தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் :1981 நிகழ்வுகள்.
(சுவடு.27) ஏற்காடு, மேட்டூர் உலா !
சேலத்தில் நான் இருக்கையில்
ஆற்றிய இன்னொரு தமிழ்ப்பணி பற்றி உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்குக் கடவுள் பெயரை வைப்பதாகச் சொல்லிக் கொண்டு வடமொழிப் பெயர்களைச் சூட்டி வந்தார்கள்
!
ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும்
இதுவே வழக்கமாக இருந்தது; இன்னும் இருக்கிறது; எதிர் காலத்திலும் இருக்கப் போகிறது. தமிழன் என்ற உணர்வை
விட, வடமொழியைச் செழித்து வளரச் செய்யும் இறையுணர்வைத் தான் மக்களிடம்
ஊட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள் !
இந்த நிலையில் நல்ல தமிழ்ப்
பெயர்களை அறிமுகப்படுத்தினால், அதைப் பார்த்தாவது தமிழ்ப்
பெயர்களைச் சூட்டும் வழக்கம் வாராதா என்னும் எண்ணம் என்னுள் எழுந்தது
!
இதற்காக ஆண், பெண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்களைத் தொகுத்து, தட்டச்சு
செய்து படிப்பெருக்கி மூலம் நிரம்பப் படிகள் எடுத்து அவற்றை இணைத்துப் புத்தக வடிவில் உருவாக்கினேன். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து பட்டியல்கள் இருந்தன !
தமிழார்வம் உள்ளவர்களுக்கு
அதைக் கொடுத்து வந்தேன்; திருமணங்களுக்குச் செல்கையில்,
மணமக்களுக்குப் பரிசு கொடுக்கையில், பெயர்ப் பட்டியல்
புத்தகத்தையும் கொடுத்து வந்தேன். என்னிடம் இத்தகைய புத்தகம்
இருப்பதை அறிந்து, என்னை அணுகிக் கேட்பவர்களுக்கும் கொடுத்தேன்
!
1982 ஆம் தொடங்கிய
இப்பணி, புத்தகங்கள் தீர்ந்து விட்டமையால், கடந்த பத்தாண்டுகளாக நின்று போய்விட்டது. இந்தப் பட்டியலைத்
தான் ஆண் மகவுப் பெயர்கள் (1), (2), (3), பெண் மகவுப் பெயர்கள்
(1) ,(2), என ஐந்து பட்டியல்களாக 2015 ஆம் ஆண்டு
தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிட்டேன். என் வலைப்பூவிலும் (BLOG) பதிவேற்றம்
செய்து வைத்திருக்கிறேன் !
தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியல்கள், மேலும் மேலும் புதிய இடுகைகளின் வருகையால், தேடமுடியாத அளவுக்கு மறைந்து போயிற்று. என் வலைப்பூவைத் திறந்து பார்த்து, பெயரைத் தெரிவு செய்வதில் பலருக்கும் கடுமையான இன்னல்கள். எந்தவொரு நண்பரும் அவர் விரும்பும் போது மழலையர்ப் பெயர்ப் பட்டியலைப் பார்வையிடவும், விரும்பும் பெயரைத் தேர்வு செய்யவும் வசதி செய்து தரவேண்டும் என்று விரும்பினேன் !
என் விருப்பத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற சிந்தனையின் விளைவு தான் ”அகரமுதலி (மழலையர் பெயர்கள்) என்னும் புதிய முகநூற்குழு ! ஒரு நொடியில் இந்த முகநூலைத் திறந்து பார்த்து விரும்பும் பெயரைத் தெரிவு செய்ய இயலும் அல்லவா ? தமிழ்ப் பணி ஆற்ற வேண்டும் என்னும் என் விருப்பத்தினால் விளைந்த முத்து “அகரமுதலி (மழலையர் பெயர்கள்)”. இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த முகநூற் குழுவில் உறுப்பினராகச் சேரவேண்டும் என்பது என் வேண்டுகோள் !
தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியல்கள், மேலும் மேலும் புதிய இடுகைகளின் வருகையால், தேடமுடியாத அளவுக்கு மறைந்து போயிற்று. என் வலைப்பூவைத் திறந்து பார்த்து, பெயரைத் தெரிவு செய்வதில் பலருக்கும் கடுமையான இன்னல்கள். எந்தவொரு நண்பரும் அவர் விரும்பும் போது மழலையர்ப் பெயர்ப் பட்டியலைப் பார்வையிடவும், விரும்பும் பெயரைத் தேர்வு செய்யவும் வசதி செய்து தரவேண்டும் என்று விரும்பினேன் !
என் விருப்பத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற சிந்தனையின் விளைவு தான் ”அகரமுதலி (மழலையர் பெயர்கள்) என்னும் புதிய முகநூற்குழு ! ஒரு நொடியில் இந்த முகநூலைத் திறந்து பார்த்து விரும்பும் பெயரைத் தெரிவு செய்ய இயலும் அல்லவா ? தமிழ்ப் பணி ஆற்ற வேண்டும் என்னும் என் விருப்பத்தினால் விளைந்த முத்து “அகரமுதலி (மழலையர் பெயர்கள்)”. இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த முகநூற் குழுவில் உறுப்பினராகச் சேரவேண்டும் என்பது என் வேண்டுகோள் !
பயிற்சி நிலையப் பண்டகம்
ஐந்து வகையான பொருள்களின் கொள்முதல், இருப்பு வைப்பு,
வழங்குதல் தொடர்புடையவை. அவற்றுள் எந்திரங்கள்
மற்றும் தளவாடங்கள் (PLANTS AND MACHINERIES), அறைகலன்கள்
(FURNITURES), கைக் கருவிகள் (HAND TOOLS), ஆகியவை
பயிற்சி நிலையம் முதன்முதல் தொடங்கப்படுகையில் வாங்கப்படுபவை ! இடையில் வாங்கும் நிகழ்வு அரிதாகவே
நடைபெறும் !
செய்ம்முறைப் பயிற்சிக்கு
(PRACTICAL) மூலப் பொருள்களும் (RAW MATERIALS) நுகர் பொருள்களும் (CONSUMABLES) எப்போதுமே தேவைப்படும்.
ஆகையால் இவற்றின் கொள்முதல், இருப்பு வைப்பு,
வழங்குதல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் !
இவ்விருவகைப் பொருள்களின்
பெயர்களையும் தமிழாக்கம் செய்தேன். சில எடுத்துக்
காட்டுகள்: M.S.FLAT = அரியுருக்குப் பட்டை;
STAINLESS STEEL SHEET = ஒளியுருக்குத் தகடு; HACKSAW BLADE
= அறுவையலகு; EMERY PAPER = குருந்தத் தாள்;
COTTON WASTE = கழிவு நூல் !
ஏறத்தாழ ஐந்நூற்றுக்கும்
மேற்பட்ட பொருள்களின் பெயரைத் தமிழாக்கம் செய்து, ஆங்கிலப் பெயருடன் தமிழ்ப் பெயரையும் இணைத்துத் தட்டச்சு
செய்து படிப்பெருக்கி மூலம் நிரம்பப் படிகள் எடுத்து, பயிற்றுநர்கள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படி (COPY) கொடுத்தேன் !
அவர்கள் பயிற்சிக்காகத்
தங்களுக்குத் தேவைப்படும் பொருள்களைத் தமிழில் பட்டியல் இட்டு
(INDENT), முதல்வர் ஒப்பம் பெற்று, பண்டகத்திலிருந்து
பெற்றுக் கொள்ளுமாறு சுற்றறிக்கை விடவும் ஏற்பாடு செய்திருந்தேன் !
“தமிழ்”,
“தமிழ்” என்று வாய்ச்சொல்லில் மட்டும் வீரம் காட்டுதலில்
எனக்கு உடன்பாடு இல்லை. செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
அதைத் தான் நான் கடைப்பிடித்து வருகிறேன் ! தமிழ்ப்
பணி மன்றம் தொடங்கியதற்கான நோக்கமும் அதுவே !
என் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி, உறவினர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயர் சூட்டுதலை வழக்கமாகக் கொண்டிருந்தேன்
என்பதை காலச் சுவடுகளைத் தொடர்ந்து படித்து வருவோருக்கு நன்கு தெரியும் !
நாகையிலிருந்து சேலம் பள்ளக்
காட்டுக்கு என் குடியிருப்பை மாற்றிக் கொண்ட பிறகு, வீட்டின்
எதிர்ப்புறம் இருந்த தொடக்கப் பள்ளியொன்றில் என் மகன் இளம்பரிதியை முதலாம் வகுப்பில்
சேர்த்திருந்தேன் !
தனியார் பள்ளியான இதன்
தாளாளரே,
தலைமை ஆசிரியருமாக இருந்தார். காலையில்
9-00 மணிக்குப் பள்ளியில் வகுப்புகள் தொடங்குகின்றன என்றால்,
8-30 மணிக்கே அக்கம் பக்கத்தில் உள்ள மாணவர்களை வரச் சொல்வார். 50 பேர் அளவுக்கு வருவார்கள்
!
அனைவரையும் அமரவைத்து வாய்பாடு
சொல்லிக் கொடுப்பார். “ஓரேழ் ஏழு, ஈரேழ் பதினான்கு, மூவேழ் இருபத்தொன்று, நாலேழ் இருபத்தெட்டு.......” குழுவாக உரத்து ஒலிக்கும்
இந்த ஓசை, இன்று எந்தப் பள்ளியிலும் கேட்க முடியாத ஓசையாகிவிட்டது
!
சேலத்திற்கு வந்து 15 நாள்கள் ஆகிவிட்டன ! அருகில் இருக்கும் ஏற்காடு செல்லாவிட்டால்
எப்படி ? மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாரை
அழைத்துகொண்டு 1981, செப்டம்பர், 6 ஆம்
நாள் ஏற்காடு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டோம் !
நான் முன்பு ஒருமுறை ஏற்காடு
சென்றிருக்கிறேன். என் குடும்பத்தினருக்கு,
இது தான் முதல் துய்ப்பு (அனுபவம்) ! பேருந்து, கொண்டப்பநாயக்கன் பட்டியைக் கடந்து மலைப் பாதையில் ஏறத் தொடங்கியது.!
என் தாயாருக்கும், மனைவிக்கும் மனதில் கலக்கம் ! இடப்புறம் பார்த்தால் அச்சமூட்டும்
மலைச் சரிவு ! ஏற்காடு சென்று சேரும் வரை அவர்களுக்கு அச்சம்
தணியவில்லை !
அங்கு
ஒரு வாடகைச் சீருந்தை ஏற்பாடு செய்துகொண்டு மகளிர் இருக்கை (LADIES
SEAT), ஏலக்காய்த் தோட்டம், பழப்பண்ணை,
மலர் வனம், மான்போர்டு பள்ளி, கிள்ளியூர் அருவி, சேர்வராயன் கோயில், கோபுர முனை (PAGODA
POINT), எரி, படகுக் குழாம் மற்றும் வேறு சில இடங்களையும்
பார்வையிட்டோம் !
நாங்கள்
சென்றது செப்டம்பர் மாதம் (06-09-1981) அல்லவா ? ஏற்காடு சென்று அடைந்ததுமே குளிர் எங்களைக் தழுவிக் கொண்டது. சீருந்தை விட்டு இறங்கியதுமே மேகக்
கூட்டம் எங்களை உரசிக் கொண்டு புகை மூட்டமாய்க் காற்றில் மிதந்து செல்வதைக் காண்கையில் மனதிற்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. !
ஏற்காட்டின்
இயற்கை வனப்பை எங்கள் கண்கள் வாரிச் சுருட்டிக் கொண்ட பிறகு, சேலம் திரும்புவதற்குப் பேருந்து
நிலையம் வந்தோம். இன்னும் சற்றுப் பொறுத்துச் செல்லலாம் என்று
மனம் சொல்ல, மாலை மயங்கிவிட்டது, மலைப்பாதையில் இறங்க வேண்டும்,
பேருந்தைப் பிடியுங்கள் என்று அறிவு, விழிப்பு மணியடிக்கத் தொடங்கியது
!
எப்போதும்
அறிவின் குரலுக்கு மதிப்புத் தருதல் நலம் பயக்கும் என்பதால், ஒருவழியாகப் பேருந்தில் ஏறி
வீட்டினை வந்தடைய இரவு ஏழு மணியாகிவிட்டது . என் இல்லத்தினருக்கு இது மறக்கமுடிய இனிய துய்ப்பு !
மேட்டூர் அணையைப் பற்றி ஊடகங்கள் வழியாக ஓரளவு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தஞ்சை மாவட்ட மக்களுக்கு உயிர் நீர்
ஊற்றுவது காவிரி அல்லவா ? காவிரி நீரைத் தேக்கி வைத்திருந்து
உரிய நேரத்தில் வேளாண்மைக்கு உதவுவது மேட்டூர் அணையல்லவா ?
சேலத்திற்கு
அருகில் ஒருமணி நேரப் பயணத் தொலைவில் இருக்கும் மேட்டூர் அணையைப் பார்த்து வரலாம் என்று
எங்கள் மனதில் ஆசை முளைவிட்டது !
பயணத் திட்டம் வகுத்துகொண்டு ஒருநாள் (10-10-1981) குடும்பத்தினருடன் புறப்பட்டு,
மேட்டூர் போய்ச் சேர்ந்தோம் !
பேருந்து 16 கண் பாலம் வழியாகச் செல்லும் போதே, மேட்டூர் அணையில்
அழகைச் சுவைக்க முடிகிறது. நீர்ப்பெருக்கு அதிகம் உள்ள காலம் என்றால் , மேட்டூர்
அணையில் அழகே தனி தான். ஒரு மலைச் சரிவைச் சுற்றிக் கொண்டு, காவிரி ஆற்றுப் பாலத்தைக்
கடந்து பேருந்து நிலையத்தில் வண்டி போய் நிற்கையில் மனதுக்குள் ஒரு இனம்புரியாத களிப்பு
!
அங்கிருந்து
அணை இருக்கும் பகுதிக்கு நடந்து செல்கிறோம். பூங்கா ஒன்று
எதிர்ப்படுகிறது. அதனுள்
சென்று அணைச் சுவரின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்து பார்க்கையில் தலை கிறு கிறுவென்று
சுற்றுகிறது; கண்களுக்கு முன் பூச்சிகள் பறக்கின்றன; கீழே விழுந்து விடுவோம் போல் தோன்றுகிறது !
நான்
கற்பனை செய்து வைத்திருந்ததை விட மிக மிக மிக உயரமாகத் தோன்றுகிறது. நான் எதிர்பார்க்கவே இல்லை – இத்துணை உயரம் இருக்குமென்று
!
ஏறத்தாழ
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மலைகளை இணைத்துக் கட்டப்பெற்ற இந்த அணையின் வடிவமைப்பும், அதில் பின்பற்றப்பட்டுள்ள தொழில் நுட்பமும் சொற்களால் விவரிப்பதற்கு இயலாதவை.
சிடான்லி (STANLY) என்னும் ஆங்கிலேயப் பொறியாளரின்
அறிவு நுட்பத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது மேட்டூர் அணை !
பொதுவாக “மேட்டூர் அணை” என்னும்
பெயரால் பலராலும் அழைக்கப்படும் இவ்வணையின் உண்மைப் பெயர் “சிடான்லி
அணை” (STANLY DAM) என்பது தமிழ் நாட்டில் எத்துணைப் பேருக்குத்
தெரியும் ?
பார்க்கவேண்டிய
ஒரு மிகப்பெரிய கட்டுமானத்தை – 120 அடி உயரம் வரை நீர்த்தேக்கக்
கொள்ளளவு உள்ள ஒரு பெருந் தோற்றமுடைய அணையை – அதன் அடிவாரத்தில்
நின்று சுவைத்து வியந்த மன நிலையுடன் சேலம் திரும்பினோம் !
எத்துணையோ
இடங்களை நான் பார்த்திருக்கிறேன் – ஆனால் மேட்டூர் அணையைப் போல்
என்னை மலைப்பு அடைய வைத்த இன்னொன்றை நான் இதுவரையிலும் கண்டதில்லை !
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி
மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),03]
{16-05-2020}
----------------------------------------------------------------------------------------------
ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகள்
ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகள்
ஏற்காடு மலைச் சாலை
மேகம் தவழும் ஏற்காடு
மேட்டூர் அணை 16 கண் பாலம்
பறவைப் பார்வையில் மேட்டூர் அணை !
பூங்காவிலிருந்து அணையின் தோற்றம் !
வான் பார்வையில் மேட்டூர் அணை !
மேட்டூர் அணை - காவேரிப் பாலம் !
.
No comments:
Post a Comment