name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (30) :1985,86 நிகழ்வுகள் - பூம்புகாரும் தரங்கம்பாடியும் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Monday, March 30, 2020

காலச் சுவடுகள் (30) :1985,86 நிகழ்வுகள் - பூம்புகாரும் தரங்கம்பாடியும் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1985,86 நிகழ்வுகள் !

(சுவடு.30) பூம்புகாரும் தரங்கம்பாடியும் !

----------------------------------------------------------------------------------------------

நாகையில் நான் அலுவலக மேலாளராகப் பொறுப்பேற்று  ஓராண்டு ஆகியிருந்தது. இந்த நிலையில், என் மனைவியின் தங்கை செல்வி.தமயந்திக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே வந்ததால் என் உதவி தேவைப்பட்டது.  தாமதம் தவிர்க்கத் தீர்வுகளை தேடுவதில்  என் உழைப்பும்  தேவைப்பட்டது !

இறுதியில், ஒருவாறாக, ஆயக்காரன்புலம் திரு.தன்ராஜ் என்பவரின் மகன் அசோகனுக்கும் செல்வி.தமயந்திக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு  1985 ஆம் ஆண்டு ஆகத்து மாதம், 22 ஆம் நாள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் திருகே.டி.கே. தங்கமணி தலைமையில் சேரன்குளத்தில் மணவிழா இனிது நிறைவேறியது !

அடுத்த ஆறுமாத இடைவெளியில் இன்னொரு திருமணம். என் (ஒன்றுவிட்ட) அண்ணன் திரு.மீனாட்சி சுந்தரத்தின் மகள் செல்விஇந்திராணிக்கும், சங்கேந்தி திரு.சொக்கலிங்கம் பிள்ளையின் மகன் திரு.குணசேகருக்கும் திருமணம் உறுதி செய்யப்பெற்று, 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  10 ஆம் நாள் மணவிழா நடந்தேறியது. இத் திருமணத்திற்கு நான் குடும்பத்துடன் சென்று கலந்துகொண்டதாக  நினைவு !

கடிநெல்வயலில் என் பெரியப்பாவின்  இரண்டாவது   பிள்ளை  ஆசிரியர் திரு.கா.நடராசனின் மகள் தமிழ்ச் செல்விக்கும் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வந்தது !

ஒருமுறை ஏதோ ஒரு வேலையின் நிமித்தம் கடிநெல்வயல் சென்றிருந்த நான் அண்ணியிடம் இதுபற்றிக் கேட்டேன். வைத்தீசுவரன் கோவிலுக்குச் சென்று நாடி சோதிடம் பார்த்து வரலாமே என்று என் கருத்தை முன்மொழிந்தேன் !

வடக்கே தரவை நிலத்தில் அறுவடை செய்து கதிரடித்துக் கண்டுமுதல் செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும், அண்ணன் அங்கே சென்றிருப்பதாகவும் கூறிய அண்ணி, நீங்கள் வேண்டுமானால் அங்கே  சென்று உங்கள் அண்ணனிடம் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார்கள் !

தரவைக்குச் சென்றேன். அண்ணனிடம் பேசினேன். தமிழ்ச் செல்வியை அழைத்துக் கொண்டு வைத்தீசுவரன் கோவில் சென்று வர என்னால் முடியுமா என்று வினவினார். சரி என்று  ஒப்புதல் அளித்து, அழைத்துச் சென்றேன் !

அங்கு சென்று நாடி பார்க்கையில், நாடி சோதிடர் சில தீர்வுகளைச் சொன்னார். அதனை நிறைவேற்றினால், விரைவில் திருமணம் முடிவாகும் என்றும் சொன்னார். செல்வியுடன் கடிநெல்வயலுக்குத் திரும்பி வந்து, செய்திகளைச் சொல்லிவிட்டு, நாகை திரும்பினேன் !

அடுத்து ஒரு மாத அளவுக்குள், கருப்பம்புலம் ஆசிரியர் திரு.நடராசன் அவர்களின் மகன் திரு.சிவானந்தத்திற்கும், தமிழ்ச் செல்விக்கும் திருமணம் உறுதியாகியது.  திரு.சிவானந்தம்தமிழ்ச் செல்வி திருமணம் 1986 ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 31 -ஆம் நாள் கடிநெல்வயலில் இனிது நிறைவேறியது !

இந்த நிகழ்வுக்குப் பிறகு, திரு.சிவானந்தம் எங்கள் குடும்பத்தின் மீது  மிகுந்த பற்று வைத்திருந்தார். கடிநெல்வயல் செல்லும் பொதெல்லாம் நான் கருப்பம்புலம் திரு.சிவானந்தம் – திருமதி.தமிழ்ச் செல்வி இல்லத்திற்கும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் !

இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்த  திரு.சிவானந்தம், தனது உழைப்பினால் மேலும் மேலும் படித்துப் பட்டதாரி ஆசிரியராகி, மேனிலை வகுப்பு மாணவர்களைக் கையாளும் முதுகலைப் பட்டதாரித்  தமிழாசிரியராகி, தலைமை ஆசிரியராகவும்  உயர்ந்தார் !

ஊரார் மதிக்கும் பெரிய மனிதராக உருவாகிய திரு.சிவானந்தம்  கடந்த 03-09-2014 அன்று மறைந்து போனார். உடலால் அவர் மறைந்தாலும், நினைவால் என்றென்றும் எம்போன்றோரிடம் வாழ்ந்து  கொண்டிருக்கிறார் !

நாகையில் நான் பணிபுரிகையில், வீட்டிற்கு வரும் உறவினர்களை சிக்கல் சிங்காரவேலர் கோயில், வேளாங்கன்னி மாதாகோயில், நாகூர் தர்கா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தச் செய்து அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இந்த வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருவதில் அவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி; ஒரு மனநிறைவு !

என் குடும்பத்தைப் பொறுத்த அளவில், இந்த மூன்று  இடங்களுக்கு அப்பாலும் சென்று வருவதுண்டு ! நாகூரிலிருந்து 13.6 கி.மீ தொலைவில் உள்ள காரைக்காலுக்குச் சென்று வருவதுண்டு. அங்கு மிகவும் புகழ் பெற்று விளங்கிய  மருத்துவர் இட்டியகண்டி என்பவரிடம் மருத்துவம் நாடிச் செல்வதுண்டு ! எத்துணையோ மருத்துவர்களால் தீர்க்கமுடியாத உடலியக்கத் தொந்தரவுகளை தீர்த்து வைக்கும் வல்லமை அவரிடமிருந்தது !

சில விடுமுறை நாள்களில் 51.4 கி.மீ தொலைவுள்ள பூம்புகார் செல்வதுண்டு. பண்டைக் காலத்தில் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார், கடற்கோளால் (ஆழிப்பேரலை) அழிந்த பிறகு, சிற்றூராகச் சுருங்கி, தரிசு நிலப் பகுதியாகக் காட்சியளித்தது. இதை மீண்டும் புகழ்பெற்ற இடமாக மாற்ற விரும்பிய கலைஞர், பண்டைய பூம்புகாரில் இருந்ததாகச் சொல்லப்படும் எழுநிலை மாடம், இலஞ்சி மன்றம், பூதச் சதுக்கம், கலைக் கூடம் போன்றவற்றை உருவாக்கிச் சுற்றுலா இடமாக மாற்றினார் !

ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இவ்வூர் பொலிவிழந்து போனது. அரசியலுக்கும் ஆட்சிமுறைமைக்கும் வேறுபாடு தெரியாத அ...தி.மு.க ஆட்சியில் பூம்புகாரில் இருந்த கட்டுமானங்கள் எல்லாம் நொறுங்கிப் போயின. பூம்புகார் புகழ் பெற்றால், கலைஞருக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்று காழ்ப்புணர்ச்சியில், இவ்வூரை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை. இப்போது பூம்புகாருக்கு யாரொருவர் சென்றாலும் மனம் நொந்து ஆட்சியாளர்களைச் சபிக்காமல் செல்வதில்லை !

நாகையில் நான் இருக்கையில் குடும்பத்தினருடன் இரண்டொருமுறை பூம்புகார் சென்றிருக்கிறேன். செல்லும் வழியில் இருக்கும் தரங்கம்பாடிடேனிஷ்கோட்டைக்கும் சென்று வந்திருக்கிறேன் !

டென்மார்க்நாட்டுக் காரர்களின் ஆளுமையில் தரங்கம்பாடி இருக்கையில் 1620 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோட்டை, பிறகு ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இப்போது தமிழக அரசின் தொல்லியல் துறையால் இக்கோட்டை பேணப்பட்டு வருகிறது. இங்கு அருங்காட்சியகம் ஒன்றும் அகழ் வைப்பகம் ஒன்றும் இயங்கி வருகிறது !

கடிநெல்வயல் அண்ணன் திரு,மீனாட்சி சுந்தரம் அவர்களின் இரண்டாவது மகன் திரு. இராசேந்திரன், திருச்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்தியல் பிரிவில் பயின்றவர். நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலையத்தில் உருவான பணிமனை உதவுயாளர் பணியிடத்திற்கு இவரைத் தேர்வு செய்திட விரும்பினேன். வேலை வாய்ப்பகத்திலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றிருந்தது. பயிற்சி நிலைய முதல்வர் தான் தேர்வு செய்யும் அதிகாரி. நான் அங்கு அலுவலக மேலாளர் !

முதல்வர் உதவி செய்வதாக எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக, அண்ணனைச் சென்னைக்கு அனுப்பி, அமைச்சர் இராமசாமி (அ.இ.அ.தி.மு.க) மூலம் பரிந்துரைக்கச் சொல்லி இருந்தேன். அமைச்சரும் தன் செயலாளர் மூலம் நாகை முதல்வருக்குச் செய்தியைத் தெரிவித்து இருந்தார் !

நேர்காணல் நாளன்று வந்திருந்த பணிவேட்பாளர்களிடம் (CANDIDATES)  நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இராசேந்திரனுக்கும் நேர்காணல் முடிந்து பணியமர்வு ஆணை தட்டச்சு ஆகிக் கொண்டிருந்தது. முதல்வர் அறையிலிருந்த  தொலைபேசி ஒலித்தது. முதல்வர் எடுத்துப் பேசினார். எதிர்முனையில் அமைச்சரின் அதே செயலாளர். நேர்காணலுக்கு வந்திருந்த  இன்னொரு இராசேந்திரனைத் தேர்வு செய்யுமாறு அமைச்சர் சொல்லச் சொன்னதாகச் செயலாளர் குரல் ஒலித்தது !

முதல்வரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கடிநெல்வயல் இராசேந்திரனுக்கு வந்த வாய்ப்பை இன்னொரு இராசேந்திரன் அதே அமைச்சர் மூலம் தட்டிப் பறித்து விட்டார் ! இந்நிகழ்வு நடைபெற்றது ஆண்டு 1985 அல்லது 1986 -ஆக இருக்கலாம் !  35 ஆண்டுகளுக்கு முன்பே  தமிழக அரசியல் நிலை இவ்வாறு சீர்குலைவு அடைந்து இருந்தது !

---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),06]
{19-05-2020}
----------------------------------------------------------------------------------------------
பூம்புகார் - எழுநிலை மாடம் 
நுழைவாயில்


கருப்பம்புலம்
 திரு.சிவானந்தம்   - தமிழ்ச் செல்வி 
திருமண அழைப்பிதழ்.

பூம்புகார் - எழுநிலை மாடம்

பூம்புகார் - இலஞ்சி மன்றம்

இடையூர், 
திரு,சொ.குணசேகர் - 
செல்வி .மீ.இந்திரணி 
திருமண அழைப்பிதழ்.

பூம்புகார் - 
நெடுங்கல்மன்றம்

கருப்பம்புலம்  
திரு. ந.சிவானந்தம், 
முதுகலைப் பட்டதாரி அசிரியர். 
மறைவு நாள் : 03-09-2014.
 ந.சிவானந்தம்
தரங்கம்பாடிக் கோட்டை
Add caption

பூம்புகார் 
இலஞ்சி மன்றத்தின்
 இன்னொரு தோற்றம்

பூம்புகார் கடற்கரை

நெடுங்கல் மன்றம்

 கலைக்கூடம்


















No comments:

Post a Comment