிள்ளைகளுள் முதலாமவர் திரு.கருணாநிதி. வேதாரணியத்தில்கருணா ஆர்ட்ஸ்என்னும் கலைக் கூடத்தை நடத்தி வந்தர். பெயர்ப் பலகைகள், விளம்பரப் பலகைகள், துணிப் பதாகைகள், சுவர் விளம்பரங்கள் என அவரது கைவண்ணம் கண்டு மிளிர்ந்தவை பலப்பல ! ஈர்மக் கலை (PAINTING)  அவரது கைவிரல்களில் விளையாடிக் கொண்டிருந்தது ! பிறவியிலேயே சிலருக்குச் சில திறமைகள் கைகூடி வரும். திரு.கருணாநிதியும் அவர்களுள் ஒருவர் போலும் !

இரண்டாவது பிள்ளையான திரு.மு.சிங்காரவேலு வேளாண்மைச் செம்மல். அவர் நாட்டமும் உழைப்பும் வேளாண்மையைச் சுற்றியே இருந்தன ! தன் தாய்வழித் தாத்தாவான கலிதீர்த்தா தேவருடன்  தங்கியிருந்த அவர்அவரது வளர்ப்புப் பிள்ளையாகவே கருதப்பட்டார் !

திரு.கே.பி.எம்., திரு.சதாசிவம் இருவரும் முன்வைத்த கோரிக்கை பற்றி உடனடியாக என்னால் முடிவெடுக்க இயலவில்லை. அரைநாள் வரை தவக்கம் செய்தேன். அவர்களும் ஊர் திரும்புவதாகத் தெரியவில்லை. பிறகு என்  குடும்பத்தாருடன் கலந்து பேசியபின் ஒப்புதல் அளித்தேன். திருமண உறுதி நிகழ்வு (நிச்சயதார்த்தம்) 20-11-1974 அன்று வித்வான் மானைக்காலில் மாமா வீட்டில் நடைபெற்றது !

திரு.மு.சிங்காரவேலு செல்வி.சுமதி, திரு.மு.கருணாநிதிசெல்வி.இராசலட்சுமி, ஆகிய இரு இணையரின் திருமணமும் கருப்பம்புலம் திரு.பி.வி.தேவர் நடுநிலைப் பள்ளியில் 1974 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் நாள் ஒரே நேரத்தில் நடைபெற்றன ! தமிழ்ப் பெரும் புலவர் திரு.ப.சி.சகந்நாதன் பிள்ளை அவர்கள் வாழ்த்துரை வழங்க, தேவர்குலத் திலகம் திரு.பெ.வெங்கடாசலத் தேவர் அவர்கள் முன்னிலையில் திருமணம் நிகழ்ந்தேறியது  !

என் திருமணம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகளே ஆகியிருந்தன. இந்த நிலையில் தங்கை சுமதியின் திருமணத்தை நடத்திட மிகவும் திணறிப்போனேன் !

இந்தத் திருமணத்திற்குப் பிறகு, திருவெறும்பூரில் இருந்த எனது குடியிருப்பை திருச்சி சங்கிலியாண்டார்புரத்தில் உள்ள கரிமேட்டுக் குடியிருப்பு வளாகத்திற்கு  (காலனிக்கு) 19-1-1975 அன்று  மாற்றிக் கொண்டேன். வாடகை உருபா 40 – 00. குறைந்த வாடகை என்பதே குடியிருப்பு மாற்றத்திற்கு முதன்மைக் காரணம் !

இந்தக் குடியிருப்புக்கு அடுத்ததாக நடிகவேள் எம்.ஆர்.இராதாவின்தனலட்சுமி குடியிருப்பு வளாகம்இருந்தது ! கரிமேட்டுக் குடியிருப்பு வளாகத்தில் தான் கடைசலர் பிரிவுப் பயிற்றுநர்களான திருநெல்வேலி திரு.எஸ்.பாலசுப்ரமணியன், தென்காசி திரு.எஸ்.இராமாநுசன், திண்டுக்கல் திரு.ஜி.நாகராசன்,  கணக்கர் அமராவதி புதூர் திரு..மணி  நால்வரும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர் !

நான் அலுவலகம் வந்த பிறகு அம்மாவும் மனைவியும் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை இராது. பக்கத்து வீடுகளில் பயிற்சி நிலைய நண்பர்களின் மனைவி மக்கள் இருப்பார்கள் என்பதால், இந்தக் குடியிருப்பு மாற்றம் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தது !

திருவெறும்பூரில் பணிபுரிகையில், பாடல் எழுதும் என் வேட்கைக்கு வாய்ப்புகள் வந்தாலும், நேரம் கிடைப்பது அரிதாக இருந்தது. பண்டகத்தில் நடப்பில் உள்ள  கணக்குப் பதிவேடு (STOCK REGISTER) தீர்ந்து போய் புதிய கணக்குப் பதிவேடு தொடங்குகையில், முந்திய பதிவேட்டின் முடிவிருப்பு அனைத்தையும் புதிய பதிவேட்டில் விடுபடலின்றி எடுத்து எழுதப்பட்டது  எனச் சான்று எழுதி அதில் பயிற்சி நிலைய முதல்வர் ஒப்பமிடுவது வழக்கம் !  

உரைநடையாகவே பலரும் எழுதிவந்த இச்சான்றினை முதன்முதலில் நான் பாடல் வடிவில் பதிவு செய்து என் வேட்கையைத் தணித்துக் கொண்டேன். இதோ அந்தப் பாடல் !

முந்தைய பதிவேட்டின் முடிவிருப்பு அத்துணையும்
..........முறைப்படி இவ்வேட்டில் முற்றாகப் பெயர்த்தெழுதி
செந்தமிழில் தலைப்பிட்டுச் சிறுபிழையும் பயிலாது
..........செய்தபொருட் கணக்கெனவே செப்புகிறேன் சான்றுரையே !

கரிமேட்டுக் குடியிருப்புக்கும், பொன்மலை இருப்பூர்தி நிலையத்திற்கும் ஒரு கி.மீ தொலைவு இருக்கும். குடியிருப்பிலிருந்து நடந்து வந்து பொன்மலையில் இருப்பூர்தியில் ஏறித் திருவெறும்பூர் வந்து, அங்கிருந்து அலுவலகம் செல்வோம். மதிய உணவைக் கையில் எடுத்து வந்துவிடுவோம். எனக்குக் கிடைத்த எத்துணையோ நண்பர்களில் கணக்கர் திரு..மணியைப் போல் தனிப்பட்ட முறையிலும் குடும்ப அளவிலும் மிகவும் நெருக்கமாகப் பழகியோர் வேறு யாரும் கிடையாது !

நண்பர் திரு.மணி திருமணமானவர். அவர் மனைவி பெயர் திருமதி. கமலா. கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேஎரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அவர்களுக்கு இரண்டு அகவையில் ஒரு பெண் குழந்தை இருந்தது. செயலட்சுமி என்று பெயர். திரு.மணியுடன் உடன்பிறந்தோருள் இருவர் ஆண்மக்கள்

இருவருள் மூத்தவர் திரு.இராசாமணி. திரு.மணியின் உதவியால் பொருத்தியல் பிரிவில் (FITTER) காரைக்குடியில் படித்து, திருவெறும்பூர் பாரத மிகுமின் நிறுவனத் தொழிலகத்தில் நிலையான பணியில் இருந்தார். அடுத்தவர் திரு.இரகுநாதன். அஞ்சல் துறையில் எழுத்தர் (CLERK) பணியிடத்தில் நிலைப்பணியில் இருந்தவர் !

தம்பிகள் இருவரும் நிலையாகப் பணியில் அமர்ந்து, நிரம்ப ஊதியம் பெற்று வந்தாலும், பெற்றோர்களுக்குப் பணவுதவி செய்வதில்லை என்றும் தானே பொருளுதவி செய்து வருவதாகவும், திரு.மணி என்னிடம் சிலமுறை மனம் திறந்து கூறி இருக்கிறார். வீட்டிற்குத் தலைப் பிள்ளையாகப் பிறந்து, தங்கை, தம்பிகளுக்காக உழைத்தே நலிவடைந்த எத்துணையோ அண்ணன்மார்களின் பட்டியலில் திரு. மணியும் இடம்பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார் !

அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அலுவலர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் அளிப்பதென அரசு கொள்கை முடிவு எடுத்தமையால் 1975 -ஆம் ஆண்டு நான் நாகப்பட்டினத்திற்கு இடமாற்றல் கோரினேன். என் கோரிக்கை ஏற்கப்பட்டு, இடமாற்றலும் கிடைத்தது !

திருவெறும்பூரில் கூடுதல் பண்டகக் காப்பாளராக 1972 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த திரு..முத்துச்சாமி என்பவர் என்னிடமிருந்து பண்டகப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் !

திருவெறும்பூர் பயிற்சி நிலையத்திலிருந்து  1975 ஆம் ஆண்டு  ஏப்பிரல் மாதம் 25 ஆம் நாள் விடுவிக்கப்பட்டேன். விடுவிக்கப்படுவதற்கு முதல் நாளான ஏப்பிரல் 24 அன்று நாகை சென்று நாகப்பட்டினம், வெளிப்பளையத்தில் பெருமாள்கோயில் 2 –ஆம் தெருவில் 10 -ஆம் இலக்கமுள்ள வீட்டைப் பார்வையிட்டு  வாடகை மாதம் உருபா 60-00 என்பதையும் தெரிந்து கொண்டு திரும்பினேன் !

பணியிலிருந்து விடுபட்டதும், பணியேற்பு இடைக்காலத்திலேயே வீட்டு உடைமைகளை நாகைக்குக் கொண்டு வந்து, பக்கத்து வீட்டில் இருந்து திறவுகோலை வாங்கி இறக்கி வைத்ததாக நினைவு !

1975 -ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் நாகப்பட்டினத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியேற்றுக் கொண்டேன் ! பணியேற்பு நாளன்று மாலையே காரைக்காலில் இருந்த வீட்டு உரிமையாளரைச் சந்தித்து முன்பணம் உருபா 60-00 தந்து குடியிருப்பை உறுதிப் படுத்திக் கொண்டு திரும்பினேன் !

அடுத்த நாள் சேரன்குளத்தில் தங்கியிருந்த அன்னையும் மனைவியும் நாகை வந்து சேர்ந்தனர். 1975 –ஆம் ஆண்டு மே மாதம் 5 –ஆம் நாள் முதல் புதிய வாடகை வீட்டில், எங்கள் வாழ்க்கை தொடங்கியது !

நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பண்டகப் பொறுப்புகளை மேற்பார்வைப் பயிற்றுநர் திரு.மரியஜோசப் என்பவர் ஏற்றிருந்தார். அவரிடமிருந்து நான் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். திருவெறும்பூரைப் போல இங்கும், பண்டகத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது.! எங்கு சென்றாலும் எனக்கென்று சில பணிகள் காத்திருக்கவே செய்தன ! இது தான் எனக்காக எழுதப்பட்ட விதியோ !

-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை.
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி.2051,மேழம், (சித்திரை)27]
{10-05-2020}
-----------------------------------------------------------------------------------------------
சிங்காரவேலு - சுமதி 
திருமண அழைப்பிதழ்.
மணநாள்: 01-12-1974.


மு.சிங்காரவேலு - சுமதி
 (திருமணம் 01-12-1974)அ.சீனிவாசன் - ஆனந்தி
 (திருமணம் 10-06-1974)திரு.ப.மணி  குடும்பத்தினருடன் 
நாங்கள்திரு.எஸ்,குழந்தைவேல் பிள்ளை
 (மறைவு.25-08-1974)No comments:

Post a Comment