தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் : 1956-57 நிகழ்வுகள் !
(சுவடு.07) வெடிமத் துண்டு !
ஆண்டு தோறும் விளைச்சல்
வீழ்ச்சி அடைந்து வருவதால், தொடர்ந்து கடிநெல்வயலில் வாழ்வது
இயலுமா என்ற எண்ணம் என் பெற்றோர்களிடையே தோன்றத் தொடங்கியது. சரி ! கடிநெல்வயலை விட்டு வெளியேறினால் எங்கு செல்வது,
அங்கு போய் என்ன செய்வது என்ற கேள்விகளும் கூடவே எழுந்தன ! திருத்துறைப் பூண்டியில் இருக்கும் என் மாமா திரு.சி.பண்டரி நாதன் அவர்களிடம் கலந்து பேசலாம் என்று அப்போதைக்கு முடிவு செய்தனர்
!
இதற்கிடையில் 1956
–ஆம் ஆண்டு சூன் மாதம், எட்டாம் வகுப்பில் அடியெடுத்து
வைக்கிறேன் ! ஈராண்டுகளாகப் படித்து வரும் பள்ளி என்பதாலும்,
பழகிய பள்ளி என்பதாலும் எனக்குத் தயக்கமோ, மலைப்போ ஏற்படவில்லை.
விரைவில் பாடப் புத்தகங்களை வாங்க வேண்டும்; படிப்பைத்
தொடங்க வேண்டும், என்ற எண்ணம் தான் அப்போது மனதில் நின்றது
!
ஆனால் அவை எங்கே கிடைக்கும்
என்ற கேள்விதான் பூதமாய் உருவெடுத்து என்னைப் பயமுறுத்தி நின்றது ! அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பாடநூல் கழகம் உருவாக வில்லை.
பாடப் புத்தகங்கள் தனியாரால் அச்சிடப்பெற்று தனியார் கடைகளுக்கு விற்பனைக்கு
வரும் ! வந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிடும். தாமதமாகச் சென்றால் கிடைக்காது !
பாடப் புத்தகங்களை வாங்கித்
தருவதற்குப் பெற்றோர்கள் அலையாய் அலைய வேண்டியிருக்கும். சில நேரங்களில் ஓரிரு புத்தகங்கள் மாதக் கணக்கில் கூடக் கிடைக்காது.
கிடைக்கும் புத்தகங்களை வாங்கி, அவற்றுக்கு அட்டை
போட்டு, பெயர் நறுக்கு (NAME SLIP) ஒட்டி,
கசங்காமல் பொலிவு குறையாமல் வைத்துக் கொள்வதில் எனக்கு ஆர்வம் மிகுதி
!
பாட வேளை அட்டவணை
(TIME TABLE) கிழமை வாரியாக
பள்ளித் தலைமை ஆசிரியரால் வெளியிடப்படும். ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்து, அன்றைய படிப்புக்கான புத்தகங்களையும், கணிதக் குறிப்பேடு,
கலப்புக் குறிப்பேடு (ROUGH NOTE) ஆகியவற்றையும்
எடுத்துச் செல்வோம். புத்தகப் பையின் மொத்த எடையே 2 கி.கி எடை அளவே இருக்கும். அதை
எடுத்துக்கொண்டு 5 கி.மீ தொலைவு நடந்து
சென்று படிப்பது எங்களுக்குக் கடினமாகத் தோன்றவில்லை !
இக்காலத்தைப் போல் 10 கிலோ அளவுக்குக் குறையாமல் புத்தகப் பை சுமக்க வேண்டிய தேவையை அக்கால ஆசிரியர்கள்
உருவாக்கவில்லை. ஒவ்வொரு பாடத்தையும் ஆசிரியர் நடத்தி விளக்கம்
தருவார். பாடங்களை வகுப்பறையிலேயே விரிவாக நடத்தி மாணவர்களுக்குத்
தெளிவாகப் புரிய வைக்கும் ஆசிரியர்கள் அன்று இருந்தார்கள் !
ஆனால் இன்றோ, குறிப்பாக பதின்மப் பள்ளி (MATRICULATION SCHOOL), நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டப் பள்ளிகளில் (C.B.S.E. SCHOOLS) வகுப்பில் நுழைந்தவுடன் மாணவர்களுக்குக் குறிப்புத் தந்து எழுதிக் கொள்ளச் செய்து, வீட்டில் போய் படித்து வாருங்கள் என்று பணிக்கும் ”திறமைசாலிகள்”
தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் ! நான் பள்ளியில்
படித்த காலம் மாணவர்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம் !
எட்டாம் வகுப்பில் மருதூர்
திரு.ஆ.இராதாகிருட்டிணன் என்பவர் தான் எனக்கு வகுப்பாசிரியர்
(CLASS TEACHER). ஆயக்காரன்புலம் திரு.அமிர்தலிங்கம்
தமிழாசிரியர். பிற ஆசிரியர்களின் பெயர்கள் இப்போது நினைவில் இல்லை.
ஆயக்காரன்புலம் திரு.சுப்பையன், திரு.சகநாதன் இருவரும் ஏவலர் (PEON) பணியில் இருந்தார்கள் !
பள்ளியில் அப்போது ஒரேயொரு
ஓட்டுக் கட்டடம் இருந்தது. மற்ற இரண்டும் கூரைக் கட்டடங்கள்.
அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் ஆ.இராதாகிருட்டிணன்,
அன்று வெடிமம் (SODIUM) பற்றிய பாடம் நடத்த வேண்டும்.
ஏவலர்கள் சுப்பையன், சகநாதன் இருவரும் வெடிமம்
தொடர்பான ஆய்வுக்குத் தேவையான கருவிகளைக் கொண்டு வந்து ஆசிரியரின் மிசையில்
(மேசையில்) வைத்துச் சென்றனர் !
வெடிமம்
(SODIUM) நீரில் வினை புரியக் கூடியது; மென்மையான மாழை (SOFT
METAL). ஆகையால் அதை மண்ணெண்ணெயில் இட்டு வைத்திருப்பார்கள்.
வகுப்பறைக்கு வெளியில் சிறு தூறலாக மழை பெய்து கொண்டு இருந்தது. ஆசிரியர் வந்தார் !
ஒரு அகன்ற பீங்கான் தாலத்தில்
(BASIN) முக்கால் அளவு நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடிக் கலத்தினுள்
மண்ணெண்ணெயில் மூழ்க வைக்கப்பட்டிருந்த
வெடிமத்திலிருந்து சிறு துண்டு ஒன்றை கைப்பிடியுள்ள ஒரு நீண்ட
பட்டைக் கத்தியால் குத்தித் துண்டாக்கி எடுத்து, நீர்த் தாலத்தினுள்
இட்டார் ஆசிரியர் !
தாலத்தில் இருந்த நீரில்
சுற்றிச் சுற்றி வட்டமடித்து இறுதியில் எரிந்து கரைந்து போயிற்று வெடிமம். சற்றுப் பெரிய துண்டாகப் போட்டுப் பார்க்கலாம் என்று எண்ணிய ஆசிரியர்,
ஒரு பெரிய துண்டினை நீர்த் தாலத்தில் போட்டார். அவ்வளவு தான் ! பட்டாசு வெடித்தாற் போல் ஒரு வெடியொலி
கேட்டது. அனைவரும் பயந்து போனோம். வெடிமம்
மேலே போய் கீற்றுக் கூரையின் உட்பகுதியில் சிறு சிறு துண்டுகளாக ஒட்டிக் கொண்டிருந்தன
!
நீருக்கும் வெடிமத்திற்கும்
ஆகாதே
! வெளியில் மழை வேறு ! கூரையில் ஈரம் கசிந்து தீப்பிடித்துக்
கொண்டால் என்ன ஆவது ? ஆசிரியரும் அச்சமடைந்தார். இறுதியில் துணிச்சல் மிக்க மாணவன் ஒருவன் கையில் துண்டுத் துணியுடன் மேலே ஏறி,
ஒட்டியிருந்த வெடிமத் துகள்களைத் துடைத்துக் கீழே தள்ளினான்
!
1956 –ஆம் ஆண்டு
வகுப்பறையில் நிகழ்த்தப் பெற்ற இந்த அறிவியல் ஆய்வு 64 ஆண்டுகளாகியும்
என் நினைவில் திரைப்படமாக இன்றும் ஓடிக் கொண்டு இருக்கிறது !
எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு
முன்பு பள்ளி ஆண்டுவிழா 1957 ஆம் ஆண்டின் முன்பகுதியில்
நடைபெற்றது. எந்த மாதம்
என்பது நினைவில்லை. சிறப்புச் சொற்பொழிவாளராகப் புலவர் அறிவுடை நம்பி என்பவர்
வந்திருந்தார். அப்போது அவர் தி.மு.க.வில் குறிப்பிடத் தக்கப் பேச்சளாராக இருந்ததாக நினைவு.
அவர் பேசிய கருத்து – இந்தியைவிடத் தமிழ் தான்
உயர்ந்த மொழி என்பதாகும் !
வடநாட்டில் வழங்கப் பெறும்
இந்தி, ஒரே மொழியன்று ! இந்தியில் கரிபோலி
(KARI BOLI), அரியான்வி (HARYANVI), பண்டேலி,
(BUNDELI) அவாதி (AWADHI), பிராச்பாசா
(BRAJ BHASHA), பாகேலி (BAHELI), கன்னௌசி
(KANNAUJI), சட்டிசுகார்கி (CHHATTISGARHI), போன்று
பலவகைகள் உள்ளன என்றும், ஒரு பகுதியினர் பேசும் இந்தி இன்னொரு
பகுதியினருக்கு புரியாது என்றும் தெரிவித்தார் !
இவ்வாறு சொல்லி விட்டு, ”மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு குயிலைப் பார்த்த காகம், அது தன் இனத்தைச் சேர்ந்தது என்றுத் தவறாக எண்ணியது” என்பதை
ஒவ்வொரு வகை இந்தியிலும் சொல்லிக் காட்டினார். ஒவ்வொரு வகையிலும்
அத்தொடர் வெவ்வேறாக ஒலித்தது !
ஆனால் ”மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு குயிலைப் பார்த்த காகம், அது தன் இனத்தைச் சேர்ந்தது என்று தவறாக எண்ணியது” என்னும்
தொடரைத் தமிழ் நாட்டில் எந்தப் பகுதியில் போய்ச் சொன்னாலும் ஒரே மாதிரி தான் ஒலிக்கும்;
மக்களும் புரிந்து கொள்வர்
என்று விளக்கினார். தமிழைப் போல் இந்தி
உயர்ந்த மொழியன்று என்பதைப் பல்வேறு எடுத்துக் காட்டுகள் மூலம் விளக்கினார் !
புலவர் அறிவுடைநம்பியின் சொற்பொழிவு
என் மனதில் சிந்தனையைத் தூண்டியது; கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் மீதான என் ஆர்வத்திற்கு அன்று வித்தூன்றப் பெற்றது என்றே சொல்லலாம்;
இந்தி மீதான வெறுப்பும் அன்று தான் எனக்குள் முளைவிட்டது !
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி
மன்றம்.
தி.பி: 2051, மேழம்(சித்திரை),13]
{26-04-2020}
----------------------------------------------------------------------------------------------
வீழ்ச்சியடைந்த நெல் விளைச்சல்
வெடிமத் துண்டு சோதனை
குயிலும்காகமும்
No comments:
Post a Comment