name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (35) :1996, 97 நிகழ்வுகள் - ஆட்சி அலுவலராகப் பதவி உயர்வு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, March 31, 2020

காலச் சுவடுகள் (35) :1996, 97 நிகழ்வுகள் - ஆட்சி அலுவலராகப் பதவி உயர்வு !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு. வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1996-97 நிகழ்வுகள் !

(சுவடு.35) ஆட்சி அலுவலராகப் பதவி உயர்வு !

---------------------------------------------------------------------------------------------

அரசுப் பணி சார்ந்த வாழ்க்கையில் என் இரண்டாவது பதவி உயர்வு 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என்னை வந்தடைந்தது. ஆம் ! அலுவலக மேலாளர் (கண்காணிப்பாளர்) நிலையிலிருந்து ஆட்சி அலுவலராகப் என்னைப் பதவி உயர்த்தி தமிழக அரசு ஆணையை இம்மாதம் வெளியிட்டது ! [அரசாணை (நிலை) எண்:169, தொழிலாளர், வேலை வாய்ப்புத் துறை, நாள் :18-11-1996]

வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையின் பயிற்சிப் பிரிவில் 1966 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த எனக்கு முப்பது ஆண்டுகள் கடந்த பின் இரண்டாவது பதவி உயர்வை அரசு எனக்கு அளித்தது. சில துறைகளில் சில அலுவலர்கள் நான்கைந்து பதவி உயர்வுகளைக் கூடத் தங்கள் பணிக் காலத்தில்  பெறுகின்றனர். வேறு சில துறைகளில் ஒரேயொரு பதவி உயர்வு வாய்ப்புக் கூடப் பெற முடியாத அலுவலர்களும் இருக்கவே செய்கின்றனர் !

எனக்கு அளிக்கப்பட்ட உயர் பதவியான ஆட்சி அலுவலர்” (ADMINISTRATIVE OFFICER) பணியிடமானது, ஊதிய நிரக்கைப் (SCALE OF PAY) பொறுத்த அளவில் வருவாய்த் துறை சார் ஆட்சியர் (SUB - COLLECTOR), கூட்டுறவுத் துணைப் பதிவாளர் (DEPUTY REGISTRAR  OF CO-OP. SOCIETIES), காவல் ஆய்வாளர் (INSPECTOR OF POLICE) உதவி இயக்குநர் (ASSISTANT DIRECTOR), அரசுத் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்  (PRINCIPAL OF I.T.Is) போன்ற பதவிகளுக்குச் சமமானது !

மகன் இளம்பரிதி, சேலம் சி.எஸ்.. பல் தொழில் பயிலகத்தில் எந்திரப் பொறியியலில் பட்டயப் படிப்பை (D.M.E) நிறைவு செய்துவிட்டு, தியாகராயர் பல்தொழில் பயிலகத்தில் கணினிப் பயன்பாட்டியலில் ஒன்றரை ஆண்டு  பட்டயத்துக்குப்  பிந்தைய படிப்பினை (P.D.C.A) மேற்கொண்டிருந்த நேரம் !

மகள் கவிக்குயில் தியாகராயர் பல்தொழில் பயிலகத்தில் மின்னியல் மற்றும் மின்மவியலில் பட்டயப் படிப்பை (D.E.E.E) அடுத்த நான்கு மாதங்களில் நிறைவு செய்யக்கூடிய நேரம். இருவருக்கும் வேலைவாய்ப்புக்கு, ஓசூர் தான் உகந்த இடம் என்று கருதி, பதவி உயர்வு தருகையில் ஓசூரில் பணியாற்ற வாய்ப்புத் தருமாறு இயக்குநரைக் கேட்டுக் கொண்டிருந்தேன் !

என் விருப்பம் ஏற்கப்பட்டு, ஓசூர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆட்சி அலுவலராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. பணி அமர்வு ஆணை கிடைக்கப் பெற்றதும் நான், சேலம் தொழிற் பயிற்சி நிலையத்திலிருந்து 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் விடுவிக்கப் பெற்று மறு நாள் (27-11-1996) ஓசூர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிப்பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன் !

பிள்ளைகளின் படிப்பு மார்ச்சு 1997 –இல் தான் நிறைவு பெறும் என்பதால் குடும்பத்தினர் சேலம் குடியிருப்பிலேயே மேலும் ஆறு மாதங்கள் தங்கி இருந்தனர். நான் மட்டும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை இரவும் சேலம் வந்து விட்டு, திங்கள் கிழமை காலையில் ஓசூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் !

ஆட்சி அலுவலர் (ADMINISTRATIVE OFFICER) என்பவர் பயிற்சி நிலைய ஆட்சிப் பொறுப்பின் (ADMINISTRATION)  தலைமை அதிகாரி என்பதால், அவருக்கென்றுத் தனி அறை ஒவ்வொரு நிலையத்திலும் உண்டு. பணியேற்ற முதல் நாளன்று என் அறையில் அமர்ந்து பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன் !

மின் விசிறி ஓடிக் கொண்டிருந்தது. நண்பகல் 12-00 மணி இருக்கும். என் உடலில் மெல்ல மெல்லக் குளிர் ஏறத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் குளிர்க் காய்ச்சலால்  தாக்குண்டதைப் போல நடுங்கத் தொடங்கினேன் !

மாடியில் இருக்கும் துச்சிலில் (GUEST ROOM) என் மாற்று உடைகளும் கம்பளித் துணிகளும் இருந்தன.  என் அறையிலிருந்து எழுந்து ஓடிப் போய்த் துச்சிலை அடைவதற்கு முன் குளிரால் நடுங்கி கிழே விழுந்து விடக் கூடிய நிலை தோன்றியது !

சமாளித்துக் கொண்டு உள்ளே சென்று கம்பளிச் சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு அப்படியே 15 நிமிடங்கள் அமர்ந்து விட்டேன். அதன் பிறகே இயல்பு நிலை திரும்பியது !

ஓசூரில் மார்ச்சு, ஏப்பிரல், மே ஆகிய மூன்று மாதங்கள் தவிர, ஏனைய ஒன்பது மாதங்களும் குளிர்ச்சியான வானிலையே நிலவும். வேலை வாய்ப்பின் நிமித்தம் முதன்முதல் ஓசூருக்கு வருவோர், ஒரு பருவ காலத்தைச் (SEASON) சமாளிப்பதற்கு மிகவும் இன்னற்பட வேண்டும். தொடர்ந்து வரும் பருவகாலங்களில் நிலைமையைச் சமாளிக்கும் வல்லமையை உடல் பெற்று விடும் !

ஐம்பது  ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ஓசூர் வந்தால், அவரால் ஒரு நாள் கூட சமாளிக்க முடியாத வானிலைச் சூழல் அப்போது இருந்தது. தொழிலகங்கள் பெருக்கம், கட்டடங்கள் பெருக்கம், மக்கள் பெருக்கம், ஊர்திகள் பெருக்கம் போன்ற காரணங்களால், ஓசூரின் வானிலைச் சூழல் இப்போது நிரம்பவும் மாறிவிட்டது. கோடைக் காலமான மூன்று மாதங்களும், வெப்பம் பிற ஊர்களைப் போலத்தான்  நிலவுகிறது !

ஓசூர் பேருந்து நிலைத்திலிருந்து 8.3  கி.மீ தொலைவில் கர்நாடக மாநில எல்லை தொடங்குகிறது. 42 கி.மீ தொலைவில் பெங்களூர் நள்ளி பேருந்து நிலையம் (BANGALORE MEJESTIC CIRCLE CENTRAL BUS STAND) அமைந்துள்ளது !

ஆனாலும் ஓசூரில் கன்னடம் பேசுபவர்களை விடத் தெலுங்கு பேசுபவர்களே மிக அதிகம். கடைத் தெருவுக்குச் சென்றால் உங்களுக்கு என்ன வேண்டும் என்று தெலுங்கில் தான் கேட்பார்கள். நாம் தமிழில் பேசினால், அவர்களும் தமிழில் மறுமொழி பகர்வார்கள் !

நான் ஓசூர் சென்ற புதிதில், வெளியில் எங்கு சென்றாலும் தெலுங்குக் குரலே காதில் ஒலித்ததால், கதுமென (திடீரென) ஒருவரைக் கொண்டுபோய் ஆப்பிரிக்காவில் இறக்கி விட்டால் அவர் எப்படி உணர்வாரோ அப்படி நான் உணர்ந்தேன் !

பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையில் வந்து சிக்கிக் கொண்டோமோ என்று ஐயுறலானேன். குடும்பத்தை விரைவில் அழைத்து வரவேண்டி இருப்பதால், அதற்குள் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்பினேன் !

நான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தமையால், தஞ்சை மாவட்டக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று உசாவத் தொடங்கினேன். பத்துப் பதினைந்து பேரின் அறிமுகம் கிடைத்தது. இது போதாது இன்னும் பெரிய எண்ணிக்கையில் நண்பர்கள் அறிமுகம் தேவை என்று எண்ணினேன். அப்போது ஒரு நண்பர் சொன்ன ஒரு கருத்துரு எனக்குப் பிடித்திருந்தது !

எனக்கு, தமிழன் என்ற இனப்பற்று தான் உண்டே தவிர குலப் பற்று (சாதிப் பற்று) கிடையாது. இருந்தாலும் நணபர் முன்மொழிந்த கருத்துக்கு இணங்க, கள்ளர், மறவர், அகமுடையர் என்னும் முக்குலத்தோர் ஓசூரில் யார் யார் இருக்கிறர்கள் என்று உசாவத் தொடங்கினேன். நூற்றுக்கும் மேற்பட்டோர் அறிமுகமானார்கள் !

இப்போது மனதில் புதிய தெம்பு வந்தது. அவர்களை எல்லாம் அழைத்து ஒரு கூட்டம் போட்டுமுக்குலத்தோர் பண்பாட்டுக் கழகம்என்னும் அமைப்பைத் தொடங்கச் செய்தேன் !

இந்த அமைப்பின் தலைவராக மைசூர் மாநில அளகையில் (STATE BANK OF MYSORE) காசாளராகப் பணி புரிந்து வந்த திருச்சியைச் சேர்ந்த திரு.தாயுமானவன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார் !

செயலாளராக தஞ்சாவூரைச் சேர்ந்த திரு.சிவகுமாரும், துணைத் தலைவராக திருமங்கலத்தைச் சேர்ந்த திரு.முத்துராமலிங்கமும், பொருளாளராக பேராவூரணி இராமநாதனும் தேர்வு செய்யப்பட்டனர் ! சட்ட ஆலோசகராக மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் முனியாண்டி பொறுப்பேற்றார்.

செயற்குழு உறுப்பினர்களாகத் தமிழ் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அமைப்புத் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் ஏறத்தாழ எண்ணூறு பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துவிட்டனர் !

இதில் உறுப்பினராகச் சேர்ந்த அனைவருமே ஓசூரில் பல்வேறு தொழிலகங்களில் பணிபுரிந்து வந்தவர்கள்.; வணிகம் செய்து வந்தவர்கள் ! அன்றாடம் வேலை செய்து பொருள் ஈட்டி வாழ்ந்து வந்தவர்கள் !

முக்குலத்தோர் பண்பாட்டுக் கழகத்தின் நோக்கங்கள் இரண்டு. (01) தேவை ஏற்படுகையில் ஒருவர்க்கொருவர் ஆதரவாக இருந்து பாதுகாப்பு உணர்வை உறுதிப்படுத்தல் (02) ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் துறை சார்ந்த உதவிகளை உறுப்பினர்களுக்குச் செய்தல் !

தொழிற்பயிற்சி நிலையத்தில், முக்குலத்து இளைஞர்களைச் சேர்த்திடத் தேவையான உதவிகளை நான் செய்து தருவேன். திரு.தன்ராஜ் என்ற உதவி ஆய்வாளர், கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர்; அவர் காவல்துறை சார்ந்த உதவிகளைச் செய்து தருவார். திரு.இராமசாமி என்ற துணை வட்டாட்சியர் மதுரை, திருமங்கலத்துக்காரர். வருவாய்த் துறை சார்ந்த உதவிகளை அவர் செய்து தருவார் !

இதுபோன்றே, தொலைபேசித் துறை, விட்டு வசதி வாரிய அலுவலகம், கருவூலம், கல்வித் துறை, வட்ட வழங்கல் அலுவலகம்,  இருப்பூர்தி நிலையம், அதியமான் கல்லூரி  போன்ற இடங்களில் / அலுவலகங்களில் பணிபுரியும் முக்குலத்தைச் சார்ந்த நண்பர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவர் !

ஆண்டுக்கொரு முறை சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உறுப்பினர்கள் சந்திப்பு விழாவாகக் கொண்டாடப்படும். அனைவரும் நண்பகல் விருந்தில் கலந்து கொள்வோம் ! ஏறத்தாழ 15 ஆண்டுகள் வலிமையாகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, சரியான வழிகாட்டிகள் இல்லாததால், இப்போது முடங்கிக் கிடக்கிறது !

----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),11]
{24-05-2020}
---------------------------------------------------------------------------------------------
ஆட்சி அலுவலர் அறையில், 
எனது இருக்கையில் ! 

ஓசூர் மலைக் கோயில்



மகன் இளம்பரிதி
 பட்டயப் படிப்புக்குப்  பிந்திய
 கணினிப் பயிற்சி வகுப்பில் (PDCA)
 பயின்று வந்த  சேலம்  தியாகராயர்
பல்தொழில்நுட்பப் பயிலகம்


 மகள் கவிக்குயில்
 மின்னியல் & மின்மவியல் 
பட்டயப் படிப்பு  பயின்று வந்த 
சேலம் தியாகராயர் 
பல்தொழில் நுட்பப் பயிலகம்


ஓசூர் பிறைசூடிப் பெருமான்
 (சந்திரசூடேசுவரர்) 
 அமர்ந்துள்ள மலைக்கோயில்.


திரு.அப்துல்  அமீது.
 முதல்வர், அ.தொ.ப.நி.ஓசூர்.











No comments:

Post a Comment