name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (02) :1944 - 49 நிகழ்வுகள் - பெயர் சூட்டு விழா !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Friday, March 27, 2020

காலச் சுவடுகள் (02) :1944 - 49 நிகழ்வுகள் - பெயர் சூட்டு விழா !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு. வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1944 -1949 நிகழ்வுகள் !

(சுவடு.02) பெயர் சூட்டு விழா !


--------------------------------------------------------------------------------------
பிறந்த குழந்தை தங்குமா, தங்காதா என்னும் கவலைகளுக்கு இடையே பதினைந்து நாள்கள் ஓடி மறைந்தன ! இன்றுக் காப்பணி விழாஅதாவது பெயர் சூட்டு விழா ! வீட்டு முற்றத்தில் சாணமிட்டு மெழுகி, மாக்கோலம் போட்டு, நாற்புறமும் கட்டம் கட்டி அழகுபடுத்தி வைத்திருந்தார் வடக்குப் பண்ணைச் சின்னம்மா பஞ்சவர்ணம் அம்மையார் !

அதில், ஐந்து முகக் குத்துவிளக்குகளில் எண்ணெயும் திரியும் இட்டு, ஏற்றி வைத்தார் கீழண்டை வீட்டுப் பெரியம்மா  உரூப சௌந்தரி அம்மையார் !

காப்பரிசிக் கிளறி, ஈயம் பூசியப் பித்தளைக் கலனில் நிரப்பி மூடியிட்டு முற்றத்தில் கொண்டு வந்து வைத்தார் நடுப் பண்ணைப் பெரியம்மா வீரம்மாள் அம்மையார் !

குழந்தையின் கைகளில் வேப்பிலைக் காப்புடன் வெள்ளிக் காப்பு, தங்கக் காப்புகள் அணிவிக்கப் பெற்றன. புது முறத்தில் பட்டுத் துணியை விரித்து அதில் குழந்தையைப் படுக்க வைத்து, தூக்கி வந்தார் தெற்குப் பண்ணைப் பெரியம்மா மாரிமுத்து அம்மையார் !

பெரியப்பா அருணாச்சலத் தேவர் கேட்டார்,” பண்டரிநாதன் ! நீதான் காப்பு வாங்கி வந்தாயா ? பவுன் என்ன விலை ?” “ஒரு பவுன் விலை உருபா 28  அத்தான்” மாமா பண்டரிநாதன் சொன்னார் ! (அடேங்கப்பா ! இன்றைய  (21-04-2020) விலை ஒரு பவுன் விலை உருபா 32,344. எழுபத்தாறு ஆண்டுகளில் 1155 மடங்கு விலை உயர்வு !)

முறத்துடன் குழந்தையைத் தூக்கி, விளக்கிற்கும் விண்ணுக்கும் காட்டி காப்புச் சுற்றத் தொடங்கினார் சின்னப் பண்ணைப் பொன்னுக்கண்ணு ஆச்சி ! தாய்க்குலத்தினர் ஒவ்வொருவராக வந்து சடங்குகளைச் செய்ததுடன், குழந்தையின் காதில் "செல்வச் சீமானாக அரசனைப் போல் வாழ்வாயாக “என்று மெல்ல முணுமுணுத்து விட்டுச்  சென்றனர் !   

இறுதியாக வந்து காப்பணி விழாச் சடங்குகளைக் செய்து, குழந்தையின் காதில், “வேதரெத்தினம்என்ற பெயரை மூன்று முறைச் சொல்லி, முறத்துடன் குழந்தையை வீட்டிற்குள் கொண்டு போனார், தாயார் சாரதா அம்மையார் !

திண்ணையில் (PIAL) அமர்ந்திருந்த ஆடவர், கூடத்தில் (HALL) அமர்ந்திருந்த மகளிர் அனைவரும் குழந்தையிடம் வந்து, வாழ்த்துச் சொல்லி, கைவிரல்களைப் பிரித்து அதற்குள் சில பணத் தாள்களையும் திணித்து வாழ்த்திச் சென்றனர் ! வருகை தந்திருந்த அனைவருக்கும், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றுடன் ஒரு சுருள் காப்பரிசிப் பொட்டணமும் (HAND MADE CONICAL PACKET) வழங்கப்பட்டன !

வருகை தந்திருந்தவர்களின் வாழ்த்துக்கு வலிமை மிகுதி  போலும் ! அன்றைய குழந்தையான வேதரெத்தினம் இன்று 76 அகவை நிறையும் இவ்வேளையில் இக்கட்டுரை வாயிலாகத் தன் வரலாற்றை வடித்து உங்களுக்கு வழங்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது ! மனமார அளிக்கின்ற வாழ்த்துகளுக்கு வலிமை நிரம்பவே இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை !


மாமா பண்டரிநாதன் என் தந்தையாரிடம் கேட்டார், “இந்த ஆண்டு வேளாண்மை எப்படி அத்தான் ? என்ன நெல் பயிர் பண்ணினீர்கள் ?”

கட்டைக் கூம்பாளை (நெல்) 15 மா போட்டிருந்தேன்; இன்னொரு 15 மாவில் பெருங் கூம்பாளையும்  5 மாவில் வெள்ளைக் கொடை வாளையும் போட்டிருந்தேன். விளைச்சல் நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் 500 கலம்  கண்டுமுதல் ஆயிற்று !”


( நிலக் கணக்கு:- 1 குழி = 144 சதுர அடி; 100 குழி = 1 மா ; {3 மா = 1 ஏக்கர்} ; 20 மா = 1 வேலி; இது தான் அக்காலத்திய நிலக் கணக்கு ; நெல் கணக்கு:-  4 படி = 1 மரக்கால் ; 1 மரக்கால் = குறுணி ; 2 மரக்கால் = பதக்கு ; 3 மரக்கால் = முக்குறுணி; 12 மரக்கால் = 1 கலம் ; 2 கலம் = 1 மூட்டை; இக்காலத்தியக் கணக்குப்படி 60 கிலோ = 1 மூட்டை)

பத்து நாள்களுக்குப் பிறகு ஒரு முற்பகல் நேரம் ! மாநிற மேனி ! மயக்கும் புன்னகை ! குழந்தை வேதரெத்தினத்தை அள்ளி அணைத்து மடியில் கிடத்திக் கொண்டு, தகட்டூர் ஆதியங்காடு, திரு.வெங்கடாசலத் தேவர் மனைவி திருமதி.முல்லையம்பாள் ஆச்சி, சாரதா அம்மையாரைப் பார்த்துக் கேட்டார், ”என்ன சாரதா, குழந்தைக்குவேதரெத்தினம்என்று பெயர் வைத்திருக்கிறாய் ?”

குழந்தையின் அப்பா, பெரியப்பா, சிற்றப்பா அனைவருமாகச் சேர்ந்து கலந்து உரையாடி விடுதலைப் போராட்ட ஈகி (தியாகி), வேதாரணியம் திரு.வேதரெத்தினம் பிள்ளையின் பெயரைச் சூட்டலாம் என்பதாக முடிவு செய்தார்கள்”, என்றார் சாரதா அம்மையார் !

அப்படியா ? நல்ல பெயர் தான் ! இவனும் அவரைப் போல் பலரும் போற்றப் புகழுடன் வாழ்வான் என்று சொல்லி, தன் வாழ்த்துகளையும் அப்பொழுதே பதிவு செய்தார்  திருமதி முல்லையம்பாள் பெரியம்மா !

குழந்தை வளர்ந்து, நடந்து, ஓடவும் தொடங்கி விட்டது. இதற்கிடையில் மூன்றாண்டுகள் உருண்டோடிவிட்டன. குழந்தையின்  பெரியப்பா திரு.காசிநாத தேவர் (திரு.இருளப்ப தேவரின் தந்தை) திருத்துறைப் பூண்டியை அடுத்த வேப்பஞ்சேரிக்குத் தன் வயல்களின் அறுவடைப் பணிகளுக்காகச் சென்றிருந்தார். சென்ற இடத்தில் கொள்ளை நோயான வாந்திபேதி (CHOLEARA) அவரைத் தாக்கியது. வேப்பஞ்சேரியிலிருந்து  திருத்துறைப்பூண்டி வந்து, அங்கிருந்து இருப்பூர்தி (TRAIN) மூலம் வேதாரணியத்திற்கு அவரை அழைத்து வந்தனர். அங்கிருந்து மாட்டு வண்டி மூலம் கடிநெல்வயலுக்கு இட்டு வந்தனர் !

ஊரை நெருங்க நெருங்க அவருக்கு நோயின் கடுமை அதிகமாகி, தன் நினைவை இழக்கலானார். அகத்தியன்பள்ளி வழியாகக் கடிநெல்வயலுக்கு வந்த மாட்டு வண்டி, ஆலடிக்குளத்திற்கு வடக்கே, பிற்காலத்தில் திரு.வடிவேலு என்னும் நாவிதர் குடியிருந்த மனை வரை வந்து நின்றது. அங்கிருந்து அவரைக் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து  வீட்டிற்குத் தூக்கி வந்தனர். பின்னர் அவர் இறந்து போனார் !

ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வல்லவா ? அவரைக் கயிற்றுக் கட்டிலில் வைத்துத் தூக்கி வந்ததும், அவர் இறந்ததும் மெலிதாக  நினைவில் இருக்கிறது. ஆனால் அவர் முகம் மூடுபனியில் நடந்து வரும் மனிதனின் முகம்  போல ஓரளவு நினைவில் இருக்கிறதே தவிர முழுமையாஎன் நினைவுக்கு வரமறுக்கிறது ! 

பெரியப்பா இறந்த பிறகு என்று நினைக்கிறேன்;  அவர்கள் குடும்பத்திற்குத் தனியாக வீடு கட்டத்  தென்புறமாய்  மனை போட்டார்கள்.  மனையடிக் கலைக்கு ஏற்ப அளந்து வேப்பமுளை அடித்திருந்தார்கள் !

நான்கு அகவை ஆன நான் அங்கு விளையாடச் சென்றபோது, காலில் இடறுவதைப்போல், குச்சிகள் இருக்கின்றனவே என்று எண்ணினேனோ என்னவோ அவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டு வந்துவிட்டேன் !

இதை ஒரு தீயபேறாக (அபசகுனம்) எண்ணாமல், விளையாட்டு உணர்வுடன் (SENSE OF SPOTRS) அவர்கள் குடும்பத்தினர் எடுத்துக் கொண்டதை இன்றும் கூட நினைத்து நான் பெருமைப்படுகிறேன் !

1949 –ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பள்ளியில் சேர்க்கும் அகவை நெருங்கியது.  ஊரக (கிராமப்புற)  வழக்கப்படி விசய தசமி நாளன்று, பனையோலையில் அரிச்சுவடி எழுதி, பெரியோர்களின் வாழ்த்துகளுடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அரிச்சுவடியா ? அப்படியென்றால் என்ன ? வியப்பாக இருக்கிறதா ?

நிகழ்ச்சிக்குத்  தலைமைப் பொறுப்பு வகிப்பவர் சற்றேறக் குறைய 30 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் உள்ள காய்ந்த குருத்தோலையைத் திருத்தமாகச் சீவி,  கூரிய முனையுள்ள எழுத்தாணியால் அதில் எழுதத் தொடங்குவார் !

முதலில்அறிவோம் ! நன்றாக ! குரு வாழ்க ! குருவே துணை !” என்று சுவடியின் இடப்புறத்தில் ஒன்றன் கீழ்  ஒன்றாக எழுதுவார். இதையடுத்துஅரி ந, மோ, த், து, சி, ந், , ம்என்று எழுதுவார். இதற்குப் பொருள் என்னவென்று எனக்குத் தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம் !

இதை அடுத்து முதல் சுவடியில்  , , , , , , , , , , . , என்று 13 எழுத்துகளும் இடம்பெறும். இரண்டாவது சுவடியில்முதல்வரையிலான 18 உயிர் மெய்யெழுத்துகள் இடம்பெறும் !

அடித்தடுத்த சுவடிகளில் 18 மெய்யெழுத்துகளும், 1, 2, 3, எனத் தொடங்கும் 10 வரையிலான எண்களும் இடம்பெறும் ! இறுதியில் சுவடியில் மஞ்சள் தடவி, எழுத்துகள் தெளிவாகத் துலங்க வைப்பார்கள் !

அனைத்துச் சுவடிகளிலும் குறிப்பிட்ட இடத்தில் துளையிட்டு, எல்லாவற்றையும் ஒன்றாகஅதே நேரத்தில் தளர்வாகப் பனை அகணியால் பிணைத்து முடிச்சுப் போடுவார்கள் !

பிறகு நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பு வகிப்பவர், குழந்தையைத் தன் மடியில் அமர வைத்துக் கொண்டு  அரிச்சுவடியில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் குழந்தைக்குச் சொல்லிக் காட்டி அதன்படித் திருப்பிச் சொல்லச் செய்வார் !

நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் பெரியவர்கள் அனைவரும், ஒவ்வொருவராகக் குழந்தையைத் தங்களிடம் அழைத்து, மடியில் இருத்திக் கொண்டு, அரிச்சுவடியில் உள்ளவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள் !

அரிச்சுவடியைக் கைகளில் ஏந்திப் பள்ளிக்குச் சென்ற என்னுடன் என் தந்தையாரும் வந்திருந்தார். அந்தக் காலத்தில், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கப் பிறப்புச் சான்று (BIRTH CERTIFICATE) கேட்கும் வழக்கமில்லை. பெற்றோர் சொல்லும் நாளே பிறந்த நாளாகப் பள்ளி ஆவணங்களில் பதிவு செய்யப்படும் !

என் பிறந்த நாள் உண்மையில் 1944, ஏப்பிரல், 29.  ஆனால், பள்ளி ஆவணங்களில் அது 1943, ஏப்பிரல், 18 –ஆகப் பதிவாகியது. 12 மாதங்கள் முன் தள்ளிப் பிறந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதால், நான் அரசுப் பணியிலிருந்து 12 மாதங்கள்  முன்னதாகவே ஓய்வு பெற நேர்ந்தது ! என்னைப் போல், 58 அகவை அடையும் முன் பணியிலிருந்து ஓய்வு பெற்றோர் தமிழ் நாட்டில் எத்துணையோ  பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் !

பள்ளி ஆவணங்களில் என் பெயர் பதிவு செய்யப் பெற்ற பிறகு  கையில் ஓலைச் சுவடியுடன் அன்றாடம் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு நாள் அதை எங்கே வைத்தேன் என்பது எனக்கேத் தெரியவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை !

பிறகு என்ன ? அச்சிட்ட அரிச்சுவடி அட்டை ஒன்று புதிதாக வாங்கித் தரப்பட்டது. புதிய அட்டை, அதற்கொரு பை, துணைக்குச் சில பிள்ளைகள் - பள்ளிக்குச் செல்வதே மகிழ்ச்சியான பொழுது போக்காக இருந்தது ! இளம் அகவையில் எல்லாமே விளையாட்டுத் தானே !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
 [தி.பி: 2051, மேழம் (சித்திரை),08]
 {21-04-2020}
--------------------------------------------------------------------------------------
காப்பணி விழா
காப்பணி விழா


 அரிச்சுவடி எழுதல்

குருத்து தரும் பனை மரம்
தொட்டிலில் இடுதல்






No comments:

Post a Comment