name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (03) :1950 - 1952 நிகழ்வுகள் - முதற் புயல் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Friday, March 27, 2020

காலச் சுவடுகள் (03) :1950 - 1952 நிகழ்வுகள் - முதற் புயல் !



தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு. வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1950 -1952 நிகழ்வுகள் 

 (சுவடு.03) முதற் புயல் !

--------------------------------------------------------------------------------

கடிநெல்வயலில் இயங்கி வந்த அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புகள் வரை செயல்பட்டு வந்தன. இப் பள்ளிக் கூடம் 1923 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடக்கப் பள்ளியாகவே நீண்ட காலம் செயல்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 82 ஆண்டுகள்  கடந்த பின்பு 2005 –ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக உயர்வடைந்தது !
          
கடிநெல்வயலில் இப்பள்ளியைத் தொடங்குவதற்கு நடுக்காட்டைச் சேர்ந்த நல்லாசிரியர் திரு.சாந்தப்பிள்ளை, மேலக்காட்டைச் சேர்ந்த நல்லாசிரியர் திரு.வைரக்கண்ணுத் தேவர் இருவரும் சேர்ந்து தேவையான நிலத்தை நன்கொடையாகத் தந்தனர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி !

இந்தப் பள்ளியில்தான் எனது தொடக்கக் கல்வியை நான் நிறைவு செய்தேன். இந்த ஐந்தாண்டுக் காலத்தில் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரின் பெயரும் நினைவில்லை என்றாலும், திரு.தியாகராச தேவர், திரு.சிதம்பர தேவர், திரு.வைரக்கண்ணுத் தேவர், திருமதி.மங்களாவதி அம்மையார் ஆகியோர் இன்னும் என் நினைவில் பசுமையாகவே வாழ்ந்து வருகின்றனர் !

அப்பொழுது எனக்கு அகவை எட்டு !  1952 ஆம் ஆண்டு !  மன்னை வட்டம் கோட்டூர் அருகில் உள்ள கோமளக் கோட்டையில் (கோமளம் = அழகு, இளமை),  பெரியப்பா, காலஞ்சென்ற திரு.காசிநாத தேவரின் மகள் திருமதி.செகதாம்பாள் தன் கணவர் திரு.குழந்தைவேல் பிள்ளையுடன் வாழ்ந்து வந்தார் !

அவர்கள் வீட்டிற்கு, தமக்கை திருமதி செகதாம்பாளின் தாயாரும் எனது பெரியம்மாவுமான திருமதி மாரிமுத்து அம்மையாருடன் நானும் சென்றிருந்தேன். அக்காள் கணவர் திரு.குழந்தைவேல் பிள்ளை அப்போது வடபாதிமங்கலம் பண்ணையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். அக்காளும் அத்தானும் அப்போது கோமளக் கோட்டையில் வீடு எடுத்துத் தங்கி இருந்தனர் !

நான் கோமளக் கோட்டை சென்றிருந்தது 1952 –ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில். ! நவம்பர் என்றாலே மழைக் காலம் தானே ! அன்று நவம்பர் 29. மழை விடாமல் தூறிக் கொண்டிருந்தது. மாலை 5-00 மணி இருக்கும். மழை மெல்ல வலுக்கத் தொடங்கியது .மழையுடன் காற்றும் சேர்ந்து கொண்டது. இரவு 9-00 மணிக்கெல்லாம் காற்று புயலாக மாறி  மிகுந்த கதிப்புடன் சுழன்று சுழன்று வீசியது !

நாங்கள் கோமளக் கோட்டையில் தங்கி இருந்தது, செங்கல்சுவர் வீடு ! சுவர் மீது  உத்திரங்கள் நிறுத்தி வாரைகள் பொருத்தப்பட்டு  இருக்கும். அவற்றின் மீது குறுக்குச் சட்டங்கள் தைத்து தென்னங் கீற்று வேயப்பட்டிருந்தது !  

கீற்றுகளின் மீது வைக்கோல் செத்தை பரப்பி வரிச்சுப் பிடிக்கப்பட்டு இருந்தது.  புயல் வேகமாகச் சுழன்று  அடித்ததால், கூரை கலைந்து போய் மழை நீர் உள்ளே கொட்டத் தொடங்கியது. வீட்டுக்கு ஒரே பிள்ளையாகிய என்னையும் அழைத்து வந்து இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே என்று பெரியம்மாவும் தமக்கையாரும் மிகவும் அரண்டு போனார்கள் !

தடிமனான பலகை பொருத்திய அகன்ற கட்டிலுக்கு அடியில் என்னைப் படுக்க வைத்துப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டனர். கீற்றுகளும் வைக்கோல் செத்தையும்  காற்றினால் பிய்த்து எறியப்பட்டதால், கிட்டத்தட்ட கூரையில்லா வீடாகிவிட்டதே தவிர, சுவர்களுக்குச் சேதமில்லை !

மறுநாள் காலை 10-00 மணிக்குப் புயல் ஓய்ந்தது; மழையும் ஓய்ந்தது. வீட்டிற்கு வெளியே இடுப்பளவு தண்ணீர். முன்புறம் இருந்த தென்னந் தோப்பில் காய்கள் ஆயிரக் கணக்கில் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன !

நீரில் மிதக்கும் தேங்காய்களைக் கண்டதும் நான் ஓடிப் போய் அவற்றைப் எல்லாம் பொறுக்கி வந்து வீட்டில் சேர்க்கத் தொடங்கினேன். பெரியம்மாவும், தமக்கையாரும் எவ்வளவோ தடுத்தும் கூட நான் கேட்க வில்லை !

இவ்வாறு தேங்காய்களைக் கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கையில் மெல்ல மழை பெய்யத் தொடங்கியது. காற்றின் வீச்சும் சுழற்சியும் மீண்டும் அதிகரிக்கலாயிற்று. இவ்வாறு மீண்டும் தொடங்கிய புயல் ஒரு ஊழித் தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டு மாலை 5-00 மணியளவில் ஓய்ந்தது. !

புயல் ஓய்ந்த பிறகு, ஈசனக்குடியிலிருந்து அத்தான் குழந்தைவேல் பிள்ளையும்  அவர் நண்பர் காசித் தேவரும் கைமின் விளக்கை (TORCH LIGHT) எடுத்துக் கொண்டு  இரவு 7-00 மணி வாக்கில் கோமளக் கோட்டைக்குத் தட்டுத் தடுமாறி  வந்து சேர்ந்தனர் !

அவர்களைப் பார்த்தபிறகு தான் தமக்கையாருக்கும், பெரியம்மாவுக்கும் மனதில் தெம்பு வந்தது. அதுபோன்றே எங்களைப் பார்த்த பிறகுதான் அத்தானுக்கும் காசித் தேவருக்கும் மூச்சோட்டத்தில் நிம்மதி பிறந்தது !

இந்த அச்சமூட்டும் நிகழ்வுகள் என் மனதில் நீங்கா நினைவுகளாக இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றவே தவிர, கோமளக் கோட்டையிலிருந்து கடிநெல்வயலுக்கு எப்போது திரும்ப வந்து சேர்ந்தேன் என்பது துப்புரவாக நினைவில் இல்லை !

இந்தப்புயலின் கொடிய தாக்கம் கடிநெல்வயலையும் விட்டு வைக்கவில்லை என்பதை ஊருக்கு வந்த பிறகுதான் முழுமையாகத் தெரிந்து கொண்டேன். கடிநெல்வயல்  அதன் அழகை இழந்து மிகவும் சீர்குலைந்து கிடந்தது !

கிழக்கே அகத்தியன் பள்ளியிலிருந்து மேற்கே தொண்டியக்காடு வரை ஊரையும் உப்பளத்தையும் பிரிக்கும் எல்லைக் கோடாக முட்டகம் என்னும் மேட்டுப் பகுதி இருந்து வந்தது !

ஐந்திலிருந்து 25 அடி உயரம் வரையில் பல்வேறு உயரங்களில் அமைந்திருந்த இந்தப்  பொருக்கு முட்டுகள் (பொருக்கு முட்டுகள் = ஒரு வகைக் களி மண் மேடுகள்), கிழக்கு மேற்காக ஒரே நேர் கோட்டில்  இயற்கையாக அமைந்து கடிநெல்வயலை உப்பங்காற்றுத் தாக்காமல்   காவல்  அரணாகத் திகழ்ந்து வந்தது !

இந்த முட்டுகளின் உயரத்தைப் பார்த்து இளம் பருவத்தில் நான் மலைப்பு அடைந்திருகிறேன் ! ஏறமுயன்று தோல்வியும் அடைந்து இருக்கிறேன் !

இந்த முட்டுகளின் தொடர்ச்சியில், மூன்று  அல்லது நான்கு கிலோ மீட்டர் இடைவெளியில் தெற்கே உப்பளம்  நோக்கிய வடிகால்கள் இருந்தன. மழைக் காலங்களில்,  வெள்ள நீர் இந்த வடிகால்கள் வழியாக உப்பளத்திற்குச் சென்று விடும் !

புயல் அடித்தபோது, தெற்கிலிருந்து வந்த கடல் நீர், இந்த வடிகால்கள் வழியாகக் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் அகத்தியன் பள்ளியிலிருந்து, புட்கரணி, வேம்பதேவன் காடு, கைலவனம்பேட்டை, கோவில்தாவு, கடிநெல்வயல், பன்னாள், கோயில்குளம், தென்னடார் போன்ற  ஊர்களின் விளைநிலங்கள் களர் நிலங்களாக மாறிப்போயின !

1953 ஆம் ஆண்டு சாகுபடிப் பருவத்தில் தான் இதன் தாக்கம் முழு வீச்சில் வெளிப்பட்டது.  விதைத்த நெல் சரியாக முளைக்கவும் இல்லை; முளைத்த பயிர்கள்   திட்டுத் திட்டாகக் கருகியும் காணப்பட்டன !

மழைக் காலத்தில் வயலில் தேங்கியிருந்த  நீரில் உப்புச் சத்து மேலெழும்பி,  நீரில் மிதக்கும் எண்ணெய் போலக் காணப்பட்டது. நெல்விளைச்சல் குறைந்து போயிற்று ! அடுத்தடுத்த ஆண்டுகளில் கண்டுமுதல் மிகவும் வீழ்ச்சி அடைந்ததைக் கண்டு கடிநெல்வயல் மக்கள் கவலையில் மூழ்கத் தொடங்கினர் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
 [தி.பி: 2051, மேழம்(சித்திரை),09]
{22-04-2020}
----------------------------------------------------------------------------------
திருமதி.செகதாம்பாள்
 குழந்தைவேல் பிள்ளை
முதற்புயல்
(நி/வா) திருமதி. மாரிமுத்து 
அம்மையார்
 (நி/வா) திரு.எஸ்.
குழந்தைவேல் பிள்ளை
 புயலால் சேதமடைந்த வீடு
புயல் சேதம்
 புயலால் சீர்குலைந்த 
தென்னந் தோப்பு.
 புயலால் உதிர்ந்த தேங்காய்கள்









                          

No comments:

Post a Comment