தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் : 1966-1967 நிகழ்வுகள் !
(சுவடு.13) கடலூர்ப் பணிக்களரி!
------------------------------------------------------------------------------
எழுத்தர்
பணியிடத்தை (CLERK / JUNIOR ASSISTANT) விட, முதுநிலை ஆய்வாளர் (SENIOR INSPECTOR) பணியிடம் ஊதிய அளவில் உயர்ந்தது. எனவே கடலூர் சென்று பணியேற்க
மனமில்லாமல் காலம் தாழ்த்தி வந்தேன் !
இதற்கிடையில்
தேர்வாணைக் கழகம் எனக்கு விடுத்திருந்த கடிதம் ஒன்றில், தொகுதி III தொடர்பான நேர்முகத் தேர்வில் நான் தேர்ச்சி
பெறவில்லை எனவும், எனக்கு விருப்பமிருந்தால், வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையில் வெட்புலமாக (VACANT) இருக்கும் பண்டகக் காப்பாளர்
(STORE KEEPER) பணியிடத்திற்கு என்னைத் தேர்வு செய்ய எண்ணியிருப்பதாகவும் 1966 ஆம் ஆண்டு சனவரி மாதம்
28 ஆம் நாள் தெரிவித்திருந்தது !
பண்டகக்
காப்பாளர் (STORE KEEPER) பணியிடமானது, எழுத்தர் (CLERK / JUNIOR ASSISTANT) பணியிடத்தை விட
உயர் ஊதிய நிலை உடையது. எழுத்தர் பணியிட நிலைக்கு அடுத்த மேல் நிலை மதிப்பு
(HIGHER STATUS) உடையது. எனவே தேர்வாணைக் கழகத்திடமிருந்து
கடிதம் வந்தவுடன் அதற்கு என் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு, பணியமர்வு ஆணையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் !
இதற்கிடையில், நான் அன்னிலையாகப் பணிபுரிந்து வந்த கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் பொறுப்பிலிருந்து
என்னை விடுவித்து மாவட்டக் கூட்டுறவுத்
தணிக்கை அலுவலர் 1966 –ஆம் ஆண்டு,
பிப்ரவரி மாதம் 8 –ஆம் நாள் ஆணை வழங்கியிருந்தார்
!
பாதி
வழியில் இறக்கி விட்டுவிட்டுப் பறந்து செல்லும் பேருந்தினைப் போல, அன்னிலை அரசுப் பணி,
இடைவழியில் என்னைவிட்டு விலகிப் போயிற்று. எனவே,
கடலூரில் எனக்காகக் காத்திருக்கும் பேருந்தில் சென்று ஏறிக் கொள்வதா,
அல்லது பண்டகக் காப்பாளர் என்னும் பேருந்து அடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படும்
நிலையில், அதற்காகக் காத்திருப்பதா என்று என் மனம் சற்றுத் தடுமாறிப்
போயிற்று !
கானகத்தில்
இருக்கும் கதலியை (வாழை) விடக் கைகளில் இருக்கும் களாக் கனியே மேல் என்னும் சொலவடை எனக்குச்
சரியான வழியைக் காட்டியது. கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் நாள் சென்று எழுத்தர்
பணியிடத்தில் இணைந்தேன் ! அப்போது திரு.சி.எல்.இராமகிருட்டிணன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். திரு.வெங்கடாசலம் மேலாளர் !
காவல்
துறையில் பணிபுரியும் காவலர் போன்ற அலுவலர்களுக்கு வீட்டு வாடகைத் தொகை ஒப்பளிக்கும்
கோப்புகளைப் பேணும் பணிப்பொறுப்பு இந்த அலுவலகத்தில் எனக்குத் தரப்பட்டிருந்தது. அருகில் இருந்த முன்மை அலுவலர்கள் (SENIORS) அப்போது
எனக்குச் சில அறிவுரைகளை வழங்கினர் !
அவர்கள்
சொன்ன முதல் அறிவுரை (01) இயன்ற விரைவில் வேறு வேலையைத்
தேடிக் கொள்ளுங்கள். இந்தத் துறையில் பதவி உயர்வு வாய்ப்பே கிடையாது.
இறுதி வரை நீங்கள் எழுத்தராகவே (இளநிலை உதவியாளர்)
இங்கு காலம் கழிக்க வேண்டியிருக்கும். (02) காவலர்,
தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர், யார் வந்தாலும், அவர்களை நிற்க வைத்தே பேச வேண்டும்
! அமர்வதற்கு இடம் தரக்கூடாது !
இந்த
அறிவுரைகள் எனக்கு முற்றிலும் புதிய துய்ப்பைத் (அனுபவத்தை) தந்தது. பரமசிவன்
கழுத்திலிருக்கும் பாம்பை நினைத்துக்கொண்டேன். அதுபோன்று,
இந்த அலுவலர்கள் வந்து என்னைப் பார்க்கையில், விரைப்பாக
நின்று, கையை உயர்த்தி வலப்புற நெற்றியில் வைத்து வணக்கம் சொன்னதும் புதுமையாக இருந்தது
! இந்த உலகம் தான் எத்துணை விந்தைகள் நிறைந்தனவாக இருக்கிறது
!
நான்
வைத்திருந்த உடைப் பேழை (SUIT CASE) பழுதுற்று இருந்தது.
அதைக் கொண்டு சென்று ஒரு கடையில் சீரமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.
அதற்குக் கூலியாக மூன்று உருபா பேசி, கடைக்காரர்
வேலையைத் தொடங்கினார். வேலையைச் செய்துகொண்டே, என்னை பற்றி உசாவி அறிந்தார் !
இறுதியில், பணியை முடித்து உடைப் பேழையை என்னிடம் தரும்போது, மூன்று
உருபாவை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.
அதற்கு அவர் சொன்ன காரணம், “ஐயா, நீங்கள் பெரிய இடத்தில் வேலை செய்கிறீர்கள். உங்களிடம்
நான் காசு வாங்கக் கூடாது” !
காவல்
துறையைப் பற்றிய அச்சம் மக்களிடையே அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது; என்றும் இருக்கும் போலும்
!
கடலூரில்
நான் பணியில் சேர்ந்த மூன்றாம் நாளே, தேர்வாணைக் கழக ஆணை பற்றிய செய்தி
எனக்குக் கிடைத்துவிட்டது. . வேலை வாய்ப்புத் துறையின் பயிற்சிப்
பிரிவில் பண்டகக் காப்பாளராகப்
பணியமர்த்தம் செய்திட என் பெயரைப் பரிந்துரைத்து, தேர்வாணைக்கழக
அலுவலகத்திலிருந்து வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநருக்குக்
கடிதத்தை அனுப்பிவிட்டு, எனக்கும் 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் நாள் செய்தி தெரிவித்திருந்தனர்
!
பாபநாசத்தில்
இருந்த என் நண்பர்கள் தொலைவரி (TELEGRAM)) மூலம் இச் செய்தியை
எனக்குத் தெரிவித்தார்கள். இயக்குநரிடமிருந்து பணியமர்வு ஆணையை
(APPOINTMENT ORDER) எதிர்பார்த்துக் கடலூரில் நாளைக் கடத்திக்கொண்டிருந்தேன்
!
எதிர்பார்த்த
ஆணை
1966 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் நாள் இயக்குநரால்
வெளியிடப் பெற்றது. புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்
என்னைப் பண்டகக் காப்பளராகப் (STORE KEEPPER) பணியமர்த்தம் செய்து,
இவ்வாணையில் உத்தரவிடப் பெற்றிருந்தது !
ஒரு மாத
காலம் ஊதியமில்லா விடுப்பு பெற்றுக்கொண்டு கடலூரிலிருந்து பாபநாசம் வந்துவிட்டேன். முப்பது நாள் காலம் தாழ்த்திப் பணியில் சேர இசைவு கேட்டு புதுக்கோட்டை,
அரசினர் தொழிற்பயிசி நிலைய முதல்வருக்கும் (PRINCIPAL) கடிதம் எழுதினேன்.
பாபநாசத்தில் சில பணிகளை முடிக்க வேண்டி இருந்ததால், இந்தக் கால இடைவெளி எனக்குத் தேவைப்பட்டது !
புதுக்கோட்டையில்
நிலையான பணி (REGULAR APPOINTMENT) உறுதியானதும்,
எழுத்தர் பணியிலிருந்து விலகிக்கொள்வதாக விண்ணப்பம் ஒன்றை, கடலூர் மாவட்டக் காவல் காண்காணிப்பாளருக்கு 23-03-1966 அன்று அனுப்பிவைத்தேன். எனது பதவி விலகல்
25-03-1966 முதல் ஏற்கப்படுவதாக, காவல் கண்காணிப்பாளர்,
உரிய உத்தரவை எனக்குப் பாபநாசம் முகவரிக்கு அனுப்பி வைத்தார்
!
புதுக்கோட்டைக்கு
1966 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21 ஆம் நாள் சென்று
பண்டகக் காப்பாளர் பொறுப்பை ஏற்றேன். அப்போது எனக்கு அகவை
இருபத்திரண்டு. பண்டகக் காப்பாளராகப் பணியாற்றி வந்த திருத்துறைப்பூண்டி
விட்டுக்கட்டியைச் சேர்ந்த திரு.அ.வேதையன்
என்பவர் பதவி உயர்வில் வெளியூர் சென்றுவிட்டதால், அவரது பொறுப்புகளை
இடைக்காலமாகப் பார்த்து வந்த மேற்பார்வைப் பயிற்றுநர் பூதலூர் திரு.சுந்தர்ராசன்
என்பவர் என்னிடம் அப்பொறுப்புகளை ஒப்படைத்தார் !
புதுக்கோட்டையில் நான் பணியில் சேர்ந்ததும், தங்குவதற்கு ஒரு இடம் வேண்டுமல்லவா
? பழக்கமில்லாத புதிய இடத்தில் தங்குமிடத்தை நான் எங்கு சென்று தேடுவது
? அப்பொழுது எனக்குக் கை கொடுத்தார், திரு.ஆழ்.சகதீசன் !
பயிற்சி நிலைய அலுவலகத்தில் கணக்கராகப் (ACCOUNTANT) பணியாற்றி வந்த இவர் இராசகோபாலபுரம் 2- ஆம்
தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்தார். அவருடன்
தஞ்சாவூர், கரந்தை, பரசுராம அக்ரகாரத்தைச் சேர்ந்த திரு. சி.தருமராசன் (இளநிலை
உதவியாளர்), தஞ்சாவூர், இரா.பாலசுப்ரமணியன்
(அலுவலக உதவியாளர்) இருவரும் தங்கியிருந்தனர்
!
திரு.சகதீசன் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த அபிராமம்
என்னும் ஊரைச் சேர்ந்தவர். திருமணமாகி மனைவியும் இரு பெண் குழந்தைகளும்
ஊரில் இருந்தனர். திரு.சகதீசன் மட்டும் இரு நண்பர்களுடன் புதுக்கோட்டையில் தங்கிக் கொண்டு வேலை பார்த்து வந்தார். அவருடைய நல்லெண்ணத்தால் எனக்கும்
அவரது வீட்டிலேயே இடம் கிடைத்தது !
திரு.சகதீசன் உள்பட அறை நண்பர்கள் உணவருந்தி வந்த திரு.கிருட்டிணன்
நாயர் என்பவரது உணவகத்தில் (HOTEL) எனக்கும் கணக்குத் தொடங்கப்பெற்று, அங்கேயே மூன்று வேளைகளும்
உணவருந்தும் வாய்ப்புக் கிடைத்தது ! நானும் அந்தக் கடையில் ஒரு
வாடிக்கையாளர் ஆனேன் ! 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற இந் நிகழ்வு இன்னும்
நினைவில் நிற்பதற்குக் காரணம் நண்பர்களின் உதவியும், திரு.கிருட்டிணன்
நாயரின் அன்பும் !
தொழிற்
பயிற்சி நிலைய முதல்வராக (PRINCIPAL) திரு.பி.சக்கரவர்த்தி ஐயங்கார் என்பவரும், அலுவலக மேலாளராக திரு.சு.அரங்கராசுலு
என்பவரும் இருந்தார்கள். பண்டகக் காப்பாளருக்கு உரிய பணிகளைக்
கற்றுக்கொள்வதற்கு இருவரும் எனக்கு மிகவும் உதவி செய்தனர் !
பணிமனை அலுவலர்கள் பலரும் சிலநாள்களில் என்னிடம்
நெருக்கமாகி விட்டனர். அப்போது திருவாளர்கள் ஜி..நடேசன், பி.ஆறுமுகம், வி.சைமன், வி.சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வைப் பயிற்றுநர்கள் !
பயிற்றுநர்களாக திருவாளர்கள் எம்.ஜி.ஜேக்கப்ராஜ், எம்.கல்யாணம், வி.முத்துராமலிங்கம்
(FITTER), இலட்சுமிபதி, ஜே.சம்பத் (MACHINIST) என்.பழனியாண்டி,
பி.ஆர்.பாலகிருஷ்ணன்,
வி.சுப்ரமணியன் (TURNER), வில்லியம் கிராஸ், ஜி.சின்னப்பிள்ளை,
நா.லூக்காசு, டி.வி.இருதயராஜ் (WELDER) என்.கிருட்டிணமூர்த்தி, ஏ.சுப்ரமணியன்
(WIREMAN), டி.ஏ.சுவாமி,
கோபாலன் (INSTRUMENT MECHANIC), ஏ.எல்.திருஞானசம்பந்தம் (ALLIED TRADE), துரைப்பாண்டியன் (PHYSICAL TRAINING), கணபதி
D(RAWING), குத்தாலம்பிள்ளை (MATHS) ஆகியோர் பணியாற்றி வந்தனர்
!
இந்தியப்
பேராயக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான்
தமிழ்நாடெங்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் (GOVT. I.T.Is ) முதன் முதல் தொடங்கப்பட்டன.
தொழிற் பயிற்சி நிலையம் என்றால் என்ன ? எல்லோருக்கும் முழுமையாகத் தெரியும் என்று சொல்ல
முடியாது ! அதைப்
பற்றிய சிறு அறிமுகம் பெரிதும் உதவியாக இருக்கலாம் !
இங்கு கடைசலியல் (TURNER), பொருத்தியல் (FITTER), ஒருக்கியல் (WELDER), மின் இணைப்பியல் (WIREMAN), கருவிகள் கம்மியவியல் (INSTRUMENT MECHANIC ), எந்திரப் பணியியல் (MACHINIST) ஆகிய ஆறு தொழிற்பிரிவுகள் இயங்கி வந்தன ! இத்தகையப் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளருக்கு என்ன தான் வேலை என்பதை அடுத்தப் பகுதியில் சொல்கிறேன் !
இளைஞர்களுக்கு
இலவயமாகத் தொழிற் பயிற்சி அளிக்கும் பள்ளி அல்லது மையத்திற்குத் தொழிற் பயிற்சி நிலையம்
(I.T.I) என்று பெயர். இங்கு கருத்தியல் எனப்படும் தெரிவியலை (THEORY) விட புரிவியலுக்குத்
தான் (PRACTICAL) அதிக முகாமை (IMPORTANCE) அளிக்கப்படுகிறது !
1967
–ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் நாட்டில் மொத்தம் 28 தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு
வந்தன. அவற்றுள் புதுக்கோட்டையும் ஒன்று !
இங்கு கடைசலியல் (TURNER), பொருத்தியல் (FITTER), ஒருக்கியல் (WELDER), மின் இணைப்பியல் (WIREMAN), கருவிகள் கம்மியவியல் (INSTRUMENT MECHANIC ), எந்திரப் பணியியல் (MACHINIST) ஆகிய ஆறு தொழிற்பிரிவுகள் இயங்கி வந்தன ! இத்தகையப் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளருக்கு என்ன தான் வேலை என்பதை அடுத்தப் பகுதியில் சொல்கிறேன் !
புதுக்கோட்டையில்
பணி புரிகையில் அகவிலைப் படி உயர்வு அப்போதைய பேராயக் கட்சி
(CONGRESS) அரசால் அறிவிக்கப்பட்டது. எனக்கு மாதம்
உருபா மூன்று மட்டுமே ஊதியத்தில் உயர்ந்தது. இந்த அகவிலைப்படி
உயர்வு எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்பதால் ஊழியர்களிடையே மனநிறைவு இல்லாமற் போயிற்று
!
இதன் விளைவாக ”பஞ்சத்தில் வாடிடும் ஊழியர்க்குப்
படி பத்துப் பதினோரு ஏழுகளாம், (70, 77) மலர் மஞ்சத்தில் ஆடிடும் அமைச்சர்கட்கு முழு மாதத்தில் ஓரிரு
ஆயிரமாம் !” என்று ஒரு பாடலை எழுதினேன் ! இதோ அந்தப் பாடல் !
பஞ்சத்தில் வாடிடும் ஊழியர்க்குப் படி
..........பத்துப் பதினோரு ஏழுகளாம் - மலர்
மஞ்சத்தில் ஆடிடும் அமைச்சர்கட்கு முழு
..........மாதத்தில் ஓரிரு ஆயிரமாம் ! - அவர்
நெஞ்சத்தில் ஊறிடும் எண்ணத்திலே நாளும்
.........நல்லதையே எண்ணி நாடுவராம் - இன்னும்
கொஞ்சத்தில் மக்களைக் கூண்டுடன் கயிலையை .........கண்டிட நல்வழி கூறுவராம் !
தங்கத்தில் கூடிய தஞ்சைதனில் குடல்
..........தாளமிடும் ஒலி கேட்குதையா
! - தமிழ்ச்
சங்கத்தில் பாடிய மாமதுரை பிணம்
..........சாய்ந்திடும் கொடுமை காணுதையா
!
வங்கத்தில் தோன்றிடும் ஊழிப்புயல் மனை
..........மாடுகளைக் காவு கொள்ளுதையா
! -
உயிர்ச்
சிங்கத்தில் ஏறி உலாவரும் தீரர்கள்
..........செத்து மடிகின்ற நாடிதையா !
பானைதலில் படி நெல்லுமில்லை ! பசி
..........பஞ்சமிலா உயிர் யாதுமில்லை ! - நாளும்
சேனைதனில் கெல்லி மாவெடுத்து களி
..........செய்திட உப்பிற்கும் காசுமில்லை ! - இவர்
யானைதனில் புடை சூழவரப் புகழ்
..........பாடிவரத் தடை ஏதுமில்லை ! - கொலைத்
தானைதனில் தனி வாகையுடன் பெரும்
..........பீடுநடை இடக் கூசவில்லை
!
மாட்சிதனில் மிக்க மன்னர்கள் தோன்றிய
..........மாரிவளம் கொண்ட நாடுஇது
! -
இன்று
காட்சிதனில் சில தூரிகையின் முனை
..........காட்டிட நோக்கிடும் பேறுஅது ! - மனச்
சாட்சிதனில் சதிர் ஆடிடும் காங்கிரஸ்
..........மீட்டிடும் வீணையின் ஊளைஎது ? - அவர்
ஆட்சிதனில் உளம் நொந்திடும் பாமரர்
..........கூவிடும் வீட்சியின் ஓசையது !
ஆறுதனில் பொடிக் கூழையுடன் கடல்
..........ஆடிடும் வெண்மணல் வேகமுடன் - விலை
ஏறுதெனில் எலி உண்டுயிர் வாழ்ந்திடக்
..........கூறிடும் கீழ்நிலை ஆட்சியிலே ! - ஒரு
கூறுதனில் விலை மாறுதலைச் சிரம்
..........கொய்து மரித்திடா ஆட்சிதனை - தேர்தல்
சேறுதனில் வெகு ஆழமதில் துயில்
..........செய்திட வைப்பதும் நம்பணியே !
தமிழக
அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு 1967 என்றால்
அது மிகையில்லை ! இவ்வாண்டு
பிப்ரவரி மாதம் தமிழ் நாடு சட்ட மன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது
!
1965
–இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதன்
தொடர்பாக நிகழ்ந்த தீக்குளிப்புகள், துப்பாக்கிச் சூடுகள், உயிரிழப்புகள், உணவுப் பொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு மற்றும்
இன்ன பிற காரணங்களால், இந்தியப் பேராயக் கட்சியின் செல்வாக்கு
வெகுவாகச் சரிந்து போயிருந்தது. எதிர்க் கட்சிகள் அனைத்தையும்
ஒருங்கிணைத்துக் கூட்டணி அமைத்து அண்ணா தேர்தலைச் சந்தித்தார் !
தேர்தலில்
தி.மு.க 139 இடங்களில் வென்றது.
அதன் கூட்டணிக் கட்சிகளான இராசாசியின் சுதந்திரக் கட்சி 20 இடங்களையும், மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி
11 இடங்களையும், முசுலிம் லீக் 3 இடங்களையும், பிரசா சோசலிசிட் கட்சி 4 இடங்களையும், சம்யுக்த சோசலிசிட் கட்சி 2 இடங்களையும் பெற்றன !
எதிரணியில் இந்தியப் பேராயக் கட்சி 51 இடங்களையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2 இடங்களையும், முன்னேற்றக் கட்சி (F.B) 1 இடத்தையும், தற்சார்பாளர் (IND) 1 இடத்தையும் பெற்றனர். இந்தியப் பேராயக் கட்சி ஆட்சியை இழந்தது !
எதிரணியில் இந்தியப் பேராயக் கட்சி 51 இடங்களையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2 இடங்களையும், முன்னேற்றக் கட்சி (F.B) 1 இடத்தையும், தற்சார்பாளர் (IND) 1 இடத்தையும் பெற்றனர். இந்தியப் பேராயக் கட்சி ஆட்சியை இழந்தது !
-----------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),19]
{02-05-2020}
-----------------------------------------------------------------------
No comments:
Post a Comment