தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும்
தன்வரலாறு (AUTOBIOGRAPHY)
!
காலச் சுவடுகள் : 1944 நிகழ்வுகள்
(சுவடு.01) ஊரும் உறவும் !
---------------------------------------------------------------------------------------------
கடிநெல்வயல் ! நிரம்பவும் நெல் விளைந்த வயல்களை உடைய ஊர் என்பதால் கடிநெல்வயல் என்பது காரணப்
பெயர் ஆயிற்று. தமிழ்
நாட்டின் கிழக்குக் கடற்கரையோரம் திருமரைக்காடு (திருமறைக்காடு
அன்று!) என்னும் வேதாரணியம் அருகில் அமைந்துள்ள அழகிய சிற்றூர்
! எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய இனிய காட்சிகள் என் கண்களில் பூவாய் விரிகின்றன
!
பார்க்குமிடமெல்லாம் மஞ்சள்
நிறமாய் ஒளி வீசிப், பட்டாடை விரித்தது போல் பளிச்சென்றுக்
காணப்படும் சணற்பயிர் வயல்கள்; இடுப்பு உயரம் வளர்ந்து நிற்கும் எள் செடிகள்;
கண்களைச் சுண்டி இழுக்கும் கம்பங் கொல்லைகள்; காராமணிப்
பயிர்கள்; ஆங்காங்கே வெள்ளரிப் பிஞ்சுகளைத் தாங்கிய பச்சைக் கொடிகள்;
கடிநெல்வயலின் கோடைக் காலத்துக் கோலமிது !
மழைக் காலம் தொடங்கும்
முன் ஆனி,
ஆடி மாதங்களில் நெல் வயல்களில் தொழு உரம் அடித்து, உழுது, நெல் விதைகளைத் தெளிக்க வேண்டும். ஆற்றுப் பாசனம் இல்லாத வானவாரிப் பகுதி அன்றோ ! ஆடி,
ஆவணி மாதங்களில் விதைத் தெளிப்புத் தொடங்கி முடிந்துவிடும். இடையில் அவ்வப்போது பெய்யும் மழையால் முளைத்த பயிர்கள் மெல்ல வளரத் தொடங்கும்
!
ஐப்பசிமாதம் அடை மழை நேரம் ! நெல்வயல்களில் ஒரு அடி உயரத்திற்கு நீர் நிறைந்து நிற்கும். தொடர்ந்து பெய்யும் மழையால் குளங்கள் நிரம்பி வழியும், வாய்க்கால்களில் இடுப்பளவு நீரோடும் ! சலசலத்து ஓடும்
நீரோடு மீன்களும் எதிர்நீச்சல்
போடும் ! வான் பார்த்துக் கையசைப்பது போல் காற்றில் அசைந்தாடும்
நெற்பயிர்கள் எங்கும் பச்சைப் பசேல் என்று காட்சி தரும் ! கார்
காலத்துக் கடிநெல்வயலின் கண்கொள்ளாக் காட்சி அது !
இத்தகைய அழகிய சிற்றூரில்
அப்போது ஏறத் தாழ 500 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன
! 95 விழுக்காடு மக்கள் இந்து மதம் சார்ந்த அகமுடையர்கள் ! அகமுடையர் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ? அஃகம் என்றால் நெல், கம்பு, கேழ்வரகு,
காராமணி, எள் முதலிய கூலங்கள் ! அஃகம் விளைவித்த
மக்கள் அஃகமுடையார் என்று அழைக்கப் பெற்றனர். சுருக்கமாக வேளாண்
பெருமக்கள் என்று பொருள் !
எஞ்சிய 5% மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறிய அகமுடையர்கள் ! ஒரேயொரு
பார்ப்பனக் குடும்பம் – பாலசுப்ரமணியக் குருக்கள் குடும்பம் - கோயில் பூசைகளைக் கவனிக்கும் பொருட்டு,
வேற்றூரிலிருந்து குடிபெயர்ந்து வந்திருந்தது !. இசுலாமியக் குடும்பம் எதுவும் அப்போது
கடிநெல்வயலில் இல்லை !
கிழக்கு, மேற்கு, நடுப்பகுதி என்று மூன்று பகுதிகளாக அடையாளம்
காணப் பெற்ற கடிநெல்வயலில், கிழக்குப் பகுதிக்குக் கீழக்காடு
என்று பெயர். இந்தக் கீழக்காட்டின், தென்
பகுதியில் சற்று மேற்குப் புறமாக எட்டுக் குடும்பங்கள் ஒரு மலர்க் கொத்தாக அருகருகில்
வாழ்ந்து வந்தன. புலால் உணவு துய்க்காத, தூய சைவக் குடும்பங்கள் ! சற்றுத் தொலைவில் இருக்கும்
பஞ்சநதிக் குளம் என்னும் ஊரிலிருந்து குடிபெயர்ந்து வந்த முன்னோர்களின் கான்முளைகள்
! அதனால் தானோ என்னவோ “பஞ்சநதிக் குளத்தார்”
என்னும் அடைமொழி பெற்றதுடன் இவர்கள் வாழும் பகுதி “பஞ்சநதிக் குளத்தார் புரம்” எனவும் ஊர் மக்களால் அழைக்கப் பெற்றது
!
பஞ்சநதிக் குளத்தார் புரத்தில்
வாழ்ந்து வந்த எட்டுக் குடும்பங்களும் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டவை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரம்பவும் சொந்த நிலங்கள் இருந்தன. பருவநிலை இப்போது போல அந்தக் காலத்தில் சீர்கெட்டிருக்கவில்லை. ஆகையால் அவ்வப்போது மழைப் பொழிவு உறுதியாகக் கிடைத்தமையால், வேளாண்மை ஆதாயம் மிக்கத் தொழிலாகவே அப்போது இலங்கி வந்தது !
எட்டுக் குடும்பங்களின்
தலைவர்களையும் அகவை மூப்பு அடிப்படையில் வரிசைப் படுத்திப் பார்க்கலாம் ! இதில் முதலாவதாக அமைபவர் திரு.சி.நடேச தேவர். இவருக்குச் கணியத்திலும் (சோதிடம்), நாட்டு மருத்துவத்திலும் சிறிது வல்லமை உண்டு.
இவரது மகன் சின்னத்தம்பித் தேவர் நெடுங்காலத்திற்கு முன்பே காலமாகிவிட்டார். இவரது பெயரன் காலஞ் சென்ற திரு.சி.சுப்ரமணியன், என் பள்ளித் தோழன்
! .
இரண்டாம் நிலையில் திரு.கு.கோவிந்தசாமித் தேவர் இருக்கிறார்.. திருவாளர்கள். இராசகிருட்டிணன், தங்கவேலு, தனசாமி, மதிவாணன் ஆகிய
நான்கு ஆசிரியர்களின் தந்தை. இந்த நால்வரும் பணியிலிருந்து ஓய்வு
பெற்று நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.
திருவாளர்கள் சுயம்பிரகாசம், குஞ்சு, சவுந்தராசன் ஆகியோர் இவரது புதல்வர்களே ! இவர்,
ஊரின் முதன்மைப் பேராளர்களில் ஒருவர் !
மூன்றாவது நிலையில் இருப்பவர்
திரு.சீ.அருணாச்சலத் தேவர். ஓய்வு பெற்ற
ஆசிரியர் திரு.மீனாட்சி
சுந்தரம், திருச்சி, படைக் கலத் தொழிலகத்தில் (ORDNANCE FACTORY) பணி புரிந்து ஓய்வு பெற்ற திரு. சீனிவாசன் ஆகியோரின் தந்தையான
இவர் ஊர்மக்களிடையே புகழோடு வாழ்ந்தவர் !
நான்காவது நிலையில் அமைபவர் கடிநெல்வயல் பட்டாமணியார் காலஞ்சென்ற
திரு.இருளப்ப தேவர், ஓய்வு பெற்ற ஆசிரியர்
திரு.நடராச தேவர் ஆகியோரின் தந்தையான திரு.சி.காசிநாத தேவர். ஐந்தாவது நிலையில்
இருப்பவர் கடிநெல்வயலில் உள்ள G.C.F.L. நிறுவனத்தில் பணிபுரிந்து
ஓய்வு பெற்ற திரு.சிங்காரவேலுவின் தந்தை திரு.சீ.சாம்பசிவ தேவர் !
ஆறாவது நிலையில் என் தந்தையான
திரு.சி.வைத்தியநாத தேவர் அமைகிறார். ,ஏழாவது நிலையில் வேளாண் செம்மல்கள் திரு.சதாசிவம்,
திரு.செயராமன், சென்னை
K.C.P. நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்ற திரு.கனகராசன் ஆகியோரின் தந்தையான திரு.சீ.சண்முகவேல் தேவர் அமைகிறார் !
எட்டாவது நிலையில் அரசுப்
போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்ற நடத்துநர் திரு.கணேசன்,
பல்லவன் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற வலவர் (DRIVER) திரு.சுந்தரம் ஆகியோரின் தந்தையான திரு.இரெ..சிதம்பர தேவர் ஆகியோரும் அமைகின்றனர் ! குறிப்பிடப்படும் இந்த நிலைகள் எல்லாம் அகவை மூப்பின் அடிப்படையில் கணிக்கப்
பெறுபவையன்றி வேறல்ல !
இத்தகைய எழில் மிக்க சிற்றூரில்
1944
ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29 –ஆம் நாள் திரு.வைத்தியநாத தேவர் – திருமதி.சாரதா
அம்மையார் இணையருக்கு நான்காவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை
பிறந்த செய்தி அறிந்ததும் பஞ்சநதிக் குளத்தார் புரத்தில் மகிழ்ச்சியும் சில காரணங்களால்
கவலையும் நிலவியது !
இந்த இணையருக்குப் பிறந்த
தலைச்சன் குழந்தை பெண் மகவாக அமைந்தது ! சிந்தாமணி எனப்
பெயரிட்டு வளர்த்து வந்த இந்தக் குழந்தைக்குப் பிறகு ஈராண்டு இடைவெளியில் பிறந்த ஆண்குழந்தை
(சிவப்பிரகாசம்) அதிக நாள் தங்க வில்லை.
இதையடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுப் பிறந்த பெண் குழந்தையும்
(சானகி) விரைவிலேயே இறந்து போனது. இந்தச் சூழ்நிலையில் நான்காவதாகப் பிறந்த ஆண் குழந்தையாவது தங்குமா என்ற கவலை
பஞ்சநதிக் குளத்தார் புரத்தில் அனைவர் மனதிலும் சூழ்ந்து கொண்டது !
பிறந்தது ஆண்குழந்தை என்பதால்
ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சிக்கு இடையே, இக் குழந்தையாவது
தங்குமா என்னும் கவலையுணர்வும் மேவியதால் திரு.வைத்தியநாத தேவர் – திருமதி.சாரதா அம்மையார் இணையர் முகங்களில் மகிழ்ச்சி
வெளிச்சம் மறைந்து போயிற்று !!
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),07]
{20-04-2020}
ஊரக மணம் கமழும் காட்சிகள், வயல்கள், பயிர்கள் ! பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டும் ஓட்டு வீடு ! பங்காளிகள் பற்றிய செய்திகள் ! தங்கள் வாழ்க்கை வரலாறு தங்கள் எழுத்து வன்மையில் பூத்துக் குலுங்கும் என்பது திண்ணம் !
ReplyDelete