name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (25) :1979-1980 நிகழ்வுகள் - கவி பிறப்பும் சென்னை உலாவும் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (25) :1979-1980 நிகழ்வுகள் - கவி பிறப்பும் சென்னை உலாவும் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் :1979-1980 நிகழ்வுகள் !

(சுவடு.25) கவி பிறப்பும் சென்னை உலாவும் !

----------------------------------------------------------------------------------------------

அரசு அலுவலர் ஒன்றியத்தின் நாகைக் கிளையில் இணைச் செயலாளராக நான் பொறுப்புக்கு வந்த பிறகு, பொதுப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள அணியமானேன். மாநில அளவில் திரு.சிவ.இளங்கோ தலைமைப் பொறுப்பில் இருந்த காலம். பிறருக்கு உதவி செய்வதை என் கோட்பாடாகக் கொண்டு இயங்கத் தொடங்கினேன் !

நாகப்பட்டினம் தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்தில் திரு.கோ.பத்மநாபன் என்பவர் அன்னிலைத் தட்டச்சர் (TEMPORATY) பணியை ஏற்றிருந்தார்.  ஈராண்டுகளாகத் தொடர்ந்து பணிபுரிந்து வந்த அவருக்குத் திருமணம் உறுதியாயிற்று. அழைப்பிதழ் அடித்து எல்லோருக்கும் கொடுத்தாகி விட்டது. இரண்டு வாரங்களில் திருமணம் என்று காலம் சுருங்கி வந்த நேரத்தில், அன்னிலைப் பணியில் இருப்பவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று  .கோ.இரா அரசு உத்தரவிட்டது !

திருமணத்திற்கு முன் இப்படிப் பதவி பறிபோகிறதே என்று கலங்கிப் போனார் திரு.பத்மநாபன். இந்த ஆணை வந்தவுடன் சற்றும் காலம் தாழ்த்தாமல் அவரைப் பணி நீக்கம் செய்து ஆணை வழங்கக் கோப்பினை நகர்த்தி அதில் வெற்றியும் கண்டார் பணியமைப்புப் பிரிவு உதவியாளர்.  பணி நீக்க ஆணை வழங்கிய பிறகு, அரசின் முந்தைய ஆணையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து தமிழக அரசு புதிய ஆணையை வெளியிட்டது. !

இதைக் காரணம் காட்டி, ஒருமாதம் பணி நீட்டிப்புக் கோரினார் திரு.பத்மநாபன். ஒருமாதம் நீட்டிப்புக் கிடைத்தால், அதற்குள் திருமணம் முடிந்துவிடும் அல்லவா ? குறுகிய மனம் படைத்த சிலர் அவரது கோரிக்கைக்கு எதிராக இருந்தனர். அப்போது பயிற்சி நிலையத் தலைவராக (HEAD OF INSTITUTION) கூடுதல் பொறுப்பில் திருவெறும்பூர் முதல்வர் திரு.என்.ஆர்.சுப்ரமணியன் இருந்தார் !

திரு.பத்மநாபனை அழைத்துக் கொண்டு திருவெறும்பூர் சென்று முதல்வரைச் சந்தித்து நிலைமையை விளக்கி, அரசாணையின் படிகளையும் இணைத்து விண்ணப்பம் தரச்செய்தேன். அந்த விண்ணப்பத்திலேயே முதல்வர் தக்க குறிப்புகளை எழுதி, ஒரு மாதம் பணி நீட்டிப்புக்கு ஆணை வழங்கினார்.  அதை வாங்கிக் கொண்டு போய், நாகை அலுவலகத்தில் தந்து, திரு.பத்மநாபனுக்கு ஒரு மாதம் பணி நீட்டிப்பு ஆணையைப் பெற்றுத் தந்தேன் !

தமிழக அரசு என்ன காணத்தாலோ, அன்னிலைப் பணியில் இருந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமாக பணி நீட்டிப்புச் செய்து மாதந்தோறும் 25 ஆம் தேதி வாக்கில் ஆணை வழங்கிக் கொண்டிருந்தது. திரு.பத்மநாபன் திருமணத்திற்குப் பிறகும் ஈராண்டுகள் இவ்வாறு பணியில் தொடர்ந்தார் என்பது நாகை நண்பர்கள் அறிந்த வரலாறு !

இவ்வாறு நான் பொதுப்பணியில் முனைப்பாக இயங்கத் தொடங்கிய பின், என் குடும்ப அளவில் இரு முதன்மை நிகழ்வுகள் நடைபெற்றன. 1979 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் நாள் என் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது. ”கவிக்குயில்என்று இக்குழந்தைக்குப் பெயர் சூட்டினேன் ! இப்பெண் குழந்தை, வளர்ந்து, படித்து முடித்து, இன்று தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணிபுரிந்து  வருகிறது என்பது, இதைப் படிப்போருக்கான கூடுதல் செய்தி !

இரண்டாவது நிகழ்வு என் மைத்துனரின் திருமணம். சென்னை வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை மேனிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநராகப் பணி புரிந்து வந்த திரு.இரகு.மகாதேவன், பன்னாள் திரு.வேலாயுத தேவரின் மகள் அன்புச் செல்வியை 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் வாழ்க்கைத் துணைவியாக ஏற்கும் நிகழ்வு திருத்துறைப்பூண்டி பெரியநாயகி அம்மன் திருமண மண்டகத்தில் நடைபெற்றது !

மாப்பிள்ளைத் தோழன் பொறுப்பை நான் ஏற்றிருந்ததால், என் குடும்பத்தினருடன் ஒரு வாரம் திருமண விருந்துகளில் மூழ்கித் திளைக்க நேர்ந்தது ஒரு இனிய பொழுதுபோக்காக அமைந்தது !

என் திருமணத்திற்கு முன்பும் சென்னை சென்றிருக்கிறேன்; பின்பும் சென்றிருக்கிறேன். ஆனால் குடும்பத்தினரை அழைத்துச் சென்றதில்லை. திருமணமாகி ஏழு ஆண்டுகளும் கடந்துவிட்டன. சரி !  சில நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அனைவரையும் அழைத்துச் சென்று வருவோம் என்று முடிவு செய்தேன் !

1980 -ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் நாள் இரவு அம்மா, மனைவி, பரிதி,  கவி  ஆகியோருடன் நாகையிலிருந்து இருப்பூர்தி (TRAIN) மூலம் சென்னைக்குப் புறப்பட்டேன். இருப்பூர்திக் கட்டணம் நாகையிலிருந்து சென்னைக்கு ஒருவருக்கு உருபா 21-10. மகன் இளம்பரிதிக்கு அப்போது அகவை நான்கு. மகள் கவிக்குயில் நான்கு மாதக் குழந்தை.  மறுநாள் காலை 8-00 மணியளவில் மாம்பலம் வந்தடைந்தோம். நண்பர் திரு.மணி இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து எங்களை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் !

ஒன்பது நாள்கள் அளவுக்கு நீண்டிருந்த இந்தப் பயணத்தில் நண்பர் திரு.மணி எங்களை முதலாவதாக வள்ளுவர் கோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த மண்டகமும் வீறுடன் விளங்கும் தேரும் எங்களை மிகவும் கவர்ந்தன !

திரு.கருணாநிதியின் கற்பனையில் உருவான இந்த வள்ளுவர் கோட்டம், அவரது ஆட்சிக் காலத்தில் (15-03-1971 – 31-01-1976) கட்டப்பெற்றது. கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில், நெருக்கடி நிலை அறிவிப்பும்,  அதைத் தொடர்ந்து ஆட்சிக் கலைப்பும், குடியரசுத் தலைவர் ஆட்சி அறிமுகமும் நடந்தேறின !

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற (31-01-1976 – 30-06-1977) காலத்தில் மோகன்லால் சுகாதியா ஆளுநராக இருந்தார். அவருக்குக் கருத்துரை சொன்ன கண்ணியவான் யாரோ தெரியவில்லைவள்ளுவர் கோட்டத்தை அவரே திறந்து வைத்து, திறப்புவிழாக் கல்வெட்டிலும் தன் பெயரை இடம் பெறச் செய்தார் !

ஒரு அழைப்புக் கூட இல்லாமால் கருணாநிதி புறக்கணிக்கப்பட்டார். காக்கை பலநாளும் உழைத்து ஒரு கூடு கட்டுமாம் அலுங்காமல் குலுங்காமல் ஒரு குயில் வந்து அதில் முட்டை இடுமாம் ! மாந்த மனம் எத்துணை குறுகி விட்டது !

விடுதலைப் போராட்டக் காலம் தொடங்கி, இன்று வரை வடவர்களால் தமிழ்நாடு புறக்கணிக்கப் படுவதும், தமிழர்கள் நேரிய ஒழுக்கமின்றி நடத்தப்படுவதும் தொடர்கதையாகிக் கொண்டேதான்  இருக்கிறது !

சென்னையில் நண்பர் திரு.மணி வீட்டில் தங்கியிருந்த  நாள்களில் அண்ணா சதுக்கம், ”மெரீனாகடற்கரை,  காமராசர் நினைவாலயம், சிறுவர் பூங்கா, பாம்புப் பண்ணை,  மூர் அங்காடி, விலங்குக் காட்சியகம்  மாமல்லபுரம்திருக்கழுக்குன்றம்,ஆகிய இடங்களுக்கு என் இல்லத்தினரை அழைத்துச் சென்று அவற்றைக் கண்டு களிக்கச் செய்தோம் ! சைதாப்பேட்டை - மாமல்லபுரம் பேருந்துக் கட்டணம் ஒருவருக்கு உருபா 2 - 80 தான் !

இந்தப் பயணத்தின் இறுதியில் நாகை திரும்பும் வழியில் தில்லை (சிதம்பரம்), புள்ளிருக்கு வேளூர் (வைத்தீசுவரன் கோயில்) ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களுக்கும் என் இல்லத்தினரை அழைத்துச் சென்றுக் காண்பித்து வந்தேன். அம்மாவுக்கு இதில் மட்டற்ற மகிழ்ச்சி ! 

பதினோரு மாதங்கள் பள்ளி வாழ்க்கையில் சிறைப்பட்டுச் சலிப்புற்றுக் கிடக்கும்  பிள்ளைகளுக்கு ஒருமாதம் கோடை விடுமுறை எத்துணை மகிழ்ச்சி தரும் ! அதைப் போன்றது தான் நம் இல்லத்தினருக்குச் சீரான இடைவெளியில் நாம் ஏற்பாடு செய்யும் இன்பச் சுற்றுலாவும் ! இந்த நுணுக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்படுத்தினால்  எல்லா இல்லங்களிலும் இனிமை தவழும் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டியதில்லை !

என் தாய் மாமா திரு.சி.பண்டரிநாதன், நாகையை அடுத்த தேவூரில் உணவகம் ஒன்று நடத்தி, அதன் மூலம் நிரம்பப் பொருள்  ஈட்டினார். நடுத்தர அளவில் ஒரு வீடும் கட்டினார். 1980 ஆம் ஆண்டு சூன் மாதம் 9 ஆம் நாள் அதில் புதுமனை புகுவிழாவை மிகச் சிறப்பாக (ஆடம்பரமாக)  நடத்தினார் !.

உறவினர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு அன்று எனக்குக் கிடைத்தது. நிரம்ப வருமானம் ஈட்டிவிட்டார் என்று ஊரார் கருதும் வகையில் வணிகம் செய்பவர்கள், எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாகாது. அப்படி நடத்தினால் விரைவில் வீட்சி ஏற்படும் என்பது மாமாவின் வாழ்க்கை மூலம் நான் அறிந்த உண்மை ! ஆம் ! மாமா விரைவாகவே நொடித்துப் போனார் !

நம் உறவினர்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்தால், அதைக் கண்டு நம் உள்ளமும் மகிழ்ச்சி அடைகிறது; அவர்களில் யாரேனும் நலிவடைந்து துன்பப் பட்டால் நம் உள்ளமும் துன்பமடைகிறது. எந்தவகையிலும் நாம் காரணமாக இல்லாத போது, உறவினர்கள் படும் இன்னல்களைக்  கண்டு  நம் உள்ளமும் துன்பப் படுவது  மனித வாழ்வில் மாற்ற முடியாத விதி போலும் !


-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051,விடை (வைகாசி),01]
{14-05-2020}

 ---------------------------------------------------------------------------------------------

மகாதேவன் - அன்புச் செல்வி: 
திருமணம்: 14-11-1979.


சென்னை “மெரீனா” கடற்கரை.

சென்னை, அண்ணா சதுக்கம்.


சென்னை, வள்ளுவர் கோட்டத்தின் தேர்


வள்ளுவர் கோட்டத்தில்
 30-1-1980 அன்று எடுத்த படம்.
கவிக்குயில் பிறப்பு :14-8-1979

கவிக்குயில் (2015)


சிதம்பரம் கோயில்: 
3-2-1980 அன்று நான் எடுத்த படம்


சிதம்பரம் கோயிலில்  
3-2-1980 அன்று நான் எடுத்த படம்


வைத்தீசுவரன் கோயிலில் 
4-2-1980 அன்று நான் எடுத்த படம் 

No comments:

Post a Comment