name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (34) :1995,1996 நிகழ்வுகள் - குரும்பப்பட்டி !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Monday, March 30, 2020

காலச் சுவடுகள் (34) :1995,1996 நிகழ்வுகள் - குரும்பப்பட்டி !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1995-1996 நிகழ்வுகள் !

(சுவடு.34) குரும்பப் பட்டி !

---------------------------------------------------------------------------------------------

சேலம் வெள்ளி நகைகளுக்குப் புகழ் பெற்ற நகரம். குறிப்பாகக் கால் கொலுசுகள் உருவாக்கம் தமிழகத்திலேயே இங்கு தான் அதிகம். சேலத்தில் செவ்வாய்ப் பேட்டை என்னுமிடத்தில் நகைப்பட்டறைகள் நிரம்ப இயங்கி வந்தன !

அதுபோன்றே, “லீ பஸார்” (LEE BAZAAR) என்னும் வணிக வளாகம் சில்லறை மற்றும் மொத்த வணிகத்திற்குப் புகழ் பெற்ற இடம் ! ஒரு சிற்றூர் அளவுக்குப் பரந்து விரிந்த வணிக வளாகம் !

சேலம் பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஏற்காடு ஒரு மலை வாழிடம். ஏறத்தாழ 20 கி.மீ மலைச் சாலை அமைந்துள்ள  இவ்வழித் தடத்தில் 20 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 1623 மீட்டர் (5326 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவும் இடம் !

சேலத்தில் 15-07-1981 முதல் 02-05-1984 வரை பண்டகக் காப்பாளராகவும், 08-04-1987 முதல் 05-05-1992 வரை அலுவலக மேலாளராகவும், 11-06-1993 முதல் 26-11-1996 வரை மீண்டும்  அலுவலக மேலாளராகவும், மொத்தம் 11 ஆண்டுகள், 03 மாதம், 09 நாள் பணியாற்றி இருக்கிறேன். குடியிருப்பை மாற்றாமால் ஈரோட்டுக்குச் சென்று வந்த ஓராண்டையும், ஓசூருக்குச் சென்று வந்த 6 மாதங்களையும் சேர்த்தால் மொத்தம் 12 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேல் சேலத்தில் நானும் என் குடும்பத்தினரும் வாழ்ந்திருக்கிறோம் !

சேலத்தின் நாங்கள்  இருக்கையில் பல உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். இவ்வாறு வருகின்ற உறவினர்களை ஏற்காடு, மேட்டூர் அணை, போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றுக் காண்பித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். எங்களுக்கும் இதில் மகிழ்ச்சி, அவர்களுக்கும் புதிய இடங்களைச் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சி ! மகிழ்ச்சி தானே இனிய வாழ்வுக்கும் உறவுமுறை வளர்ச்சிக்கும் அடிப்படை !

1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் என் தங்கை திருமதி.கல்யாணி – இடும்பாவனம் ஆசிரியர் திரு.இராமமூர்த்தி இணையரின் மூத்த மகள் செல்விக்கும், தகட்டூர் ஆதியங்காடு திரு.எஸ்.கே.இராமு அவர்களின் மகன் திரு.நெடுஞ்செழியனுக்கும் திருமணம் நடைபெற்றது. இடும்பவனத்தில் நடைபெற்ற இத் திருமணத்திற்கு நான் என் குடும்பத்தினருடன் சென்றிருந்தேன் !

இத்திருமணம் முடிந்து சேலம் திரும்பிய 20 ஆவது நாளில், அதாவது 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் கடிநெல்வயலில் பெரியம்மா மாரிமுத்து அம்மையார் காலமான செய்தி கிடைத்தது. உடனடியாக பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு செல்ல முடியாததால், நான் மட்டும் சென்று வந்ததாக நினைவு !

சேலத்தில் நாங்கள் குடியிருந்த இடத்தின் பெயர் அய்யந்திருமாளிகை. இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் மலையடிவாரத்தில் குரும்பப்பட்டி என்னுமிடத்தில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இப்பூங்காவில் மான், நரி, யானை, புனுகு பூனை, மரநாய், முயல், வெள்ளை எலி போன்ற விலங்குகளும் வண்ண மயில், வெள்ளை மயில், பல்வண்ணக் கிளிகள், பைங்கிளிகள், மாடப்புறா,  போன்ற பறவைகளும் வளர்க்கப்பட்டு வந்தன. அழகிய பரந்த பூங்காவும் பேணப்பட்டு வந்தது !

விடுமுறை நாள்களில், இப்பூங்காவுக்குக் குடும்பத்தினருடன் சென்று வருவது வழக்கம். இவ்வாறு ஒரு நாள் சென்று மாலையில் மீள்கையில் வழியில்சில்வர் பிளஸ்உந்தூர்தியில் கன்னெய் (PETROL) தீர்ந்துவிட்டது. இதையறியாமல், நான் கிளர்த்தியை (STARTER) பலமுறை உதைத்து உதைத்து கால் சோர்ந்து போனேன்.  அந்த இடத்தில் ஒரேயொரு வீடு மட்டுமே இருந்தது !

வீட்டில் அமர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த, வீட்டுக்காரர், அங்கிருந்து என்னிடம் வந்து, என்ன ஆயிற்று என்று உசாவி அறிந்தார். பிறகு வண்டியின் எண்ணெய்க் கலனை ஆய்வு செய்து விட்டு, சற்று இருங்கள் என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றார். அங்கு நிறுத்தியிருந்த தனது உந்தூர்தியிலிருந்து (MOTOR BIKE) கன்னெய்யை உறிஞ்சி எடுத்து ஒரு புட்டிலில் எடுத்து வந்து  என் வண்டியில் ஊற்றி, வண்டியை இயக்கித் தந்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார் !

அவரை மறித்து நிறுத்தி, கன்னெய்க்கு உரிய பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டினேன். அவர் மறுத்துவிட்டு, விடைபெற்றுச் சென்றுவிட்டார். சேலம் மக்களின் அன்பையும், இனிய பழக்கத்தையும், பிறருக்கு உதவும் குணத்தையும்  பற்றிக் காலச் சுவடுகளில் முன்பொரு முறை சொல்லி இருக்கிறேன். என் மதிப்பீட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது இந்த நிகழ்வு ! என் வாழ்நாளில் மறக்கமுடியாத இடம் சேலம்; மறக்க முடியாத மக்கள் சேலத்து மக்கள் !

பயிற்சி நிலையத்திலும் என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகிய  தொழில்நுட்ப அலுவலர்கள் பலர் உண்டு. பயிற்சி அலுவலர்கள் திரு.திருப்பதி, திரு..நடராசன், திரு.இரா.வெங்கடசுப்பன், திரு.தருமராஜ் ஆகியோர் அவர்களில் சிலர் !

பணிமனையில் திருவாளர்கள் எஸ்.மாரியப்பன் (TURNER), வி.சிலம்பன், கே.சுப்ரமணியன், .மூர்த்தி,  (FITTER), பிலிப்ஸ், பிரகாஷ் (ELECTRICIAN), ஜனார்த்தனம் (M.M.V), கோ.சின்னப்பிள்ளை, முகமது உசேன் (WELDER), .இராசரத்தினம், இராமதாசன் பிள்ளை  (WIREMAN) கே.ஆர்.அமிர்தராசன் (MACHINIST – GRINDER), இராதாகிருட்டிணன், ஆதிகேசவன் (ALIED TRADE), கருப்பண்ணன், ப.இராசேந்திரன் (DRAWING) மற்றும் பலர் இன்னும் என் நினைவில் நிழலாடுகிறார்கள் !


அரசியல் களத்தையும் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். தமிழ்நாட்டில் அரசியல் ஆடுகளத்தில் வெப்பம் ஏறிக் கொண்டிருந்தது. செயலலிதா ஆட்சி மீது மக்களின் வெறுப்பும் சினமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தன. சசிகலாவும் அவரது உள் வட்டத்தினரும் ஒருபக்கம் ஆட்சியில் தலையீடு செய்து அதிகாரிகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தனர் !

இன்னொரு பக்கம் சொத்துக் குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். திரு.கங்கை அமரனின் பையனூர் வளமனை பறிக்கப்பட்டது போல், பல இடங்களில் நிகழ்ந்தன. இவற்றை எல்லாம் முதலமைச்சராக இருந்த செயலலிதா கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் கருதினர் !

செயலலிதாவே சொத்துக்குவிப்புச் செயல்களில் ஈடுபட்டதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டினர். “டான்சிஎன்னும் அரசு நிறுவனத்தின் நிலத்தை அவரே கிரயம் செய்துகொண்டார். உதகமண்டலம்பிளசண்ட் ஸ்டேஉடுவிடுதி (STAR HOTEL) வழக்கில் செயலலிதா நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார். சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனை வளர்ப்புப் பிள்ளையாகத் தத்து எடுத்தார். கோலாகலமாக வளர்ப்புப் பிள்ளைக்குத்  திருமணம் செய்து வைத்தார் !

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. செல்வாக்குச் சரிந்து போயிருந்த அ...தி.மு..வுடன் கூட்டணி என்று இந்தியப் பேராயக் கட்சித் தலைவர் பி.வி.நரசிம்மராவ் அறிவித்தார். அவர் முடிவை ஏற்காத கோ..கருப்பையா மூப்பனார் இந்தியப் பேராயக் கட்சியிலிருந்து வெளியேறி, தமிழ்மாநிலக் காங்கிரசு என்னும் கட்சியை உருவாக்கி தி.மு..வுடன் கூட்டணி வைத்தார் !

சட்ட மன்றத் தேர்தல் 1996 மே மாதம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அ...தி.மு..வைக் குப்புறத் தள்ளியது. தி.மு.. 173 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான தமிழ் மாநிலக் காங்கிரசு 39 இடங்களிலும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 8 இடங்களிலும் வென்றன. ...தி.மு.. 4 இடங்களை மட்டுமே பெற்றது. பிற கட்சிகள் 10 இடங்களைப் பெற்றன. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட செயலலிதாவே 8639 வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தோற்றுப் போனார்.  கருணாநிதி நான்காவது முறையாக முதலமைச்சர் ஆனார் !

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச. 161 இடங்களிலும், இந்தியப் பேராயக் கட்சி 140 இடங்களிலும் வென்றிருந்தன. எதிர்க் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து ஐக்கிய சனநாயகக் கூட்டணி  ஒன்றைத் தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் அமைத்தன. ..கூட்டணி சார்பில் தேவ கவுடா இந்தியத் தலைமை அமைச்சர் ஆனார். அவரை இந்தியப் பேராயக் கட்சி, அமைச்சரவையில் சேராமல், வெளியில் இருந்து ஆதரித்தது !

எச்.டி.தேவகவுடா தலைமையிலான இந்த அமைச்சரவையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த முரசொலி மாறன் (திமுக), ஜி. வெங்கட்ராமன் (திமுக), டி ஆர் பாலு (திமுக),  என். வி .என். சோமு (திமுக), ஆகியோரும்  ப. சிதம்பரம் (த.மா.கா), எம்.அருணாச்சலம் (த.மா.கா),  தனுஷ்கோடி ஆதித்தன் (த.மா.கா) ஆகியோரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்  கொண்டனர் !

இச்சூழ்நிலையில், என் பெரியப்பா பெயரனும், ஒன்றுவிட்ட அண்ணன், ஆசிரியர் திரு.கா.நடராசன் அவர்களின் மகனுமான திரு.சுப்பிரமணியன் திருமணம் முடிவாகி இருந்தது. அவர் பஞ்சநதிக்குளம் கீழச் சேத்தியைச் சேர்ந்த திரு.பழனித் துரை அவர்களின் மகள் செல்வி.சாந்தியை மணக்கவிருந்தார் !

மணமகளின் தந்தை திரு.பழனித்துரை ஆயக்காரன்புலம் உயர்நிலப் பள்ளியில் நான் படிக்கும் போது என் வகுப்புத் தோழர். திரு.சுப்பிரமணியன் – செல்வி.சாந்தி திருமணம் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் நாள் கருப்பம்புலம் திருமண மண்டகத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு நான் குடும்பத்துடன் சென்று வந்தேன் !

பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை விடுப்பு எடுக்கச் சொல்லி, அவர்களையும் அழைத்துக் கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வது தவிர்க்க வேண்டிய ஒன்று என்றாலும், அவர்களைத் தனியாக விட்டு விட்டுச் செல்வதும் அறிவார்ந்த செயலாகாதே !

-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051,விடை (வைகாசி),10]
{23-05-2020}
---------------------------------------------------------------------------------------------
திரு.ந.சுப்ரமணியன்

திருமதி.சு.சாந்தி.
 
திரு.ந.சுப்ரமணியன்   செல்வி.சாந்தி
 இணையரின் திருமண 
அழைப்பிதழ். திருமண நாள்: 8-9-1996. 
இடம் கருப்பம்புலம்.

திரு.நெடுஞ்செழியன் -
செல்வி திருமணம் : 
நாள் : 05-02-1995

திரு.நெடுஞ்செழியன் - செல்வி 
திருமண அழைப்பிதழ் ! 
திருமணம் நடைபெற்ற இடம், 
மணமகள் இல்லம், இடும்பவனம்.

குரும்பப்பட்டி 
உயிரியல் பூங்கா நுழைவாயில்

குரும்பப்பட்டி 
உயிரியல் பூங்காவில் மயில்கள்
குரும்பப்பட்டி 
உயிரியல் பூங்காவில் மான்கள்

குரும்பப்பட்டி 
உயிரியல் பூங்காவில் கொக்குகள்






No comments:

Post a Comment