name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (41) :2004 நிகழ்வுகள் - அருட்செல்வி !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, March 31, 2020

காலச் சுவடுகள் (41) :2004 நிகழ்வுகள் - அருட்செல்வி !

தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 2004 நிகழ்வுகள்!

                                (சுவடு.41) அருட்செல்வி !

-------------------------------------------------------------------------------------------

என் பெரியப்பா திரு. அருணாச்சலத் தேவரின் முதல் மனைவி திருமதி.மீனாட்சி அம்மையார் தன் மகன் மீனாட்சிசுந்தரம் கைக்குழந்தையாக இருந்தபோதே விட்டுவிட்டு மறைந்து போனார் என்பதை முன்பு சொல்லி இருக்கிறேன். கைக்குழந்தையாக இருந்த திரு.மீனாட்சிசுந்தரத்தை வளர்த்து ஆளாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர்கள் இருவர் !

அவர்களில் முதலாமவர், திரு.அருணாச்சலத் தேவரின் மாமியாரும், திரு.மீனாட்சி சுந்தரத்தின் பாட்டியுமாகிய கல்யாணி அம்மையார். இரண்டாமவர், மறைந்த மீனாட்சி அம்மையாரின் தங்கையும் திரு.அருணாச்சலத் தேவரின் இரண்டாவது மனைவியுமாகிய  திருமதி.சுந்தரம் அம்மையார் !

இந்த இருவரும் அன்று ஊட்டி வளர்த்த மீனாட்சி சுந்தரம்தான் பிற்காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று, ஓய்வூதியர்களூக்காகப் பல்லாண்டு காலம் உழைத்து, இன்று 92 –ஆம் அகவையில் நலமுடன் ஊரில் உலா வந்து கொண்டிருக்கும் பேரன்புச் செம்மல் !

திரு.அருணாச்சலத் தேவரின் இரண்டாவது மனைவி திருமதி.சுந்தரம் அம்மையாருக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் நெடுநாள் தங்காமல் பிறந்தவுடன் இறந்து போயின !

இதற்கிடையில், திரு.அருணாச்சலத் தேவரின் முதல் மனைவி, மறைந்த மீனாட்சி அம்மையார் மற்றும் இரண்டாவது மனைவி சுந்தரம் அம்மையார் ஆகியோரின் தங்கையான சாரதா அம்மையாருக்குத் திருமணம் நடந்தது. திரு.அருணாச்சலத் தேவரின் சிற்றப்பா மகனான திரு.வைத்தியநாத தேவரை சாரதா அம்மையார் மணந்தார் !

திரு.வைத்தியநாத தேவர் - திருமதி சாரதா அம்மையார் ஆகியோர் தான் என் பெற்றோர் என்பது காலச்சுவடுகளைத் தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் எளிதில் விளங்கும் !

நான்கு அகவை நிறைவான குழந்தை மீனாட்சிசுந்தரத்தை அவரது சிற்றன்னை திருமதி.சுந்தரம் அம்மையாரால் சரிவரக் கவனிக்க முடியவில்லை. அடிக்கடி நிகழ்ந்த பிள்ளைப்பேறு, பிறந்த குழந்தைகளின் இறப்பு ஆகியவை சுந்தரம் அம்மையாரின் உடல் நலத்தை மிகவும் சீரழித்து இருந்தது !

ஆகையால் குழந்தை மீனாட்சிசுந்தரத்தைக் கவனிக்கும் பொறுப்பையும் என் தாயார் சாரதா கூடுதலாக ஏற்றுக் கொண்டார். ஒரே வீட்டில் திரு.அருணாச்சல தேவர் குடும்பமும், என் பெற்றோரும் வாழ்ந்து வந்ததால் இது இயலக் கூடியதாக இருந்தது !

பெரியப்பா திரு.அருணாச்சலத் தேவரின் இரண்டாவது மனைவி சுந்தரம் அம்மையார், 1946 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் பெற்றெடுத்த ஆண்மகவுக்கு ஏறத்தாழ ஒரு  அகவை ஆகும் நிலையில், இறந்து போனார்

பதினெட்டு  அகவையில் ஒரு பிள்ளை (மீனாட்சி சுந்தரம்) , ஒரு அகவையில் இன்னொரு பிள்ளை (சீனிவாசன்), இரண்டும் தாயில்லாப் பிள்ளைகள் என்ற நிலையில், பெரியப்பா திரு.அருணாச்சலத் தேவர் தவித்துப் போனார் !

ஒரு அகவை ஆகும் நிலையில் உள்ள ஆண்மகவை என் தாயார் கவனித்துக் கொண்டார். இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு என் தாயாரின் கைகளில் வந்து சேர்ந்தது ! இந்த நிலையில் தான், மூத்த பிள்ளை திரு.மீனாட்சி சுந்தரத்திற்குத் திருமணம் செய்து வைக்கும் முடிவை, என் தாயார் உள்பட அனைவரும் சேர்ந்து எடுத்தனர். இம்முடிவின்படி இரண்டாவது குழந்தையான சீனிவாசனுக்கு மூன்று அல்லது நான்கு அகவை நிறைந்த  நிலையில் மூத்த பிள்ளைக்குத் திருமணம் நடந்தது !

சீனிவாசன் தன் தாயை இழந்த பின்பு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் என் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்திருக்கலாம் என்பது என் கணிப்பு !   அதன்பிறகு,  குழந்தை சீனிவாசன் அவரது அண்ணி திருமதி பார்வதி அம்மையார் மற்றும் என் தாயார் சாரதா அம்மையார் ஆகிய இருவரின் கூட்டுப் பாதுகாப்பிலும் வளர்ந்து பள்ளிப் பருவத்தை அடைந்திருக்கிறார் !

இந்த சீனிவாசன் தான், பிற்காலத்தில் புதுக்கோட்டை அரசினர்  தொழிற்பயிற்சி நிலையத்தில் எந்திரப் பணியியல் பிரிவில் என் உதவியால்  சேர்ந்து பயின்று .பின்னர், சென்னை திருவான்மியூரில் உள்ள  எஸ்.ஆர்.பி.டூல்ஸ் என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் !

இறுதியில், திருச்சி, நவல்பட்டு, படைக்கலத் தொழிலகத்தில் பணியில் சேர்ந்து ஏறத்தாழ 28 ஆண்டுக்காலம் பணியாற்றி, ஓய்வு பெற்று மனைவி, மகன், மருமகள், பெயர்த்தி ஆகியோருடன் நவல்பட்டு அருகில் சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார் !

திரு.சீனிவாசனுக்குக் கிட்டத்தட்ட வளர்ப்புத் தாயாக இலங்கி வந்த என் தாயாருக்கு எளியோர்க்கு இரங்குதலும் வறியோர்க்கு வழங்குதலும் இயற்கைக் குணமாக அமைந்திருந்தது.  பசி என்று வருவோர்க்கு உணவு அளிக்காமல் அவர் இருந்ததில்லை ! பசித்த முகத்தைப் பார்த்தும் பாராதிருக்க அவருக்கு மனம் ஒப்புவதில்லை !

தங்க நகை செய்யும் பொற்கொல்லர் குடும்பம் ஒன்று அக்காலத்தில் கடிநெல்வயலில் வெள்ளாழர் காட்டில் இருந்தது. பழனிவேல் பத்தர் என்பவர்  குடும்பத் தலைவர். ஊராருக்குச் சிறு சிறு நகைகள் செய்து கொடுத்து வந்தார். அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகளும் இருந்தனர் !

அவர் தம்பியின் பெயர் நாகராசன். நாகராசனுக்குத் திருமணம் ஆகவில்லைஅண்ணன் குடும்பத்துடன் இவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். எனக்கு அப்போது ஏழு அல்லது எட்டு அகவை  இருக்கும். ஒருநாள் நாகராசன் எங்கள் வீட்டிற்கு வந்து என் தாயாரிடம், குழந்தைகளுக்கு உணவு ஆக்கித் தந்திட, வீட்டில்  கொஞ்சம் கூட அரிசி இல்லை; ஆகையால்  சிறிது அரிசி கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் !

உள்ளே சென்ற என் தாயார் ஒரு பையில் நான்கு படி அளவுக்கு அரிசி கொண்டுவந்து நாகராசன் இடம் கொடுத்து வீட்டிற்கு எடுத்துச் சென்று பிள்ளைகளுக்கு சமைத்துப் பரிமாறி அவர்களின் பசியாற்றுங்கள் என்று சொல்லிய காட்சி இன்றும் கூட என் நினைவில் பசுமையாக இருக்கிறது !

இன்னொரு நாள், வேதாரண்யம் சந்நிதித் தெருவைச்  சேர்ந்த ஏழில் (நாதசுரம்) இசைக்கலைஞர் திரு.சுப்பையாப் பிள்ளை என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். பஞ்சநதிக்குளத்தார் புரத்தில் எந்த ஒரு நன்னிகழ்வு  என்றாலும் அவர் தவறாமல் வருகை தந்து ஏழில் (நாதசுரம்)  இசை வழங்குவார்.  இப்படிப்பட்ட சுப்பையாப் பிள்ளை எங்கள் வீட்டிற்கு வந்து முகவாட்டத்துடன்  பேசிக்கொண்டிருப்பதை அறிந்த  என் தாயார்  மெல்ல  அவரிடம்  முகவாட்டத்திற்கான காரணம் பற்றி உசாவினார் !

சில மாதங்களாக ஏழில் இசை நிகழ்ச்சி எதுவும் இல்லை என்றும் அதனால் வருமானமின்றி இன்னற்பட்டு  வருவதாகவும், பிள்ளைகளுக்கு கூட உணவளிக்க இயலவில்லை என்றும்  திரு.சுப்பையாப்  பிள்ளை வருத்தத்துடன் கூறியதைக் கேட்ட என் தாயார் உள்ளே சென்று ஒரு கோணிப்பையில்  15 லிட்டர் அளவுக்கு அரிசி கொண்டுவந்து அவரிடம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச்சென்று பிள்ளைகளுக்கு முதலில் உணவு ஆக்கிக்  கொடுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார் !

இவ்வாறு வறுமை என்று வந்தவர்களுக்கு அரிசி அளித்து பிள்ளைகளுக்கு உணவு ஆக்கிக் கொடுங்கள் என்று உரைக்கும்  இரக்க மனம் கொண்ட என் தாயார், வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் கேட்கும் கேள்வி சாப்பிட்டீர்களா என்பதுதான்  !

மறைஞாயநல்லூர் என்னும் பூப்பட்டியைச் சேர்ந்த பண்டாரம் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம், ஒரு தாழை ஓலை மடக்குக் கொட்டானில் கொஞ்சம் முல்லை அரும்பு கொண்டு வந்து தருவார். அதற்குப் பகரமாக என் தாயார் அவருக்கு வயிறு நிரம்பச் சோறிடுவார். சோற்றைக் கை நிறைய எடுத்துப் பெரிய கவளமாக உருட்டி அவர் உண்ணும் காட்சி 70 ஆண்டுகளாகியும் இன்னும் என் கண்கள் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றன !

நான் ஆயக்காரன்புலம் பள்ளியில் படிக்கையில் படிப்புக்குக் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. குறைந்த வருமானம் உள்ள பெற்றோர், வட்டாட்சியரிடம் வருமானச் சான்று வாங்கித் தந்தால்கல்விக் கட்டணம் 50% செலுத்தினால் போதும். மாதந்தோறும் செலுத்தவேண்டிய இந்தக் கட்டணம் உருபா 03-50 அளவுக்கு இருந்ததாகத்தான் நினைவு !

இந்தத் தொகையைத் தருவதற்கு என் தந்தை காலம் கடத்துவார். காரணம் புயலுக்குப் பிந்தைய தாக்கத்தால் ஏற்பட்ட விளைச்சல் வீழ்ச்சி. தாயார் தான் ஏதேதோ செய்து, இந்தத் தொகையை எனக்குத் தருவார். சில நேரங்களில் தான் வளர்த்து வந்த ஆட்டுக் குட்டிகளை விற்றுக் கூட இந்தத் தொகையைத் தந்திருகிறார். தந்தையை விடத் தாயார் மீது எனக்குப் பற்று அதிகமானதற்கு இதுவும் கூட ஒரு காரணம் !

தாயாரிடம் இருந்து இரவல் பெற்ற இந்த நல்ல குணங்களை நான் இன்றும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இக்குணங்களைப் பெற்றிருப்பது  நான் பெற்ற  நற்பேறே என்று  கருதுகிறேன். மனிதராகப் பிறந்தவர்களிடம்  இரக்கம், அன்பு, பரிவு உணர்வு ஆகியவை  கட்டாயம் இருந்தாக வேண்டும் !

நாம் பிறரிடம் அன்பு பாராட்டினால் பிறரும் நம்மிடம் அன்பு பாராட்டுவார்கள் என்பது பெரியோர்கள்  உரைத்திருக்கும் உலக நியதி  ! உலக நியதியை உணராதவர்கள் தம்மை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளக்  கிஞ்சிற்றும் தகுதி இல்லாதவர்கள் !

தஞ்சாவூரில் நான் புதிதாகக் கட்டியிருந்த வீட்டில் 2004 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 -ஆம் நாள் புதுமனை புகுவிழாவை, மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் சொல்லி நடத்தினேன் !

ஒப்பந்தக்காரர் மூலம்  வீடு  கட்டும்  பணி நடந்தாலும், கட்டுமானப் பணிகளில் கடைப் பிடிக்கப்பட்ட  தரம் எனக்கு   முழு மன நிறைவைத் தந்தது.  கலவை விகிதம் 1:5 என்ற அளவைக் கொத்தனார்கள் தவறாது கடைப்பிடித்தார்கள் ! காலை, மாலை இருவேளையும் கட்டுமானங்களின் மீது நீர் ஊற்றி, கலவை நன்கு இறுகச் செய்தார்கள் ! 

எனவே  இப்பணியில்   ஈடுபட்டிருந்த     கொத்தனார்களின்  சேவையைப் பாராட்டும் வகையில் புதுமனை புகு விழாவன்று தஞ்சாவூர், சூரியம்பட்டியைச் சேர்ந்த  கொத்தனார்கள் திரு.கார்த்தி, திரு.சேகர். திரு.சக்திவேல், நெடார் திரு. ஏசு ஆகிய நால்வரையும் அழைத்து விருந்து அளித்ததுடன் ஒவ்வொருவருக்கும் நெடுங்காற்சட்டை (PANTS) மற்றும் மேற்சட்டைகளுடன் (SHIRT) சிறு தொகை அன்பளிப்பாகவும்    தந்தேன் !

கொத்தனார்களுக்குக் கட்டுமானப் பணியில் உதவிய சிற்றாள்கள் செல்வி.புஷ்பரானி, திருமதி. சந்திரா ஆகியோரும் விருந்தில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்குப் புடைவைகளுடன் பண அன்பளிப்பும் தந்தேன் . கொத்தனார் மற்றும் சிற்றாள்களின் முகத்தில் அன்று நான் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! உழைப்பவர்களை நாம் மதித்தால் அவர்களும் வஞ்சனை இல்லாமல் உழைப்பை நல்கத்தான் செய்கிறார்கள்  ! 

புதிய வீட்டில் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவேறிய பின் 2004 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 -ஆம் நாள் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு இடம் பெயர்ந்தேன் ! 

ஓசூர் இராசகணபதி நகரில் வாழ்ந்து மறைந்த திரு.செயராமன் அவர்களின் மனைவி பெயர் புஷ்பா. இவ்விணையருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். திரு செயராமன் இறப்பதற்கு முன்பாக மூத்த பெண் பேபிக்கும், இரண்டாவது பெண் இலக்குமிக்கும் திருமணம் ஆகி இருந்தது !

திரு.செயராமன் மறைந்த எட்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது மூன்றாவது பெண் செல்வி.லலிதாவுக்கும், ஓசூரைச் சேர்ந்த திரு.இரமேஷ் என்பவருக்கும் 2004 –ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 29 –ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. திரு செயராமனின் மகன் திரு.பிரபு தான் திருமண ஏற்பாடுகளை முழுமையாகப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தி வைத்தார் !.

இந்தத் திருமணத்திற்கு நான் செல்ல இயலவில்லை. என் அறுபதாம் அகவை நிறைவு நாள் விழா பஞ்சநதிக்குளம் அங்காளபரமேசுவரித் திருக்கோயிலில் மறுநாள் (30-04-2004) நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வேண்டிய முன் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், செல்வி.லலிதா திரு.இரமேஷ் திருமணத்திற்கு ஓசூர் செல்ல இயலாமற் போயிற்று ! எனினும் இரண்டு நாள்கள் முன்னதாக ஓசூர் வந்து செல்வி லலிதாவை நேரில் அழைத்து வாழ்த்துக் கூறினேன் !

காலம் தான் எத்துணை விரைவாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு அறுபது அகவை நிறைவடையப் போகிறது. உற்றார் உறவினர்கள் சும்மா இருப்பார்களா ? அறுபதாம் ஆண்டு நிறைவு நாள் விழாவைக் கொண்டாடும் பொருட்டு,  தஞ்சாவூரிலிருந்து மூடுந்து (VAN) ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு பஞ்சநதிக்குளம் அங்காளபரமேசுவரி திருக்கோயிலுக்குச் கோயிலுக்குச் சென்றிருந்தோம் !

எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி, மருமகன் திரு.சிவகுமார், மகள் திருமதி.கவிக்குயில், சிவக்குமாரின் தந்தை திரு..பழனியப்பன், தாயார் திருமதி இராசேசுவரி, ஆறு மாதக் குழந்தையான பெயரன் கீர்த்திவாசன், திருச்சியிலிருந்து என் மைத்துனர் திரு.ஜீவானந்தம், தஞ்சாவூரிலிருந்து பேராசிரியர் திரு.குருநாதனின் மனைவி திருமதி கௌரி, அவர் மகன் திரு. வடிவேல் முருகன், திருத்துறைப் பூண்டியிலிருந்து இணைமான் (சகலை) திரு..மா.சுப்ரமணியன், அவர் மனைவி திருமதி.காஞ்சனமாலா ஆகியோரும் வந்திருந்தனர் !

சேரன்குளத்தில் என் தங்கை மகன் பாலதண்டாயுதத்தின் வீட்டில் அவருடைய அரவணைப்பில்  தங்கி இருந்த என் மாமனார், மாமியார் ஆகியோர், நிகழ்ச்சிக்கு வரவில்லை. திரு.பாலதண்டாயுதம் எங்கள் மீது ஏதோ வருத்தம் கொண்டு எங்களிடம் தொடர்பு இல்லாமல் இருந்ததால், அவர் வீட்டில் தங்கி இருந்த மாமனார், மாமியார் இருவரும் நிகழ்ச்சிக்கு வர விரும்பினாலும், செல்லக் கூடாது எனத் தடுக்கப்பட்டதாக அறிந்துகொண்டோம் !

சேர்வதும் விலகுவதும் உறவினர்களிடையே இக்காலத்தில் இயல்பான ஒரு நிகழ்வாகி விட்டது. விலகியவர்கள் மீண்டும் ஒன்று சேர முடியும்; ஆனால் விலகி இருந்த காலத்தில் அவர்கள் தவறவிட்ட இன்ப துன்ப நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியாது. இதை இந்த மானிடக் குமுகாயம் ஏனோ மனதிற் கொள்வதில்லை !

கோயிலில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மூடுந்தில் (VAN) தஞ்சாவூர் திரும்பிக் கொண்டிருந்தோம். மூடுந்து தட்டாங்கோயில் பாலம் தாண்டி வந்துகொண்டு இருக்கையில் ஒரு அதிர்ச்சி தரும் செய்தி எங்களை வந்து தாக்கியது !

---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),17]
{30-05-2020}
--------------------------------------------------------------------------------------------

என் அன்னை. 
திருமதி சாரதா அம்மையார்.


திரு.நாகராசன், 
கடிநெல்வயலில் வாழ்ந்து வந்த
 பொற்கொல்லர்.
(உண்மையில் இந்தப் படம் 
அவருடையது அன்று)

கடிநெல்வயலில் 
எந்த  நன்னிகழ்வு என்றாலும் 
ஏழில் இசை வழங்கும் 
திரு.சுப்பையாப் பிள்ளை 
(உண்மையில் இந்தப் படம்
 அவருடையது அன்று)

மறைஞாயநல்லூர்
 பண்டாரம் கொண்டு வந்து தரும் 
முல்லை அரும்பு 


தஞ்சாவூரில் உள்ள என் வீடு. 
ஒப்பந்தக்காரர் மூலம் கட்டிய 
 இந்த வீட்டில் 
புதுமனை புகு விழாவை
 4-2-2004அன்று நடத்தினேன் 

அறுபதாம் அகவை நிறைவு
 விழாவைக்
 கொண்டாடிய பஞ்நதிக்குளம் 
அங்காளபரமேசுவரி திருக்கோயில்























No comments:

Post a Comment