தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் : 1975-1976 நிகழ்வுகள் !
(சுவடு.22) நெருக்கடி நிலையும் பரிதி பிறப்பும் !
------------------------------------------------------------------------------------------------------
நாகப்பட்டினத்திலும்
பண்டகத்தில் நான் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. என் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு, பண்டக
உதவியாளர் திரு.மு.வில்வநாதன் மிகவும் உதவியாக
இருந்தார். மன்னார்குடியைச் சேர்ந்த இவரது கையெழுத்து
(HAND-WRITING) அழகாகவும் தெளிவாகவும் இருக்கும். தொழில்நுட்பத் திறன்
மிகுந்த உழைப்பாளி !
நாகப்பட்டினத்தில்,
1975 ஆம் ஆண்டு , மே மாதம், 4 ஆம் நாள் நான் பணியில் சேர்ந்திருந்தேன். இதே ஆண்டு சூன்
மாதம், 25 ஆம் நாள் – அதாவது 51
நாள் கழித்து - இந்தியா முழுவதும் நெருக்கடி நிலையை (EMERGENCY) அறிவித்து குடியரசுத் தலைவர் பக்ருதீன்
அலி அகமது உத்தரவு பிறப்பித்திருந்தார் !
தலைமை
அமைச்சர் இந்திரா காந்தி நாடாளு மன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று
அலகாபாத் உயர் நீதி மன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, நாடெங்கும்
எதிர்க்கட்சினர் கிளர்ச்சியில் ஈடுபடலாயினர். நாட்டில் குழப்பம்
ஏற்படுவதைத் தவிர்க்க இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவிப்பு என்னும் ஆயுதத்தைக்
கையில் எடுத்தார் !
நாடெங்கும், கிளர்ச்சி செய்த எதிர்க்கட்சியினர் ”மிசா” சட்டத்தின் கீழ் தளைப்படுத்தப் பெற்று சிறையில் அடைக்கப்பெற்றனர். அதிகாரிகள் முழு அதிகாரம் பெற்றனர். பேச்சுரிமையும் எழுத்துரிமையும்
முடக்கி வைக்கப்பட்டன. பேராயக் கட்சியினர் (CONGRESS
– MEN) கைகாட்டியவர்களை எல்லாம்
காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் !
செய்தித்
தாள்களுக்கு தணிக்கை முறை புகுத்தப் பெற்றது. ஆற்காடு வீராசாமி,
ஸ்டாலின் போன்றவர்கள் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனர். . சென்னை மேயராக இருந்த சிட்டிபாபு,
சாத்தூர் பாலகிருஷ்ணன் போன்றோர் சிறைக் கொடுமைக்கு ஆளாகி இறந்தே போயினர்
!
1971
–ஆம் ஆண்டு, உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம்
(MAINTENANCE OF INTERNAL SECURITY ACT) கொண்டு வரப்பட்டிருந்தது.
சுருக்கமாக இதை “மிசா” என்று
அழைத்தனர். உசாவல் (விசாரணை) ஏதுமின்றி, காலவரையறை இன்றி, யாரையும்
சிறையில் அடைக்க வகை செய்தது இந்தச் சட்டம்.
தமிழ்நாட்டில் தி.மு.க,
தி.க. மற்றும் பொதுவுடைமைக்
கட்சினர்தான் இச்சட்டத்தால் கடுமையாக இன்னலுக்கு ஆட்பட்டவர்கள் !
தமிழ்
நாட்டில் அப்பொழுது கருணாநிதி முதலமைச்சர். காமராசரைத் தளை (கைது) செய்து சிறையில் அடைக்க அவர் மறுத்துவிட்டார். சியார்சு பெர்ணாண்டசு, சோதி பாசு, மது லிமாயே, மது தந்தவதே,
பி.இராமமூர்த்தி, போன்ற பல
தலைவர்கள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர் !
இவர்களை
எல்லாம் தளைப்படுத்திச் சிறையில் அடைக்குமாறு இந்திரா காந்தி கேட்டுக் கொண்டும், கருணாநிதி மறுத்து விட்டார். இதனால் வெகுண்டெழுந்த இந்திராகாந்தி
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகச் சொல்லி 1976 ஆம் ஆண்டு
சனவரி மாதம் 31 ஆம் நாள் கருணாநிதி அரசைக் கலைத்து விட்டு,
தமிழ் நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தார்
!
நெருக்கடி
நிலை அறிவிப்பால் இவ்வாறு தீமைகள் பல விளைந்தாலும், சில நன்மைகளும்
கிடைக்கவே செய்தன. இருப்பூர்திகள்
(TRAINS) சரியான நேரத்திற்குப் புறப்பட்டுச் சரியான நேரத்திற்கு வந்து
சேர்ந்தன. பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் நேரந் தவறாமல் இயங்கின !
கையூட்டுகள்
காணாமற் போயின. அலுவலர்கள் எப்போதும் தம் இருக்கைகளில் காணப்பட்டனர்.
ஒப்பந்தக்காரர்கள் ஏற்றிருந்த பணியைச் செவ்வையாகச் செய்தனர்.
பதுக்கல் ஒழிந்தது. விலைவாசிகள் ஏறாமல் நிலையாக
இருந்தன. அரசியல்வாதிகள் அல்லற்பட்டனரே தவிர பொதுமக்கள் எவ்வித
இன்னலுக்கும் ஆளாக வில்லை !
அவசர நிலை நடைமுறையில்
இருந்த காலத்தில் நாகப்பட்டினத்தில் திரு.மு.அ.சர்தார்கான் என்பவர் முதல்வராக (PRINCIPAL)
இருந்தார். திரு.ப.பாலசுப்ரமணியன் அலுவலக மேலாளர் (OFFICE MANAGER). பண்டக
அறையில் நான் மாட்டியிருந்த பெரியார் படம் போட்ட நாள்காட்டியை அகற்றச் சொல்லி இருவரும் என்னைக் கட்டாயப்படுத்தினர்.
நான் மறுத்துவிட்டேன் !
கணக்கர் திரு.வெ.வெங்கடேசன் (ACCOUNTANT). உதவியாளர்
திரு.சு.சந்தானம், மற்றும் திரு.எம்.ஜானகிராமன்,
திரு.சு.சந்திரசேகரன்,
திரு.ஜி.இராமலிங்கம்,
திரு.பி.எஸ்.தாமோதரன் ஆகியோரும் என்னிடம் பேசிப் பார்த்தனர். என் உறுதியை அவர்களால் மாற்ற முடியவில்லை
! பெரியார் நாள்காட்டி அந்த ஆண்டு முடியும் வரை அங்கு தான் இருந்தது
!
நாகப்பட்டினம் தொழிற் பயிற்சி
நிலையத்தில் பொருத்தியல் (FITTER), கடைசலியல் (TURNER),
ஒருக்கியல் (WELDER). மின் இணைப்பியல்
(WIREMAN), தச்சியல் (CARPENTAR), வார்ப்பியல்
(MOULDER) எந்திரப் பணியியல் (MACHINIST) ஆகிய
ஏழு தொழிற் பிரிவுகள் இயங்கி வந்தன ! அவசர நிலை தந்த அச்சத்தால்,
இத் தொழிற்பிரிவுகளில் பயிற்சி மிகச் சிறப்பாக அளிக்கப்பட்டது
!
பயிற்சி ஆசிரியர்களாக திருவாளர்கள்
என்.ஆர்.இராசரெத்தினம், என்.கிருட்டிணமூர்த்தி
(WIREMAN), கே.சடகோபன், என்.
பழனியாண்டி பி.ஆர்.பாலகிருட்டிணன்,
எஸ்.சுந்தர்ராசன், (TURNER), ஆ.சிங்காரவேலு, வரதராசப் பெருமாள்
(MACHINIST), எம்.வேலாயுதம், என்.தனகோபால், எஸ்.குருசாமி, எம்.இராமையன்
(FITTER), சி.பஞ்சாட்சரம், முகமது இக்பால் (WELDER) ஆகியோர் பணியாற்றினர்
!
வார்ப்பியல் பிரிவில்
(MOULDER) திரு.டி.பாலசுப்ரமணிரன்,
திரு.ஏ.அப்பாவு, தச்சியல் பிரிவில் திரு.உத்திராபதி, திரு.இராமலிங்கம் ஆகியோரும்
பயிற்சி தரும் பொறுப்பில் இருந்தனர் !
இவர்களன்றி, தலைமைப் பயிற்றுநராக திரு.டி.அலக்சாண்டரும்,
மேற்பார்வைப் பயிற்றுநர்களாக திரு.என்.சிவனாண்டிப் பிள்ளை, திரு.எம்.பீட்டர் மோட்சகன், திரு.எஸ்.இன்னாசிமுத்து ஆகியோரும் பணியாற்றி வந்தனர் !
பயிற்சி நிலையப்பணிகள்
இவ்வாறு சென்று கொண்டிருக்க, என் குடும்ப வாழ்வில் புதிய
வரவாக மகன் இளம்பரிதி 1976 ஆம் ஆண்டு, சனவரி
மாதம், 9 ஆம் நாள் பிறந்தான். அப்பொழுது நான் திருவெறும்பூர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற இருந்த ஒரு கூட்டத்திற்காகச் சென்றிருந்தேன். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பண்டகக் காப்பாளர்கள் 10 பேர் வந்திருந்தனர். கூட்டம் நிறைவடைந்ததும், அங்கிருந்து புறப்பட்டு மன்னார்குடி
டேனியல் மருத்துவ மனைக்குச் சென்று தாயையும் சேயையும் பார்த்து வந்தேன் !
நாகை அலுவலகத்தில் இளநிலை
உதவியாளராகப் பணிபுரிந்து வந்த விளக்குடியைச் சேர்ந்தவரும் என் கல்லூரி நண்பருமான திரு. செயராமன், செல்வி. மல்லிகா என்னும் மங்கையை 1976 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம்,6 –ஆம்
நாள் மணந்தார் !
திருமணத்தை முன்னிட்டு
நானும் திரு.சி.தருமராசன் உள்பட வேறு
சில நண்பர்களும் விளக்குடிக்குச் சென்று திருமண விழாவில் பங்கேற்றோம் ! தஞ்சை மன்னர் சரபோசி கல்லூரியில் புகுமுக வகுப்பில், திரு.செயராமன் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவர். நான் அவரது திருமணத்திற்குச் செல்லாமல்
இருக்க முடியாதே !
விளக்குடியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சேரன்குளம் – என் மாமனார் ஊர். சேரன்குளத்தில் என் தங்கை கனகாம்பசத்திற்கு
பாலதண்டாயுதம் என்னும் மூன்று அகவை ஆண்மகவு இருந்த நிலையில், இன்னொரு ஆண்மகவான ஓராண்டு அகவையுள்ள இராசா, தேள் கொட்டியதால்
இறந்து போனான். 1976 ஆம் ஆண்டு, சூன் மாதம்
2 –ஆம் நாள் நிகழ்ந்த இக்கொடிய இழப்பு உறவினர்கள் எல்லோரையும் மிகுந்த
மனத் துயருக்கு ஆட்படுத்தி விட்டது !
நாகப்பட்டினத்தில் வாழ்ந்து
வந்த எங்களுக்கு இராசாவின் இறப்பு பற்றிய தொலைவரிச் செய்தி
(TELEGRAM) மிகத் தாமதமாகக் கிடைத்தது. நானும்
மனைவியும், நான்கு மாதக் குழந்தையான இளம்பரிதியைத் தூக்கிக் கொண்டு
இரவு 10-00 மணி வாக்கில் மன்னார்குடி, கீழப்பாலத்தில்
போய் இறங்குகிறோம் !
வாடகைச் சீருந்து
(TAXI), பொறிச்சிவிகை (AUTO-RIKSHA) எதையும் காணோம்.
பாலத்தின் மேற்கு முனையில் ஒரு மாட்டு வண்டி அவிழ்த்து நிறுத்தப் பட்டிருந்தது.
வண்டிக்காரரும் நின்று கொண்டிருந்தார். கிழக்கு முனையில், விளக்கு இல்லாத வண்டிகளைக் காவல் துறையினர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
வண்டிக்காரரிடம் சென்று எங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னேன்
!
அது சேரன்குளம் வழியாக
குறிச்சி என்னும் ஊருக்குச் செல்கின்ற வண்டிதான். விளக்கு
இல்லாததால், காவல் துறையினரின் சோதனைக்கு அஞ்சி மாடுகளை அவிழ்த்துவிட்டு
வண்டியை நிறுத்தி வைத்திருப்பதாக வண்டிக்காரர் சொன்னார். என்
மனதில் ஏதோ ஒரு துணிச்சல் ! நேராக காவல் உதவி ஆய்வளரிடம் சென்று
எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னேன் !
தொலைவில் என் மனைவி கைக்
குழந்தையுடன் நிற்பதைக் கண்ட காவல் உதவி ஆய்வாளர், ஒரு காவலரை
அழைத்து, வண்டிக்காரரிடம் போய், எங்களை
ஏற்றிக் கொண்டு, வண்டியை ஓட்டி வருமாறு கூறச் சொன்னார்
!
வண்டியில் ஏறி நாங்கள்
வந்ததும்,
உதவி ஆய்வாளர் வண்டியோட்டியை அழைத்து, நாங்கள்
போக வேண்டிய வீட்டில் கொண்டு போய் எங்களை, இறக்கிவிடவேண்டும்
என்றும் வழியில் எங்காவது இறக்கிவிட்டுவிடாதே என்றும் கண்டிப்புடன் கூறி அனுப்பினார்
! கண்கள் இன்பக் கண்ணீர் சொரிய,
காவல்துறையிலும் நெஞ்சில் ஈரம் உள்ளவர்கள் இருப்பதை எண்ணி, நெஞ்சார வாழ்த்தினேன் !
கீழப்பாலத்திலிருந்து நான்கு
கி.மீ தொலைவில் உள்ள மாமனார் வீட்டிற்கு மாடுகள் பூட்டிய பார வண்டியில் நாங்கள்
சென்று இறங்கும் போது இரவு மணி 11-00. இறப்பு வீட்டில் குழுமியிருந்தோர்
ஓடி வந்து, நேரம் கெட்ட நேரத்தில் கைக்குழந்தையுடன் வந்து இறங்கும்
எங்களைப் பார்த்துக் கோபித்துக் கொள்ளவும் முடியாமல், ஆறுதல்
சொல்லவும் முடியாமல் திகைத்துப் போனார்கள். இப்போது நினைத்தாலும் உடலெல்லாம்
நடுங்கும் மோசமான ஒரு துன்பியல் துய்ப்பு ! இரண்டு நாள் தங்கை வீட்டில் அவர்களுக்கு
ஆறுதலாக இருந்து விட்டு, 5 –ஆம் தேதி காலையில் நாகைக்குப் புறப்பட்டோம்
!
வெளிப்பாளையம் பெருமாள் கோயில்
தெருவில் குடியிருக்கையில் நான் சில புதிய இன்னல்களை நேர்கொள்ள வேண்டி வந்தது. மாவட்டத்
தலைமை மருத்துவ மனை, மாவட்ட நீதி மன்றம், வருவாய்
சார் ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம்,
வட்டாட்சியர் அலுவலகம் போன்ற அனைத்து முகாமையான (IMPORTANT) அலுவலகங்களும் வெளிப்பாளையத்தில் தான் அமைந்திருந்தன
!
மருத்துவ மனைக்கு அல்லது அரசு
அலுவலகங்களுக்கு வருகின்ற என் உறவினர்கள் மட்டுமல்லாது,
ஊர்க்காரர்களும், ஊர்க்காரர்களின் உறவினர்களும் என் வீட்டிற்கு வரத் தொடங்கினர். பெரும்பாலும் நண்பகல் உணவு வேளையின் போது நிரம்ப வருகை தந்தனர். இரவில் தங்கி மறுநாள் பணிகளைக்
கவனிக்க வேண்டியிருப்போரும் வரலாயினர் !
மாவட்டத் தலைமை மருத்துவ மனையில்
உள்நோயாளியாகத் தங்கிப் பண்டுவம் செய்து கொள்வோரைச் சார்ந்தவர்களும், குழந்தைப் பேறுக்காக
மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருப்பவர்களைச் சார்ந்தவர்களும் என் வீட்டை இலவய உணவு
விடுதியாகவும், இலவயத் தங்குமிடமாகவும் கருதலாயினர் !
கைக்குழந்தையுடன் இருக்கும்
என்
மனைவிக்கு இது பெரும் இன்னலாக இருந்தது. வீட்டிற்கு வருபவர்களுக்கு
உணவு அளித்தாக வேண்டும், உறங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். கைக்குழந்தையைக்
கவனிப்பதா, விருந்தினர்களைக் கவனிப்பதா என்ற மனப் போராட்டம் அன்றாட நிகழ்வாகிப் போனது
!
இதற்கு ஒரே தீர்வு, குடியிருப்பை
வேறு தொலைவான இடத்திற்கு மாற்றுவதன்றி வேறில்லை; எனவே வேறு குடியிருப்பை முனைப்பாகத் தேடலானேன். அப்போது
தச்சியல் பிரிவில் பயிற்றுநராகப் பணி புரிந்து வந்த திரு.உத்திராபதி, நாகூர் வண்டிக்காரத்
தெருவில், தன் வீட்டின் அருகில் ஒரு வீடு வெட்புலமாக இருப்பதாகத் தெரிவித்தார் !
ஒரு நாள் அலுவலகம் முடிவடைந்ததும்,
அவருடன் சென்று வீட்டைப் பார்வையிட்டேன். அவ்வளவு வசதியாக இல்லாவிட்டாலும் இடைக் காலமாக
அதை வாடகைக்கு (உருபா 30/-) அமர்த்திக் கொள்ள முடிவு செய்தேன். வாடகை முன்பணம் தந்து
வீட்டை உறுதிப் படுத்திக் கொண்டேன் !
இந்தக் குடியிருப்பு ஒரு பழங்காலத்திய
வளவு (COLONY) போன்றது. முதல் வீட்டில் கிளை அஞ்சலக மேலவராகப் பணியாற்றிய (BRANCH POST
MASTER) திரு.கு.சந்தானம் என்பவர் குடியிருந்தார்.
இரண்டாவது வீட்டில் திரு.உத்திராபதி. அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மூன்றாவது
வீட்டைத்தான் நான் அமர்த்திக் கொண்டேன் !
அடுத்தடுத்த வீடுகளில் சோழன் போக்குவரத்துக்
கழக நடத்துநர் திரு.இராமசாமி, M.O.H. நிறுவனப் பேருந்து வலவர் திரு.கிருட்டிணன், துக்ளக்
தேநீர் நிலைய உரிமையாளர் தாமரைப்புலம் திரு.பாலசுப்ரமணியன் ஆகியோர் குடும்பத்துடன்
வாழ்ந்து வந்தனர் !
1976 –ஆம் ஆண்டு சூன் மாதம்
19 –ஆம் நாள், சனிக்கிழமை பயிற்சி நிலையத்திற்கு விடுமுறை. நாகூர் வண்டிக்காரத் தெருவில்
வாடகைக்கு அமர்த்திக் கொண்ட இந்த 24 –ஆம் இலக்கமுள்ள வீட்டிற்கு என் உடைமைகளை எடுத்துக்
கொண்டு, குடி வந்துவிட்டேன் !
வெளிப்பாளையம் பெருமாள் கோயில்
2 -ஆம் தெரு 10 –ஆம் இலக்க வீட்டிலிருந்து பத்தரை மாதத்திலேயே வெளியேறிவிட்டேன். “செல்விருந்து
ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து
வானத்தவர்க்கு” என்பார் வள்ளுவப் பெருந்தகை ! நாளும் விருந்து வந்தால் நான் என்ன செய்வேன்;
என் தோள்களில் வலுவில்லையே !
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம்(சித்திரை)28]
{11-05-2020}
----------------------------------------------------------------------------------------------
வே.இளம்பரிதி.பிறப்பு: 09-01-1976
(அன்று)
வே.இளம்பரிதி .B.Tech
(இன்று)
நாகப்பட்டினம் அ.தொ.ப.நிலைய
முதன்மைக் கட்டடம் !
நான்கு மாதக் குழந்தையான
பரிதியுடன் நானும்
என் மனைவியும் மன்னையிலிருந்து
சேரன்குளம் நோக்கி இரவு பத்து மணிக்கு
மாட்டு வண்டியில் பயணம் !
பண்டகத்தில்
மாட்டி வைத்திருந்த பெரியார்
படம் போட்ட நாள்காட்டி !
தேள் கொட்டினால் வலிக்கும்;
உயிர் கூடப் போகுமா ?
நெருக்கடி நிலை காரணமாக
பயிற்சி நிலையம் முனைப்பாக
இயங்கியது !
No comments:
Post a Comment