தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் :1990,91,92 நிகழ்வுகள் !
(சுவடு.32) திரு.செல்வராஜ் மறைவு !
சேலத்திலிருந்து மன்னார்குடி
224 கி.மீ தொலைவில் உள்ளது. 1990 ஆம் ஆண்டு சேலம் – மன்னார்குடி பேருந்துக் கட்டணம்
உருபா 25/- ஆனால் 2020 –இல் பேருந்துக் கட்டணம் உருபா 250 அளவுக்கு உயர்ந்துவிட்டது
! இப்போதெல்லாம் எந்த ஊருக்குச் சென்றாலும் பை நிறையப் பணம் கொண்டு சென்றால் தான் சமாளிக்க
முடிகிறது !
திரு.வி.பி சிங் பதவி ஏற்று (02-12-1989) ஓராண்டு காலத்திற்குள்ளேயே அவரது ஆட்சி கவிழ்ந்தது. திரு.பி.சந்திரசேகர் தலைமையில் புதிய ஆட்சி 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் உருவானது. தமிழ்நாட்டில் திரு.கருணாநிதி ஆட்சி தொடர்ந்து பதவியிலிருந்து வந்தது. இந்தியப் பேராயக் கட்சி மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றின் நெருக்குதலால், விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி 30-01-1991 அன்று திரு.கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நான்காம் முறையாக தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது !
திரு.வி.பி சிங் பதவி ஏற்று (02-12-1989) ஓராண்டு காலத்திற்குள்ளேயே அவரது ஆட்சி கவிழ்ந்தது. திரு.பி.சந்திரசேகர் தலைமையில் புதிய ஆட்சி 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் உருவானது. தமிழ்நாட்டில் திரு.கருணாநிதி ஆட்சி தொடர்ந்து பதவியிலிருந்து வந்தது. இந்தியப் பேராயக் கட்சி மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றின் நெருக்குதலால், விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி 30-01-1991 அன்று திரு.கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நான்காம் முறையாக தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது !
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி 30-01-1991
–இல் தொடங்கி 24-06-1991 வரை ஆறு மாத காலம் நீடித்தது.
புது தில்லியில் பி.சந்திரசேகர் தலைமையிலான நடுவணரசு
1991 சூன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தது
!
இச்சூழ்நிலையில் என் அகவாழ்வில்
ஏற்பட்ட ஒரு நிகழ்வை இப்போது பார்ப்போம். என் மனைவியின் கடைசித் தங்கை பெயர் செல்வி.இராசவல்லி. அவருக்குத் திருமணம் செய்விக்க முழு மூச்சாக
மாப்பிள்ளை தேடும் படலத்தில் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர் !
ஆயக்காரன்புலம் நல்லான்குத்தகையை
முன்னோர்கள் பிறப்பிடமாகவும், (பூர்விகம்) திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியை அடுத்த பூனாயிருப்பை வாழ்விடமாகவும் கொண்ட
திரு.வையாபுரிப் பிள்ளையின் மகன் திரு.இரவி
என்பவரை இறுதியில் தேர்வு செய்தனர். அவர் இந்தியப் படைத்துறையில்
(ARMY) அப்போது பணிபுரிந்து வந்தார் !
இருவீட்டாரும் கலந்து பேசி
முடிவு செய்தபடி, திரு.இரவி
- இராசவல்லி திருமணம் 1991 ஆம் ஆண்டு மார்ச்சு
மாதம் 18 ஆம் நாள், மணமகள் ஊரான சேரன்குளத்தில் நடைபெற்றது. நான் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் சென்று திருமணத்தில்
கலந்து கொண்டேன் !
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பரப்புரையில்
ஈடுபட்டிருந்த இராசீவ் காந்தி 21-05-1991
அன்று திருப்பெரும்புதூரில் வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இராஜீவ் மறைவால் ஏற்பட்ட பரிவுணர்வு அலை தமிழ் நாட்டில் மட்டும் பெரும் தாக்கத்தை
ஏஎற்படுத்தியது. தமிழ் நாட்டில் அக்கட்சி 28 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான அ.இ.அ.தி.மு.க
11 இடங்களையும் பெற்றன. தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை
!
ஆனால் நாட்டின் பிற பகுதிகளில்
இராசீவ் படுகொலை பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. நாடாளுமன்றத்
தேர்தலில் இந்தியப் பேராயக் காட்சி 244 இடங்களை மட்டுமே பெற்றது.
அறுதிப் பெரும்பான்மைக்கு 24 இடங்கள் குறைவு.
பாரதிய சனதா 120 இடங்களிலும், சனதா தளம் 59 இடங்களிலும் வென்றிருந்தன. பிற கட்சிகளின் ஆதரவுடன் பி.வி.நரசிம்மராவ் இந்தியத் தலைமை அமைச்சராக ஆட்சியில் அமர்ந்தார் !
தமிழ்நாட்டில் குடியரசுத்
தலைவர் ஆட்சி 31-01-1991 முதல் நடைபெற்று வந்த நிலையில்,
இங்கும் சட்டமன்றத் தேர்தல்
அறிவிக்கப்பட்டது. இந்தியப் பேராயக் கட்சியுடன்
கூட்டணி சேர்ந்த அ.இ.அ.தி.மு.க., இராசீவ் கொலைப்பழியைத் தி.மு.க. மீது சுமத்திப் பரப்புரை செய்தது !
தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. 164 இடங்களிலும், அதன் கூட்டணிக்
கட்சியான இந்தியப் பேராயக்கட்சி 60 இடங்களிலும் வென்றன.
தி.மு.க 2 இடங்களை மட்டுமே பெற முடிந்தது ! பிற கட்சிகள்
8 இடங்களைப் பெற்றிருந்தன ! செயலலிதா முதன்முதலாகத்
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆனார் !
அரசியல் களத்தில் ஏற்பட்ட
அதிர்ச்சி அலைகளைப் போல என் அகவாழ்வுக் களத்திலும் ஒரு பேரதிர்ச்சி நிலைகொண்டது. என் மனைவியின் அண்ணனும், என் தங்கை கணவருமான திரு.செல்வராசுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது !
அவரைக் காண நான் மட்டும்
சேரன்குளம் சென்றிருந்தேன். அவரை அழைத்துச் சென்று மன்னார்குடியில்
மருத்துவரிடம் காண்பித்தேன். மருத்துவர் சில ஆய்வுகளை செய்த பின்னர்,
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லச் சொல்லி
பரிந்துரைக் கடிதம் கொடுத்தார் !
மருத்துவரின் கடிதத்தைப்
படித்துப் பார்த்தேன். வானமே என் தலையில் இடிந்து விழுந்ததைப்
போல எனக்கு மயக்கம் வந்தது. ஆம் ! அவருக்கு
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இருக்கலாம் என்று மருத்துவர் தன் கடித்ததில் குறிப்பிட்டு,
மேல் ஆய்வுக்காக தஞ்சாவூருக்குப் பரிந்துரைப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார்
!
அவரைத் திரும்பவும் வீட்டிற்கு
அழைத்து வந்தேன். மருத்துவரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள
செய்தி பற்றி நான் யாரிடமும் எதுவும் சொல்லாமல், தஞ்சாவூர் மருத்துவக்
கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் ஆய்வுக்குப் மருத்துவர் பரிந்துரைத்து இருக்கிறார் என்பதை
மட்டும் சொல்லி, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று என்
மாமனாரிடன் சொன்னேன் !
அவர் என்னிடம், நீங்களே அழைத்துச் சென்று வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். தஞ்சாவூரில் இரண்டு மூன்று நாள்கள் தங்க வேண்டி நேர்ந்தால் என்ன செய்வது
? சேலத்தில் மனைவியும் பிள்ளைகளும் தனியாக இருகிறார்கள்; ஆகையால் நீங்களே அழைத்துச் சென்று வருவது நல்லது என்று கூறிவிட்டு நான் சேலம்
வந்துவிட்டேன். !
என் மாமனார் தன் தலைப்
பிள்ளையை அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குச் சென்று காண்பித்ததில், அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன என்பதை உறுதி செய்து,
”அரத்தத் தூய்மை” செய்ய (DIALYSIS) ஏற்பாடு செய்தனர் !
இவ்வாறு ஒரு வாரம் மருத்துவ
மனையிலேயே தங்க வைத்து குறிப்பிட்ட இடைவெளியில் சிலமுறை “அரத்தத் தூய்மை” (டயாலிசிஸ்) செய்திருக்கின்றனர்.
இவ்வாறு ஒரு நாள் பண்டுவம் செய்து கொண்டு இருக்கையிலேயே உடல் நிலை சீர்கேடு
உற்றது. இறுதியில், பண்டுவம்
(TREATMENT) பயனளிக்காமல்
1991 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 29 ஆம் நாள் திரு.செல்வராசு மறைந்து போனார் !
திருமணமாகி 19 ஆண்டுகளிலேயே அத்தான் திரு.செல்வராசு அனைவரையும் மீளாத்
துயரில் ஆழ்த்திவிட்டு தன் பயணத்தை முடித்துக்கொண்டார். 18 அகவையில்
ஒரு பிள்ளை, 14 அகவையில் ஒரு பெண், 10 அகவையில்
ஒரு பிள்ளை, ஆக மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்க விட்டுவிட்டு அவர்
மறைந்து போனார் !
சேலத்திலிருந்து உடனடியாக
குடும்பத்துடன் சேரன்குளத்திற்குக் திரும்பிய நான், அவரது
இறுதிச் சடங்கிற்குப் பிறகு, சிலநாள் கழித்து சேலம் திரும்பினேன்
!
”குடம்பை தனித்தொழியப்
புள் பறந்தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு” என்ற வள்ளுவரின் வாக்கின்படி, அத்தான் செல்வராசின் உடலை
விட்டு அவர் உயிர் பிரிந்து சென்று 29 ஆண்டுகள் ஆகின்றன;
அவர் நினைவு மட்டும் இன்னும் (2020) எங்களை விட்டு விலகவில்லை !
மனித வாழ்வில் இன்ப துன்பங்கள்
மாறி மாறி வந்துகொண்டே தான் இருக்கும். அவற்றை எதிர்கொள்ள
நாம் பழகிக் கொண்டால், வாழ்க்கை ஓடம் சீராகச் சென்று கொண்டே இருக்கும்.
இந்த உலகியல் உண்மைகளைப் புரிந்து கொள்வதில் தான் ஒரு மனிதனின் வெற்றி
தோல்விகள் அமைகின்றன !
கடிநெல்வயலில் (ஒன்று விட்ட) அண்ணன் திரு.அ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் இரண்டாவது மகன் திரு.இராசேந்திரன்.
இவர், திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்
பொருத்துநர் பயிற்சியை முடித்த பிறகு, திருவெறும்பூர் பாரத மிகுமின் தொழிலகத்தில் பழகுநர் பயிற்சியை மேற்கொண்டார். அங்கேயே நிலையான
வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் வேளையில், இராணிப் பேட்டையில்
உள்ள பாரத மிகு மின் தொழிலகத்தில் பணியில் சேர அவருக்கு ஆணை கிடைத்தது !
திரு.இராசேந்திரனுக்கும், தமிழ்ப் பேரறிஞர் திரு.சி.இலக்குவனாரின் பிறந்த ஊரான வேதாரணியம் வட்டம் வாய்மைமேடு திரு.
மு.இராமசாமித் தேவரின் மகள் செல்வி.கற்பகத்திற்கும் திருமணம் செய்விப்பதாய் இருவீட்டாரும் கலந்து பேசி முடிவு
செய்திருந்தனர். இத்திருமணம் 1991 –ஆம்
ஆண்டு, செப்டம்பர் மாதம் 8 –ஆம் நாள் ஆயக்காரன்புலம்
காசி வீரம்மாள் திருமண அரங்கில் நடைபெற்றது !
மணமகள் திரு.இலக்குவனாரின் உறவினர் என்பதாலோ என்னவோ, திருமதி கற்பகமும் - ஏன் திரு .இராசேந்திரனும் கூட தமிழார்வமும், வல்லமையும் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர் ! இருவரது தமிழாற்றலையும் கண்டு நான் வியக்காத நாளே இல்லை !
மணமகள் திரு.இலக்குவனாரின் உறவினர் என்பதாலோ என்னவோ, திருமதி கற்பகமும் - ஏன் திரு .இராசேந்திரனும் கூட தமிழார்வமும், வல்லமையும் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர் ! இருவரது தமிழாற்றலையும் கண்டு நான் வியக்காத நாளே இல்லை !
இத்திருமணத்திற்கு சேலத்திலிருந்து
நான் மட்டும் வந்து சென்றதாக நினைவு ! சேலத்திலிருந்து
280 கி.மீ தொலைவில் இருக்கும் ஆயக்காரன்புலத்திற்கு
குடும்பத்துடன் வந்து செல்வது அத்துணை எளிதான செயலல்லவே !
நாகப்பட்டினம் மறைமலை நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினர் மூலம் நான் கட்டிய வீட்டில் 1992 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 -ஆம் நாள் பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேரன்குளத்திலிருந்து மாமா, மாமி, திரு.பிரகலாதன், திரு.சீவானந்தம் ஆகியோர் வந்திருந்தனர். நாகை திரு.பஞ்சாட்சரம், அவர் மனைவி ஆகியோரும் கலந்து கொண்டனர் !
நாகப்பட்டினம் மறைமலை நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினர் மூலம் நான் கட்டிய வீட்டில் 1992 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 -ஆம் நாள் பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேரன்குளத்திலிருந்து மாமா, மாமி, திரு.பிரகலாதன், திரு.சீவானந்தம் ஆகியோர் வந்திருந்தனர். நாகை திரு.பஞ்சாட்சரம், அவர் மனைவி ஆகியோரும் கலந்து கொண்டனர் !
சேலத்தில் அலுவலக மேலாளராகப்
பணியேற்று ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் 1992 ஆம் ஆண்டு
மே மாதம் 5 ஆம் நாள் ஈரோட்டிற்கு இடமாற்றல் செய்யப்பட்டேன்.
உடனடியாகப் பணியிலிருந்து விடுவிப்புப் பெற்று மறு நாள் ஈரோட்டில் பணியில்
சேர்ந்தேன். ஈரோட்டில் அப்போது முதல்வராக திரு.இராசு உடையாரும் ஆட்சி அலுவலராக திரு.சோம.நடராசனும் பணியாற்றி வந்தனர் !
தமிழில் மிகுந்த ஆர்வமும், திறனும் பெற்றிருந்த திரு.சோம. நடராசன் கரூரைச் சேர்ந்தவர். நாற்பது ஆண்டுகளாக எனக்கு
அவரைத் தெரியும். பழகுவதற்கு இனியவர். அடுத்தவர்
மனம் கோணாதபடி செயலாற்றும் பண்பாளர். ”துலாக்கோல்” என்னும் அடைமொழியுடன் முகநூலில் தமிழ்ப் பணி ஆற்றிக் கொண்டிருப்பவார்.
ஏறத்தாழ எண்பது அகவை நிறைந்த இனிய தமிழ்ச் செல்வர் !
ஈரோட்டில் அப்போது திரு.இரத்தினமூர்த்தி அலுவலக மேலாளராகவும் அவரது துணைவியார் பரிமளா தேவி உதவியாளராகவும்
பணியாற்றிக் கொண்டிருந்தனர். என் பணிக் காலத்தின் பிற்பகுதியில்
திரு.இரா.அ. தங்கவேலு
அங்கு முதல்வர் பணியை ஏற்றிருந்தார் !
சேலத்தில் திரு.பச்சை உடையார் வீட்டிலிருந்து, அய்யந்திருமாளிகை வீட்டு
வசதி வாரியக் குடியிருப்புக்கு என் வாழ்விடத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மாற்றிக்
கொண்டிருந்தேன். இங்கு 246 ஆம் இலக்க வீடு
எனக்கு ஒதுக்கீடு ஆகி இருந்தது. இந்த வீட்டில் வாழ்கையில்,
அண்டை வீட்டார் பலர் குடும்ப அளவில் எங்களுக்கு நெருங்கிய நட்பினர் ஆயினர்
!
பட்டு வளர்ச்சித் துறையில்
பணி புரிந்த ஆட்சி அலுவலர் உதகமண்டலம் திரு..இராமச்சந்திரன்,
கருவூலத் துறையைச் சேர்ந்த திரு.சேட்டு,
உந்தூர்திப் பேணல் துறை அலுவலர் திரு.தங்கமணி,
அவரது மனைவி திருமதி.வாசுகி, வேலைவாய்ப்பு அலுவலகத்தைச் சேர்ந்த திரு.செயராமன்,
வீட்டு வசதி வாரிய அலுவலகத்தைச் சேர்ந்த திரு.மதியழகன்,
அவர் மனைவி திருமதி.விசயா எனப் பலரும் எங்களது
நட்பு வட்டத்தில் இணைந்திருந்தனர் !
சேலத்தில் மனைவியும் பிள்ளைகளும்
இருக்க,
நான் மட்டும் அன்றாடம் இருப்பூர்தி (TRAIN) மூலம்
ஈரோட்டுக்கு சென்று வந்து கொண்டிருந்தேன் ! இவ்வாறான அலைச்சல்
அரசுப் பணியில் இயல்பு தானே !
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை(வைகாசி),08]
{21-05-2020}
----------------------------------------------------------------------------------------------
திரு.இராசேந்திரன் செல்வி கற்பகம்.
இவர்கள் திருமணம்
திரு.இரவி - செல்வி.இராசவல்லி
திருமணம் :
நாள் ; 18-03-1991.
திரு.இரவி திருமதி.இராசவல்லி
இணையர்.
இவர்கள் திருமணம்
18-03-1991 அன்று
சேரன்குளம் மணமகள் இல்லத்தில்
நடைபெற்றது.
திரு.இராசேந்திரன் செல்வி கற்பகம்.
இவர்கள் திருமணம்
8-9-1991 அன்று நடைபெற்றது.
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,
ஈரோடு
சேரன்குளம் திரு.ஆர்.செல்வராஜ்:
மறைவு நாள் :29-08-1991.
No comments:
Post a Comment