name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (04) :1953 -1954 நிகழ்வுகள் - உயிருக்கு வந்த ஊறு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, March 28, 2020

காலச் சுவடுகள் (04) :1953 -1954 நிகழ்வுகள் - உயிருக்கு வந்த ஊறு !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1953 - 1954 நிகழ்வுகள் ! 

  (சுவடு.04) உயிருக்கு வந்த ஊறு !

----------------------------------------------------------------------------------------------

1953 –ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த போது, அக்டோபர் மாதம் ஒரு மறக்கவியலா நிகழ்வு ! நண்பகல் இடைவேளையின் போது, உணவு அருந்துவதற்காகப் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்திருந்தேன் ! 

வீட்டிற்கு மேற்கே ஐம்பது அடி தொலைவில்  தரைமட்டத்தில் செங்கல் கிணறு ஒன்று !  இருபது அடி ஆழம்; அதில் பதினைந்து அடிக்கு நீர் நிரம்பி இருந்தது ! அப்போது எனக்கு அகவை பத்து !

குளிப்பதற்காக, தாம்புக் கயிற்றில் பிணைத்த செம்புடன் கிணற்றடிக்குச் செல்கிறேன் ! புல் பத்தை போர்த்திய கிணற்று விளிம்பில் ஒரு காலும், குறுக்கு மரத்தில் ஒரு காலுமாக, கிணற்றிலிருந்து நீர் எடுக்க முனைகிறேன் !

விளிம்பில் படர்ந்திருந்த புல் பத்தை என் கால் அழுத்தத்தைத் தாங்காமல் விண்டுபோய் கிணற்றுக்குள் விழுந்தது.  பத்தையில் கால் வைத்திருந்த நானும் அத்துடன் சேர்ந்து விழுந்தேன். எனக்கோ நீச்சல் தெரியாது; ஆழமோ  அதிகம் ! தத்தளித்துப் போய்  நீரில் மூழ்கத் தொடங்கினேன் !

நான் கிணற்றில் குளிக்க வந்ததையும், அதன் தொடர் நிகழ்வுகளையும் தொலைவில் வரப்பில் அமர்ந்து தற்செயலாகப் பார்த்துக் கொண்டிருந்த நடுப் பெரியப்பா  வீட்டுத் தமக்கையார் திருமதி.பாலசுந்தரி, அங்கிருந்தபடியே கூக்குரலிட்டார் !

ஐயய்யோ ! தம்பி வேதரெத்தினம் கிணற்றில் விழுந்திடுச்சி !”. அவ்வளவுதான் ! அங்கு வயலில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும், என் தாயாருள்பட ஓடி வந்தனர் !

ஓடி வந்தவர்களில் முதலில் கிணற்றில் குதித்தவர் என் தாயார் சாரதா அம்மையார் ! மூழ்கிக் கொண்டிருந்த என்னைப் பற்றியிழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு கிணற்றின் பக்கச் சுவர் நோக்கி நீந்தி விரைந்து, கற்களின் இடுக்கில் விரல்களைச் செருகிப் பிடித்துகொண்டார் !

இந்த இடைப்பட்ட நேரத்தில் என் தந்தை உள்பட மற்றவர்கள் நீண்ட மூங்கில்கோல், வலிமையான தாம்புக் கயிறு, ஏணி முதலிவற்றைக் கொணர்ந்து, கிணற்றுக்குள்ளிருந்து  இருவரையும் மீட்டனர் !

ஆண்கள் பலபேர் கூடிவிட்ட அந்த வேளையிலும், என் தாயாரைத் தவிர வேறு யாரும் ஏன் கிணற்றுக்குள் குதிக்க முயலவில்லை ? இது விடை தெரியாத வினாவாகவே இன்றளவும் இருந்து வருகிறது !

செய்தி கேட்டுப் நிறையப்பேர் கூடிவிட்டனர். அனைவருமே என் தாயாரின் துணிச்சலை வெகுவாகப்  பாராட்டினர். நான் கிணற்றிலிருந்து நீர் எடுத்துக் குளிக்க முற்பட்டதிலிருந்து, உள்ளே விழுந்தது வரைத் தற்செயலாகப் பார்த்துக் கொண்டிருந்த   தமக்கையார் பாலசுந்தரியின் கூக்குரலால் தான் அன்று எனக்கு மறுவாழ்வு கிடைத்தது

தமக்கையார் பாலசுந்தரி அம்மையார் இப்போது பஞ்சநதிக்குளம் நடுச் சேத்தியில், தன் மகன்கள்  பெயரன், பெயர்த்திகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் நான் தான் அவரைப் பார்த்து 65 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவரை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் என் மனதில்  இன்று வரை இருந்து வருகிறது ! 

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இறப்பு என்பது எத்துணையோ முறை வீட்டு வாயில் வரை வந்து கதவைத் தட்டிப் பார்த்து விட்டுத் திரும்பிப் போய்க்கொண்டே இருக்கிறது. அப்போதெல்லாம் அவன் பிழைத்துக் கொள்கிறான். என் வாழ்விலும் 1953 ஆம் ஆண்டு அத்தகைய வாய்ப்பு வந்து போனதைப் பற்றி இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது !

ஒருவாரம் வீட்டிலேயே தங்கி மனதில் ஏற்பட்ட பயம் விலகிய பிறகு தான் மீண்டும் பள்ளிக்குச் செல்கிறேன். ஆசிரியர் திரு.சிதம்பர தேவர் அருகில் வந்து முதுகில் தட்டிக் கொடுத்து, பயப்படாதே, உனக்கு ஒன்றும் ஆகாது என்று ஆறுதல் சொன்னார் !

வகுப்பில் படிக்கும் மாணாக்கர்கள் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டு கவலையுடன் பார்த்தனர் ! அப்பொழுது எனக்குத் தோன்றியது, ”எந்த நொடியிலும் எதுவும் நடக்கும்; நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.!“:

ஐந்தாம் வகுப்புத் தேர்வினை 1954 ஆம் ஆண்டு எதிர்கொண்டு, வகுப்பில் முதன் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், தலைமை ஆசிரியரான திரு.சிதம்பர தேவர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் என்னைப் பாராட்டியதும் என் நினைவுகளில் பதிந்திருக்கும் அழியாத கோலங்களாகும் !

1952 நவம்பர் புயலின் பின்விளைவுகள் கடிநெல்வயலை அலைக்கழிக்கத் தொடங்கின. நெல் விளைச்சல் குறைந்தது; மக்களுக்கு உணவுக்குத் தேவையான நெல்லை அவர்களின் வயலிலிருந்து விளைவிக்க முடியவில்லை !

ஊருக்கே குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த ஆலடிக் குளம் தூர்ந்து கரைகள் உடைந்து கிடந்தன. குளத்தின் வடகிழக்கு மூலையில் இருந்த மிகப் பெரிய ஆலமரமும் அரச மரமும் வீழ்ந்துவிட்டதால் குளக்கரை அதன் வீறினை இழந்து காணப்பட்டது ! 

ஊரிலிருந்த மரங்களில் பாதிக்கு மேல் வேரோடு விழுந்து அழிந்து போனமையால், சோலைவனமாக இருந்த ஊர், கோடைக் காலத்தில் பாலை  நிலமாகக் காட்சி அளிக்கத் தொடங்கியது.  கோடைக் காலச் சாகுபடி பாதியாகக் குறைந்து விட்டது. மொத்தத்தில் வளம் குன்றிய ஊராகக் கடிநெல்வயல் மாறிப் போயிற்று !

--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),10]
{23-04-2020}
----------------------------------------------------------------------------------------------
உயிருக்கு  உலை வைக்கத் துணிந்த கிணறு !

உயிருக்கு வந்த ஊறு

வயலில் வேலை செய்யும்  மகளிர்

தூர்ந்து போன ஆலடிக்குளம்
களராகிப் போன விளை நிலம்










                       

No comments:

Post a Comment