name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (20) : 1973-1974 நிகழ்வுகள் - ஆட்டையாம்பட்டி !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (20) : 1973-1974 நிகழ்வுகள் - ஆட்டையாம்பட்டி !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் - 1973-1974 நிகழ்வுகள்

                                   (சுவடு.20) ஆட்டையாம் பட்டி!

---------------------------------------------------------------------------------------------

என் பெரிய மாமனார் திரு.இராமசாமிப் பிள்ளையின் ஐந்தாவது பிள்ளை திரு.இரா.சுசீந்திரன் – செல்வி.சோ.இந்திரா திருமணம் 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள் திருவாரூர் கமலாலயம் வடகரையில் உள்ள  திரு.சோமசுந்தரம் பிள்ளையின் இல்லத்தில் நடைபெற்றது !

அப்போது நான் திருவெறும்பூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணியாற்றி வந்தேன். திருமணத்திற்கு நானும் என் மனைவி கலைச் செல்வியும் சென்றிருந்தோம் !      

திரு.சுசீந்திரன் சென்னை கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்தவர்.  மடலாட்ட வீரர் (CRICKET PLAYER) திரு.வெங்கட்ராகவனின் வகுப்புத் தோழர். பெங்களூரில் உள்ள  மத்திய மின்னாற்றல் ஆய்வு மையத்தில் (CENTRAL POWER RESEARCH INSTITUTE) பணியில் சேர்ந்து, கூடுதல் இயக்குநர் பதவி வரை உயர்வடைந்தவர். நாங்கள் இருவரும் பணிபுரியும் இடங்களால் தொலைவிலேயே இருந்து விட்டமையால், அதிகத் தொடர்பு இல்லாமாற் போயிற்று !

திருவெறும்பூரில் நான் குடியிருந்த போது அத்தான் (மனைவியின் அண்ணன்) திரு.மகாதேவன் 1973 ஆம் ஆண்டு ஆறு மாத காலம் எங்களுடன் வந்து தங்கி இருந்து, தட்டச்சுப் பயிலகத்திற்குச் சென்று தட்டச்சுப் பழகி வந்தார். ஆங்கிலத்தில் கீழ்நிலைத் தேர்வு எழுதிய பின் அவர் ஊருக்குச் சென்றுவிட்டார் !

கடிநெல்வயலில் உடல் நலிவுற்றிருந்த பெரியப்பா திரு.அருணாச்சலத்  தேவரை நான் 1973 முற்பகுதியில் அழைத்து வந்து  இரண்டு மாதங்கள் எங்களுடன் தங்க வைத்திருந்து, உடல் நன்கு தேறியதும் கடிநெல்வயலுக்கு அழைத்துச் சென்று விட்டு வந்தேன் !  இடமாற்றமும், அன்பான கவனிப்பும் அவரது உடல்நிலை விரைந்து முன்னேற்றம் அடைய உதவியது !

என் மனைவி கலைச் செல்விக்குப் பாட்டி முறையுள்ளகோட்டூர் ஆத்தாவை அழைத்து வந்து 15 நாள்கள் வீட்டில் தங்க வைத்து, திருச்சி, திருவரங்கம், திருவானைக்கா, வயலூர், திருவெறும்பூர் கோயில்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று காட்டி வந்தோம். இந்தப் பாட்டி உயிருடன் இருந்த வரை, செல்லுமிடமெல்லாம், எங்கள் புகழ் பாடி வந்த நிகழ்வை இன்றும் கூட மறக்கமுடியவில்லை !

எங்கள் இல்லற வாழ்வு இவ்வாறு பல்விதமாசுவையுடன் சென்று கொண்டிருந்தது. இனிமை தொடர்ந்தால் தெவிட்டிப் போகும் என்றோ என்னவோ, ஒரு துயர நிகழ்வும் இவற்றினூடே நிகழ்ந்தது !

என் இணைமான் (சகலர்) திரு..மா.சுப்ரமணியன் – திருமதி.காஞ்சனமாலா இணையரின் பெண் குழந்தையான வான்மதி 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் குழந்தைப் பருவத்திலேயே மறைந்து போயிற்று ! நாங்கள் செல்வதற்குள் இறந்த குழந்தையை அடக்கம் செய்துவிட்டனர் !

திருவெறும்பூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தலைமைப் பயிற்றுநராகப் (FOREMAN INSTRUCTOR)  பணி புரிந்து வந்த திரு.எஸ்.கந்தசாமி – செல்வி.சந்திரா திருமணம் சேலம் அருகில் உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் 1974 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் நாள் நடைபெற்றது !

திருமணத்தில் கலந்து கொள்வதற்காகச் சேலம் புறப்பட்ட நான், அழைப்பிதழை எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். அழைப்பிதழ் தந்தவுடன் ஒருமுறை படித்துப் பார்த்ததில் மனதில் பதிவாகி இருந்த செய்திகளின் துணை கொண்டு பேருந்தில் ஏறிப் புறப்பட்டு விட்டேன் !

பேருந்தில் செல்கையில், நடத்துநரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு, செய்தியைச் சொன்னதன் விளைவாக  குறிப்பிட்ட சந்தியூர் ஆட்டையாம் பட்டியில் இரவு 9-00 மணி வாக்கில் இறக்கிவிட்டார்.  சுற்றிலும் மலைகள். சாலையில் தெருவிளக்குகள்  எரியவில்லை. ஆள் நடமாட்டமும்   துப்புரவாக இல்லை. அமாவாசை இருட்டு  என்பார்களே, அது போன்றகும்மிருட்டு” ! திருமண வீட்டுக்கு வழி கேட்டறியக் கூட யாருமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல்  அப்படியே பத்து நிமிட நேரம் நின்று கொண்டிருந்தேன் !

இரவு 9-30 இருக்கும். யாரோ ஒருவர் தலையில் சுமையுடன் வந்தார். அவரைக் கண்டதும் தெய்வமே நேரில் வந்தது போன்று உணர்ந்தேன். வந்தவரிடம் நிலைமையைச் சொன்னேன். தான் அந்தத் திருமண வீடு வழியாகத்தான் செல்வதாகவும், தன்னுடன் வருமாறும் கேட்டுக் கொண்டார் !

ஊர்ப்புறத்து ஆள்கள்கள்ளம் கவடற்றவர்கள்என்று கேள்விப் பட்டதுண்டு. அன்று தான் அதை நேரில் உணர்ந்தேன். என்னை அழைத்துச் சென்றவர், திருமண வீட்டிற்குச் சென்று, மாப்பிள்ளையை அழைத்து, அவரிடம் என்னை ஒப்படைத்துவிட்டு அப்புறம் தான், தன் வீடு நோக்கி நடந்தார். நாட்டில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது எத்துணை உண்மை !

திருமண வீட்டில் திருவெறும்பூர் பயிற்சி நிலையப் பொருத்தியல் பிரிவுப்  பயிற்றுநர் திரு.இரக்கதாஸ் என்வரைச் சந்தித்தேன். அவருடன் சேர்ந்து இருவரும் ஏற்காடு செல்லத் திட்டமிட்டோம். சேலம் பேருந்து நிலையம் சென்றோம் !

ஏற்காடு செல்லக் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் ஏற வாய்ப்பே இல்லை. நாங்கள் இருவரும் இதற்கு முன் ஏற்காடு சென்றதே இல்லை ! ஏற்காடு செல்லும் தடம் பற்றிய புரிதல் இருவருக்குமே இல்லை. எனவே பொறிச் சிவிகையில் (AUTO RIKSHA) செல்லலாமா என்று இரக்கதாஸ் என்னிடம் கேட்டார். நான் ஒப்புதல் அளித்தேன் !

அவர் பொறிச் சிவிகை ஓட்டுநர்களிடம் சென்று கேட்டார். அவர்கள் இவரை ஒருமாதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். அவருக்கு வெட்கமாகப் போய்விட்டது. இப்பொழுது என் முறை. நான் சென்று கேட்கத் தொடங்கினேன். எனக்கும் அதே நிலை தான் !

எங்கள் நல்ல நேரம். புதுக்கோட்டையில் பொருத்துநர் பிரிவு மேற்பார்வைப் பயிற்றுநராக இருந்த (தங்கப்பல்) திரு.ஜி.நடேசன் என்பவரை அங்கு சந்தித்தோம். அவருக்குப் பழக்கமான பேருந்து வலவர் (BUS DRIVER) ஒருவரின் உதவியால் பேருந்தில் ஏறிவிட்டோம். நின்று கொண்டே பயணம் !

மலைத் தடத்தில் பேருந்து ஏறத் தொடங்கியது.  30 பாகை ஏற்றக் கோணத்தில் பேருந்து உறுமிக் கொண்டு ஏறியது. பேருந்தின் வெளியே பார்த்தேன். வலப் பக்கம் மலை; இடப் பக்கம் கிடு கிடு பள்ளம். மனதில் பயம் பற்றத் தொடங்கியது. திரு.இரக்கதாசுக்கும் இதே நிலை தான். தவறு செய்துவிட்டோம்; இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கவே கூடாது என்று மனதில் தோன்றியது. 20 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி ஒருவாறாகப் பேருந்து ஏற்காடு பேருந்து நிலையத்தில் வந்து நின்றது !

பேருந்து வலவர் எங்களிடம், நான்கொட்டச்சேடுசெல்கிறேன். ஒருமணி நேரத்தில் திரும்பி வருவேன். நீங்கள் சுற்றிப் பார்த்துவிட்டு இங்கு வந்து அணியமாக இருங்கள். என் பேருந்திலேயே ஏற்றிச்  சென்று சேலத்தில் இறக்கி விட்டு விடுகிறேன். இங்கும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. என் வண்டியிலேயே வந்து விடுங்கள்என்று சொல்லிவிட்டுக்கொட்டச்சேடுசென்று விட்டார் !

ஒருமணி நேரத்திற்குள் என்னென்ன பார்க்க முடியும்? பக்கத்தில் இருந்த கடைக் காரரிடம் கேட்டோம். “லேடீஸ் சீட்பாருங்கள் என்றார். “லேடீஸ் சீட்என்றால் என்ன எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூன்று நான்கு பேரிடம் கேட்ட பின்பு தான்லேடீஸ் சீட்என்பது ஒரு இடம் என்பது எங்களுக்கு விளங்கியது. மந்திரிகுமாரி திரைப்படத்தில் கயவனான தன் காதலனை மலைமுகட்டிலிருந்து அமைச்சரின் மகள் (மந்திரி குமாரி) கிடு கிடு பள்ளத்திற்குள் தள்ளி விடுவாளே அந்த இடத்திற்குத் தான்லேடீஸ் சீட்என்று பெயர் சூட்டி இருந்தார்கள் !

ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து நானும் இரக்கதாசும் ஓடினோம், ஓடினோம், ஓடினோம் ! ஒருவழியாக, நுரையீரல் ஏறி இறங்கி ஏற, நெஞ்சம் பட படவென்று அடித்துக் கொள்ள, “லேடீஸ் சீட்டை அடைந்தோம். ஐந்து நிமிடங்கள் மலை முகட்டிலிருந்து  360 பாகைகள் பார்வையைச் சுழலவிட்ட பின், திரும்பவும், பேருந்து நிலையம் நோக்கி ஓட்டத்தைத்  தொடங்கினோம் ! 

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நாங்கள் ஓடி வந்தாலும் கூடக் குறிப்பிட்டப் பேருந்தைத் தவற விட்டுவிட்டோம். என்ன செய்வது ? வந்த பேருந்துகளில் எங்களுக்கு இடம் கிடைக்க வில்லை. இரண்டு மணி நேரத் தவிப்பிற்குப் பின் ஒருவழியாக ஒரு பேருந்தில் இடம் பிடித்து சேலம் வந்தடைந்தோம். நாற்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வு. இன்னும் மறக்க முடியவில்லை. இனிமேலும் மறக்க முடியாத துய்ப்பு (அனுபவம்) !

இதே 1974 ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள் பெரியப்பா திரு.அருணாச்சல தேவர் இயற்கை எய்தினார். 1973 ஆம் ஆண்டு திருவெறும்பூரில் எங்களுடன் தங்கியிருந்த பெரியப்பா  1974, ஏப்பிரல் 18 -இல் எங்களுடன் இல்லை. ”நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகுஎன்னும் வள்ளுவரின் வாக்கு எத்துணை உண்மை !

----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம்(சித்திரை),26]
{09-05-2020}
----------------------------------------------------------------------------------------------
ஆட்டையாம்பட்டி


சீ.அருணாச்சல தேவர்
ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகள்
 ஏற்காடு






No comments:

Post a Comment