name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (10) :1959-1962 நிகழ்வுகள் - தந்தை மறைவு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, March 28, 2020

காலச் சுவடுகள் (10) :1959-1962 நிகழ்வுகள் - தந்தை மறைவு !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1959-1962 நிகழ்வுகள் !

                                     (சுவடு.10) தந்தை மறைவு ! 

--------------------------------------------------------------------------------------------

பத்தாம் வகுப்பு நிறைவு செய்தாகிவிட்டது . இனி 11 ஆம் வகுப்பில் (OLD S.S.L.C) நன் முறையில் தேர்ச்சி பெற வேண்டும். அன்றாடம் 5 கி.மீ நடந்து சென்று படித்தால், படிப்பில் முன்னேற்றம் காண முடியுமா ?  என்னுள் எழுந்த இந்தக் கேள்விகள் என் பெற்றோர் மனதிலும் எழுந்தன.  இறுதியில், என்னைத் திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தனர் !

பஞ்சநதிக்குளம் திரு.ப.சி.சகந்நாதன் பிள்ளை  என்பவர், திருத்துறைப் பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். அவரிடம் சென்று என் தந்தை கலந்து உரையாடியதில், திருத்துறைப்பூண்டியில் சந்நிதித் தெருவில் இருக்கும்  அன்னபூரணி இலவய மாணவர் விடுதியில் சேர்த்துப் படிக்க வையுங்கள், அதற்கு நான் பரிந்துரை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் !  

அவரது அறிவுரைக்கு இணங்க, ஆயக்காரன்புலம் உயர்நிலைப் பள்ளியிலிருந்து விலகி, திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் 1959 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 ஆம் வகுப்பில் சேர்ந்தேன். திரு.ப.சி.சகந்நாதன் பிள்ளையின் பரிந்துரை இருந்ததால் அன்னபூரணி இலவய மாணவர் விடுதியில் காப்பாளர் திரு. இலட்சுமண தேவர் என்னைச் சேர்த்துக் கொண்டார் !

இந்த மாணவர் விடுதியில் 15 மாணவர்கள் அளவுக்குத் தங்கி இருந்தனர். பஞ்சநதிக்குளம் திரு. வை.பழனிச்சாமி, வாய்மேடு திரு. மு.இராதா கிருட்டிணன், வாய்மேடு திரு .சிவசுப்ரமணியன், வெள்ளங்கால் திரு. அ.செல்வராசு, தாணிக்கோட்டகம் திரு. இரெ.இராசேந்திரன், கருப்பம்புலம் திரு.ச. கோதண்ட ராமன்  ஆகியோருடன் நானும் சேர்ந்து தங்கினேன். வேறு சிலரும் தங்கியிருந்தனர் ! உள்ளுறை விடுதி என்பதால் உணவு, உறையுள் இரண்டும் எங்களுக்கு இலவயமாகக் கிடைத்தது !

பள்ளியில் திரு.முகமது யாசின் என்பவர் ஆங்கிலப் பாடம் எடுத்தார். திரு.சண்முக தேசிகர் தமிழாசிரியர். பஞ்சநதிக்குளம் திரு..சி.சகநாதன் பிள்ளை இன்னொரு தமிழாசிரியர். திரு.தேசிகாச்சாரி என்பவர் வேறு ஏதோ பாடம் எடுத்தார். பிற  ஆசிரியர்கள் பெயர் எதுவும் நினைவில் இல்லை !

பதினொன்றாம் வகுப்பில் என்னுடன் படித்தவர்கள் திரு.வி.விநோதகன் (சசிகலாவின் அண்ணன்பின்னாளில் புகழ் பெற்ற மருத்துவர்), திரு.கு.வெ.பழனித்துரை (பின்னாளில் தமிழக அரசு திட்டக் குழு உறுப்பினராக இருந்தவர்), திரு.இரெ.இராசேந்திரன் (பின்னாளில் காலநடைப் பேணல் துறைத் துணை இயக்குநராக இருந்தவர்), திரு.ஆர்.இரகுபதி (பின்னாளில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்) மற்றும் பலர் !

இதே பள்ளியில் தான் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவராக இருந்த சிவ இளங்கோவும் சில காலம் படித்தார் !

இந்தப் பள்ளியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள வித்வான் மானைக்கால் (நெடும்பலம்) என்னும் இடத்தில் தான் என் மாமா திரு.சி.பண்டரிநாதன் வீடும் இருந்தது. அங்கு தான் என் தந்தையும், தாயாரும்,  தங்கைகளும் தங்கி இருந்தனர்.  ஞாயிற்றுக் கிழமைகளில் விடுதியில் சொல்லிவிட்டு நானும் கருப்பம்புலம் திரு.ச.கோதண்டராமனும் மாமா வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்து வருவோம் !

நான் 11 ஆம் வகுப்புப் படிக்கும் போது கல்யாணப்பரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது.  ஆங்கில வகுப்பு ஆசிரியர் திரு.யாசின் அவர்கள், பாடவேளையின் போது இந்தப் படத்தின் கதை பற்றியும், பாடல்களை எழுதிய பட்டுக் கோட்டை திரு.கல்யாணசுந்தரம் பற்றியும், பாடல்களின் இனிய இசை பற்றியும்  உயர்வாக எடுத்துச் சொல்லிப் பாராட்டுவார் !

அவரது கூற்றுக்கு வலு சேர்ப்பது போல, திருத்துறைப் பூண்டி பெரியநாயகி திரையரங்கில், இரவுக் காட்சி தொடங்கும் முன் மக்களை ஈர்ப்பதற்காக மாலை நேரத்தில் இந்தப் படத்தின் பாடல்களை  ஒலிபரப்புவார்கள். விடுதி நண்பர்களுடன் நானும் சேர்த்து, முள்ளியாற்றங் கரையில் அமர்ந்து இந்தப் பாடல்களைக் கேட்டு இன்புறுவோம் !

60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்தப் படத்தில் வரும், “அக்காளுக்கு வளைகாப்பு”, வாடிக்கை மறந்ததும் ஏனோ?” ”உன்னைக் கண்டு நானாட”, ”துள்ளாத மனமும் துள்ளும்”, “காதலிலே தோல்வியுற்றான்போன்ற பாடல்கள் என்றும் இறவாத் தன்மை உடைய இனிய பாடல்கள். மாணவர்கள் எல்லாம் இப்பாடல்களில் மயங்கிக் கட்டுண்டு கிடந்தார்கள் என்பது மறுக்கவியலாத உண்மை !

பள்ளிச் சூழ்நிலை இவ்வாறு போய்க்கொண்டிருக்க, கடிநெல்வயலில் வேறு விதமான இறுக்கமான சூழ்நிலை நிலவியது. திருத்துறைப் பூண்டியிலிருந்து கடிநெல்வயல் சென்றிருந்த என் தாய் மாமா திரு.பண்டரிநாதன், நிலம் வீடு அனைத்தையும் விற்றுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு என் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார் !

இந்தப் பணத்தைக் கொண்டு திருத்துறைப் பூண்டியில் ஆற்றுப் பாசனம் உள்ள இடத்தில் நிலம் வாங்கிச் சாகுபடி செய்யலாம் என்றும் கருத்துச் சொல்லி இருக்கிறார் !

என் பெற்றோர்கள் அவரது கருத்துக்கு உடன்பட்ட போது, நிலம், வீடு அனைத்தையும் பங்காளிகளிடமே விற்க வேண்டும் எனவும், கையில் உள்ள பணத்தை இப்போது தரலாம், மீதம் உள்ளவற்றை ஓரிரு ஆண்டுகளில் தரலாம் என்றும் சொல்லி உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார் !

பங்காளிகளை அழைத்துப் பேசி, அவர்களிடம் நிலத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு, என் பெற்றோரையும், மூன்று தங்கைகளையும் அழைத்துக் கொண்டு திருத்துறைப் பூண்டி வந்துவிட்டார். இந்நிகழ்வுகள் நடக்கும் போது நான் திருத்துறைப் பூண்டியில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன் !

திருத்துறைப் பூண்டியில், எங்கள் குடும்பமும், மாமா குடும்பமும் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தன. தாய்மாமா தான் என் தமக்கையைத் திருமணம் செய்திருந்தவர். மாமா சிறு அளவில் மளிகைக் கடை வைத்திருந்தார் !

நிலமும் வீடும் விற்ற பணம் ஒரே தடவையில் கிடைக்காமல் இரண்டு மூன்று ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகப் பல தவணைகளாகக் கிடைத்ததால், திருத்துறைப் பூண்டியில் நிலம் வாங்க முடியவில்லை.  சிறுகச் சிறுகக் கிடைத்த பணமும் குடும்பச் செலவில் கரைந்து போயிற்று !

சொந்த நிலமும் இல்லை; குடியிருக்க வீடும் இல்லை; மேற்கொண்டு நான் படிக்கப் பணமும் இல்லை ! மார்ச்சு 1960 ஆம் ஆண்டு  பள்ளியிறுதி வகுப்பை முடித்த நான் அதன்பின் மாமாவின் கடையில் அவருக்கு உதவியாக இருக்கலானேன் !

இந்தச் சமயத்தில், என் தந்தைக்கு உடல் நலமில்லாது போயிற்று ! சில நாள் சோர்வுற்றிருந்த அவர் 1960 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் ஒரு நாள், இவ்வுலகில் வாழத் தெம்பில்லாமல் மறைந்து போனார். அப்போது எனக்கு அகவை பதினாறு. குடும்ப உறுப்பினர்கள், நான், என் தாயார், தங்கை மூவர் !

தந்தை ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தவர். வேளாண்மை மட்டுமே அவருக்குத் தெரிந்த தொழில். ஆறடி உயரம்; மாநிறத்திற்கும் சற்றுக் குறைவான நிறம்; கருப்பும் வெளுப்பும் கலந்த தலைமுடி; அவர் சட்டை அணிந்து நான் பார்த்ததில்லை !

நான்குமுழ வேட்டி; தோளில் ஒரு துண்டு ! எளிமையான தோற்றம் ! யாருடனும் அதிர்ந்து பேசாத அடக்கமான குணம் ! அவர் உயிருடன் இருக்கும் போது என் தமக்கையார் சிந்தாமணியை என் தாய் மாமா பண்டரிநாதனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார் !

என் தந்தையார் இறக்கையில் அவருடைய நிழற்படம் ஒன்று கூட இல்லை. இறந்த பின்பு, நிழற்படக் கலைஞரை வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு நிழற்படம் எடுக்கலாம் என்னும் கருத்தை மாமாவிடம் சொன்னேன். அதெல்லாம் தேவையில்லை என்று அவர் மறுத்துவிட்டார் !

ஐம்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்ட என் தந்தையாரின் நிழற்படம் என்னிடம் இல்லாவிட்டாலும் சி.வைத்தினாத தேவர் என்று அவர் என் பள்ளிச் சான்று ஒன்றில் இட்ட கையொப்பம் இன்றும் பாதுகாப்பாக என்னிடம் இருந்து அவரது நினைவுகளைப் புதுப்பித்து வருகிறது !

தந்தை மறைந்த பிறகு ஒரு கணியர் (சோதிடர்), பக்கத்து ஊரான நீர்முளையிலிருந்து வந்திருந்தார். என் பிறப்பியத்தை (சாதகம்) அவரிடம் காட்டி, என் எதிர்காலம் பற்றி மாமா அவரிடம் கேட்டார்.  கணியர் என்ன சொன்னார் தெரியுமா ?

இந்தப் பையனுக்கு அரசுப் பணி கிடைக்கவே கிடைக்காது. தொழில் செய்து தான் இவன் முன்னேற முடியும்அவர் சொல்லை என் மாமா முழுமையாக நம்பினார். ஒரு மளிகைக் கடை ! அதைக் கவனிக்க மாமாவும் நானும் ! இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடின !

மாமா என்னை நாகப்பட்டினம் பல்தொழில் பயிற்சி நிலையத்தில் (பாலிடெக்னிக்) சேர்க்க எண்ணி ஒருநாள், அங்கு போய் என் பள்ளியிறுதி வகுப்பு மதிப்பெண் சான்றினைக் காட்டி, சேர்க்கை விண்ணப்பம் தருமாறுக் கேட்டிருக்கிறார் !

பள்ளி இறுதி வகுப்பில் பொதுக் கணக்கு (GENERAL MATHS) எடுத்திருப்பதால், அங்குச் சேர இயலாது என்றும், கல்லூரிப் புகுமுகவகுப்பில் கணக்குப் பிரிவில் சேருங்கள், அங்கு ஓராண்டு படித்தபின் இங்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்றும் சொல்லியிருக்கின்றனர். இதனை நம்பி, தஞ்சையில் உள்ள மன்னர் சரபோசி அரசினர் கலைக் கல்லூரியில் 1962 ஆம் ஆண்டு சூன்மாதம் 19 ஆம் நாள் நான் சேர்ந்தேன் !

-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),16]
{29-04-2020}
-----------------------------------------------------------------------------------------------
கழக உயர்நிலைப் பள்ளி, 
திருத்துறைப்பூண்டி


தந்தை மறைவு : 196O ஆம் ஆண்டு !
மறைந்த தந்தையின் நிழற்படம்
 ஒன்று கூட இல்லை !
கீழே உள்ளது கற்பனை !

தந்தையின் கையெழுத்து 

என் வாழ்வில் கணியரின் 
திருவிளையாடல்





No comments:

Post a Comment