தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் - 1964-1965 நிகழ்வுகள் !
(சுவடு.12) பாபநாசத்தில் பணியேற்பு !
1962 - 63 -ஆம் கல்வியாண்டில் நான் கல்லூரி விடுதியில்
தங்கியிருந்த போது எனக்கு அடுத்த அறையில் பன்னாள் திரு.வே.இளங்கோவன், மதுக்கூர் திரு.வே.சீதாபதி, ஆம்பலாப்பட்டு திரு.இரா.வைரக்கண்ணு ஆகியோர் தங்கி இருந்தனர்.
திரு.எஸ்.இராமலிங்கம் என்ற
முன்மையரும் (SENIOR) அதில் தங்கி இருந்தார் !
இப்போதும் கூட தஞ்சையிலுள்ள
இந்தக் கல்லூரி விடுதிக்கு முன்புறச் சாலையில் பாவையுருளியிலோ (SCOOTY) சீருந்திலோ (CAR) நான் செல்கையில், விடுதியையும், அதில் தங்கியிருந்த போது என்னுடன் பழகிய
நண்பர்களையும் நினைக்கையில் ஒரு பெருமூச்சு தானாகவே என்னிடமிருந்து வெளிப்படுகிறது !
புகுமுக வகுப்பில் கணிதப்
பிரிவு எடுக்கவில்லை என்பதால், பல்தொழில் பயிலகத்தில் சேர
நான் முயலவில்லை. மாமாவும் நிலைமையை உணர்ந்து கொண்டு வலியுறுத்த வில்லை. மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பெயரைப் பதிவு செய்து வைக்க மாமாவுக்கு விருப்பமில்லை
– ஏனெனில் எனக்குத் தான் அரசு வேலை கிடைக்காது என்று கணியன் (சோதிடர்) சொல்லிவிட்டாரே
!
இந்த நிலையில் மாமாவின்
உறவினரான திரு.வைரக்கண்ணு என்பவர் ஒருநாள் என்னிடம் வந்து,
திருத்துறைப் பூண்டி பேரூராட்சியில் எழுத்தர் பணியிடம் ஒன்று வெட்புலமாக
(VACANT) இருக்கிறது, அதில் சேர்த்து விடுகிறேன்,
வேலை வாய்ப்பகத்தில்
பதிவு செய்திருக்கிறாயா என்று கேட்டார் ! அவர் திராவிடர் கழக ஆதரவாளர். தையற்கடை வைத்திருந்தார். மனித நேயமும் பண்பாடும் மிக்க உயர்ந்த மனிதர் !
நான் நிலைமையைச் சொன்னேன். மாமாவிடம் சென்று கடுமையாகச் சினத்தை வெளிப்படுத்தினார். கணியன் (சோதிடர்)
சொன்னதை நம்பி பையன் வாழ்வைச் சீரழித்து விடுவீர்கள் போல் தோன்றுகிறதே
என்று சாடிவிட்டார் !
அவ்வளவு தான் ! மறு நாள் மாமா என்னிடம் ஐந்து உருபா கொடுத்து தஞ்சாவூர் சென்று வேலை வாய்ப்பகத்தில்
பதிவு செய்துவிட்டு வா என்று பணித்தார். திருத்துறைப் பூண்டியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள தஞ்சாவூருக்குப் போக வரப் பேருந்துக் கட்டணம் நண்பகல் சாப்பாட்டுச் செலவு உள்பட அனைத்துச் செலவுகளும் உருபா ஐந்துக்குள் அடக்கம் என்பதை நினைத்துப் பாருங்கள் ! 1964
ஆம் ஆண்டு சனவரி மாதம் 6 –ஆம் நாள் சென்று பதிவு
செய்து வந்தேன் !
பதிவு செய்தமைக்காக எனக்குத்
தரப்பட்ட வேலை வாய்ப்பக அட்டை 56 ஆண்டுகளாக என் கோப்பில்
பாதுகாப்பாக இருக்கிறது. உங்களில் சிலருக்கு இது வேடிக்கையாகத்
தோன்றலாம். இந்தத் தொடரில் நான் குறிப்பிடும் நாள், மாதம், ஆண்டு ஆகியவை என்னிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில்
தான் பதிவு செய்யப்படுகிறது; ஊகமாக எழுதப்படுவது அன்று !
சீனா நமது அண்டை நாடு. அந்த நாட்டுடன் இந்தியத்
தலைமை அமைச்சர் நேரு நட்புடன் பழகி வந்தார். சீனத் தலைவர்களின்
மீது மிகுந்த மதிப்பையும் வைத்திருந்தார். அப்படி இருந்தும், சீனா
இந்தியா மீது 1962 ஆம் –ஆண்டு படை எடுத்து வந்து நாட்டின் வட எல்லையில்
சில பகுதிகளை வலிந்து பற்றிக் கொண்டது. இதனால் நேரு கடுமையான
மன உளைச்சல் அடைந்தார்; இதன் விளைவாக அவரது உடல் நலம் குன்றத்
தொடங்கியது !
மனம் புண்பட்டிருந்த நேரு
இறுதியில் 1964 -ஆம் ஆண்டு மே மாதம் 27 -ஆம் நாள் இறந்து போனார். நாடே துன்பத்தில் ஆழ்ந்தது.
அப்போது எனக்கு அகவை 20. நேரு மறைவைப் பற்றி ஒரு
பாடல் எழுதி, சுதேசமித்திரன் நாளிதழுக்கு அனுப்பினேன்.
அப்போது சுதேசமித்திரனில் ஞாயிறு தோறும் மாணவர் மலர் என்று ஒரு பகுதி
வெளிவந்து கொண்டிருந்தது. அதில் என் பாடல் வெளியாகி இருந்தது
!
அக்காலத்தில் (1950 -ஆம் ஆண்டு) வெளிவந்த
பார்த்திபன் கனவு என்னும் படத்தில் ”இதய வானின் உதய
நிலவே எங்கே போகிறாய்.....” என்று ஒரு துன்பியல் பாடல் இடம் பெற்றிருந்தது.
அதே இசையில் “எமது நெஞ்சில் நிறைந்த தலைவா எங்கே
போனாயோ....” என்று தொடங்கும் அந்தப் பாடல் ! என் வாழ்க்கையில் நான் முதன்முதல் எழுதிய அந்தப் பாடலின் பிற வரிகளும் நினைவில்
இல்லை; எழுதிய தாளும் என்னிடமில்லை; வெளிவந்த
சுதேசமித்திரன் நாளிதழின் படியும் (COPY) இப்போது என்னிடம் இல்லை ! என்
மனக் குறைக்குத் தீர்வு தான் ஏது ?
1964 சனவரி மாதம்
நான் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ததன் விளைவாக, தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவுத் தணிக்கை அலுவலகத்திலிருந்து ஆகத்து மாதம் 5 –ஆம்
நாள் நேர்காணலுக்கு வருமாறு எனக்கு அழைப்பாணை கிடைத்தது. நேர்காணலில்
கலந்து கொண்டேன் !
கூட்டுறவுச் சங்கங்களின் வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, ஐந்தொகை நிலையை (BALANCE SHEET) இறுதிசெய்து, சங்கத்தின் நிகர ஆதாயம் / இழப்பை (PROFIT / LOSS) முடிவு செய்யும் பணி, தணிக்கைப் பிரிவு இளநிலை ஆய்வாளர் (JUNIOR INSPECTOR - AUDITOR) உடையது. இப்பணிக்கு நான் தேர்வானேன். இதற்கான பணியமர்த்த ஆணை (APPOINTMENT ORDER) ஆகத்து 7 அன்று எனக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் எனக்குப் பணியிடம் ஒதுக்கீடு செய்து இன்னொரு ஆணை ஆகத்து மாதம் 11 –ஆம் நாள் கிடைத்தது !
கூட்டுறவுச் சங்கங்களின் வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, ஐந்தொகை நிலையை (BALANCE SHEET) இறுதிசெய்து, சங்கத்தின் நிகர ஆதாயம் / இழப்பை (PROFIT / LOSS) முடிவு செய்யும் பணி, தணிக்கைப் பிரிவு இளநிலை ஆய்வாளர் (JUNIOR INSPECTOR - AUDITOR) உடையது. இப்பணிக்கு நான் தேர்வானேன். இதற்கான பணியமர்த்த ஆணை (APPOINTMENT ORDER) ஆகத்து 7 அன்று எனக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் எனக்குப் பணியிடம் ஒதுக்கீடு செய்து இன்னொரு ஆணை ஆகத்து மாதம் 11 –ஆம் நாள் கிடைத்தது !
பாபநாசம் சென்று
1964 ஆம் ஆண்டு ஆகத்து மாதம், தணிக்கைப் பணி இளநிலை ஆய்வாளராகப் பணியேற்றேன்.
இப்பணியமர்வு முற்றிலும் அன்னிலைத் தன்மை (TEMPORARY) வாய்ந்தது. அங்கு முதுநிலை ஆய்வாளராக இருந்த திரு.இராமசாமி என்பவர் ஒரு வாரம் எனக்குப் பயிற்சிக் கொடுத்தார். பின்பு நானே தனியாகத் தணிக்கைப் பணியை மேற்கொள்ளத் தொடங்கினேன். பாபநாசம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் தணிக்கைப் பணிகளுக்காக
நான் சென்றிருக்கிறேன் !
இவ்வாறு நான் சென்ற ஊர்களில்
ஒன்று தான் உத்தமதானபுரம். தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும்
உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த ஊர். அவர் பிறந்த வீட்டிற்கும் சென்று பார்வை இட்டிருக்கிறேன் !
தணிக்கை நிமித்தம் நான் சென்றிருந்த
பல்வேறு ஊர்களுள்ளும் தமிழ்நாடெங்கும் மிகப் பரவலாகப் பெயர் தெரிந்த ஊர்கள் அம்மாப்பேட்டை,
சாலியமங்கலம், இரும்புதலை, ஒன்பத்துவேலி, பொன்மான் மேய்ந்த நல்லூர், மெலட்டூர், அய்யம்பேட்டை, திருக்கருகாவூர்,
பசுபதிகோயில், சூலமங்கலம், வீரமாங்குடி, கவித்தலம், வாழ்க்கை,
வலங்கிமான், இராசகிரி, இன்னும் பல !
பாபநாசத்தில் “வன்னியர் மாளிகை” என்னும் வாடகைக் கட்டடத்தில் நான் தங்கியிருந்தேன்
இங்கு 16 அறைகள் இருந்ததாக நினைவு ! அறை
வாடகை உருபா பத்து. ”சரவணபவன்” என்னும்
உணவகத்தில் சாப்பாடு ! இங்கு நான் தங்கி இருந்த போது பல துறைகளையும் சார்ந்தோர் எனக்கு நண்பர்கள் ஆனார்கள் !
அவர்களுள் இன்னும் என் நினைவில் நிற்போர், மலைச்சுர (மலேரியா) ஒழிப்புத் துறை களப்பணி நண்பர்கள் அம்மாப்பேட்டை திரு.எஸ்.சுந்தரமூர்த்தி, துகிலி திரு.ந.காசிநாதன், ஊராட்சி ஒன்றியக் கணக்கர் திரு.கதிரேசன், ஒன்றியத் தச்சு அலகுப் பயிற்றுநர் திரு.சக்கரியாசு, நில அளவையர் திரு.கல்யாணராமன் ஆகியோர். கோடைக்காலத்தில், இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு அனைத்து நண்பர்களுமாகச் சென்று குடமுருட்டி ஆற்று மணலில் சிலு சிலுவென்று வீசும் காற்றில் படுத்துக் கொண்டு நிரம்பப் பேசுவோம் ! இப்போதும் கூட பாபநாசம் வழியாக வெளியூர் செல்கையில் “வன்னியர் மாளிகை”யைப் பார்த்து பழைய நினைவுகளில் மூழ்கிவிடுகிறேன் !
அவர்களுள் இன்னும் என் நினைவில் நிற்போர், மலைச்சுர (மலேரியா) ஒழிப்புத் துறை களப்பணி நண்பர்கள் அம்மாப்பேட்டை திரு.எஸ்.சுந்தரமூர்த்தி, துகிலி திரு.ந.காசிநாதன், ஊராட்சி ஒன்றியக் கணக்கர் திரு.கதிரேசன், ஒன்றியத் தச்சு அலகுப் பயிற்றுநர் திரு.சக்கரியாசு, நில அளவையர் திரு.கல்யாணராமன் ஆகியோர். கோடைக்காலத்தில், இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு அனைத்து நண்பர்களுமாகச் சென்று குடமுருட்டி ஆற்று மணலில் சிலு சிலுவென்று வீசும் காற்றில் படுத்துக் கொண்டு நிரம்பப் பேசுவோம் ! இப்போதும் கூட பாபநாசம் வழியாக வெளியூர் செல்கையில் “வன்னியர் மாளிகை”யைப் பார்த்து பழைய நினைவுகளில் மூழ்கிவிடுகிறேன் !
பாபநாசம் வாழ்க்கை தான், எனக்கு உலகம் என்றால் என்னவென்று காட்டியது. அதுவரைக்
கிணற்றுத் தவளையாகவே இருந்து வந்திருக்கிறேன். தமிழ்நாடு அரசு
அலுவலகங்களில் நிலையான பணி வாய்ப்பைப் பெற வேண்டுமானால், தமிழ்நாடு
தேர்வாணைக் கழகம் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை இங்கு தான் நான் தெரிந்து
கொண்டேன் !
இதன்பொருட்டு, தேர்வானைக் கழகத்திற்குச் சிலமுறை விண்ணப்பங்களும் அனுப்பி இருக்கிறேன். சிலமுறை தேர்வெழுதியும் இருக்கிறேன்; சிலமுறை நேர்காணலுக்கும் சென்றிருக்கிறேன் !
இதன்பொருட்டு, தேர்வானைக் கழகத்திற்குச் சிலமுறை விண்ணப்பங்களும் அனுப்பி இருக்கிறேன். சிலமுறை தேர்வெழுதியும் இருக்கிறேன்; சிலமுறை நேர்காணலுக்கும் சென்றிருக்கிறேன் !
தேர்வாணைக் கழகத்தின் தொகுதி IV
–இன் கீழ் வரும் எழுத்தர் (இளநிலை உதவியாளர்)
பணியிடத்திற்கான தேர்வினை கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில்
1964 –ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 –ஆம் நாள் எழுதினேன்.
இதில் நான் தேர்ச்சி பெற்றேன் !
இதன் விளைவாக, கடலூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் எழுத்தராக (இளநிலை உதவியாளர்) எனக்குப் பணியிடம் அளித்து தேர்வாணைக்
கழகம் 1965 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் நாளிட்ட ஒதுக்கீட்டு ஆணையை
எனக்கு அனுப்பி வைத்தது !
இதற்கிடையில் தேர்வாணைக்
கழகத்தின் தொகுதி III –இன் கீழ் வரும் கூட்டுறவுத்
தணிக்கைத் துறை முதுநிலை ஆய்வாளருக்கான எனது விண்ணப்பத்தைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வுக்குச் சென்னை வருமாறு அழைப்பாணை கிடைத்தது !
சென்னை வேப்பேரியில் உள்ள
புனித பால் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறும் என்றும், தேர்வுகள் 19-04-1965 தொடங்கி 24-04-1965 வரை ஆறு நாள்கள்
நடைபெறும் என்றும் தெரிவித்து, தேர்வு அட்டவணையும் எனக்கு அனுப்பப்
பட்டிருந்தது !
சென்னையைத் திரைப்படங்களில்
மட்டுமே பார்த்திருந்த நான் முதன்முதல் தனியாளாகச் சென்னைக்குச் செல்கிறேன். அப்பொழுது எனக்கு அகவை 21. அய்யம்பேட்டையைச் சேர்ந்த
நண்பர் திரு.கிருட்டிணமூர்த்தி என்பவர், தனது அண்ணன் சென்னையில் கிள்ளியூரில் (கெல்லீஸ்))
இருப்பதாகச் சொல்லி, அவருக்கு ஒரு கடிதமும் கொடுத்தார்
!
எழும்பூரில் இருப்பூர்தியிலிருந்து
(TRAIN) இறங்கிய நான் தட்டுத்
தடுமாறிக் கிள்ளியூர் போய்ச் சேர்ந்தேன். திரு.கிருட்டிண மூர்த்தியின் அண்ணனைச் சந்தித்தேன். அவர் தங்கியிருந்த வீடு 10’ X 10’ அளவுள்ள ஒற்றையறை வாடகை வீடு. குடும்ப உறுப்பினர்கள்
அவர், அவரது மனைவி மற்றும் மூன்று சிறு குழந்தைகள். வீட்டுக்கு வெளியே இரண்டு எருமைகள். வீட்டு உரிமையாளருக்கு
பால் கறவைத் தொழில் போலும் ! இந்த நிலையில் என்னையும் தங்கவைக்க
அவர் வீட்டில் இடம் போதாது !
அவருக்கும் மனத் துன்பம்; எனக்கும்
மனத் தயக்கம். சில நிமிடப் பேச்சுக்கிடையே வேப்பேரி கால்நடை மருத்துக்
கல்லூரி விடுதியில் என் நண்பர் இருப்பதாகச் சொன்னேன். அவர் முகத்தில்
கதுமென்று (திடீரென்று) ஒரு மகிழ்ச்சி ஒளி
! ”இங்கே அருகில் தான் அந்த விடுதி இருக்கிறது. அவரைச் சென்று பார்க்கலாமா ?” அவர் தான் பேசினார்.
உடனே புறப்பட்டோம் அரைமணி நேர நடை. விடுதிக்குச்
சென்றோம். கல்லூரி விடுதியில் இருந்த
என் பள்ளி நண்பர் தாணிக்கோட்டகம் திரு.இரெ.இராசேந்திரனைக் கண்டுபிடித்தோம். கல்லூரி விடுதி விருந்தினர் அறையில் தங்கிக் கொள்ள அவர் ஏற்பாடு செய்தார். கிள்ளியூர்
நண்பர் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சியொளி; என் முகத்தில் நிம்மதி
உணர்வு இழைகள் ! அப்புறம் என்ன ? அந்தக் காலை நேரத்துப் பரபரப்பான நிமிடங்கள் கரைந்து போயிற்று !
விடுதியிலேயே ஒருவாரம் தங்கித் தேர்வுகளை எழுதிவிட்டு ஊர் திரும்பினேன் !
திருத்துறைப்பூண்டி
அன்னபூரணி மாணவர் விடுதியில் எனது 16 ஆம் அகவையில்
தொடங்கிய நண்பர் இராசேந்திரனின் நட்பு, அறுபது ஆண்டுகளுக்கு மேல்
நீடித்தது; கால்நடைப் பேணல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், 2006 –ஆம்
ஆண்டில் இறக்கும் வரைத் தொடர்ந்தது ! நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஒப்பற்றப் பெருந்தகை, நான் வாழ்க்கையில் சந்தித்த மாசில்லா மணி, 2006 -ஆம் ஆண்டு, கனவாகக் கரைந்து போயிற்று !
எழுதிய தேர்வின் முடிவுக்காகப்
பாபநாசத்தில் காத்திருந்தேன். ஒரு நாள் வானொலிச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில் இன்றைய அணிகலன் தங்கத்தின் விலை ஒரு பவுன் உருபா 56/- என்னும் செய்தி காதில் விழுந்தது. இப்போது வாங்கி என்ன செய்யப் போகிறோம் என்று தோன்றியது. அடுத்த செய்திக்குக் காதுகொடுக்கலானேன் !
கடலூர் காவல் கண்காணிப்பாளரிடமிருந்து பணியில் சேருமாறு அறிவுறுத்திக் கடிதங்கள் வரத் தொடங்கின. நினைவூட்டுக் கடிதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சீரான இடைவெளியில் வந்துகொண்டே இருந்தன ! என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன் !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),18]
{01-05-2020}
--------------------------------------------------------------------------------------------
பாபநாசத்தில் பணி !
பாலைவனநாதர் கோயில் பாபநாசம்
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,
தஞ்சாவூர்
தஞ்சாவூர், வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் 1964 -ஆம் ஆண்டு
நான் பதிவு செய்து
கொண்ட அட்டை !
பாபநாசம் குடமுருட்டி ஆறு
உ.வே.சா.
No comments:
Post a Comment