name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (24) : 1977,78,79 நிகழ்வுகள் - தொழிற்சங்கப் பணி !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (24) : 1977,78,79 நிகழ்வுகள் - தொழிற்சங்கப் பணி !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1977-78-79 நிகழ்வுகள் ! 

(சுவடு.24) தொழிற்சங்கப் பணி !

----------------------------------------------------------------------------------------------

குடியரசுத் தலைவரால், 1975 ஆம் ஆண்டு சூன் மாதம் 25 ஆம் நாள் அறிவிக்கப் பெற்ற நெருக்கடி நிலை 1977 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் நாள் வரை ஏறத்தாழ 21 மாதங்கள் நடைமுறையில் இருந்து வந்தது !

இதற்கிடையில், எதிர்கட்சித் தலைவர்களைச் சிறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற நடுவணரசின் சில உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்ததால் கருணாநிதி அரசு 1976 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் நாள் கலைக்கப் பெற்று, குடியரசுத் தலைவர் ஆட்சி அறிமுகப்படுத்தப் பெற்றது !

இஃதன்றி, சர்க்காரியா விசாரணை ஆணையம் அமைக்கப் பெற்று, கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப் பட்டது. ! குற்றச் சாட்டுகளைக் பட்டியலிட்டு நடுவணரசிடம் தந்தவர்கள் ம.கோ.இரா (M.G.R) மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலவர் கல்யாணசுந்தரம் ஆகியோர்.  நெருக்கடி நிலைக் காலத்தில் நடைபெற்ற இந்த விசாரணை கிட்டத் தட்ட ஒருதலைச் சார்பாகவே நடைபெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருதினர் !

குற்றம்சாட்டப் பெற்றவர்கள் மீது  ஊடகங்கள் பலவாறாகச் களங்கச் செய்திகளைப் பரப்பி, கருணாநிதியையும் அவரது கட்சியையும் வலிமை குன்றச் செய்தன. இந்திரா காந்தியும் அவரது கட்சியினரும், ஊழல் குற்றம் சொன்ன ம.கோ.இராவைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, கருணாநிதியைக் கிட்டத்தட்ட முடக்கிப் போட்டுவிட்டனர் !

1977 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது; ஆனால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான  தேர்தல் 1977 சூன் மாதம் நடைபெற்றது !

இந்தத் தேர்தலில் ம.கோ.இராவின் அ...தி.மு. 130 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. தி.மு.கவுக்கு 48 இடங்களும், இந்தியப் பேராயக் கட்சிக்கு (காங்கிரசுக்கு) 27 இடங்களும் கிடைத்தன. தேர்தல் பணிக்கு வாக்குச் சாவடித் தலைமை அலுவலராக நாகை நகரத்தில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் நான் பணியாற்றினேன் !

சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற அதே சூன் மாதத்தில் 19 ஆம் நாளன்று என் (நடுப்) பெரியப்பா திரு.சாம்பசிவ தேவரின் மகன் திரு.சிங்காரவேலுக்குத் திருமணம் நடந்தது. வேதாரணியம் அருகில் உள்ள தோப்புத் துறை திரு.மா.இராமலிங்க தேவரின் மகள் செல்வி. தையல் நாயகியை சிங்காரவேலு கைப்பிடித்தார்

திரு.சிங்காரவேலுவும் என்னைப் போல்  அவரது பெற்றோர்களுக்கு ஒற்றைப் பிள்ளை. உடன்பிறந்தோர் 3 தமக்கையர், ஒரு தங்கை ! திரு.சிங்கார வேலுவின் தந்தை நலமுடன் இருக்கையிலேயே  தமக்கையர், தங்கை அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது !

திரு.சிங்காரவேலுவின் திருமணம், மணமகள் இல்லமான தோப்புத் துறையில்  நடைபெற்றது.  இத் திருமணத்திற்கு நான் சென்றதாக நினைவில்லை; ஆனால் மணமகன் இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பில் கலந்து கொண்டது நினைவிருக்கிறது !

திரு.சிங்காரவேலு அப்போது கடிநெல்வயலில் இயங்கி வந்த மேட்டூர் வேதிப் பொருள்கள் நிறுமத்தில் (METTUR  CHEMICALS  AND FERTILIZERS LIMITED) பணியாற்றி வந்தார். இந்நிறுமம் (COMPANY) பின்னாளில் குசராத் மிகு வேதியியல் பொருள்கள் நிறுமத்திடம் (GUJARATH HEAVY CHEMICALS  LIMITED) கைமாறியது. திரு.சிங்காரவேலு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் இந்நிறுமத்தில் பணியாற்றிப் பின்னாளில் ஓய்வு பெற்றார் !

இதே ஆண்டு (1977) செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் வாய்மேட்டை அடுத்த மருதூரில் நடைபெற்ற காளைக்காரன்வேலி திரு.சற்குணம் திருமணத்திற்குக் குடும்பத்துடன்  சென்று வந்தேன். எங்கெங்கோ இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு அடிக்கடிச் செல்ல முடியாது ! 

இதுபோன்ற திருமணங்கள்  உறவினர்களின் வீடுகளுக்குச் அரிதாகவாவது சென்றுவரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது ! நம் முன்னோர்கள் இது போன்ற திருமண நிகழ்வுகளை, ”காணும் பொங்கல்” போல், உறவினர்களைக் ”காணும் திருவிழா”வாகவே திட்டமிட்டு அமைத்து இருக்கிறர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது !

நாகூர் வண்டிக்காரத் தெருவில் 24 ஆம் இலக்கமுள்ள வீட்டில் நான் வாழ்கையில் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் திரு.உத்திராபதி. தச்சியல் பிரிவின் பயிற்றுநர். இவரது மனைவி பெயர் திருமதி.ஆண்டாள். இரண்டாவது குழந்தைப் பேற்றின் போது இவர் இறந்து போனார். 1978 ஆம் ஆண்டு, பிப்ரவரி, 14 ஆம் நாள் இத் துயர நிகழ்வு ஏற்பட்டது !

மாவட்டத் தலைமை மருத்துவமனை அமைந்துள்ள நாகை நகரிலேயே, இந்நிகழ்வு. மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியதில்லை, இயற்கையாகவே குழந்தைப் பேறு நடைபெறும் என்னும் பகுத்தறிவற்ற நம்பிக்கையால் திரு.உத்திராபதி தன் மனைவியை இழந்தார். என்னே மடமை ! என்னே அறிவற்ற செயல் !

இறப்பும் பிறப்பும் இவ்வுலகில் ஒரு தொடர் நிகழ்வு. இறப்பு நிகழ்ந்தால் நாம் அழுகிறோம்; பிறப்பு  நிகழ்ந்தால் குழந்தை அழுகிறது ! என்ன விந்தையான இயற்கை நிகழ்வுகள்  ! 1978 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் நாள் என் கடைசித் தங்கை சுமதிக்குப் பெண்குழந்தை பிறந்தது.  குழந்தைக்குகயல்விழிஎன்று பெயர் சூட்டினேன். அழகிய தமிழ்ப் பெயர்கள் அணியணியாக வலம் வருகையில் பிறமொழிப் பெயர்கள் எதற்கு ?

1978 ஆம் ஆண்டில் பால் ஒரு லிட்டர் விலை உருபா 1.75 என்றால் இப்போது (2020) நம்பமுடிகிறதா ? விலைவாசி தான் எவ்வளவு உயர்ந்துவிட்டது !  பால் விலையைப் போலப் பேருந்துக் கட்டணமும் எத்துணை மடங்கு உயர்ந்துவிட்டது. ஒரு திருமணத்திற்குச் சென்றுவர வேண்டுமெனில், பை நிறையப் பணம் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது ! நூறு உருபா மொய் எழுத, முந்நூறு உருபா செலவு செய்துகொண்டு போக வேண்டியிருக்கிறது !

சில திருமணங்கள் தவிர்க்க முடியாதவை. இத்தகைய திருமணங்களில் செலவுக் கணக்கெல்லாம் நாம் பார்க்க முடியாது. அத்தகைய திருமண நிகழ்வுகளில் ஒன்று தான் 1978 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் என் பிறந்த ஊரான கடிநெல்வயலில் நடைபெற்றது !

என் பெரியப்பா பெயரனும் அண்ணன் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்களின் மூத்த மகனுமான திரு.கோவிந்தராசு, சங்கேந்தி திருபொன்.சொக்கலிங்கம் பிள்ளையின் இரண்டாவது மகளான செல்வி. இரேவதியைத் தன் வாழ்க்கைத் துணைவியாக வரித்துக் கொண்டார் !

அதேபோல், அண்ணன் திரு.மீனாட்சி சுந்தரத்தின் மூன்றாவது மகளான  செல்வி.மீ.செந்தமிழ்ச் செல்வி, மன்னார்குடி திரு.இரெ.ஆறுமுகதேவரின் மகனான திரு.இராசேந்திரனுக்கு மாலையிட்டு அவரைத் தன் மணவாளனாகக் கரம் பற்றிக் கொண்டார்  !  

கடிநெல்வயலில் நடைபெற்ற இத்திருமணத்திற்கு, நான் நாகப் பட்டினத்திலிருந்து  குடும்பத்துடன் சென்று  கலந்து கொண்டேன் ! திருமண நிகழ்வுகளால் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன், பிறந்த ஊரில், உற்றார் உறவினர்களைக் கண்டு அளவளாவி அடைந்த மகிழ்ச்சியும் இணைந்து எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது ! 

நீண்ட நாள்  காணாத உறவினர்களை எல்லாம் கண்டு உரையாடி மகிழும் இனிய நிகழ்வாகத் திருமணங்கள் அமைகின்றன. திருமண விழாக்களில் உறவினர்களும்  நண்பர்களும் கலந்துகொள்ளுதல் என்னும் நியதி தோன்றியிராவிட்டால், பல உறவினர்களின் முகமே நமக்கு மறந்து போயிருக்கும். பல நண்பர்களையும் நாம் இழக்க நேரிடும் !

அலுவலக அளவில் எத்துணையோ பேரை நாம் நண்பர்களாக அடைகிறோம். அவர்களில் சிலரது நட்பு தான் நெடுநாள் நீடித்து நிற்கிறது. நான் இவ்வாறு சந்தித்த ஒரு நண்பர்தான் திருவண்ணாமலை சா.இராமமூர்த்தி. சேலத்தில் இருவரும் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். அலுவலர் குடியிருப்பில் அருகருகே வாழ்ந்திருக்கிறோம். அவர்,  செல்வி குமுதாவைக் கரம் பற்றிய நிகழ்வு 1979 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 2 -ஆம் நாள் நடைபெற்றது !

இந்த நிகழ்வின் போது எனக்கும் இராமமூர்த்திக்கும் அறிமுகம் ஏற்படவில்லை. ஆகையால் அவரது திருமணத்திற்கு நான் செல்லும் வாய்ப்பும் கிட்டவில்லை. இதை ஈடுகட்டும் வகையில்தானோ என்னவோ அவரது மூத்த மகன் பிரதாப்  திருமணத்தை இறுதி செய்வதில் நான் முதன்மைப் பங்காளியாக இருந்தேன். திண்டிவனத்தில் நடைபெற்ற திருணத்திற்கும் குடும்பத்தோடு சென்று வந்தேன் ! எங்கள் நட்பு இன்னும் தொடர்கிறதுஇனிய தமிழும் இசையும் போல !

என் மைத்துனர் திரு.ஆர்.சூரியமூர்த்தியைத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏதாவதொரு பயிற்சியில் சேர்த்துவிட வேண்டும் என்று மாமனார் விரும்பினார். பள்ளியிறுதி வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அப்பொழுது சேர்க்கை நடைபெற்று வந்தது. மதிப்பெண்கள் சற்றுக் குறைவாக இருந்ததால் சூரியமூர்த்தியை ஓராண்டுப் பயிற்சிக் காலமுள்ள வார்ப்பியல் (MOULDER) பிரிவில் 01-08-1979 அன்று சேர்த்துவிட்டேன் !

நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்த என்னைப் பொதுப்பணியில் இறக்கிவிட்டவர் திரு.என்.ஆர்.இராசரத்தினம். நாகப்பட்டினத்தில் நானும் அவரும் பணியாற்றுகையில், அரசு அலுவலர் ஒன்றியத்தின் நாகைக் கிளைக்குத் தேர்தல் வந்தது. அப்போது நாகைக் கிளையின் தலைவராக இருந்தவர் திரு.ஆனந்தநடராசன் ! தன்னலமில்லாத் தனிப் பெரும் தலைவர். தன் வாழ்நாளெல்லாம் பிறரின் நலனுக்காகவே செலவிட்ட மெழுகுவர்த்தி !

வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளராகச் சேர்ந்து, 35 ஆண்டு காலம் பணியாற்றி  இளநிலை உதவியாளராகவே ஓய்வு பெற்ற உயர்ந்த மனிதர். பணியிலிருந்து  ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வூதியர் சங்கத்தைக் கட்டமைத்து வளர்த்த செயல்வீர்ர் !

இவர் தலைமையின் கீழ், நாகை கிளையின் இணைச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை திரு.என்.ஆர்.இராசரத்தினம் எனக்கு உருவாக்கித் தந்தார். இது என் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது !

----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),30]
{13-05-2020}
----------------------------------------------------------------------------------------------
திரு.கோவிந்தராசு -செல்வி .இரேவதி 
திருமணம் : நாள் : 19-05-1978

திரு.இராமமூர்த்தி - 
செல்வி.குமுதா திருமணம்
 : நாள் : 02-02-1979.

தமிழ்நாடு 
அரசு அலுவலர் ஒன்றிய 
நாகைக் கிளையின்
 இணைச் செயலாளர்

திரு.சிங்காரவேலு  திருமதி.தையல்நாயகி - 
 திருமணம்:19-06-1977
.


திரு.இரகு.சூரியமூர்த்தி  (1979)

திரு.இரகு சூரியமூர்த்தி (2019)

No comments:

Post a Comment