name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (26) :1980-1981 நிகழ்வுகள் - நாகையிலிருந்து சேலம் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (26) :1980-1981 நிகழ்வுகள் - நாகையிலிருந்து சேலம் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1980-1981 நிகழ்வுகள்.

(சுவடு.26) நாகையிலிருந்து  சேலம் ! 

----------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் 1977 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் நாள் ஆட்சிக்கு வந்த ம.கோ.இரா. தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆட்சி புரிய முடிய வில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவரது ஆட்சி 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கலைக்கப்பட்டது !

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி 17-02-1980 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாவது முறையாக நடைமுறைக்கு வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி 09-06-1980 வரை 4 மாதங்கள் நீடித்தது. நடுவணரசின் கையில் அகப்பட்ட தலையாட்டிப் பொம்மை ஆனது தமிழ்நாடு !

1980 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.கோ.இரா (M.G.R) கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சீயப் பொதுவுடைமைக் காட்சி, முன்னேற்றக் கட்சி (FORWARD BLOC) மற்றும் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு 129 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தி.மு. 37 இடங்களை மட்டுமே பெற முடிந்தது !

அரசியல் களநிலவரம் இவ்வாறு இருக்க, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த என் மாமனார் திரு.இரகுநாத பிள்ளைக்கு அறுபதாம் அகவை நிறைவு மணிவிழா 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் நாள் சேரன்குளத்தில் நடைபெற்றது. பொது வாழ்க்கையில் நாற்பது ஆண்டுகளைச் செலவிட்ட அவருக்கு ஊர்ப் பெரியவர்கள்,  உறவினர்கள், கட்சிக்காரர்கள் எனப் பெரிய கூட்டமே திரண்டு வந்து வாழ்த்துச் சொல்லியது !

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சொத்துச் சேர்த்து வைப்பதைவிட, மக்களின் அன்பைச் சேர்த்து வைப்பதே, அவனுக்கு என்றும் பயன்படும்; பாதுகாப்பாகவும் திகழும். இந்த அன்பு தான் திரு.இரகுநாத பிள்ளையைத் தொடர்ந்து 25 ஆண்டுகள் சேரன்குளம் ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்து வந்தது !

என் கடைசித் தங்கை சுமதிக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை 1980 ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 9  ஆம் நாள் பிறந்தது. அப்பொழுது நான் நாகப்பட்டினத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இக்குழந்தைக்கு நெடுமாறன் என்று பெயர் சூட்டினேன். ஆனால் இப்பெயர் காலப் போக்கில் மணிமாறன் என்று மாற்றம் அடைந்தது !

திரு.மணிமாறன், வளர்ந்து, பள்ளிப்படிப்பைக் கருப்பம்புலத்தில் முடித்து, நாகப்பட்டினம், வலிவலம் தேசிகர் பல்தொழிற் பயிலகத்தில் (POLYTECHNIC) குளிர்பதனம் & காற்றுப்பதனப் பிரிவில் (AIR-CONDITIONING AND REFREGERATION) பட்டயப் படிப்பை (DIPLOMA) முடித்தார் !

அப்போது நான் ஓசூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஓசூரில் இரண்டொரு நிறுவனங்களில் சொல்லி திரு.மணிமாறனுக்கு களப்பயிற்சிக்கு (FIELD EXPERIENCE) ஏற்பாடு செய்தேன். வெளிநாடு செல்வதற்கான கடவுச் சீட்டுக்கும் (PASS PORT) வழிவகை செய்தேன்.  பிறகு, திரு.மணிமாறன் தன் சொந்த முயற்சியில், பெங்களூர், கோவா என்று சில இடங்களில் பணியாற்றிவிட்டு,  இப்பொழுது அபுதாபியில் உயர் பதவியில் இருந்து வருகிறார் !

எனது மைத்துனர்களில் மூன்றாவதாக இடம் பெறுபவர் திரு.பாஸ்கரன். இருப்பூர்தித் துறையில் (RAILWAY) நிலைய அலுவலராகப்  (STATION MASTER) கர்நாடக  மாநிலத்தில்கதக்என்னுமிடத்தில் பணிபுரிந்து வந்தார் !

அவருக்கும் திருத்துறைப் பூண்டியை அடுத்த தரகமருதூர் திரு.நாராயணபிள்ளையின் மகள் பிரேமாவுக்கும் 1981 ஆம் ஆண்டு, மே மாதம், 25 ஆம் நாள் திருத்துறைப்பூண்டி மங்களநாயகி திருமண மண்டகத்தில் மணவிழா நடைபெற்றது. திரு.பாஸ்கரன் இருப்பூர்தித் துறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்று இப்போது மகன்கள் மற்றும் பெயரன் பெயர்த்திகளுடன் திருவாரூரில் வாழ்ந்து வருகிறார் !

இன்னொரு குறிப்பிடத் தக்க திருமணம் சேரன்குளத்தில் என் மாமனார் வீட்டிற்குப் பக்கத்து வீட்டுக்காரரான திரு.தெட்சணாமூர்த்தி என்பவரின் தலைமகன் திரு.சண்முகசுந்தரம் – செல்வி.விசயலட்சுமி திருமணம் ஆகும். இவர்கள் திருமணம் 1981 -ஆம் ஆண்டு சூன் மாதம் 22 -ஆம் நாள்நடைபெற்றது. வாழ்க்கையில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து இன்னல்கள் பலவற்றைச் சந்தித்தவர் இவர் ! என் மாமனார் வீட்டில் இவரும் ஒரு செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர் !

எனக்கு மைத்துனர் உறவு முறையுள்ள திரு.இரா.சுசீந்திரன் என்னும் பொறியாளரால் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டு, அவர் உதவியால் ஒரு பணியில் அமர்ந்த திரு.சண்முகசுந்தரம், தனது கடின உழைப்பாலும், உதவி செய்தவர்கள்பால் கொண்டிருந்த பற்றுறுதியாலும், வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து, இன்று மகன், மகள், பெயரன், பெயர்த்தி, சொந்த வீடு, சீருந்து  என்று வசதியாக வாழ்ந்து வருகிறார். உழைத்தால் வாழ்க்கையில் உயரலாம் என்பதற்கு எடுத்துக் காட்டு திரு.சண்முக சுந்தரம் !

எனது வாழ்க்கைச் சக்கரம் இவ்வாறு நாகப்படினத்தைச் சுற்றிக் கடந்த ஆறாண்டுகளாகச்  சுழன்று கொண்டிருந்த நிலையில், இடமாற்றலை எதிர்கொள்ள வேண்டி வந்தது. நான் விருப்பம் தெரிவித்ததற்கு இணங்க சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். என் இடத்திற்கு மாற்றலாகி வந்த திரு.ஆர்.இராமதாஸ் என்பவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, 1981 ஆம் ஆண்டு சூன் மாதம்  25 ஆம் நாள் நாகையிலிருந்து விடுவிக்கப் பெற்று, சேலத்தில் சூலை 15 ஆம் நாள் பணியில் சேர்ந்தேன் !

சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராக இருந்த  திரு.இப்ராகிம் என்பவரிடமிருந்து பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டு, அங்கும் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்கினேன். பண்டகத்தில் பொருள்களை எப்படி வகைப்படுத்தி வைக்க வேண்டும், கணக்குகளை எப்படிப் பேண வேண்டும் என்பதை செயற்படுத்திக் காட்டினேன் !

தமிழ்நாடெங்கும் உள்ள அத்துணைப் பயிற்சி நிலையங்களிலும், மிகச் சிறப்பாகப் பேணப்படும் பண்டகம் சேலம் என்பதையும், மிகச் சிறந்த பண்டகக் காப்பாளர் வேதரெத்தினம் என்பதையும் உயர்நிலை, இடைநிலை, கீழ்நிலை அலுவலர்கள் அத்துணை பேரும் ஒருமனதாகப் பாராட்டும் வகையில் எனது செயல்பாடுகள் அமைந்திருந்தன !

சேலத்தில் நான் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றுகையில், கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த  திரு.இரா..தங்கவேலு என்பவர் முதல்வராக (PRINCIPAL) இருந்தார். தமிழார்வம் மிக்கவர். திறமைசாலிகளை வெளிப்படையாகப் பாராட்டுவார் !

அவரிடம் ஒரு கருத்தை முன்வைத்தேன். தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஒவ்வொரு அலுவலக அறைக்கும், பணிமனைக்கும் தமிழில் பெயர்ப்பலகை வைக்கலாமென்பதே என்னுடைய முன்மொழிவு !

என் கருத்தைப் பாராட்டிய முதல்வர், எந்திரங்கள் பேணற்பிரிவு மேற்பார்வை அலுவலர்  நாகர்கோயிலைச் சேர்ந்த திரு.எம்.கிருட்டிணன் என்பவரை அழைத்து, உரிய கருத்துரைகளை வழங்கிப் பணியைத் தொடங்கச் செய்தார் !

எதையும் திறமையாகவும் விரைவாகவும் செய்து முடிக்கும் வல்லமையுள்ள திரு.கிருட்டிணன், ஒரே மாதத்தில், இரும்புத் தகட்டில் ஈர்மம் (PAINT) கொண்டு எழுதிய பெயர்ப் பலகைகளை அணியம் செய்து உரிய இடங்ககளில்  திருகாணி கொண்டு பொருத்தியும் வைத்துவிட்டார் !

இரண்டு பணிமனைகளுக்கும் பாரதியார் பணிமனை, பாவேந்தர் பணிமனை, எனப் பெயரிடப்பட்டன. கணக்கு வகுப்பறைகள் மூன்றுக்கு வெண்மணியகம், செம்மணியகம், பொன்மணியகம் எனப் பெயர்கள் சூட்டப்பட்டன. வரைபட அறைகளுக்கு சேரன் இல்லம், செழியன் இல்லம், செம்பியன் இல்லம் எனப் பெயர்ப் பலகைகள் பொருத்தப்பட்டன.  தெரிவியல் (THEORY) வகுப்பறைகளுக்கு அல்லிக் குடில், ஆம்பற்குடில், குவளைக் குடில், குறிஞ்சிக் குடில், மல்லிகைக் குடில், முல்லைக்குடில், முளரிக் குடில், என மலர்களின்  பெயர்கள் சூட்டப்பட்டன !

அலுவலக அறைகளுக்கு கபிலர் மனை, பரணர் மனை, வள்ளுவர் மனை, ஔவை மனை, புகழேந்தி மனை எனத் தமிழ்ப் புலவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன. விருந்தினர்கள் தங்கும் அறையில்துச்சில்என்று பெயர்ப் பலகை  வைக்கப்பட்டது ! 38 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வல்லவா ? சூட்டப்பெற்ற பிற பெயர்கள் நினைவுக்கு வரவில்லை !

அப்போது சேலம் பகுதியைச் சேர்ந்த திரு.மயில்சாமி என்பவர், தமிழ்நாடு சட்ட மன்ற மேலவையில் உறுப்பினராக (M.L.C) இருந்தார். அவர், ஒரு முறை, தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்த போது, சூட்டப் பெற்றுள்ள தமிழ்ப் பெயர்களையெல்லாம் பார்த்துவிட்டு, முதல்வரிடம் சென்று விதப்புடன் பாராட்டினார். அவர் செல்லும் பிற இடங்களிலும், இதைப் பற்றிக் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் !

சேலத்தில் நான் பணியேற்ற மறுநாள் (16-07-1981) தொடங்கி  சில நாள்கள் திரு.அழகர்சாமி என்னும் இளநிலை உதவியாளர் அறையில் தங்கி இருந்தேன். பிறகு சேலம் அய்யந் திருமாளிகையை அடுத்துள்ள பள்ளக்காடு என்னுமிடத்தில் திரு.கே.ஆர்.சீனிவாசன் என்னும் துணை வட்டாட்சியரின் வீட்டில் வாடகைக்கு இருந்தேன். வாடகை மாதம் உருபா நுறு !

1981 ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 24 ஆம் நாள் நாகையிலிருந்து அழைத்து வரப்பட்ட என் குடும்பத்தினருக்கு இந்த வீடு மிகவும் பிடித்துப் போயிற்று.   திரு.சீனிவாசன், அவரது மனைவி, மகள் காஞ்சனா, மகன் சரவணன் ஆகியோர் எங்கள் மீது  மிக்க அன்பு காட்டினர் !

இந்த வீட்டில் என் மனைவி, அன்னை, மகன், மகள் ஆகியோருடன் தங்கியிருந்த எங்களுக்கு, வெளியூரில் இருக்கிறோம் என்னும் உணர்வே தோன்றாத அளவுக்குத் திரு.சீனிவாசன் குடும்பத்தினர் எங்களுடன் பழகி வந்தனர் ! சேலம் மக்களின் அன்புக்கு அளவே இல்லை என்பதில் எனக்கு  உறுதியான நம்பிக்கை இன்னும் உண்டு !

-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051,விடை (வைகாசி),02]
{15-05-2020}
----------------------------------------------------------------------------------------------
இரகுநாத பிள்ளை - செண்பகலட்சுமி:
 மணிவிழா 20-02-1980.

திரு.இரகுநாத பிள்ளை 
மணிவிழாவன்று எடுத்த படம். 
திரு. சண்முகசுந்தரம் - விஜயலட்சுமி
 திருமணம் : 22-06-1981


திரு.இரா.அ.தங்கவேலு, B.E.,M.B.A., B.G.L., 
முதல்வர், சேலம் அ.தொ.ப.நிலையம்.












No comments:

Post a Comment