name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (23) :1976-1977 நிகழ்வுகள் - சிக்கல் - நாகூர் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (23) :1976-1977 நிகழ்வுகள் - சிக்கல் - நாகூர் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1975-1976 நிகழ்வுகள் !

(சுவடு.23) சிக்கல் - நாகூர் ! !

------------------------------------------------------------------------------------------------------

1976  -ஆம் ஆண்டுசூன் மாதம் 19 ஆம் நாள்,  நாகூர் வண்டிக்காரத் தெரு 24 –ஆம் இலக்க வீட்டிற்கு வீட்டு உடைமைகளை எடுத்துக் கொண்டுகுடி வந்துவிட்டேன் !

 

அப்போது எனக்கு மொத்த மாத ஊதியம் உருபா 508/=. இதில் பிடித்தங்கள் உருபா 156 போக நிகர ஊதியம் உருபா 352/=. எனக்கு இது போதுமானதாக இருந்தது !  விருந்தினர் வருகை குறைந்து போயிற்றுஆனாலும் இந்த வீடு பற்றிய சிறு குறை மனதில் இருந்துகொண்டே இருந்தது ! நாட்டு ஓடு வேய்ந்த வீடுஅதனால் தேள்களின் புழக்கம் அவ்வப்போது காணப்பட்டதுபரிதி ஆறு மாதக் கைக்குழந்தை !

 

தேளுக்கு ஒரு பிள்ளையை வாரிக்கொடுத்த என் தங்கையின் துய்ப்பு (அனுபவம்மனதை  பிசைந்து கொண்டே இருந்ததுவிரைவில் வேறு வீடு பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன் !

 

இந்த வீட்டிற்கு வருவதற்கு  இரு நாள் முன்னதாக – அதாவது சூன் மாதம் 16-ஆம் நாள் எந்திரப் பணியியல் பிரிவு ஆசிரியர் (CRAFT INSTRUCTOR – MACHINIST) திரு..சிங்காரவேலின் திருமணம் அவரது சொந்த ஊரான சிக்கலில் நடைபெற்றதுஇந்த “சிக்கல்” என்னும் ஊரைப் பற்றி அறிமுகம் வேண்டுமெனில் திரைப்படத்தைச் சான்றுக்கு அழைத்தாக வேண்டும் !

 

முருகன் குடிகொண்டிருக்கும் இவ்வூர்க் கோயில், 1962 ஆம் ஆண்டு வெளிவந்த  “கொஞ்சும் சலங்கை” என்னும் திரைப்படத்தால் பலரும் அறிந்த ஊராயிற்றுசெமினி கணேசன்சாவித்திரி நடிக்ககாருக்குறிச்சி அருணாச்சலத்தின் ஏழில்  (நாதசுரம்)  ஒலிக்கும் பின்னணி இசையுடன்எசு.சானகி பாடும் ”சிங்காரவேலனே தேவா” என்னும் பாடல் காட்சி இந்தக் கோயிலில் உள்ள முருகன் சன்னிதியில் நடைபெறுவதாகப் படமாக்கப் பெற்றதுஇந்தப் படம் வந்த பிறகு இந்தப் பாடலும் புகழ் பெற்றது; “சிக்கல்” என்னும் இந்த ஊரும் தமிழ்நாடெங்கும் அறிமுகமாயிற்று !

 

”1968 ஆம் ஆண்டு சூலை மாதம் வெளியான தில்லானா மோகனாம்பாள்” படத்தில் வரும் சிவாசி கணேசனின் கதைமாந்தன் (கதா பாத்திரம்பெயர் “சிக்கல்” சண்முகசுந்தரம்இவ்விரண்டு படங்களால் தமிழ் நாடெங்கும் அறிமுகமான “சிக்கல்” இன்றைய நாகை,  திருவாரூர்தஞ்சை மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆன்மிக இடமாகவும்சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது !

 

இந்த ஊரில் நடைபெற்ற “சிக்கல்“ சிங்காரவேலுவின் திருமணத்திற்கு தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் வந்திருந்தனர் !

 

திருமணம் நிறைவு பெற்றதும்அனைவரும் கோயிலுக்குச் சென்றோம்ஒரே வளாகத்திற்குள் சிவன் கோயிலும்சிங்காரவேலன் கோயிலும்இடையில் தடுப்பு மதிலுடன் பெருமாள் கோயிலும் இடம் பெற்றிருக்கும்பெருமாள் திருமேனி முன்பு கணீரென்ற குரலில் ஒரு ஐயங்கார் பூசகர் தமிழ்ப் பாசுரங்களைப் பாடி வழிபாடு செய்விக்கும் (அருச்சனைகாட்சி இன்னும் என் மனக் கண்கள் முன்பு காணொலிக் காட்சியாக அகலாமல் நிற்கிறது !

 

அவருடைய வெண்கலக் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் ஒரு கவர்ச்சியும் மயக்கமும் அதில் எப்போதும் கலந்திருக்கும்தமிழ்ப் பாசுரங்களின் இனிமைக்கு ஈடு இணை தான் ஏது ?  இடையில் ஒரு திருமணச் செய்தி !

 

கடிநெல்வயல் (நடுப்பெரியப்பாவின் மகள்  செல்வி.விசயா  – தோப்புத் துறை திரு. முருகேசன் திருமணம் 1976 ஆம் ஆண்டுஆகத்து மாதம் 27 –ஆம் நாள் கடிநெல்வயலில் நடைபெற்றதுஅறுபது ஆண்டுச் சுழற்சியில் விசய ஆண்டில்  (1954)   பிறந்ததால்விசயா என்று பெயரிடப் பெற்ற  இப்பெண்ணுக்குஅதனுடைய 22 –ஆம் அகவையில் திருமணம் நடைபெற்றதுதிருமணத்திற்கு  நான் மட்டுமே சென்று வந்ததாக நினைவு !

இதுபோன்றே, அசுவினி நாளில் (நட்சத்திரத்தில்) பிறந்தால் அஸ்வின்என்றோ அஸ்வினிஎன்றோ பெயர் சூட்டுகிறார்கள். கார்த்திகை நாளில் பிறந்தால் கார்த்திக்என்றோ கிருத்திகாஎன்றோ பெயர் சூட்டுகிறார்கள். வடமொழியைத் தமிழர்கள் மீது திணிக்க ஆன்மிகத்தையும், இறையுணர்வையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர் வடமொழியாளர்களும் அவர்தம் அடியார்களும் ! 

 

நாகூரில் வண்டிக்காரத் தெருவில் 24 ஆம் இலக்கமுள்ள வீட்டை விட்டு வெளியேற முனைப்புடன் முயன்றதன்  விளைவாகநாகூர் தர்காவுக்கு நேர் மேற்கே செல்லும் சாலையில் பெருமாள் மேலத் தெருவில் புதிதாக ஒரு வளவு (COLONY) இருப்பதாகவும்அதில் 2 –ஆம் எண் வீடு வெட்புலமாக இருப்பதாகவும் இளநிலை உதவியாளர் திரு.சு.சந்திரசேகரன் தெரிவித்தார்.  அங்கு தான் அவரும் குடியிருந்து வருவதாகவும் என்னிடம் சொல்லியிருந்தார்அவருடன் சென்று வீட்டைப் பார்த்தேன்பிடித்திருந்தது !

 

தெற்கு நோக்கி அமைந்த  ஐந்து  குடியிருப்புகள்அனைத்தும் ஒரே கூரையின் கீழ்தரைத் தளம் மட்டுமே அமைந்த மச்சு வீடுஐந்து வீடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதபடி தனித்தனி வாயில்கள்தூய்மையான சுற்றுப்புறம். ”இரசாக் குடியிருப்பு” (RAZAK COLONY)  என்று பெயர் !

 

இந்த வீடு என் மனைவிக்கும் பிடித்திருந்ததால் 1977 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் நாள்வீட்டு உரிமையாளரிடம்,  வாடகை மாதம் உருபா  50 =  என்று பேசி முன்பணம் தந்து குடியிருப்பை உறுதிப் படுத்திக் கொண்டேன் !

 

நாகூர் வண்டிக்காரத்தெரு குடியிருப்பை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு  1977 – ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் நாள்  “இரசாக் வளவுக்கு வந்துவிட்டேன்.  என்னிடம் ஈருருளி  (CYCLE)  இருந்ததால்அலுவலகம் செல்வதில் இடையூறு ஏதும் இருக்கவில்லை !

 

இந்த வீட்டிற்குக் குடிவந்த பிறகு தினமணி முகவர் திரு.இரத்தினசாமிப் பிள்ளையின் குடும்பம் அறிமுகமாகியதுஅவர் மகன் திரு.அசோகன் என்பவர் என் வீட்டிற்குத் தினமணி போடத் தொடங்கிஎங்கள் குடும்பத்தில் ஒருவராக நெருக்கமானார்அசோகன் ஒரு நாள் என்னிடம் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவதாகவும் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் !

 

அவரது விருப்பப்படி ஒருக்கியல் (WELDER) பிரிவில் சேர்த்து விட்டேன். பின்னாளில்அவர் மும்பைக்குச் சென்று விட்டதாகவும் திருமணம் செய்து கொண்டு அங்கேயே  வசதியாக வாழ்ந்து வருவதாகவும் செய்தியறிந்து மகிழ்வுற்றேன் ! நம்மால் உதவப் பெற்றுஅதன்மூலம் வாழ்க்கையில் உயர்வடைந்தவர்களைப் பற்றிய செய்தி அறிகையில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவுதான் ஏது ?

 

அசோகனின் நண்பரான  திரு.பசுவேசுவரன் என்பவரை பயிற்சியில்  சேர்த்து விடுமாறு அசோகன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை ஒருக்கியல்  (WELDER)  பிரிவில் சேர்த்து விட்டேன்பின்னாளில் அவர் சோழன் போக்கு வரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருவதாக அசோகன் மூலமே அறிந்த போது  மிகவும் பெருமைப்பட்டேன் !

 

கடிநெல்வயல்  பொன்னையதேவன்காடு  திரு.கணபதித் தேவர் மகன்  ஆசிரியர் திரு.வேம்பையன்கூத்தாநல்லுர் பக்கமுள்ள பாலக்குறிச்சி என்னும் ஊரைச் சேர்ந்த  அடித்தட்டுக் குடும்பத்து இளைஞர் ஒருவரை தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார்பொருத்தியல் பிரிவில் சேர்த்துவிட்டேன்அந்த இளைஞர் மூலம் அந்தக் குடும்பம் மேனிலைக்கு வந்துவிட்டதாகப்  பின்னாளில் ஆசிரியர் திரு.வேம்பையன் மூலம் அறிந்து மிகவும் மகிழ்ந்தேன் !

 

பஞ்சநதிக்குளம் மேலச் சேத்தி திரு.கந்தசாமித் தேவர் (திரு.கே.பி.எம். அவர்களின் சம்பந்தி)  மகன் திரு.சந்தானம் என்பவரை பொருத்துநர்  (FITTER)  பிரிவில் சேர்த்துவிட்டேன்பின்னாளில் அவர் மின்வாரியத்தில் பணியில் அமர்ந்துபகுதிநேரப் படிப்பு மூலம் பொறியியல் வாலை (B.E) படிப்பை முடித்து மின்வாரியத்தில் உதவிப் பொறியாளாராகப் பணியாற்றி வந்த செய்தியும் என் செவிகளுக்கு எட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது !

 

என் சிற்றப்பா மகன் திரு.கனகராசு என்பவரை வார்ப்பியல்  (MOULDER)  பிரிவில் சேர்த்துவிட்டேன்பயிற்சி நிறைவு பெற்ற பிறகு  சென்னை எண்ணூரில் உள்ள K.C.P. FOUNDRY என்னும் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்தேன்முப்பது ஆண்டு காலம் அங்கேயே பணியாற்றிஉயர் பதவியையும் அடைந்துஓய்வு பெற்று சென்னைபொன்னேரியில் தன் குடும்பத்தினருடன் சொந்த வீட்டில் திரு.கனகராசு வாழ்ந்து வருகிறார் !

 

என் அண்ணன் (பெரியப்பா மகன்மகன்  திரு.இராசேந்திரன் என்பவருக்கு  நாகப்பட்டினத்திலும்திருவெறும்பூரிலும் இடம் கிடைத்ததுஅவர் திருவெறும்பூரில் பொருத்தியல் பிரிவில் (FITTER)  பயின்றுஇராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவனத்தில் (B.H.E.L) பணியில் சேர்ந்துமுப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்துஓய்வும் பெற்றுவேலூரில் தன் குடும்பத்தினருடன் சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார் !

 

என் முதல் தங்கை திருமதி.கல்யாணியின் மகன் திரு.வேணுகோபாலை நாகப்பட்டினத்தில் வார்ப்பியல் பிரிவில் சேர்த்து விட்டேன்அங்கு பயிற்சியை முடித்த பிறகுசேலத்தில் சாணை எந்திரப் பணியியல் (MACHINIST - GRINDER) பிரிவிலும் சேர்த்து விட்டேன்அவர் இன்று ஓசூரில்  BI-METAL BEARINGS  என்னும் நிறுமத்தில் பணிபுரிந்து வருகிறார்அங்கு சொந்த வீட்டில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் !

புதுக்கோட்டையில் பணிபுரிகையில் கடிநெல்வயல்  திரு.அ. சீனிவாசன், பயத்தவரன்காடு திரு.சு.சிவசுந்தரம், புதுக்கோட்டைதிரு.இல. சந்திரமௌலீசுவரன், திருவெறும்பூரில் பணிபுரிகையில் திரு. குப்புசாமி அவர்களின் தம்பி ஆகியோரை அந்தந்த  தொழிற் பயிற்சி நிலையங்களில் நான் சேர்த்து விட்டதைக் காலச் சுவடுகளில் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன் !

 

நாகப்பட்டினத்தில் ஊரக இளஞர் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்ட போது நாகூரைச் சேர்ந்த திரு.மோகன் என்பவரையும்என் மைத்துனர்களான சேரன்குளம்  திரு.பிரகலாதன்திரு.ஜீவானந்தம் ஆகியோரையும்  “மின்னுந்து அகச்சுருள்  கட்டுதல்”  (REWINDING OF ELECTRIC MOTOR) பிரிவில் சேர்த்து விட்டேன்மூன்று மாத காலப் பயிற்சிதிரு.மோகன் சொந்தத்தில் ”மின்னுந்து அகச்சுருள் கட்டும் பணியில் ஈடுபட்டு நன்னிலையில் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன் !

 

திரு.ஜீவானந்தம் பொன்மலை இருப்பூர்திப் பணிமனையில் பணியில் சேர்ந்தார்திரு.பிரகலாதன் நடத்துநராகப் பணியேற்றார்.  திரு.அசோகனின் பெரியப்பா மகன் திரு.சோமசேகரன் என்பவரை “எளிய மின்பணியியல்” (SIMPLE ELECTRIC WIRING) பயிற்சியில் சேர்த்துவிட்டேன்அவரும் நன்னிலைக்கு வந்து விட்டதாகப் பின்னாளில் தெரிந்து கொண்டேன் !

கடிநெல்வயல் பொன்னையதேவன் காட்டைச் சேர்ந்த திருசிங்காரவேல் தேவர் தன் மகன் அண்ணாத்துரையை நாகை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்த்துவிட வேண்டும் என்று கோரி என்னை அணுகினார்அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் எந்தத் தொழிற்பிரிவில் சேர வேண்டுமானாலும் 10 –ஆம் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் குறைந்த அளவு (MINIMUM) 40 மதிப்பெண்களும்  அறிவியலில் கீழ்வரம்பாக  (MINIMUM)  40 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதி நடைமுறையில் இருந்தது !

 

திரு அண்ணாத்துரை அறிவியலில் 75 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தார். ஆனால் கணிதத்தில் கீழ் வரம்பான (MINIMUM) 40  மதிப்பெண்ணுக்கு ஒன்றோ இரண்டோ குறைவாகப் பெற்றிருந்தார்இதனால் அவரைப் பயிற்சிக்குச் சேர்த்திட இயலவில்லைஇதை அவரிடம் விளக்கிக் கூறிகணிதத்தை மட்டும் மீண்டும் எடுத்தெழுதச் சொல்லுங்கள் அடுத்த ஆண்டு பொருத்தியல்  (FITTER) பிரிவிலேயே சேர்த்து விடுகிறேன் என்று சொன்னேன் !

 

ஒரு ஆண்டு வீணாவதாக எண்ணிய திரு சிங்காரவேல் தேவர்அவர்கள் திரு.அண்ணாத்துரையைதஞ்சாவூரில் உள்ள புனித  சேவியர்  தொழிற்பயிற்சி நிலையத்தில்  (St.XAVIER I.T.I.)  மாழைத் தகட்டுப் பணியியல் பிரிவில்  (SHEAT METAL WORKER) சேர்த்துவிட்டார் என்று பின்னர்க் கேள்விப்பட்டேன் ! இது தனியார் நிலையமாதலால்கீழ்வரம்பு மதிப்பெண் (MINIMUM MARK)  பார்க்க வேண்டிய தேவை அப்போது இல்லை !

 

எத்தனையோ பேருக்கு உதவி செய்து அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்த்து விட்டிருக்கிறேன்; ஆனால் பிறந்த ஊர்க்காரருக்கு உதவ முடியவில்லையே என்று எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டதுஅதுவுமல்லாமல்கணக்குத் தேர்வை எடுத்தெழுதிக் கீழ்வரம்பான  (MINIMUM)  40   மதிப்பெண் அளவுக்குப் பெற்றிருந்தால் கூட அடுத்த ஆண்டில் இன்னும் நல்ல பணி வாய்ப்புள்ள தொழிற் பிரிவில் சேர்ந்திடும் வாய்ப்புக் கிடைத்திருக்குமே  என்றும்  வருந்தினேன் !

 

வாழ்க்கையில் பலருக்கும் ஏணியாக இருந்திருப்பதில் எனக்கு மனநிறைவு நிரம்பவே உண்டு ! மகிழ்ச்சியும் நிரம்ப உண்டு ! உற்றுழி உதவுகின்ற உயரிய  கோட்பாட்டிலிருந்து என்றுமே நான் விலகியதில்லை; இனியும் விலகப் போவதில்லை !

 -----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி2051, மேழம்(சித்திரை)29]
{12-05-2020}
----------------------------------------------------------------------------------------------
சிக்கல் சிங்காரவேலர்
திருக்கோயில்

நாகூர் தர்கா, கோபுரம்.

நாகூர் தர்கா முன் வாயில்


பாரத மிகுமின் தொழிலகம்,
 இராணிப்பேட்டை

கடிநெல்வயல்
 திரு.மீ.இராசேந்திரன் 
(இப்போது இருப்பு: வேலூர்)

கே.சி.பி.
 வார்ப்படத் தொழிலகம்
 எண்ணூர், சென்னை

கடிநெல்வயல்
 திரு.ச.கனகராஜன்
 (இப்போது இருப்பு : 
பொன்னேரி)
சேரன்குளம்
 திரு.இரகு.பிரகலாதன்
(நி/வா) சேரன்குளம் 
திரு.இரகு.ஜீவானந்தம்


No comments:

Post a Comment