name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (06) :1955 நிகழ்வுகள் - இரண்டாவது புயல் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, March 28, 2020

காலச் சுவடுகள் (06) :1955 நிகழ்வுகள் - இரண்டாவது புயல் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1955 நிகழ்வுகள் ! 

                         (சுவடு.06) இரண்டாவது புயல் !

----------------------------------------------------------------------------------------------

ஏழாம் வகுப்பில் 1955 –ஆம் ஆண்டு சூன் மாதம் அடியெடுத்து வைத்தேன்.  பன்னாளைச் சேர்ந்த திரு.பி.வீ.இராமசாமித் தேவர் எனக்கு வகுப்பாசிரியர். ஆங்கிலப் பாடமும் அவர் தான் சொல்லித் தருவார் !

கடிநெல்வயல் அண்ணன் திரு..மீனாட்சி சுந்தரம் கணக்கு ஆசிரியர். பஞ்சநதிக் குளம் திரு..கந்தன் தமிழாசிரியர்; திரு. குஞ்சிதபாதம் அறிவியல் ஆசிரியர் ; திரு.ஞானசுந்தரம் இன்னொரு தமிழாசிரியர் !

திரு.மாரியப்ப இராயர் என்பவர் சமூகப் பாடமும் பூகோளமும் சொல்லித் தந்தார். வகுப்பறையில் எப்பொழுதும் முன் வரிசை இருக்கையில் அமர்வதை ஏழாம் வகுப்பிலிருந்து தான் நான் வழக்கப்படுத்திக் கொண்டேன் !

இவ்வாறு அமர்வது பாடங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகிறது என்பதை இங்கு நான் கண்டு கொண்டேன். இவ்வழக்கம் எனது கல்லூரிப் படிப்பு வரைத் தொடர்ந்தது !

பன்னாள் திரு.வே.இளங்கோவன், பஞ்சநதிக்குளம் திரு.சேதுராமன், செல்லையன்காடு திரு.வை.முருகையன், ஆயக்காரன்புலம்-3,  திரு.கோ.சுப்பையன், கோடியங்காடு திரு.தருமலிங்கம், கற்பகநாதர்குளம் திரு.வெங்கிடுசாமி, மருதூர் திரு.தா,வேதையன், அகியோர் என் வகுப்புத் தோழர்கள் !

மழைக் காலமும் வந்தது ! கூடவே புயலையும் அழைத்து வருமோ என்ற வானிலைச் சூழலும் நிலவியது. மூன்றாண்டுகளுக்கு முன்பு அடித்த புயலையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் எண்ணி, இப்போது மறுபடியும் புயல் வந்தால் என்ன செய்வது  என்று  மக்கள் கலக்கம் அடையலாயினர் !

மக்கள் அச்சப்பட்டது போல் ஒரு நாள் புயல் வந்தே விட்டது ! ஆம் ! 1955 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 -ஆம் நாள் நாகைப் பகுதியை மீண்டும் ஒரு கடுமையான புயல் தாக்கியது ! பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும் என்பது இதுதானோ ?

இந்தப்புயலின் போது நான் கடிநெல்வயலில் தான் இருந்தேன். மாலையில் தொடங்கிய புயல் மறுநாள் காலை வரைத் தொடர்ந்தது; நிரம்பவும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. புயல் ஓய்ந்தவுடன் வெளியில் வந்து பார்த்தால் வயல்களில் நெற்பயிரையே காணமுடியவில்லை. அனைத்து வயல்களும் ஏரிகளாகக் காட்சி தந்தன. மரங்கள்  வேரோடு வீழ்ந்து கிடந்தன !

நடுப் பெரியப்பா வீட்டின் பின்புறம் வீட்டையொட்டிக் கீற்று வேய்ந்த சாய்ப்பும் (PENT HOUSE) அதனுடன் இணைந்த கொட்டகை ஒன்றும் இருந்தன. அவர்கள் வீட்டுப் பசுமாடு ஒன்று, சாய்ப்புக்கும் கொட்டகைக்கும் இடையில் உள்ள  கவை வடிவக் கூரையில் (ஆங்கில எழுத்தான V போன்ற வடிவக் கூரை) , புயலின் சுழற்சியால், தூக்கிக் கொண்டுபோய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது ! பசுவின் கால்கள் கூரையைப் பொத்துக் கொண்டு கீழே இறங்கி நின்றன. புயல் ஓய்ந்ததும் பசுவைக் கூரையை விட்டு இறக்குவதற்கு இருபதுக்கும் மேற்பட்டோர் தேவைப்பட்டனர். !

ஊரிலிருந்த பெரும்பாலான மரங்கள் வீழ்ந்து விட்டன. ஆலடிக் குளத்தின் வடகரை, தென்கரை, வடமேற்குக் கரை ஆகிய இடங்களில் வளர்ந்திருந்த ஆல மரங்கள் எல்லாம் அடியோடு வீழ்ந்துவிட்டன. கீழ்கரையில் பூத்துக் காய்த்துக் கொண்டிருந்த ஒரு புளியமரமும், தென்மேற்குக் கரையிலிருந்த ஐந்தாறு மாவிலங்க மரங்களும் காளையின் காலடிகளில் நசுங்கிக் இடக்கும் புற்கள் போலச் சரிந்து கிடந்தன !

அடுப்பு மூட்டக் காய்ந்த விறகுக் கிடைக்கவில்லை. விளக்கு ஏற்ற மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. வீடுகளில் கையிருப்பில் இருந்த அரிசியெல்லாம் மழை நீரில் ஊறி ஊசிப் போயிற்று. வயிற்றுப் பசிக்குச் சோறு கிடைக்கவில்லை. கருப்பம்புலம், வேதாரணியம் செல்லும் வழிகள் எல்லாம் துண்டிக்கப் பட்டிருந்தனகடிநெல்வயல் மக்கள் பசியால் கதறித் துடித்தனர் !

அப்போது கடிநெல்வயலின் மணியமாக (பட்டாமணியார்) இருந்தவர் அண்ணன் திரு.கா.இருளப்ப தேவர். அவர், தனது உதவியாளர்களான திரு.சுப்பிரமணிய தேவர், திரு.அஞ்சான் இருவரையும் அழைத்துக் கொண்டு, நடைப்பயணமாக வேதாரணியம் நோக்கிப் புறப்பட்டார். !

வானங்கொண்டான் ஆற்றைக் கடந்து, முட்டகம் வழியாகவே அகத்தியன் பள்ளிக்கு எப்படியோ சென்று அங்கிருந்து வேதாரணியத்தை அடைந்தனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (B.D.O), வட்டாட்சியர் (TAHSILDAR) ஆகியோரை அணுகிப் பேசி 15 மூட்டைகள் அரிசி, 200 கிலோ பாற்பொடி (MILK POWDER) ஆகியவற்றைக் கேட்டுப் பெற்று, தோணி மூலம் கடிநெல்வயலுக்குக் கொணர்ந்து, மக்களுக்குச் சோறும் பாலும் அளித்துப் பசியாற்றிய நிகழ்ச்சியைக் காண்கையில் எனக்கு அகவை பதினொன்று !

வேதாரணியத்திலிருந்து தோணி எந்த வழியாகக் கடிநெல்வயல் வந்தது என்பது இப்போது எனக்கு நினைவில்லை. ஆனால் வானங்கொண்டான் ஆறு வழியாக கீழக் கடக்கொம்பினை அடைந்து அங்கிருந்து  சாயும்புலத்தில் (சாம்பலம் ஏரி) நுழைந்து தச்சன் சாலை வழியாக மூனா ஆவன்னா என்று அழைக்கப்பெற்ற மு.ஆரோக்கியசாமிப் பிள்ளையின் வண்டிக் கொட்டகை வரை வந்தது மட்டும் நினைவிருக்கிறது !

நீரில் ஆழம் குறைவான இடங்களில் தோணியிலிருந்து இறங்கித் தள்ளிக் கொண்டும், ஆழமான இடங்களில் தோணியில் ஏறி வலித்துக் கொண்டும் வந்து சேர்ந்தனர். மூனா ஆவன்னா வீட்டு வண்டிக் கொட்டகை இருந்த இடத்தில் கோட்டு அடுப்புக் கட்டி சோறும் குழம்பும் செய்து ஊர் மக்களுக்கு அளித்துப் பசியாற்றிய நிகழ்வுகள் இன்னும் என் கண்களில் நிழலாடுகின்றன !

அண்ணன் திரு.இருளப்ப தேவரின் தீரமிக்க இந்த அரிய செயலும், கைம்மாறு கருதாத உழைப்பும், கடிநெல்வயல் மக்களால் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.  அவர் மறைந்து விட்டாலும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது உண்மை !
.
இத்தகைய இன்னல் மிகுந்த சூழ்நிலையில், தகட்டூர் ஆதியங்காடு, திரு.வெங்கடாசலத் தேவரின் தாயார் காலமான செய்தி கடிநெல்வயலை எட்டியது ! புயல் ஓய்ந்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும். சாலைகள் ஓரளவு சீராகி இருந்தன. துக்கம் விசாரிப்பதற்காக, வீட்டுக்கு ஒருவர் அங்கு செல்ல முடிவு செய்தனர் !

பெரியப்பா திரு.அருணாச்சல தேவர், நடப்பா திரு.சாம்பசிவதேவர், சிற்றப்பா திரு.சண்முகவேல் தேவர், எங்கள் வீட்டின் சார்பில் அப்பாவுக்குப் பதிலாக நான், அண்ணன் திரு.இருளப்ப தேவர் ஆகியோர் குறுக்கு வழியாக நடந்து ஆதியன்காடு சென்றோம். அப்போது தான் புயலின் ஊழித் தாண்டவத்தை நான் உள்பட அனைவரும் கண்களால் நேரில் காணமுடிந்தது !

இடிந்து கிடந்த வீடுகளும், பிய்த்து எறியப்பட்டிருந்த கூரைத் தகடுகளும், முறிந்து கிடந்த ஏற்றங்களும், புயலின் கடுமையை எங்களுக்குத் தெளிவாக  உணர்த்தின ! பன்னிரண்டு அகவை நிறையும் முன்பாகவே நான்  இரு முறை புயல்களைச் சந்தித்து விட்டேன் !

வாழ்க்கை என்பது மலர்கள் தூவிய படுக்கை அன்று, கற்களும் முட்களும் நிறைந்த கானக வழி என்பதை அப்போது நான் உணராவிட்டாலும், பிற்காலத்தில் உணர்ந்திருக்கிறேன் !

1952 ஆம் ஆண்டு அடித்த புயலின் போது எந்த வழியாகக் கடல்நீர் ஊருக்குள் வந்ததோ, அதே வழியாக, 1955 புயலின் போதும் கடிநெல்வயலுக்குள்  புகுந்து நெல்வயல்களை எல்லாம் சீரழித்து விட்டது. இதில் முற்றிலும் அழிந்து தரிசாகப் போனவை முட்டகம் ஓரமாக இருந்த நூற்றுக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் !

ஆலடிக்குளம், புதுக்குளம், வண்ணார்குளம், வெட்டுக் குளம் ஆகியவற்றின் வடபுறம் இருந்த வயல்களில் ஆள் உயரத்திற்கு நெல் விளைந்து நின்ற காட்சியைக் கண்ட அதே கண்கள், புயலுக்குப் பிந்தைய ஆண்டுகளில்  அதே வயல்கள் தரிசாகக் கிடக்கும் காட்சியையும் காண நேர்ந்தது !

கடிநெல்வயலில் வடக்கே சாயும்புலம் அருகிலிருக்கும் தரவை தொடங்கி தெற்கே தரிசாயம் (தர்காஸ்து) வரைப் பரவியிருந்த நெல்வயல்களின் தரம் வடக்கிலிருந்து தெற்கே போகப் போக இறங்குமுகமாகிப் படுவீழ்ச்சி அடைந்து, இறுதியில் தரிசாகவேப் போயிற்று !  

அடுத்தடுத்த ஆண்டுகளில் கடிநெல்வயலில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, இருந்த நகைகளையும், ஆடு, மாடு கன்றுகளையும், சொத்துகளையும் விற்றுத் தின்று உயிர்வாழ வேண்டிய அவல நிலை மக்களுக்கு உருவாயிற்று !

-----------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம்(சித்திரை),12]
{25-04-2020}
----------------------------------------------------------------------------------------------
1955 ஆம் ஆண்டு புயல்
புயலால் வெள்ளத்தில் மூழ்கிய வயல்கள்


 புயலால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம்
 பசிப்பிணி போக்கிய பட்டாமணியார் கா.இருளப்ப தேவர்.
வேதாரணியத்திலிருந்து தோணி மூலம் அரிசியும் பால் பொடியும்  கொண்டு வருகை !
















No comments:

Post a Comment