name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (15) :1968-1970 நிகழ்வுகள் - சீனி சுந்தர சிவம் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, March 28, 2020

காலச் சுவடுகள் (15) :1968-1970 நிகழ்வுகள் - சீனி சுந்தர சிவம் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1968 –1970 நிகழ்வுகள் !

                                      (சுவடு.15) சீனி சுந்தர சிவம் !

--------------------------------------------------------------------------------------------

என் பெரியப்பா திரு.அருணாச்சலத் தேவரின் இளைய மகன் திரு.சீனிவாசனை, புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எந்திரப் பணியியல் (MACHINIST) தொழிற் பிரிவில் சேர்த்து விட்டிருந்தேன் என்று முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா ? அவரது நண்பர் அகத்தியன்பள்ளி, பயத்தவரன்காட்டைச் சேர்ந்த திரு.சுப்பையாப் பிள்ளையின் மகன் திரு.சிவசுந்தரம். இவர் தொழிற் பயிற்சியில் சேர விரும்புவதாகவும், அவரைச் சேர்த்துவிட வேண்டும் என்றும் சீனிவாசன் என்னிடம் பரிந்துரை செய்தார் !

திரு.சிவசுந்தரத்தின் விருப்பப்படி அவரைக் கடைசலியல் (TURNER) பிரிவில் 1968 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சேர்த்துவிட்டேன். அப்பொழுது கடைசலியல் பிரிவின் மேற்பார்வைப் பயிற்றுநராக (SUPERVISORY INSTRUCTOR) திரு.வி.சைமன் என்பவர் இருந்தார். பயிற்றுநர்களாக (CRAFT INSTRUCTORS) திருவாளர்கள் நா.பழனியாண்டி, எசு.சிவசிதம்பரம், வி.சுப்ரமணியன், ஆர். பாலகிருட்டிணன் ஆகியோர் இருந்தனர். திரு.சிவசுந்தரம் தமிழில் நன்கு பேசக் கூடிய வல்லமை படைத்தவர். புதுக்கோட்டையில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், கல்லூரிகளின்  மாணவர்கள் கலந்து கொள்ளும் திருக்குறள் பற்றிய பேச்சுப் போட்டி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெறவிருந்தது !

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளத் தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில் இருவரை அனுப்புமாறு, போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். பயிற்சி நிலைய முதல்வர் (PRINCIPAL) திரு.சக்கரவர்த்தி ஐயங்கார், என்னை அழைத்து, ”நீங்கள் தமிழார்வம் உடையவர்; ஆகையால் இந்நிலையத்தின் சார்பில் இருவரைத் தேர்வு செய்ய நீங்கள் தான் பொருத்தமானவர்” என்று கூறி, பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டார். நான், கடைசலியல் பிரிவு திரு.சிவசுந்தரம், மின் இணைப்பியல் பிரிவு திரு.கதிரேசன் இருவரையும் தேர்வு செய்து, முதல்வரிடம் தெரிவித்தேன் !

பயிற்சி நிலையத்தின் சார்பில் இருவரும் சென்று பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டி அமைப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் திரு.சிவசுந்தரம் திருக்குறள் பற்றி மிக அருமையாகப் பேசி, முதல் பரிசினை வென்று வந்தார். பயிற்சி நிலையமே வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கியது. திரு.சிவசுந்தரத்திற்கும் பாராட்டு; அவரைத் தேர்வு செய்து அனுப்பிய எனக்கும் பாராட்டுத் தெரிவித்து முதல்வர் தலைமையில் ஒரு நாள் பாராட்டுக் கூட்டமே நடைபெற்றது !

திரு.சிவசுந்தரம், பின்னாளில் வேதாரணியம் உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவராகவும், வேதாரணியம் வணிகர் சங்கத் தலைவராகவும், நாகப்பட்டினம் மாவட்ட வணிகர் சங்கத் துணைத் தலைவராகவும்   செயல்பட்டு மிகவும் புகழுடன்  விளங்கினார் !

பொதுவாக எனக்கு அரசியலில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது; எனினும் தமிழ் மீதான ஈடுபாடு  அளப்பரிது  ! என்னுள் தமிழுணர்வைப் பற்றி எரியச் செய்தது பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் தான் என்றால் அது மிகையாகாது ! தமிழகத்தில் இளைஞர்களிடையே தமிழார்வத்தை ஊட்டி வளர்த்த அண்ணா 1969 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 –ஆம் நாள் தமிழக முதல்வராக இருந்த போது மறைந்தார் !

அப்பொழுது புதுக்கோட்டையில் நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்தில் நானும் கலந்து கொண்டேன். திலகர் திடலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திரு.தியாகராச காடுவெட்டியார் பேசும்போது, தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள  முடியாமல் தேம்பித் தேம்பி அழுத காட்சியும், கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களும் கண்ணீர் விட்டு அழுதக் காட்சியும் இன்றும் மறக்க முடியாத நிகழ்வுகளாக அமைந்திருக்கின்றன !

அண்ணாவின் மறைவு பற்றி நான் இரங்கல் பாடல்கள் சில எழுதி இருந்தேன். அவற்றுள் சில என் வலைப்பூவிலும் (BLOG)  இடம் பெற்று இருக்கின்றன. “நீலத் திரை வானில் நீந்தி வரும் வெண்மதி போல், நெஞ்சத் திரைக் கடலில் நீ மிதந்து ஆடுகிறாய் !” என்னும் அந்தப் பாடல் என் நினைவில் பதிந்த பலவற்றுள் ஒன்று !

1967 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திலிருந்து திரு.சீனிவாசன் திருக்கோகர்ணத்தில் மேலமேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கி இருந்தார். அடுத்த ஆண்டிலிருந்து திரு.சிவசுந்தரமும் அவருடன் சேர்ந்து கொண்டார்இருவரும் சேர்ந்து தங்கியிருந்த வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர். திரு.சீனிவாசன் தனது ஈராண்டுப் பயிற்சியை முடித்து, அனைத்திந்தியத் தொழிற் தேர்வில் (ALL INDIA TRADE TEST) 1969 ஆம் ஆண்டு சூலை மாதம்  தேர்ச்சி பெற்ற பிறகு, கடிநெல்வயலுக்குச் சென்றுவிட்டார். திரு.சிவசுந்தரம் முதலாண்டுப் பயிற்சியை முடிந்து, இரண்டாமாண்டுப் பயிற்சியின் தொடக்கத்தில் இருந்தார் !

அப்போது, திரு.சிவசுந்தரம் என்னையும் தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்தார்; திரு.சீனிவாசன் ஊருக்குச் சென்ற பிறகு தான் தனியாக இருப்பதாகவும், எனவே அவருடன் சேர்ந்து நானும் அந்த வீட்டில் தங்கினால் இருவரும் சேர்ந்து சமைத்துச் சாப்பிடலாம்  என்றும் கேட்டுக்கொண்டார். அவரது விருப்பத்தை ஏற்று, நான் திரு.இலட்சுமிநாராயண அய்யர் வீட்டின் முன்னறையைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு, திரு.சிவசுந்தரத்துடன் வந்து தங்கினேன் !

தங்கி இருந்த அறையைவிட்டு நான் வெளியேறுகையில் திரு.இலட்சுமி நாராயண அய்யர் மிகுந்த மனத் துன்பம் அடைந்தார். அவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று அப்போது நான் மனதில் நினைத்துக் கொண்டேன் !

அதன்படி, 1969 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அவருடைய இரண்டாவது மகன் திரு.சந்திரமௌலீசுவரனை, புதுக்கோட்டை, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் எந்திரப் பணியியல் (MACHINIST) பிரிவில் சேர்த்துவிட்டு, மாதம் உருபா 25 உதவித் தொகை கிடைக்கவும் வழிவகை செய்தேன். பின்னாளில் திரு, சந்திரமௌலீசுவரன், சிங்கம்புணரி இராயல் என்ஃபீல்டு தொழிலகத்தில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் !

புதுக்கோட்டையில் 1969 ஆம் ஆண்டு திருவள்ளுவர் ஈராயிரத்தாண்டு விழா மூன்று நாள்கள் நடைபெறுவதாக இருந்தது. விழாச் செலவுக்காக, தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்களிடமிருந்து நன்கொடை பெற்று அளிக்கும் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். பெருந்தொகையை
நன்கொடையாகவும் பெற்று அளித்தேன் !

இதனால், விழாக்குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டனர். என்னைத் தவிர புலவர் அன்பு கணபதி, புலவர் தி.சு.மலையப்பன், புலவர் கந்தசாமி ஆகியோரும் வேறு சிலரும் விழாக்குழுவில் பங்கேற்றிருந்தனர் !

உரையரங்கம், பாட்டரங்கம், பட்டிமன்றம் என மூன்று நாள்கள் விழா நடைபெற்றது. அந்நாளைய சட்டப் பேரவைத் தலைவர்  செய்யாறு புலவர் திரு..கோவிந்தன், திரு.இராய சொக்கலிங்கனார், திரு..சீனிவாசராகவன், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் திரு...இராசகோபாலன், பேராசிரியர் திரு.சோ.சத்தியசீலன், பேராசிரியர் திரு..நமசிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் !

மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழா, பதிவு செய்யப்பெற்று வானொலியிலும் ஒலிபரப்பாகி, தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றது. திருவள்ளுவர் ஈராயிரத்தாண்டு விழாவை 1969 ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடிய பெருமையை புதுக்கோட்டை பெற்றது ! விழாவின் வெற்றியில் இந்தச் சிறு அணிலுக்கும் பங்குண்டு என்பதை நினைக்கும் பொது இப்போதும் கூடப் பெருமையாக இருக்கிறது !

இதே 1969 ஆம் ஆண்டில் தான், மே மாதம் 22 ஆம் நாள், பிற்காலத்தில் என் இணைமானாக (சகலையாக) விளங்கிய பஞ்சநதிக்குளம் திரு.மா.சுப்ரமணியன்செல்வி.காஞ்சனமாலா திருமணமும் நிகழ்ந்தது !

புதுக்கோட்டையில் நான் பணிபுரிகையில் என் செல்வ வளம் செழுமையாக இருக்கவில்லைஎப்போதும் பற்றாக் குறை தான். சில நேரங்களில் 10 காசு வட்டிக்குக் கடன் வாங்கித் தான் சமாளிக்க வேண்டி இருந்ததுஇதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் தவித்தேன். புதுக்கோட்டையில் திரு.அழ.திருஞானசம்பந்தம் என்று சார்தொழிற் பயிற்றுநர் ஒருவர் சீட்டு நடத்திக் கொண்டிருந்தார். அவரிடம் சீட்டுப்போட்ட வகையில் முதிர்வுத் தொகை உருபா 75 கிடைத்தது !

அப்பொழுது பவுன் விலை உருபா 140 (ஒரு கிராம் = உருபா 17-50) அளவுக்கு இருந்தது. கணக்கர் திரு.ஆழ்.சகதீசனை அழைத்துக் கொண்டு நகை செய்பவரிடம் சென்று அரைப் பவுனில் மோதிரம் ஒன்று செய்து தரச் சொல்லி அளவும் கொடுத்தேன். திரு.சகதீசன் குறுக்கிட்டு, ஒரு பவுன் எடையில் செய்யுமாறும், மேற்கொண்டு தேவைப்படும் தொகையத் தான் கடனாகத் தருவதாகவும் கூறினார்நான் தயங்கினேன்; அவர் விடவில்லை !

ஒரு வாரம் கழித்து இருவரும்  சென்று ஒரு பவுனுக்கு உருபா 140 + செய் கூலி சேதாரம் உருபா 8-00, ஆக மொத்தம் உருபா 148 கொடுத்து விட்டு மோதிரத்தை வாங்கி வந்தோம். 1970 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மோதிரம் எனக்கு மணிமேகலையின் அமுதசுரபிக்  கலனாகத் திகழ்ந்ததுஎனக்குப் பணத் தேவை ஏற்படும் போதெல்லாம் பள்ளிக் கூடத்திற்குப்  படிக்கப் போய்விடும்; பிறகு அதை மீட்டு வருவேன். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட முறை இவ்வாறு எனக்குக் கைக்கொடுத்த அம்மோதிரத்தை இன்றுவரை பெருமையுடன் நினைத்துப் பாதுகாத்து  வருகிறேன் ! உற்றுழி உதவுகின்ற உயரிய நண்பனை நாம் என்றென்றும் மறக்கக் கூடாதல்லவா ?

--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,மீனம்(பங்குனி,15]
{28-03-2020}
--------------------------------------------------------------------------------------------
திரு.ப.மா.சுப்ரமணியன் - 
செல்வி.காஞ்சனமாலா திருமணம் : 
நாள் : 22-05-1969.

திரு.சீனிவாசன்
 பயிற்சியில் சேர்ந்த ஆண்டு :(1968)

திரு.சிவசுந்தரம்
 பயிற்சியில் சேர்ந்த ஆண்டு : 1969.

தங்க மோதிரம் செய்த ஆண்டு :  1970.







No comments:

Post a Comment